Published:Updated:

பல சிறப்பம்சங்களைக் கொண்ட எல்.ஐ.சி ஐ.பி.ஓ..!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

பல சிறப்பம்சங்களைக் கொண்ட எல்.ஐ.சி ஐ.பி.ஓ..!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

கடந்த இரண்டு ஆண்டுக் காலமாக முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த எல்.ஐ.சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (IPO) இதோ வந்தே விட்டது. மே மாதம் 4-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை எல்.ஐ.சி நிறுவனத் தின் பங்குகளை வாங்க நினைப்பவர்கள் தாராளமாக விண்ணப்பம் செய்யலாம்.

எல்.ஐ.சி-யின் இந்த ஐ.பி.ஓ-வானது பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. அதில் முக்கியமானது, எல்.ஐ.சி-யின் இந்த ஐ.பி.ஓ-வில் சிறு முதலீட்டாளர்களுக்கு 2.21 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுநாள் வரை எல்.ஐ.சி-யின் சேவையைப் பெற்று வந்த இந்த பாலிசிதாரர்கள், இனி அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக மாற ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் தவறவிடக் கூடாது. குறுகிய கால நோக்கில் அணுகாமல், நீண்ட கால முதலீடு என்கிற நோக்கில் இந்தப் பங்கில் முதலீடு செய்பவர்கள் நல்ல லாபம் காண வாய்ப்புள்ளது.

அடுத்த முக்கியமான அம்சம், இந்த ஐ.பி.ஓ-வில் எல்.ஐ.சி நிறுவனத்தின் மதிப்பு (Valuation) மிகக் குறைந்த அளவிலேயே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எஸ்.பி.ஐ லைஃப், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் போன்ற தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் சொத்து மதிப்பு (embedded value) மூன்று மடங்குக்குமேல் இருக்கையில், எல்.ஐ.சி-யின் மதிப்பு குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் எல்.ஐ.சி நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு (Asset Under Management), பிற தனியார் நிறுவனங்களைவிட மூன்று மடங்குக்கும் அதிகம். தவிர, எல்.ஐ.சி-க்கு சொந்தமான இடங்களின் மதிப்பு இதில் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஒவ்வோர் ஊரிலும் எல்.ஐ.சி-க்கு சொந்தமாக இருக்கும் இடங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் பெறும். அந்த வகையில், மிக மதிப்பு வாய்ந்த ஒரு சொத்து, மிகக் குறைந்த மதிப்பில் இப்போது கிடைக்கிறது.

அடுத்த முக்கியமான விஷயம், இந்த நிறுவனத்தின் பிசினஸ் மாடல். இந்த நிறுவனம் பெறும் காப்பீட்டு பிரீமியமானது மத்திய, மாநில அரசுகளுக்குக் கடனாகத் தரப்படுகிறது. அரசுகளுக்குத் தரும் கடன் எப்போதும் பாதுகாப்பானது. இதன்மூலம் இந்த நிறுவனத்துக்குக் கிடைக்கும் வட்டி வருமானம் குறைவுதான். என்றாலும், அரசுகளுக்குத் தரப்படும் கடன்கள் எப்போதும் பாதுகாப்பானவை என்கிற வகையிலேயே, இதை நாம் பார்க்க வேண்டும். பாலிசிதாரர்கள் தரும் பிரீமியத்தில் ஒரு பகுதியானது பங்குச் சந்தையில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யப்படுவதால், கணிசமான லாபம் எல்.ஐ.சி-க்கு கிடைக்கிறது. கடந்த 2020-21-ல் எல்.ஐ.சி நிறுவனம் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.42,500 கோடிக்கு மேல் லாபம் கண்டுள்ளது. எல்.ஐ.சி நிறுவனம் பங்குச் சந்தைக்கு வராத வரை இந்த லாபம் அரசுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. இனி, இந்த லாபத்தின் ஒரு பகுதி எல்.ஐ.சி-யின் பங்குதாரர்களுக்கும் கிடைக்கும்.

இத்தனை சிறப்புகளைக் கொண்டுள்ள எல்.ஐ.சி நிறுவனப் பங்குகளை வாங்குவது குறித்து, அதன் பாலிசிதாரர்கள் தயங்காமல் பரிசீலிக்கலாமே..!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism