கடந்த மூன்று வாரங்களாக பங்குச் சந்தையின் அடிப்படைகள் குறித்துப் பார்த்தோம். இறுதியாக, பங்குச் சந்தையில் ஒருவர் பங்குபெற வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

இந்திய நாட்டைச் சேர்ந்த அனைவருமே இந்திய பங்குச் சந்தையில் பங்கு பெறலாம். இதற்கு முதலில், ஒரு டீமேட் கணக்கு தொடங்க வேண்டும். டீமேட் கணக்குடன் கூடவே டிரேடிங் அக்கவுன்ட் ஒன்றையும் தொடங்க வேண்டும். இதை எப்படித் தொடங்க வேண்டும், என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்.
இரண்டு ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகள்...
பங்குச் சந்தைகளைக் கண்காணித்து வழிநடத்தும் பணியை செபி எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் செய்கிறது. நாம் பங்குகளை வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும் எனில், பங்குச் சந்தை எனப்படும் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூலம் மட்டுமே வாங்கவும் விற்கவும் செய்ய முடியும்.
இந்தியாவில் செபியிடம் பதிவு பெற்று செயல்படும் இரண்டு எக்ஸ்சேஞ்சுகள் உள்ளன. அவை, தேசிய பங்குச் சந்தை (NSE), மும்பை பங்குச் சந்தை (BSE). பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது மட்டும் அல்லாமல், அதற்கான பணம் மற்றும் பங்குகளை வாங்கு பவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே மாற்றிக் கொடுக்கும் வேலையையும் ஸ்டாக் எக்ஸ்சேஞ்கள் செய்கின்றன.
பங்குகளை யாரும் நேரடியாக வாங்கவோ, விற்கவோ முடியாது. மாறாக, எக்ஸ்சேஞ்சுகளில் பதிவு பெற்றவர்களே பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியும். இவர்களை ‘மெம்பர் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்’ என்று அழைப்பார்கள். நடைமுறையில் இவர்களைப் பங்குச் சந்தை புரோக்கர்கள் என்று அழைப்போம். இந்த புரோக்கர்களிடம்தான் டீமேட் கணக்கு தொடங்க வேண்டும்.

டிரேடிங் அக்கவுன்ட்...
பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கவும், விற்கவும் வேண்டுமெனில், உங்களிடம் டிரேடிங் அக்கவுன்ட் இருக்க வேண்டும். இந்த டிரேடிங் அக்கவுன்டில்தான் நாம் பங்குகள் வாங்குவதற்கான பணத்தைப் போட வேண்டும். அதேபோல், பங்குகளை வாங்கு வதையும் விற்பதையும் இந்த டிரேடிங் அக்கவுன்ட் மூலமே செய்ய முடியும். பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டுமானால், இந்த அக்கவுன்ட் மூலமே செய்ய முடியும். பங்குகளை விற்றாலும், அதன் மதிப்பு டிரேடிங் அக்கவுன்டிலேயே வரவு வைக்கப்படும்.
டீமேட் அக்கவுன்ட்...
டிரேடிங் அக்கவுன்ட் மூலம் வாங்கிய பங்கு களை வைப்பதற்கான ஒரு மின்னணு கணக்கு தான் டீமேட் அக்கவுன்ட். நாம் வாங்கிய பங்கு களை டீமேட் கணக்கில் இருந்து எடுக்கப்படும் ஸ்டேட்மென்ட் மூலம்தான் என்னென்ன பங்குகள் கணக்கில் உள்ளன என்பதைப் பார்க்க முடியும். அதேபோல, நம் கையிருப்பில் இருக்கும் பங்குகளை விற்கும் போது, அது நம் டீமேட் கணக்கில் இருந்து, நாம் எழுதிக் கொடுக்கும் சீட்டின் மூலம் விடுவிக்கப்படும்.
பவர் ஆஃப் அட்டானி...
நாம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குகளை விற்கும்போதெல்லாம், பங்குகளை டீமேட் கணக்கில் இருந்து எடுப்பதற்கான அனுமதிச் சீட்டை புரோக்கர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு முறையும் செய்வதற்குப் பதிலாக, நாம் கணக்கு வைத்திருக்கும் புரோக்கருக்கு, நாம் பங்குகளை விற்கும்போதெல்லாம், நம் டீமேட் கணக்கில் இருந்து பங்குகளை எடுத்து எக்ஸ்சேஞ்சுக்கு கொடுப்பதற்கான அனுமதிதான் பவர் ஆஃப் அட்டர்னி ஆகும்.
நாமினி...
நாம் பங்குகளை வாங்குவதும் ஒரு சொத்து வாங்குவதற்குச் சமமானதுதான். எனவே, கணக்கு தொடங்கும்போதே, நம் குடும்பத்தில் உள்ள ஒருவரை, நம் கணக்கின் நாமினியாகப் பதிவு செய்வது அவசியம்.
தேவைப்படும் ஆவணங்கள்...
நாம் ஒரு டீமேட் கணக்கைத் தொடங்கத் தேவையான ஆவணங்கள்... 1. பான் கார்டு, 2. முகவரிச் சான்றிதழ், 3. சேமிப்பு வங்கிக் கணக்கு, 4. புகைப்படம்.
தற்போது எல்லா புரோக்கர்களும் ஆன்லைன் மூலமாகவும் டீமேட் கணக்கைத் தொடங்க உதவுகிறார்கள். எல்லா சான்றிதழ் களும் தயாராக இருந்தால், அவற்றை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து கணக்கைத் தொடங்கலாம். இந்த டீமேட் கணக்குக்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக வருடம்தோறும் ரூ.300 - ரூ.500 வசூலிக்கப்படும்.
இன்றைய நிலையில், 25 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அவசியமாக ஒரு டீமேட் கணக்கு தொடங்கி, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யத் தொடங்குவது மிக மிக அவசியம் என்பதை உணர வேண்டும்!
(வளரும்)