பிரீமியம் ஸ்டோரி

ங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஒரு கலை. அந்தக் கலையின் ஐந்து அடிப்படைப் பாடங்களை எளிமையாக எடுத்துச் சொன்னார் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். சென்னை ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் கார்வி ஃபைன்டெக் நிறுவனம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில்தான் அவர் இந்த ஐந்து பாடங்களை எடுத்துச் சொன்னார். இதோ அந்த ஐந்து முக்கியமான பாடங்கள்...

பங்குச் சந்தை கற்றுத்தரும் பாடங்கள்!

பாடம் 1: எதிர்பார்ப்புகளின் குறியீடு

“பங்குச் சந்தையின் போக்கு எப்போதுமே முதலீட்டாளர்களின் செயல்பாடுகளைச் சார்ந்தும், அவர்களின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதுமாக இருக்கும். காளை மற்றும் கரடி ஆகிய விலங்குகளைப் பங்குச் சந்தையின் குறியீடுகளாகக் காட்டக் காரணம், நம் உள்ளுணர்வுகளை அந்த விலங்குகள் பிரதிபலிப்ப தால்தான். அதனால்தான், எதிர்பார்ப்புகளின் குறியீடாகத்தான் பங்குச் சந்தை எப்போதும் இருக்கும். மிக அரிதாகவே பொருளாதாரத்தின் குறியீடுகளைக் காட்டுவதாக அது இருக்கும்.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

பாடம் 2: கேள்விப்படுவதும் தீர்மானிப்பதும்

மனிதர்களின் மனநிலை எப்போதுமே கேள்விப்படுவதை வைத்தே முடிவெடுக்கும் தன்மையைக் கொண்டதாக இருக்கிறது. இந்த மனநிலை இயற்கையானதுதான் என்றாலும், வெளியிலிருந்து கிடைக்கும் டிப்ஸ்கள், வதந்திகள் மற்றும் பிறரின் உரையாடல்களைக் கொண்டு எதையும் தீர்மானிக்க முடியாது, தீர்மானிக்கவும் கூடாது. கேள்விப்படுகிற விஷயங்களில் இருக்கும் உண்மைத் தன்மைகளை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பதுதான் சரி.

பாடம் 3: ஏற்றமும் இறக்கமும் லாபத்தைத் தீர்மானிக்கின்றன

பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் யாருமே சென்செக்ஸ், நிஃப்டி மெதுவாக நகர்வதை விரும்பமாட்டார்கள். முதலீட்டு உளவியலும் அதைத்தான் சொல்கிறது. ஆனால், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம்தான், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி விற்பதை ஊக்குவிக்கின்றன. எனவேதான், எப்போ தெல்லாம் பங்கு விலை குறைகிறதோ, அப்போ தெல்லாம் முதலீட்டாளர்கள் பதற்றம் அடைகிறார்கள். விலை அதிகரிக்கும்போது சந்தேகம் கொள்கிறார்கள். ஆனால், இந்த இரண்டு செயல்பாடுகளும்தான் முதலீட்டின் மீதான லாபத்தைத் தீர்மானிக்கின்றன.

பாடம் 4: முதலீட்டின் மீதான காரணங்கள்

காரணமே இல்லாமல் பங்குகளை வாங்குவதை முதலீட்டாளர்கள் ஒருபோதும் செய்யக் கூடாது. ஒரு பங்கில் முதலீடு செய்கிறோம் என்றால், அதற்கான காரணம் என்ன என்பதில் தெளிவு இருப்பது அவசியம். பெரும்பாலான முதலீட் டாளர்களுக்கு சில குறிப்பிட்ட பங்குகள் பிடித்தமான பங்குகளாக இருக்கும். அதனாலேயே அதை நீண்ட நாள்களுக்கு வைத்துக் கொண்டிருப்பார்கள். உங்களுக்குப் பிடித்த பங்கு என்பதால், அது எப்போதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அதன் லாப விகிதமும் ஒரே நிலையில் இருக்கவேண்டியதில்லை. அதனால் பங்குகளை வாங்கும்போதும் சரி, விற்கும்போதும் சரி காரணங்கள் மிக மிக முக்கியம்.

பங்குச் சந்தை கற்றுத்தரும் பாடங்கள்!

பாடம் 5: அவ்வப்போது மறு ஆய்வு செய்யுங்கள்

ஒரு பங்கானது முதலீட்டாளர்களிடம் எத்தனை வருடங்கள் இருக்க வேண்டும் அல்லது இருக்கக் கூடாது என்பதை அந்த பங்கின் செயல்திறனே தீர்மானிக்க வேண்டும். முதலீட்டா ளர்களில் பெரும்பாலானவர்கள் பங்குகளை வாங்கி வைத்துக்கொள்வார்கள். நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்திருப்பதால், அதை அவ்வப்போது மறு ஆய்வு செய்வதில் அக்கறை காட்டாமல் இருப்பார்கள். இது முற்றிலும் தவறான அணுகுமுறை. பங்குகளை வாங்கி வைத்துக்கொண்டால் மட்டும் அதிலிருந்து லாபத்தைச் சம்பாதிக்க முடியாது. அதன் வளர்ச்சி எப்படியிருக்கிறது, அது லாபப் பாதையில்தான் செல்கிறதா என்பதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்வது முக்கியம். இந்த ஐந்து விதிகளும் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்று பாருங்கள்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு