Published:Updated:

உச்சத்தில் பங்குச் சந்தை... முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான 8 அம்சங்கள்..!

உச்சத்தில் பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
உச்சத்தில் பங்குச் சந்தை

கவர் ஸ்டோரி

உச்சத்தில் பங்குச் சந்தை... முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான 8 அம்சங்கள்..!

கவர் ஸ்டோரி

Published:Updated:
உச்சத்தில் பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
உச்சத்தில் பங்குச் சந்தை

ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட், Rkgcapitalgains.com

இந்தியப் பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் (BSE) குறியீடான சென்செக்ஸ் 57000 புள்ளிகளையும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் (NSE) குறியீடான நிஃப்டி 17000 புள்ளிகளையும் தாண்டியிருக்கிறது. சந்தை உச்சத்திலிருக்கும் இந்த நிலையில், சிறு முதலீட்டாளர்கள் சில முக்கிய அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.

ஜி.எஸ்.ராஜேஷ் குமார் 
ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட், 
Rkgcapitalgains.com
ஜி.எஸ்.ராஜேஷ் குமார் ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட், Rkgcapitalgains.com

1. மதிப்பீடு மிக முக்கியம்

பங்குச் சந்தை முதலீட்டில் மதிப்பீடு (Valuation) என்பது மிக முக்கியமாகும். பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது, அதிக மதிப்பீடு கொண்ட நிறுவனப் பங்குகளில் புதிதாக முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். காரணம், அதன் பிறகு, விலை அதிகமாக உயர வாய்ப்பு இருக்காது. ஆனால், நீண்ட கால முதலீட்டாளர்களாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது நல்லது.

2. இழப்பில் இருப்பதை நீண்ட கால முதலீடாக மாற்ற வேண்டாம்

பலர் குறுகிய கால வர்த்தகம் மற்றும் முதலீட்டு நோக்கத்துடன் பல பங்குகளை வாங்கி வைத்திருப்பார்கள். அந்த நிறுவனப் பங்குகள் சந்தை உச்சத்திலிருக்கும்போது இழப்பில் இருக்க வாய்ப்புண்டு.

அந்தப் பங்குகளை நஷ்டத்தில் விற்க விருப்பம் இல்லாமல் நீண்ட கால முதலீடாக மாற்ற முயல வேண்டாம். அப்படி நீண்ட கால முதலீடாக மாற்றும்பட்சத்தில் உங்களால் பங்குச் சந்தை முதலீடு மூலம் செல்வம் சேர்க்க முடியாது.

3. நிறுவனத்தின் அடிப்படையைக் கவனியுங்கள்

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் தொழில் தொடர்பான அடிப்படை அம்சங் களைக் (Fundamentals) கவனிக்கத் தவறாதீர்கள். அதுவும் நீண்ட கால முதலீடு என்கிறபோது கட்டாயம் கவனிக்க வேண்டும்.

ஒரு பங்கு நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள் என்கிறபோது அந்த நிறுவனத்தின் நிறுவனர்களின் நம்பகத்தன்மை, கடன் மற்றும் பங்கு மூலதன விகிதம், நிறுவனர்களின் பங்கு மூலதன அளவு, நிறுவனத்தின் பணவரத்து, நிகர விற்பனை வளர்ச்சி, நிகர லாப வளர்ச்சி, எதிர்கால விரிவாக்கத் திட்டம் போன்றவற்றை விரிவாக நிச்சயம் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

உச்சத்தில் பங்குச் சந்தை... முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான 8 அம்சங்கள்..!

4. மொத்த முதலீடு வேண்டாம்

பங்குச் சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, மொத்த முதலீட்டை எப்போதும் மேற்கொள்ள வேண்டாம். அதுவும் சந்தை உச்சத்தில் இருக்கும்போது இந்தத் தவற்றை செய்யவே கூடாது. ஒரு நிறுவனப் பங்கில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கும் தொகையை எப்போதும் மூன்று அல்லது ஐந்து பாகங்களாகப் பிரித்து வைத்துக்கொண்டு, அந்தத் தொகையைக் குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்து வருவது நல்லது. அல்லது சந்தை இறங்கும் வரை காத்திருந்து முதலீடு செய்வது நல்லது.அதுவரைக்கும், அந்தத் தொகையை லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் வைத்திருப்பதன் மூலம் சிறு அளவிலான லாபத்தைப் பார்க்க முடியும்.

5. பல துறை நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு

பலர், துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் மற்றும் செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள். எப்போதும் ஒரே துறை சார்ந்து முதலீடு செய்வது அதிக ரிஸ்க் ஆனது. பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை ஓரிரு துறைகளில் பிரித்து முதலீடு செய்வது நல்லது. அதுவும் சந்தை உச்சத்தில் இருக்கும்போது பிரித்து செய்வது ரிஸ்க்கைக் குறைக்க உதவும்.

பங்கு முதலீட்டாளர் என்கிற போது முதலீட்டைக் குறைந்த பட்சம் ஐந்து துறை சார்ந்த பங்குகளிலாவது பிரித்து முதலீடு செய்வது அவசியாகும். நல்ல லாபம் கண்ட பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நடைமுறை யில் இந்த உத்தியைப் பின்பற்றி வருகிறார்கள்.

6. இண்டெக்ஸ் பங்குகளையும் தாண்டி…

பொதுவாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் உயர்வில் இருந்தால், சந்தை உச்சத்தில் இருக்கிறது என்கிறோம். ஆனால், இந்தக் குறியீட்டுக்கு வெளியே பல நிறுவனப் பங்குகள் கவர்ச்சி கரமான மதிப்பீட்டில் முதலீட்டுக்குக் கிடைக்கின்றன. அதுபோன்ற பங்குகளை அடையாளம் கண்டு, பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் போதும் முதலீடு செய்யலாம். இந்த முறையில் எப்போதும் முதலீடு செய்வது தொடர் லாபத்துக்கு வழி வகுக்கும்.

7. பிராஃபிட் புக்கிங்

நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தைப் பங்குகள் கொடுத்திருக்கிறது எனில், பகுதி லாபத்தை வெளியில் எடுக்கத் தயங்காதீர்கள். இதை ‘பார்ட் பிராஃபிட் புக்கிங்’ என்பார்கள்.

பங்குச் சந்தை முதலீட்டில் இடையிடையே லாபத்தை வெளியே எடுப்பதன் மூலம் லாபத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியும். மேலும், லாபத்தை அதிகரிக்க முடியும்.

8. அஸெட் அலொகேஷனைப் பின்பற்றுங்கள்

கடைசியாக, உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப அஸெட் அலொகேஷன்படி உங்கள் முதலீட்டை எப்போதும் தொடருங்கள். அதாவது, சந்தை ஏற்றத்தில் இருந்தாலும், இறக்கத் தில் இருந்தாலும் அஸெட் அலொகேஷனை அவ்வப்போது சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

சந்தை உச்சத்தில் இருக்கும் போது உங்களின் பங்கு சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்) அதிக லாபத்தில் இருந்தால், அஸெட் அலொகேஷன்படி, அவற்றை விற்றுக் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரிக்கவும்.

உதாரணமாக, ஒருவரின் வயது 50. அவர் அஸெட் அலொகேஷன்படி, 50% பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டிலும், 30% கடன் சந்தை சார்ந்த முதலீட்டிலும், 20 சதவிகிதத்தை தங்கம் சார்ந்த முதலீட்டிலும் செய்திருக்க வேண்டும். இவரின் ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1 லட்சம் பங்கு சார்ந்ததிலும், ரூ.60,000 கடன் சார்ந்ததிலும், ரூ.40,000 கோல்டு இ.டி.எஃப்-லும் இருந்தது. இந்த முதலீடுகள் முறையே ரூ.1.5 லட்சம், ரூ.70,000, ரூ.50,000 என அதிகரித்திருக்கிறது என வைத்துக்கொள்வோம்.

இவரின் அஸெட் அலொகேஷன்படி, 50:30:20 என, அதாவது, ரூ.1,35,000: ரூ.81,000: ரூ.54,000 என இருக்க வேண்டும். எனவே, அஸெட் அலொகேஷனைச் சரிசெய்ய பங்கு முதலீட்டில் 15,000 மதிப்புள்ள பங்குகளை விற்க வேண்டும்; இந்த ரூ.15,000-ல் ரூ.11,000-ஐ கடன் சார்ந்த திட்டங்களிலும், 4,000 ரூபாயை கோல்டு இ.டி.எஃப்பிலும் முதலீடு செய்ய வேண்டும்.

இப்படிச் செய்யும்போது பங்கு முதலீட்டின் லாபத்தைத் தக்கவைப்பதுடன், முதலீட்டுக் கலவையின் (போர்ட் ஃபோலியோ) ரிஸ்க்கைக் குறைக்க முடியும். சந்தை உச்சத்தில் இருக்கும் நிலையில் இந்த எட்டு விஷயங்களையும் மனதில் கொண்டு செயல்படுவது அவசியம்!

கவர்ச்சிகரமான மதிப்பீடு: கவனிக்க வேண்டிய ஐந்து பங்குகள்..!

டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (Tata Consumer Products)

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு கடன் பெரிதாக இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக (CAGR) 151.35 சதவிகிதமாக உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக டிவிடெண்ட் வழங்கி வருகிறது. இதன் நிகரப் பணவரத்து அதிகரித்துள்ளது. டெக்னிக்கல்படி பார்த்தால், பல பங்குத் தரகு நிறுவனங்கள் இந்த நிறுவனப் பங்கை வாங்க பரிந்துரை செய்திருப்பதுடன், இலக்கு விலையையும் அதிகரித்துள்ளன. இந்த நிறுவனத்தின் டிவிடெண்ட் வழங்கும் விகிதம் 45% எனச் சிறப்பாக உள்ளது.

டாடா எலெக்ஸி (TATA ELXSI)

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனத்துக்கும் கடன் பெரிதாக இல்லை. நிறுவனத்தின் பங்கு மூலதனம் மூலமான வருமானம் (Return On Equity -ROE) சாதனை அளவாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி சுமார் 30 சதவிகிதமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் டிவிடெண்ட் வழங்கும் விகிதம் 50.11% என சிறப்பாக உள்ளது.

பி.பி.சி.எல் (BPCL)

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் கடனைக் குறைத்து வருகிறது. இந்த நிறுவனத்தின் டிவிடெண்ட் வழங்கும் விகிதம் 85.47% எனச் சிறப்பாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் டிவிடெண்ட் யீல்டு 9.34 சதவிகிதமாக உள்ளது.

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் (HCL TECHNOLOGIES)

இதுவும் கடன் இல்லா நிறுவனம். இந்த நிறுவனத்தின் டிவிடெண்ட் வழங்கும் விகிதம் சுமார் 20% என சிறப்பாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்த நிறுவனத்தின் சராசரி விற்பனை வளர்ச்சி கிட்டத்தட்ட 20 சதவிகிதமாக உள்ளது.

டிவிஸ் லேபரட்டரீஸ் (DIVIS LABORATORIES)

இந்த நிறுவனம் அதன் கடனைக் குறைத்து, கிட்டத்தட்ட கடன் இல்லா நிறுவனமாக மாறி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் டிவிடெண்ட் வழங்கும் விகிதம் சுமார் 30% எனச் சிறப்பாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்த நிறுவனத்தின் சராசரி விற்பனை வளர்ச்சி கிட்டத்தட்ட 18 சதவிகிதமாக உள்ளது.

வர்த்தகர்களின் கவனத்துக்கு..!

தினசரி மற்றும் குறுகிய கால வர்த்தகத்தில் இழப்புத் தடுப்பு (Stop Loss) கட்டாயம். அது இல்லாமல் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம். காரணம், சந்தை உச்சத்தில் இருக்கும்போது திடீரென இறக்கத்துக்கு உள்ளாகக்கூடும். அதுவும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் திடீரென அதிக இறக்கம் ஏற்படலாம். ஒரு பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பதை டெக்னிக்கல் அனாலிசிஸ் சுட்டிக்காட்டும் வகையில், வர்த்தகம் செய்வது அவசியம். அதே நேரத்தில், நிறுவனம் சார்ந்து, நாடு சார்ந்து, உலகம் சார்ந்து ஏதாவது திடீர் மாற்றம் நடந்தால், டெக்னிக்கல் அனாலிசிஸ் தவறாகப் போக வாய்ப்புள்ளது என்பதை மனதில்கொள்ளுங்கள். எனவே, கவனமாகச் செயல்படுவது மிகவும் அவசியம்!சந்தை உச்சத்தில் இருக்கும்போது உங்களின் பங்கு சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்) அதிக லாபத்தில் இருந்தால், அஸெட் அலொகேஷன்படி, அவற்றை விற்றுக் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரிக்கவும்!