Published:Updated:

நீண்டகாலத்தில் லாபம்... கைகொடுக்கும் பங்கு முதலீடு..! பின்பற்ற வேண்டிய உத்திகள்...

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

INVESTMENT

நீண்டகாலத்தில் லாபம்... கைகொடுக்கும் பங்கு முதலீடு..! பின்பற்ற வேண்டிய உத்திகள்...

INVESTMENT

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

பங்குச் சந்தையில் நாள்தோறும் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் நாள் வணிகரை (Day Trader) வேண்டுமானால் பதற்றமடையச் செய்யலாம். நஷ்டத்தைத் தவிர்த்து லாபத்தை மட்டுமே தனதாக்கிக்கொள்ள தவறான முடிவுகளை எடுக்கலாம். ஆனால், நீண்டகால முதலீட்டாளராக ஒருவர் அவ்வளவு மெனக்கெடத் தேவையில்லை. அதனால்தான், உலகின் முன்னணி முதலீட்டாளர் களில் ஒருவரான வாரன் பஃபெட், ‘யாரும் மெதுவாக அல்லது பொறுமை யாக பணக்காரராக விரும்புவதில்லை’ என்கிறார்.

சரவணகுமார் 
ஆலோசகர், 
www.richinvestin
gideas.com
சரவணகுமார் ஆலோசகர், www.richinvestin gideas.com

நீண்டகாலத்தில் காத்திருந்து செல்வத்தை ஏற்படுத்த சந்தையில் காணப்படும் தினசரி இரைச்சல்களை (Daily News noise) கண்டுகொள்ளாமல் இருப்பதோடு, சற்று பொறுமையும் இருந்தால் போதும். பங்குச் சந்தை அடிப்படை பகுப்பாய்வை (Fundamentals) பூர்த்தி செய்யும் நல்ல நிறுவன பங்குகள் குறுகிய காலத்தில் ஏற்றம் பெறாவிட்டாலும், நீண்டகாலத்தில் ஒரு முதலீட்டாளர் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் நல்ல வருவாயை அளிக்கக் கூடியதாக உள்ளது.

உதாரணமாக, நூற்றாண்டுகளைக் கடந்தும் தொழில் செய்யும் நிறுவனங் கள், பல பொருளாதார வீழ்ச்சிக் காலங்களைச் சந்தித்த அனுபவம் கொண்ட நிறுவனங்கள், பல்வேறு அரசியல் மாற்றங்களை எதிர்கொண்ட நிறுவனங்கள் எனச் சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனப் பங்குகள் கொட்டிக் கிடக்கின்றன. டாடா, பஜாஜ், கோத்ரேஜ், பிர்லா, மஹிந்திரா, எல் & டி, ரிலையன்ஸ், இந்துஜா, டி.வி.எஸ், முருகப்பா போன்ற குழும நிறுவனங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

வெளிநாட்டு நிறுவனங்களான இந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே, ஏ.பி.பி (ABB), அபாட், கோல்கேட், வேர்ல்ஃபுல், சுஸூகி (Maruti Suzuki), போஷ் (Bosch) போன்ற நிறுவனங்களும் சளைத்தவைகள் அல்ல. நல்ல நிறுவனப் பங்குகள் சந்தையில் கிடைக்கப் பெற்றாலும், நீண்டகாலத்தில் நேரடியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் நல்லதொரு லாபத்தையும் செல்வத்தையும் ஏற்படுத்த சில முதலீட்டு உத்திகளைக் கவனிக்க வேண்டும்.

முதலீடு
முதலீடு

அவசரப்பட வேண்டாம்...

இரைச்சல்களுக்கு செவி சாய்க்காதீர் கள். சந்தையில் அவ்வப்போது நிகழும் சலசலப்புகளுக்கு இடம் கொடுக்காமல் நீண்டகால நோக்கில் முதலீடு செய்து வருவது நிதி இலக்கு சார்ந்த நன்மையை அளிக்கும். நிறுவனத்துக்கு ஒரு ஆர்டர் வந்துள்ளது என அவசரமாக ஒரு நிறுவன பங்கில் முதலீடு செய்துவருவது, பிரபலமான பெரு முதலீட்டாளர் ஒருவர் இந்தப் பங்கில் முதலீடு செய்கிறார் என நாமும் முந்திக்கொள்வது, ஒரே நாளில் சந்தை பெரு வீழ்ச்சி காணும்போது, பயத்தில் நாமும் வைத்திருக்கும் பங்கு களை விற்பது, கடந்த சில வாரங்களாக ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை நாள்தோறும் விலையேற்றம் பெறுகிறது என முதலீடு செய்வது, அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யாத சிறு மற்றும் குறு நிறுவன பங்குகளில் (Penny Stocks) விலை குறைவாக இருக்கிறதே, வாங்கிய சில நாள்களில் இரட்டிப்பு லாபம் பார்த்து விடலாம் எனச் சூதாடுவது போன்ற வேலைகளை நாம் செய்ய வேண்டாம்.

முன்னணி முதலீட்டாளர்களைப் பின்பற்ற வேண்டாம்...

உங்களது ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் புரிந்துகொள்ளுங்கள். நம்மால் எந்தளவு ரிஸ்க் எடுக்க முடியுமோ, அந்தளவுதான் நமது முதலீட்டு போர்ட்ஃபோலியோ முறையும் இருக்க வேண்டும். இந்தியாவின் வாரன் பஃபெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என்னென்ன பங்குகளைத் தனது போர்ட் ஃபோலியோவில் வைத்திருக் கிறாரோ, அதையே நாமும் வாங்கி வைத்திருக்க நினைப்பது, பெருத்த இழப்பையே நமக்குத் தரும். அவரது முதலீட்டு முடிவையும், ஒரு நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் அவர் பங்கேற்கும் வாய்ப்பையும் சிறு முதலீட்டாளர் களால் பின்பற்ற முடியாது. ஒரே நாளில் ரூ.5,000 கோடியை அல்லது மொத்த முதலீட்டில் 10% தொகையை இழந்தாலும் அவர் கவலைப்பட மாட்டார். ஆனால், இதுபோன்ற நிகழ்வை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று யோசிக்க வேண்டும்.

முதலீடு
முதலீடு

புரிந்தால் மட்டுமே முதலீடு...

அடிப்படைக் கற்றலை எப்போதும் மேற்கொள்ள வேண்டும். எந்தத் துறையை அல்லது பங்குகளை நம்மால் புரிந்துகொள்ள முடியுமோ, அவற்றில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். புரிந்து கொள்ள முடியவில்லை எனில், கற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். பங்குகளை அலச உங்களுக்கு நேரமில்லா விட்டால், மியூச்சுவல் ஃபண்ட் நிதித் திட்டங்களின் மூலம் பங்கு சார்ந்த முதலீடு (Equity oriented Mutual Funds) செய்துவருவது புத்திசாலித்தனம்.

நீண்டகால முதலீட்டில் நஷ்டம் அல்லது இழப்பு என்ற நிலை எப்போதும் இல்லை. நீங்க ளாகவே தவறான பங்குகளை, தவறான விலையில் வாங்கி, பின்னர் அவசரகதியில் விற்றால் மட்டுமே அது நஷ்டம். எனவே, கற்றலுக்கு முக்கியத்துவம் தாருங்கள். நிதி அல்லது பங்குச் சந்தை சார்ந்த கூட்டம் நடைபெற்றால், அவற்றில் கலந்து கொண்டு அடிப்படைக் கல்வியைப் பெறலாம். இணையம் வழியாக நடைபெறும் நிகழ்வு களில் பங்கேற்று நமது பங்குச் சந்தை சார்ந்த அறிவைப் பெருக்கிக்கொள்ளலாம். (எச்சரிக்கை: குறுகிய காலத்தில் மிகப்பெரும் லாபம் பெற்றுத் தருகிறேன் என்று சொல்பவர் களைத் தவிர்த்துவிடுங்கள்)

முதலீட்டு முடிவுகளை நீங்களே எடுங்கள்...

தவறுகளை ஏற்றுக் கொள்ளுங்கள், முடிவுகளை நீங்களே எடுங்கள். நீங்கள் செய்யும் முதலீட்டில் ஏதேனும் தவறான செயல்பாடு நடந்து விட்டால், மற்றவர்களைக் குறை சொல்லாமல் நீங்களே அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். முதலீடு சார்ந்த குறைகளைக் களையத் தேவையான காரணி களைக் கண்டறிந்து, மீண்டும் அந்தத் தவறு உங்களது பங்கு போர்ட்ஃபோலியோவில் ஏற்படாத வண்ணம் பார்த்து கொள்ளுங்கள். எந்தவொரு பங்கையும் வாங்கும் முன், நாம் எவ்வளவு காலம் இந்தப் பங்கை வைத்திருப்போம் எனப் பலமுறை யோசித்து முதலீடு செய்யுங்கள். பங்குகளை விற்கும் முன், அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். முதலீட்டு முடிவுகளை எடுக்கும் முன் தகுந்த நிதி ஆலோசகரின் அறிவுரையைப் பெறலாம். அதே வேளையில், இறுதி முடிவை நீங்கள்தான் எடுத்தாக வேண்டும்.

முதலீட்டு சமூகத்தை உருவாக்குங்கள்...

நிறுவனப் பங்குகளைப் பற்றிய விவரங்களை விளக்கிச் சொல்வோர், நிறுவனத்தின் தொழிலைப் பற்றி அறிந்திருப்போர், நீண்டகாலத்தில் முதலீடு செய்வோர் ஆகியோருடன் உறவுப் பாலத்தை ஏற்படுத்தி, உங்களுக்கென ஒரு முதலீட்டு சமூகத்தை உருவாக்குங்கள். முதலீட்டுக் கூட்டங்களில் கலந்துகொண்டு, கிடைக்கப்பெறும் மதிப்புமிக்க முதலீட்டாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் நட்பை அமைத்துக் கொள்ளுங்கள். இது உங்களது பொருளாதார அறிவை மேம்படுத்தும்.

தலைமுறை தாண்டிய முதலீட்டுச் செல்வம்...

பங்குச் சந்தை முதலீடு என்பது குறுகிய காலத்துக்கோ, உங்கள் நிதி இலக்குகள் நிறைவுபெறும் வரையோ அல்ல; பல தலைமுறைகளைத் தாண்டிய செல்வ வளத்தை ஏற்படுத்துபவை. உங்கள் குழந்தைக்கு பங்கு முதலீட்டைப் பற்றி சொல்லித் தாருங்கள். வீடு, தங்கம், நிலம், தொழில் போல பங்குகளையும் ஒரு சொத்தாகக் கொண்டு, உங்களது அடுத்த தலைமுறைக்கு பங்கு செல்வத்தைப் பெருக்கலாம். காகிதமற்ற டிஜிட்டல் சொத்துதான் இன்றைய பங்கு முதலீடு என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism