Published:Updated:

பிரின்ஸ் பைப்ஸ் அண்ட் ஃபிட்டிங்ஸ் லிமிடெட்! - அறிவோம் பங்கு நிறுவனம்..!

பிரின்ஸ் பைப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரின்ஸ் பைப்ஸ்

(NSE SYMBOL: PRINCEPIPE, BSE CODE: 542907)

KNOW YOUR COMPANY

குடிநீர், பாசனம், வடிகால் போன்றவற்றுக்குத் தேவைப் படும் பைப்புகளை பிரின்ஸ் பைப்ஸ் அண்ட் ஃபிட்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. இந்தத் துறைகளில் நாட்டில் வளர்ந்துவரும் தேவைக்கேற்ப பல புதுமையான விஷயங்களை அறிமுகப்படுத்தி வருகிறது இந்த நிறுவனம்.

துறை வளர்ச்சி

உலக அளவில் உள்ள நாடுகளின் சராசரியான தனிநபர் நுகரும் அளவான 30 கிலோ என்ற அளவீட்டுடன் ஒப்பீடு செய்தால், இந்தியாவில் சராசரி பிளாஸ்டிக் நுகர்வு என்பது மிகவும் குறைவான 11 கிலோ என்ற அளவீட்டிலேயே இருக்கிறது. 2014 முதல் 2019-ம் நிதி ஆண்டுகளில் இந்தியாவில் பிளாஸ்டிக் பைப்ஸ் & ஃபிட்டிங்ஸ் துறையின் சந்தை வளர்ச்சி ஆண்டுதோறும் சராசரியாக 10 - 12% என்ற அளவில் இருந்துவந்தது. இனிவரும் அடுத்த ஐந்து வருட காலகட்டத்தில் இது ஆண்டுதோறும் 12 - 14% இருக்க வாய்ப்புள்ளது என்கிறது ஆய்வுகள்.

ஜி.எஸ்.டி, தர நிர்ணயத்துக்கான கூடுதல் கட்டுப்பாடுகள் போன்ற காரணத்தால் இந்தத் துறையில் அன்-ஆர்கனைஸ்டு செக்டாரின் பங்களிப்பிலிருந்து ஆர்கனைஸ்டு செக்டாரின் பங்களிப்பு அதிகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

பைப்ஸ்
பைப்ஸ்

நிறுவனத்தின் வளர்ச்சி

1987-ம் ஆண்டில் ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு, முதல் பைப்பிங் உற்பத்தி வசதியை நிறுவியது இந்த நிறுவனம். 1995-ம் ஆண்டில் அதல் எனும் ஊரில் பெரிய அளவிலான இன்ஜெக்‌ஷன் மோல்டிங் உற்பத்தி வசதியை நிறுவிய இந்த நிறுவனம், 2000-ம் ஆண்டில் தாத்ரா எனும் இடத்தில் பைப் உற்பத்தி செய்யும் புதிய உற்பத்தி மையத்தை நிறுவியது.

பிரின்ஸ்
பிரின்ஸ்

2012-ம் ஆண்டில் சென்னை மற்றும் மகாராஷ்டிராவின் கோல்ஹா பூரில் ட்ரூபோர் பைப்பிங் சிஸ்டம் என்ற கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் நிறுவனத்தின் பிரிவை வாங்கியது. 2019-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது இந்த நிறுவனம். 1987-ம் ஆண்டில் ஒரே ஓர் உற்பத்தி வசதியைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இன்றைக்கு ஐந்து உற்பத்தி மையங்களுடன் கிட்டத்தட்ட 7,167 தயாரிப்புகளைக் கொண்டு வெற்றிகர மாக இயங்கி வருகிறது.

நிறுவனத்தின் செயல்பாடுகள்

மும்பையில் பதிவு அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும், இந்த நிறுவனம் அதல், தாத்ரா (இரண்டு இடங்களும் சில்வாசாவில் இருப்பவை), ஜாப்னர் (ராஜஸ்தான்), ஹரித்துவார் (உத்தர்காண்ட்), கொல் ஹாபூர் (மஹாராஷ்டிரா) மற்றும் சென்னை (தமிழ்நாடு) உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் ஏழு உற்பத்தி மையங்களை (இதில் ஒன்று, புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது) கொண்டு இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட தாகவும் உற்பத்தியில் முழுக்க முழுக்க குறைகள் இல்லாத அளவுக்கு (zero defect) தரமான உற்பத்தியைச் செய்யும்படியும் இருக்கின்றன.

பிரின்ஸ் பைப்
பிரின்ஸ் பைப்

கம்ப்யூட்டரைஸ்டு இன்ஜெக்‌ஷன் மோல்டிங் மெஷின்களில் 50 டன் முதல் 660 டன் அளவிலான கிளாம்பிங் போர்ஸ் (clamping force) திறன் கொண்ட ஃபிட்டிங்ஸ்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. யு.பி.வி.சி, பி.பி.ஆர் மற்றும் சி.பி.வி.சி பைப்புகளை உற்பத்தி செய்வதற்கு ட்வின் ஸ்க்ரூ எக்ஸ்ட்ரூடர்களை நிறுவியுள்ளது இந்த நிறுவனம். இந்த வகை மெஷின்களே 7,500-க்கு மேற்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்ய உதவும் வகையிலானது.

நிறுவனத்தின் சிறப்புகள்

புதிய தயாரிப்புகளை வடிவ மைக்கத் தேவையான ஆராய்ச்சி வசதிகளையும் தன்வசத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த ஆராய்ச்சி வசதி பிளம்பர்கள், போர்வெல் போடும் நிறுவனங்கள், டிரில்லிங் நிறுவனங்கள், பிளம்பிங் கன்சல்டன்ட்டுகள் போன்றவர்களுக்கு தேவையான உற்பத்தி செய்யும் பொருள்களை வடிவமைக்க உதவுகிறது.

உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் பொருட்டு 1,408 சேனல் பார்ட்னர்களையும் 11 வேர்ஹவுஸ் களையும் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். பைப்புகள், ஃபிட்டிங்குள் அல்லது ரூப் வாட்டர் சிஸ்டங்கள் என எதுவானாலும் சரி, அதில் நவீனங்களை அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் டெக்னாலஜி மற்றும் இன்ஜினீயரிங் திறனை இந்த ஆராய்ச்சி வசதிகளின் வாயிலாகக் கொண்டிருக்கிறது.

பைப்ஸ்
பைப்ஸ்

மூலப்பொருள்கள் கொள்முதலில் ஆரம்பித்து, உற்பத்திப் படிநிலைகள் மற்றும் பேக்கேஜிங் வரை அனைத்துக்கும் இந்த ஆராய்ச்சி வசதிகள் உதவுகின்றன. இதனாலேயே சிறந்த தயாரிப்புகளையும், சீரிய திறமிக்க தீர்வுகளையும்(solutions) இந்த நிறுவனத்தால் வழங்க முடிகிறது.

மேலும், இந்த நிறுவனம் சிங்கிள் பீஸ் நஹானி டிராப் (பூச்சிகள் உள்ளே நுழையாத வகையிலான சிங்கிள் பீஸ் யு.பி.வி.சி இன்ஜெக்‌ஷன் டிராப்) மற்றும் பிரின்ஸ் சேஃப்பிட் யு.பி.வி.சி காலம் பைப்புகள் வித் பேட்டன்ட் இன்னர் ரிப் என்ற இரண்டு தயாரிப்புகளுக்கான காப்புரிமைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதொரு விஷயமாகும்.

நிறுவனத்தின் தொழில் பிரிவுகள்

இந்த நிறுவனத்தின் தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், தயாரிப்புகள் உபயோகப்படுத்தப் படுகிற ரீதியிலாக பிளம்பிங், வடிகால், விவசாயம், போர்வெல், தண்ணீரைச் சேமித்துவைத்தல் மற்றும் கேபிள் டக்டிங் போன்ற வற்றில் உபயோகப்படுத்தப்படும் பொருள்களை உற்பத்தி செய்து பிரின்ஸ் மற்றும் ட்ரூபோர் என்ற பிராண்டுகளில் விற்பனை செய்து வருகிறது.

பிரின்ஸ் பைப்ஸ் அண்ட் ஃபிட்டிங்ஸ் லிமிடெட்! - அறிவோம் பங்கு நிறுவனம்..!

பிளம்பிங் பிரிவில் சாதாரண மற்றும் சூடான தண்ணீர் கொண்டு செல்வதற்கான சி.பி.வி.சி பிளம்பிங் சிஸ்டம்களை ஃப்ளோ கார்ட் ப்ளஸ் என்ற பிராண்டில் விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். ஃபிட்டிங்குகள் பிரிவில் பித்தளையுடன் (Brass insert fittings) கூடிய தயாரிப்புகள், சி.பி.வி.சி ஃபிட்டிங்குகள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இது தவிர, பைப்புகளை ஒட்டுவதற்கு உதவும் சால்வெண்ட் சிமென்ட்டையும் உற்பத்தி செய்து பிரின்ஸ் ஃப்ளோ கார்ட் ப்ளஸ் என்ற பிராண்டில் விற்பனை செய்துவருகிறது.

வடிகால் வசதிக்குத் தேவை யான பைப்புகளையும் உற்பத்தி செய்துவரும் இந்த நிறுவனம், அதிக திறன் கொண்ட வடிகால் அமைப்புகளை உற்பத்தி செய்யவும், பி.வி.சி.விலான மேன்ஹோல் கவர்களை உற்பத்தி செய்யவும் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றுடன் கூட்டணி அமைத்துள்ளது.

பிரின்ஸ் பைப்ஸ் அண்ட் ஃபிட்டிங்ஸ் லிமிடெட்! - அறிவோம் பங்கு நிறுவனம்..!

இந்தத் தொழில் பிரிவில் வடிகால் அமைக்க உதவும் பைப்புகளை பிரின்ஸ் ‘சைலன்ட் ஃபிட்’ என்ற பிராண்டிலும், நிலத்தடியில் புதைத்து வடிகால் அமைப்பதற்கு உதவும் ‘யு.பி.வி.சி ஃபிட்டிங்குகளை பிரின்ஸ் ‘ஃபோம்பிட்’ என்ற பிராண்டிலும், நிலத்தடியில் புதைத்து உபயோகிக்கப்படும் ‘ஹெச்.டி.பி.இ பைப்புகளை பிரின்ஸ் ‘கோர்ஃபிட்’ என்ற பிராண்டிலும் விற்பனை செய்துவருகிறது. மேலும், இந்தப் பிரிவில் ரப்பர் ரிங்குடன் கூடிய ஃபிட்டிங்குகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. விவசாயத்துக்கு நீர் பாய்ச்சு வதற்குத் தேவையான பைப்புகளை பிரின்ஸ் ‘அக்வா ஃபிட்’ என்ற பிராண்டிலும், போர்வெலில் பயன்படுத்தப்படும் ரக பைப்புகள் பிரின்ஸ் ‘சேஃப்பிட்’ என்ற பிராண்டிலும், தண்ணீரைச் சேமித்து வைக்க உதவும் வாட்டர் டேங்குகளை பிரின்ஸ் ‘ஸ்டோர்ஃபிட்’ என்ற பிராண்டிலும் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

பைப்புகள் மற்றும் பைப் ஃபிட்டிங்குகள் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்துக்கும் உண்டான ரிஸ்க்குகள் இந்த நிறுவனத் துக்கும் இருக்கவே செய்கிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பெருமளவில் உபயோகிக்கப்படும் துறையான கட்டுமானம் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறை பெரும்பாலும், பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்து வளர்ச்சியைச் சந்திக்கும் வண்ணம் இருப்பதால், பொருளாதார வளர்ச்சி எதிர்பாராத அளவில் இருக்காது போனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டையும் பாதிக்கவே செய்யும்.

மேலும், மூலப்பொருள்களின் விலை உயர்வு, தொழில்நுட்ப ரீதியிலான வரும் மாறுதல்கள், தொழில் ரீதியிலான போட்டி, அரசாங்கத்தின் கொள்கைகள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகள் என்றே சொல்லலாம்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி, பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர் களுக்கு பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்து ஆலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என முடிவுசெய்த பின்னரே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பிட்ஸ்

த்திய அரசு கொண்டுவந்த விவசாய சீர்திருத்த மசோதாக்களை எதிர்க்கும் பஞ்சாப் விவசாயிகள், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 1561 டவர்களை சேதப்படுத்தி உள்ளனர். பஞ்சாபில் ஜியோ நிறுவனத்துக்கு 9,000 டவர்கள் உள்ளன!

பிட்ஸ்

2020-ல் நம் நாட்டுக்குள் வந்த வி.சி மற்றும் பி.இ முதலீடுகளில் ரிலையன்ஸ் குரூப் சுமார் 17,000 மில்லியன் டாலரையும் பிரமிள் கிளாஸ் 1000 மில்லியன் டாலரையும் ஸொமேட்டோ 603 மில்லியன் டாலரையும் பெற்றுள்ளன.