Published:Updated:

விலை சரிந்த ஐ.பி.ஓ பங்குகள்... வாங்கலாமா, விற்கலாமா..?

ஐ.பி.ஓ பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.பி.ஓ பங்குகள்

கவர் ஸ்டோரி

விலை சரிந்த ஐ.பி.ஓ பங்குகள்... வாங்கலாமா, விற்கலாமா..?

கவர் ஸ்டோரி

Published:Updated:
ஐ.பி.ஓ பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.பி.ஓ பங்குகள்

ஐ.பி.ஓ வரலாற்றிலேயே 2021-22-ம் நிதி ஆண்டில்தான் அதிக அளவில் ஐ.பி.ஓ-கள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டில்தான் ஐ.பி.ஓ-கள்மூலம் அதிக அளவில் பணம் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்பட்டது. அதாவது, சுமார் ரூ.1.11 லட்சம் கோடி திரட்டப்பட்டது. இது இதற்கு முந்தைய 2020-21-ம் நிதி ஆண்டில் திரட்டப் பட்ட மதிப்பைவிட 3.5 மடங்கு அதிகமாகும். அதாவது, 2020-21-ம் நிதி ஆண்டில் ஐ.பி.ஓ-கள் மூலம் ரூ.31,268 கோடி திரட்டப்பட்டது. அதற்குமுன், 2017-18-ம் நிதி ஆண்டில்தான் ஐ.பி.ஓ-கள் மூலம் அதிக அளவில் நிதி திரட்டப்பட்டது. அதாவது, அந்த நிதி ஆண்டில் ரூ.81,553 கோடி திரட்டப்பட்டது.

நடப்பு நிதி ஆண்டில்தான் இந்திய ஐ.பி.ஓ வரலாற்றிலேயே வெளியீட்டு மதிப்பு அதிகம் கொண்ட பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியானது. இதன் மொத்த பங்கு வெளியீட்டு மதிப்பு ரூ.18,300 கோடி. இந்த நிறுவனம் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நிறுவனம் என்பதால், இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு முதலீட் டாளர்கள் மிகப் பெரிய வரவேற்பைத் தந்தனர். ஆனால், இந்த நிறுவனத்தின் பங்கு தற்போது வெளியீட்டு விலையைவிட 75.59% இறக்கத்தில் வர்த்தகமாகிறது. அதாவது, கடந்த 2021-ம் ஆண்டின் நவம்பர் 18-ம் தேதி ரூ.2,150-க்கு இந்தப் பங்கு வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது ரூ.524.80-க்கு வர்த்தகமாகிறது.

அதே போல, கார் டிரேட் டெக் நிறுவனத் தின் பங்கானது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி ரூ.1,618-க்கு வெளியிடப்பட்டது. தற்போதைய நிலையில், பங்கு ஒன்றின் விலை ரூ.600.25-க்கு வர்த்தக்கமாகிறது. இது ஐ.பி.ஓ-வில் வெளியிடப்பட்ட பங்கு விலையைவிட சுமார் 62.90% குறைவு.

இப்படி, கடந்த ஆண்டில் வெளியான பல நிறுவனங்களின் பங்குகள் 50 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்து வர்த்தகமாகின்றன. இந்த நிலையில், சரிவில் இருக்கும் ஐ.பி.ஓ பங்குகளில் முதலீடு செய்யலாமா, முன்பே இந்தப் பங்குகளை வாங்கியவர்கள் இப்போது என்ன செய்யலாம் என பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

விலை சரிந்த ஐ.பி.ஓ பங்குகள்...
வாங்கலாமா, விற்கலாமா..?

ரீடெயில் முதலீட்டாளர்கள் கவனத்துக்கு...

“கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் 97 ஐ.பி.ஓ-கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. அதில் பேடிஎம், கார்டிரேடு் டெக், ஸ்டார்ஹெல்த் அண்ட் அலைடு இன்ஷூரன்ஸ் உட்பட 36 நிறுவனங்களின் பங்குகள் வெளியிடப்பட்ட பங்கு விலையில் இருந்து பெருமளவு சரிந்து இப்போது வர்த்தகமாகி வருகின்றன.

கடந்த 10 ஆண்டுக்கால ஐ.பி.ஓ வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது, ஐ.பி.ஓ பங்குகளில் 35 - 40% பங்குகளே நீண்ட கால லாபத்தைப் பதிவு செய்த பங்குகளாக உள்ளன. மற்ற பங்குகள் அதன் முதலீட்டாளர்களுக்கு இழப்பைக் கொடுத்திருக்கின்றன. இதன்படி பார்க்கும்போது, ஐ.பி.ஓ பங்குகளில் லாபத்தை எதிர்பார்த்து முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், 2010-ல் வெளியான 54 ஐ.பி.ஓ-களில் 38 பங்குகள் தற்போது வரை நஷ்டத்திலேயே வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. 2011-ம் ஆண்டில் வெளியான 25 ஐ.பி.ஓ-களில் 16 ஐ.பி.ஓ-கள் நஷ்டத்தையும், 9 ஐ.பி.ஓ-கள் மட்டுமே லாபத்தையும் பதிவு செய்தன. இதே நிலைதான் 2018 வரை தொடர்ந்தது. 2019-க்குப் பிறகு, வெளியான ஐ.பி.ஓ-கள்தான் ஓரளவு நல்ல லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு வழங்கத் தொடங்கின.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை நான்கு கோடியாக உயர்ந்து, தற்போது அது எட்டுக் கோடியாக அதிகரித்துள்ளது. புதிய முதலீட்டாளர்கள் அனைவருமே, குறுகிய கால சந்தையின் ஏற்றப் போக்கைப் பார்த்து, அதிக லாபம் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் களமிறங்கி இருப்பவர்களாகத் தான் தெரிகிறார்கள். இவர்களுக்கு பங்குச் சந்தையில் இருக்கும் ரிஸ்க் என்னவென்பது தெரியவில்லை.

ஐ.பி.ஓ என்பது பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் நுழைவதற்கான முதல் வாசல்படி என்பது உண்மைதான். ரீடெயில் முதலீட்டாளர்கள் அதிகம் பேர் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்ய நினைப்பது ஆரோக்கியமான வளர்ச்சிதான். ஆனால், மிகக் குறுகிய காலத்தில் எக்கச்சக்கமாக லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஐ.பி.ஓ-களில் முதலீடு செய்வது ஏற்புடையதல்ல. ரீடெயில் முதலீட்டாளர்கள் ஐ.பி.ஓ-களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்கிற எந்தக் கட்டாயமும் இல்லை. பல துறை சார்ந்த நல்ல நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் நியாயமான விலைகளில் கிடைக்கின்றன. அவற்றிலும் அவர்கள் தங்களின் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

ரீடெயில் முதலீட்டாளர்கள் இன்னொரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் பங்கு விலைக்கும், புதிதாக பட்டி யலிடப்படும் பங்கு விலையின் பிரீமியம் வேல்யூவேஷனுக்கும் இடையில் டிஸ்கவுன்ட் வேல்யூவேஷன் இருந்தால்தான் அந்த ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு ஓரளவுக்கேனும் லாபம் கிடைக்கும். அப்படியில்லாமல், அதிக பிரீமியம் வேல்யூவேஷனில் பட்டியலாகும்போது, அந்த பங்கின் விலை சரிந்தால், மீண்டும் அந்தப் பங்கு தன் முதலீட்டாளர்களுக்கு லாபத் தைத் தர 3 - 4 ஆண்டுகளாவது ஆகும்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம், இண்டிகோ பெயின்ட்ஸ். பெயின்ட் தயாரிப்பு நிறுவனங் களில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்த நிறுவனத்தின் விற்பனை ரூ.774 கோடி. ஆனால், முதல் இடத்தில் இருக்கும் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத் தின் விற்பனை ரூ.24,375 கோடி. இந்த நிறுவனம் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தைவிட 31 மடங்கு குறைவான விற் பனையைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் பிரீமியம் வேல்யூ வேஷன் விலையில் பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ பட்டியலானது.

அதே போல, கார் டிரேடட் டெக் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ வெளியீடு. இந்த நிறுவனத்தின் பிசினஸ் மாடல், ஆன்லைனில் கார் வாங்கி விற்பனை செய்வது. ஆகஸ்ட் 11-ம் தேதி இந்த நிறுவனத் தின் பங்குகள் ரூ.1,618-க்கு பட்டிய லானது. இந்த வெளியீட்டின் மூலம் தனது வியாபாரத்துக் காகவோ, நிறுவனத்தின் இதர தேவைகளுக்காகவோ நிதி திரட்டுவது இந்த நிறுவனத்தின் நோக்கம் இல்லை. எஃப்.பி.ஓ முறையில் புரொமோட்டர்களின் பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டுவது மட்டுமே இந்த நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது. இதன் மூலம் இந்த நிறுவனம் பார்த்த லாபம் ரூ.4,000 கோடி.

பிரீமியம் வேல்யூவேஷன் விலையில் பங்குகளை லிஸ்ட் செய்து, அதிக லாபத்தை இந்த இரு நிறுவனங்களும் பார்த்தன. இது போல, பல நிறுவனங்கள் அதிக விலை மதிப்பீட்டில் ஐ.பி.ஓ-களை வெளியிட்டதை முதலீட்டாளர்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

ஏ.கே.பிரபாகர்
ஏ.கே.பிரபாகர்

பேடிஎம் பங்கு... எப்போது லாபம் தரும்?

பேடிஎம் தற்போது ஐ.பி.ஓ வெளியிடப்பட்ட விலையில் இருந்து மிகப் பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. நஷ்டத்தில் இயங்கிவரும் இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கே ‘நிறுவனம் எப்போது லாபத்தில் இயங்க ஆரம்பிக்கும்’ என்பதில் குழப்பம் இருக்கிறது. அப்படியிருக்கும் போது இந்தப் பங்கானது தன் முதலீட்டாளர்களுக்கு எப்போது லாபத்தைக் கொடுக்கும் என்பதை யாராலும் உறுதியாகச் சொல்லி விட முடியாது. அதனால் இந்தப் பங்கில் முதலீடு செய்திருப்பவர்கள் லாபம் பெற காத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 2004-ம் ஆண்டில் வெளியான பயோகான் நிறுவனமும் மிகப் பெரிய விலை சரிவுக்குப் பிறகு, 2016-ல்தான் அதன் முதலீட்டாளர் களுக்கு லாபத்தை வழங்கியது.

குறைவான விலையில் பட்டியலிடப்படும் ஐ.பி.ஓ-கள் ஏற்றத்தைப் பெறும் என்பதற்கும், அதன் முதலீட்டாளர்களுக்கு அளவில்லா லாபத்தைத் தரும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், ஐ.ஆர்.சி.டி.சி. ரயில்வே துறையில் இந்த நிறுவனம் ஒரு ஏகபோகமான (Monopoly) நிறுவனமாக இருந்தாலும், மிகக் குறைவான விலையில்,அதாவது ரூ.320-க்கு பட்டியலிடப்பட்டது. பங்கு பிரிப்புக்குப் பிறகும், தற்போது ரூ.766-க்கு வர்த்தகமாகி, இந்த நிறுவனம் தன் முதலீட் டாளர்களுக்குக் குறுகிய காலத்தில் நல்ல லாபத்தைத் தந்திருக்கிறது. ஆக, பிரீமியம் விலையில் பட்டியலிடப்படும் ஐ.பி.ஓ-களைத் தேர்வு செய்யும்போது முதலீட்டாளர்கள் கவனமாக இருப்பது அவசியம்.

வரலாறு முக்கியம் அமைச்சரே...

ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ பட்டியலிடுகிறது எனில், அந்த நிறுவனத்தின் வரலாற்றை முதலீட்டாளர்கள் நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். ஐ.பி.ஓ-வுக்கு வரும் ஒவ்வொரு நிறுவனமும் செபியிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஒரு நிறுவனமானது ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு செபியிடம் அனுமதி கேட்கும்போது, ஐ.பி.ஓ-மூலம் எவ்வளவு நிதி திரட்டப் போகிறோம், எப்படித் திரட்டப்போகிறோம், புதிய பங்கின் வெளியீட்டு மதிப்பு எவ்வளவு, ஓ.எஃப்.எஸ் முறையில் திரட்டப்படும் நிதி எவ்வளவு என்கிற விவரங்கள் உட்பட நிறுவனம் சார்ந்த இதர விவரங்களையும் ஓர் ஆவணமாக செபியிடம் சமர்ப்பிக்கும். ‘டி.ஆர்.ஹெச்.பி’ (Draft Red Herring Prospectus - DRHP) எனப்படும் இந்த ஆவணத்தை ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்ய கவனம் செலுத்தும் அனைத்து சிறு முதலீட்டாளர்களும் அவசியம் படிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நிறுவனம் சார்ந்த முழு விவரங் களையும் அவர்களால் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ வந்த பிறகு, குறைந்தபட்சம் மூன்று காலாண்டு முடிவுகளைப் பார்க்க வேண்டியது அவசியம். நிறுவனத்தின் செயல்பாடுகளும், உள் விவகாரங்களும் அந்த நிறுவனத்தின் பங்கு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதால், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை முதலீட் டாளர்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

நடப்பு ஆண்டில் வெளியான ஐ.பி.ஓ வந்த பங்குகள் பலவும் அதிக மதிப்பீட்டு விலையில் பட்டியலிடப் பட்டன. இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர்ப் பதற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இதனால் ஐ.பி.ஓ வந்த பங்குகளைத் தற்போது முதலீட்டுக்காகத் தேர்வு செய்யும்போது கூடுதல் கவனம் தேவை. ‘லிஸ்ட்டிங் கெயின்’ என்று சொல்லப்படுகிற, குறுகிய கால வர்த்தகத்துக்கு ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்பவர்களாக இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் ஐ.பி.ஓ-வில் பங்குகளை வாங்குபவர்களாக இருந்தாலும் மேலே சொல்லி இருக்கும் அனைத்து விஷயங் களையும் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டும்.

ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடு கிறது எனில், அந்த ஐ.பி.ஓ மூலம் திரட்டப்படும் நிதியை அந்த நிறுவனம் எதற்காகப் பயன்படுத்து கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். எந்தவொரு நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் திரட்டப்படும் நிதியை, தனது நிறுவனத்தின் விரிவாக்கத்துக்குப் பயன்படுத்து கிறதோ, தனது வர்த்தகத்தை மேம்படுத்த பயன்படுத்தியிருக் கிறதோ, அந்த ஐ.பி.ஓ பங்கில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பரீசிலனை செய்யலாம்.

தங்களின் பங்குகளை ‘ஆஃபர் ஃபார் சேல்’ முறையில் புரொமோட்டர்கள் விற்றுவிட்டு வெளியேறுவதற்காக ஐ.பி.ஓ வெளியிட்டிருந்தால், அந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யக் கூடாது. சிறப்பாகச் செயல்படும் நிறுவனத்தில் இருந்து எந்தவொரு புரொமோட்டரும் தனது பங்குகளை விற்றுவிட்டு வெளியேற மாட்டார் என்பதை சிறு முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல, மொத்த ஐ.பி.ஓ வெளியீட்டில் 50 சதவிகிதத்துக்கு மேல் ஓ.எஃப்.எஸ் முறையில் பங்கு வெளியிடப்படுகிறது என்றாலே அந்த ஐ.பி.ஓ-வை முதலீட்டாளர்கள் மிகக் கவனமுடன் அணுகுவது அவசியம்.

விலை சரிந்த ஐ.பி.ஓ பங்குகள்...
வாங்கலாமா, விற்கலாமா..?

வாங்கத் தேவையில்லாத பங்குகள்...

தற்போதைய நிலையில், பேடிஎம், கார் டிரேடு டெக், ஸொமேட்டோ மற்றும் இண்டிகோ பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் பரிசீலனை செய்யத் தேவையில்லை. இந்த நிறுவனங்களின் பங்குகள் ஐ.பி.ஓ வெளியிடப்பட்டபோது புரொமோட்டர்கள் தங்களது பெருவாரியான பங்குகளை விற்பனை செய்து விட்டு, வெளியேறிவிட்டார்கள். அது மட்டுமல்லாமல், இந்தப் பங்குகள் பிரீமியம் வேல்யூவேஷன் விலையில் பட்டியலாகின. இந்தப் பங்குகளை அதிக விலை கொடுத்து ஏற்கெனவே வாங்கியவர்கள், இப்போது பொறுமையாகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அந்தப் பங்கு நிறுவனத்தின் செயல்பாடுகளில் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டியது அவசியம்.

விலை சரிந்திருக்கும் நிலையில் இந்தப் பங்கை வாங்கினேன்; இப்போது ஓரளவுக்கு லாபம் கிடைத்திருக் கிறது என்பவர்கள் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்று விட்டு, இன்றைய நிலையில் அதிக வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வது நல்லது. இந்தப் பங்கில் புதிதாக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கும் இந்த ஆலோசனை பொருந்தும்.

இந்தப் பங்குகள் லாபத்தையே கொடுக்காதா எனில், கொடுக்கும். அதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். அதே போல, ஃபினோ பேமென்ட் பேங்க், பி.பி.ஃபின்டெக், ராம் புராபர்ட்டீஸ் போன்ற நிறுவனப் பங்குகளில் முதலீடு செய் வதையும் தற்சமயம் முதலீட்டாளர்கள் தள்ளிவைக்கலாம்.

பரிசீலிக்க வேண்டிய பங்குகள்...

அமி ஆர்கானிக்ஸ் நிறுவனப் பங்கை முதலீட்டாளர்கள் பரிசீலனை செய்யலாம். ஏனெனில், பசுமைத் தொழில் நுட்பத்தைக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், கெமிக்கல் புராடெக்ட்டுகளைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சந்தையில் கிராக்கி இருக்கிறது.

அதே போல, சோனாகாம் நிறுவனப் பங்கையும் முதலீட் டாளர்கள் வாங்கப் பரிசீலிக்கலாம். ஏனெனில், இனி எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கும் என்கிறபோது, மின்சார வாகனத் தயாரிப்பில் இந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆர்டர் புத்தகம் ரூ.16,000 கோடியாக இருக்கிறது. இந்த பங்கின் விலை தற்போதைய நிலையில், ரூ.686-க்கு வர்த்தகமாகி வருகிறது. இது காஸ்ட்லியான பங்குதான் என்றாலும், இதனுடைய பிசினஸ் மாடல் நன்றாக இருப்பதால், இந்த விலையையும் தாண்டி முதலீட்டாளர்களுக்கு லாபத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை சரிந்த ஐ.பி.ஓ பங்குகள்...
வாங்கலாமா, விற்கலாமா..?

வாங்க வேண்டிய பங்குகள்...

கடந்த ஆண்டில் ஐ.பி.ஓ வந்த பங்குகளில் சிறு முதலீட் டாளர்கள் எவற்றை எல்லாம் வாங்கப் பரிசீலிக்கலாம் என்று பார்ப்போம்.

எஸ்.ஜே.எஸ் என்டர்பிரைசஸ்: இந்த நிறுவனத்தின் பிசினஸ் மாடல் தனித்துவமானது. சாம்சங் மாதிரியான மிகப் பெரிய பிராண்டுகளுக்கு ‘3டி’ லோகோ பிரின்ட் வடிவமைத்துத் தருவதுதான் இந்த நிறுவனத்தின் பணி. இதற்கான தேவைகள் இனிவரும் நாள்களில் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த நிறுவனத்தின் ஏற்றுமதி ஆர்டர்களும் சிறப்பாக இருக்கின்றன. நீண்டகால நோக்கில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த நிறுவனத்தின் பங்கை முதலீட்டாளர்கள் பரிசீலிக்கலாம். கடந்த 2021-ம் ஆண்டின் நவம்பர் 15-ம் தேதி இந்த பங்கு ரூ.542 என்கிற விலையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. தற்போது 25% வரை சரிந்து ரூ.407 என்கிற விலையில் வர்த்தக மாகிறது.

ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்ஷூரன்ஸ்: கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கிய மெடிக்கல் பாலிசிகள் வாயிலாக அதிக க்ளெய்ம்கள் பெறப்பட்டுள்ளன. இந்த எதிர்மறையான செய்தி, பங்கின் விலையை வீழ்த்தியிருப்ப தாகத் தெரிகிறது. இந்த க்ளெய்ம் பாதிப்பு நீண்ட காலம் வரை இதன் பங்கு விலையை வீழ்ச்சி யில் வைத்திருக்காது. மேலும், கொரோனா காரணமாக இன்ஷூரன்ஸ் குறித்த விழிப் புணர்வு மக்களுக்கு அதிகரித் திருப்பதால், அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது.

இந்த ஐ.பி.ஓ கடந்த 2021-ம் ஆண்டின் டிசம்பர் 10-ம் தேதி ரூ.900-க்கு வெளியானது. தற்போது 22.% வரை சரிந்து ரூ.700.70-க்கு வர்த்தகமாகிறது. தற்போது சரிவில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் இந்தப் பங்கு விலை ஏற்றம் பெறும் என்பதால், முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை வாங்க பரிசீலிக் கலாம்.

கல்யாண் ஜுவல்லர்ஸ்: மக்கள் இப்போது ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட பிராண்டட் தங்க நகைகளை விரும்பி அணிய ஆரம்பித்திருக்கிறார்கள். தங்கத்தின் விலையும் சமீபத்திய காலங்களில் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிறுவனத்தின் 154 கிளைகள் இந்தியா முழுக்க, குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவியிருக்கிறது. இவர்களுடைய பிசினஸ் மாடல் நன்றாக இருக்கிறது. இதன் காரணமாக நீண்டகால நோக்கில் இந்தப் பங்கு விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டின் மார்ச் 26-ம் தேதி இந்த ஐ.பி.ஓ வெளியானது. இதன் வெளியீட்டு விலை ரூ.87. ஆனால், தற்போதைய நிலையில் 30% சரிந்து ரூ.60.95-க்கு வர்த்தகமாகி வருகிறது.

ஆதித்யா பிர்லா சன்லைஃப் ஏ.எம்.சி: ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தனது முதலீட் டாளர்களுக்கு நிலையான வளர்ச்சியை வழங்கி வருகிறது. இது இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய ஏ.எம்.சி ஆகும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிர்வகித்துவரும் சொத்து மதிப்பு ரூ.2.98 லட்சம் கோடி. இந்த மியூச்சுவல் ஃபண்டில் 10 ஆண்டுகளுக்கான எஸ்.ஐ.பி-யில் முதலீட்டை வைத்திருந்த முதலீட்டாளர் விகிதம் 79%. கடந்த 2021-ம் ஆண்டின் அக்டோபர் மாதம் 11-ம் தேதி ரூ.712 என்கிற பிரீமியம் வேல்யூவேஷன் விலையில் இதன் ஐ.பி.ஓ பங்குச் சந்தையில் பட்டியல் ஆனது, தற்போது 28% வரை சரிந்து, ரூ.514.05 என்கிற விலையில் வர்த்தகமாகிறது.

ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள், அவர்கள் பெற்றிருக்கும் பிசினஸ் ஆர்டர்கள், ஈட்டி யிருக்கும் நிகர லாபங்கள் என்ன என்பதை எல்லாம் பார்த்த பிறகு, அந்த நிறுவனத்தின் பங்கு செயல்பாட்டை முதலீட்டாளர்கள் ஓரளவுக்குக் கணிக்கலாம். அதன்பிறகு, அந்த ஐ.பி.ஓ பங்குகளில் முதலீடு செய்யலாமா, கூடாதா என்பதை முடிவு செய்யலாம். நிறுவனம் பற்றி ஓரளவுக்கு மட்டுமே தெரிந்து கொண்டு, முதலீடு செய்வது சரியான முதலீட்டு யுக்தியாக இருக்காது. லாபம் கிடைத்தால் விற்றுவிட்டு வெளியே வந்துவிடலாம் என்று நினைப்பது டிரேடர்கள் மனநிலையே தவிர, முதலீட்டாளர்கள் செய்யும் செயல் இல்லை” என்றார் தெளிவாக.

ஐ.பி.ஓ பங்குகளில் முதலீடு செய்ய நினைப் பதில் தவறில்லை. ஆனால், முதலீடு செய்ய நினைக்கும் ஐ.பி.ஓ பங்குகள் குறித்த விவரங் களை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் அதில் முதலீடு செய்வதோ, முதலீடு செய்து தொடர்ந்து பங்குகளை வைத்திருப்பதோ கூடாது என்பதை சிறு முதலீட்டாளர்கள் புரிந்துகொள்வது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism