Published:Updated:

ஐ.பி.ஓ-வில் அதிக லாபம் எதிர்பார்ப்பது சரியல்ல!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

ஐ.பி.ஓ-வில் அதிக லாபம் எதிர்பார்ப்பது சரியல்ல!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

புதிய பங்கு வெளியீடு என்று சொல்லப்படும் ஐ.பி.ஓ (Initial public offer) மீது பங்குச் சந்தை சிறு முதலீட்டாளர்களின் கவனம் தற்போது அதிக அளவில் குவிந்திருக்கிறது. அண்மையில் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஸொமேட்டோ, தத்வ சிந்தன் நிறுவனப் பங்குகள் சந்தையில் பட்டியலான அன்றே 100% அளவுக்கு லாபம் தந்தது கண்டு, பல முதலீட்டாளர்கள் பூரிப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, இந்த ஆண்டில் இதுவரை 25 ஐ.பி.ஓ-க்கள் வெளியாகியுள்ளன. இதில் வெறும் மூன்று நிறுவனப் பங்குகள் மட்டுமே நஷ்டத்தைத் தந்துள்ளன. மீதமுள்ள நிறுவனப் பங்குகள் குறைந்தபட்சம் 9 சதவிகிதத்தில் தொடங்கி, அதிகபட்சமாக 311% வரை லாபம் தந்திருப்பதும் சிறு முதலீட்டாளர்கள் ஐ.பி.ஓ-க்களை உற்றுநோக்கக் காரணம்.

பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ-க்களுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து, பல நிறுவனங்கள் கூடியவிரைவில் ஐ.பி.ஓ வெளியிட்டுவிட வேண்டும் என செபியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்துவருகின்றன. இந்த ஆண்டில் மிச்சமிருக்கும் ஐந்து மாதங்களில் இன்னும் 25 நிறுவனங்களின் ஐ.பி.ஓ வந்தால் ஆச்சர்யமில்லை என்பதே இப்போதைய நிலை.

ஐ.பி.ஓ என்பது பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் நுழைவதற்கான முதல் வாசல்படி. அவர்கள் இதில் அதிக அளவில் முதலீடு செய்ய நினைப்பது ஆரோக்கியமான வளர்ச்சிதான். ஆனால், மிகக் குறுகிய காலத்தில் எக்கச்சக்கமாக லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஐ.பி.ஓ-க்களில் அவர்கள் பணம் போடுவதைப் பார்த்தால், லாட்டரிச் சீட்டு வாங்குவதுபோல ஐ.பி.ஓ-க்களையும் பார்க்கத் தொடங்கிவிட்டார்களோ என்கிற சந்தேகம் வருகிறது.

பங்குச் சந்தையில் ஒரு பங்கை வாங்கும்போது, அந்த நிறுவனம் செய்யும் தொழில், நிர்வாகம், கடந்த காலச் செயல்பாடு எனப் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து பார்த்த பின்பே வாங்க வேண்டும். அவற்றையெல்லாம் முழுமையாகச் செய்ய வழியில்லாமல், நிறுவனம் பற்றி ஓரளவு மட்டுமே தெரிந்துகொண்டு, பணத்தைப் போடுவது சரியான முதலீட்டு யுக்தியாக இருக்காது. லாபம் கிடைத்தால் விற்றுவிட்டு வெளியே வந்துவிடலாம் என்று நினைப்பது டிரேடர்கள் மனநிலையே தவிர, முதலீட்டாளர்கள் செய்யும் செயலல்ல.

மேலும், பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் கொண்டாட்டமான மனநிலையில் (Euphoria) இருப்பதைப் பார்த்து, தரமற்ற நிறுவனங்கள்கூட ஐ.பி.ஓ மூலம் பெரும் முதலீட்டைத் திரட்டிவிட வாய்ப்பு உண்டு. கடந்த காலங்களில் இது மாதிரியான கொண்டாட்டமான நேரத்தில் ஐ.பி.ஓ வந்த சில தரமற்ற பங்கு நிறுவனங்கள் சிறு முதலீட்டாளர்களுக்கு கணிசமான நஷ்டத்தையும் தந்தது வரலாறு. அந்த உண்மையை நாம் மறந்து செயல்படத் தொடங்கினால், வரலாறு அதே பாடத்தை அதிக கஷ்டத்துடன் மீண்டும் நமக்குக் கற்றுத் தரும் என்பது நிச்சயம்!

- ஆசிரியர்