Published:Updated:

பி.எஸ்.இ-யைத் திருத்தவந்த என்.எஸ்.இ முறைகேடு செய்தது எப்படி? சுஜிதா தலாலின் சூப்பர் புத்தகம்

என்.எஸ்.இ
பிரீமியம் ஸ்டோரி
என்.எஸ்.இ

C O N T R O V E R S Y

பி.எஸ்.இ-யைத் திருத்தவந்த என்.எஸ்.இ முறைகேடு செய்தது எப்படி? சுஜிதா தலாலின் சூப்பர் புத்தகம்

C O N T R O V E R S Y

Published:Updated:
என்.எஸ்.இ
பிரீமியம் ஸ்டோரி
என்.எஸ்.இ

பங்குச் சந்தை உலகில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு புத்தகம் பரபரப்பாகப் பேசப்பட்டு விவாதிக்கப்படும். அப்படி இப்போது விவாதிக்கப்படும் புத்தகம், சுஜிதா தலால் மற்றும் தெபாஷிஸ் பாசு எழுதிய ‘அப்ஜலிவ்ட் பவர்’ (Absolute Power). சுஜிதா தலால், எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றியபோது, ஹர்ஷத் மேத்தா மோசடியை முதலில் சொன்னவர். கடந்து 15 ஆண்டுக் காலத்தில் என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சில் நடந்த முறைகேடுகளைத் தனது லேட்டஸ்ட் புத்தகம் மூலம் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் சுஜிதா.

சுஜிதா தலால்
சுஜிதா தலால்
தெபாஷிஸ் பாசு
தெபாஷிஸ் பாசு

பி.எஸ்.இ என்னும் புரோக்கர்களின் புகலிடம்...

பி.எஸ்.இ ஒரு எக்ஸ்சேஞ்சாக இருந்தாலும் அது புரோக்கர்களால் நடத்தப்பட்டு வந்தது. செயல் இயக்குநர் இருந்தாலும் அவரால் புரோக்கர்களை மீறி செயல்பட முடியாது. அதேபோல, பி.எஸ்.இ உறுப்பினராவதும் எளிதல்ல. 1980-களில் பி.எஸ்.இ மெம்பர்ஷிப் பெற நினைத்தால், ஒரு கோடி ரூபாய் தர வேண்டும். மிகச் சிலர் மட்டுமே அந்த எக்ஸ்சேஞ்சில் இருந்ததால், வெளிப்படைத்தன்மை குறைவாக இருந்தது. பங்குகள் செட்டில்மென்ட் ஒழுங்காக இருக்காது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் புரோக்கர் கள் அடிக்கடி திவாலானார்கள்.

பி.எஸ்.இ-யில் வெளிப்படைத் தன்மையை உருவாக்க வேண்டும் என்று நினைத்த மத்திய அரசு, ஜி.ஹெச் படேல் தலைமையில் 1987-ம் ஆண்டு ஒரு கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டியானது பி.எஸ்.இ-யின் செயல்பாட்டில் பல மாற்றங்களைக் கொண்டு வர பரிந்துரை செய்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. இதனால், 1991-ம் ஆண்டில் எம்.ஜே.பெர்வானி தலைமையில் மற்றொரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி புதிய எக்ஸ்சேஞ்ச் ஒன்றை உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தது.

பங்குச் சந்தைகளின் செயல் பாட்டைக் கட்டுப்படுத்தி ஒழுங்க மைக்க 1988-ம் ஆண்டு செபி (SEBI) என்னும் அமைப்பு தொடங்கப் பட்டாலும், அந்த அமைப்புக்கு அப்போது பெரிய அளவில் அதிகாரம் தரப்படவில்லை. புதிய எக்ஸ்சேஞ்ச் உருவாக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்தாலும், அதற்கு பி.எஸ்.இ உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், செபியால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், பி.எஸ்.இ எக்ஸ்சேஞ்ச் புரோக்கர் களுக்காக மட்டுமே நடத்தப்பட்டதே தவிர, பட்டியலிடப்பட்ட நிறுவனங் களுக்கோ, முதலீட்டாளர்களுக்கோ அல்ல. இந்த நிலையில், 1992-ம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா மோசடி நடந்தது. இதனால் பங்குச் சந்தையில் பெரும் இறக்கம் கண்டு, முதலீட்டாளர் களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இனியும் பொறுக்க முடியாது என நினைத்த நரசிம்ம ராவ் அரசு, புதிய எக்ஸ்சேஞ்சை உருவாக்க அனுமதி அளித்தது.

NSE
NSE

என்.எஸ்.இ என்னும் புதிய எக்ஸ்சேஞ்ச்...

என்.எஸ்.இ வரும்போதே லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் வந்தது. கம்ப்யூட்டர்கள் அதிகம் இல்லாத அந்தக் காலத்தில் என்.எஸ்.இ-யின் பாச்சா பலிக்காது என்றே பி.எஸ்.இ நினைத்தது. ஆனால், என்.எஸ்.இ-யின் செயல்பாடு காலமாற்றத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிற மாதிரி இருந்ததால், பல புரோக்கர்கள் அதில் உறுப்பினராகத் தொடங்கினார்கள். இதைப் பார்த்த பி.எஸ்.இ திக்குமுக்காடிப்போனது.

பி.எஸ்.இ-யில் நடந்த தவறுகள் என்.எஸ்.இ-யில் நடக்கக் கூடாது என்பதில் ஆர்.ஹெச் பாட்டில் தெளிவாக இருந்தார். என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் புரொஃபஷனல்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். புரோக்கர்கள் குழு, எங்களையும் இயக்குநர் குழுவில் சேர்க்க வேண்டும் என லாபி செய்தது. இதை ஆர்.ஹெச் பாட்டில் ஏற்கவே இல்லை. அப்போது மண்டல அளவில் செயல்பட்ட எக்ஸ்சேஞ்சுகளும் என்.எஸ்.இ-க்கு தேசிய அதிகாரம் தரக்கூடாது என்றன. இந்தக் கோரிக்கை யும் நிராகரிக்கப்பட்டு, என்.எஸ்.இ தேசிய அளவில் இயங்க அனுமதி அளிக்கப் பட்டது. இப்படி அரசுத் தரப்பில் அனைத்து ஆசிர்வாதங்களுடன் 1994-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி தீபாவளியில் என்.எஸ்.இ தொடங்கப்பட்டது.

இந்த சமயத்தில், பி.எஸ்.இ-யின் ஒரு நாள் வால்யூம் 100 கோடி ரூபாய். ஆனால், தொடங்கப்பட்டு சில வாரங்களில் 10 கோடி ரூபாய் வால்யூமை என்.எஸ்.இ அடைந்தது. ஒரே ஆண்டில் பிஎஸ்.இ-யில் நடக்கும் வர்த்தகத்தைவிட என்.எஸ்.இ-யில் அதிக வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர் களுக்குச் சாதகமான பல மாற்றங்களை என்.எஸ்.இ தொடந்து செய்துகொண்டே வந்தது. புதிய பல புராடக்டு களை உருவாக்கியது.

பாட்டீலுக்குப் பிறகு..?

ஆர்.ஹெச் பாட்டீல் இருக்கும்வரை சரியாகச் சென்றுகொண்டிருந்த என்.எஸ்.இ அதன் பிறகு, திசை மாறிச் செல்ல ஆரம்பித்தது. ஆனால், 2001-ம் ஆண்டு பாட்டீல் விலகியபின் ரவி நாராயண் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். 2004-ம் ஆண்டு என்.எஸ்.இ-யின் 10-ம் ஆண்டு விழா நடந்தது. விழா மேடையில் முதல் வரிசையில் பாட்டீல் இருந்தபோது, அவரைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட ரவியோ, சித்ராவோ பேசவில்லை. என்.எஸ்.இ நிர்வாகம் அடுத்தடுத்து பல நடவடிக்கை எடுத்தபோதும், அதில் சில தவறு இருந்தாலும் பாட்டீலால் எதிர்க்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் என்.எஸ்.இ-யின் இயக்குநர் குழுவில் இருந்தார்.

ரவியின் தலைமையில் என்.எஸ்.இ அடுத்தகட்ட வளர்ச்சியை அடைந்தாலும் அது மர்மதேசமாக இருந்தது. அந்த நிறுவனத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக அரசுக்கு 35.7% பங்குகள் இருந்தாலும், அதன் செயல்பாடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக்கூட யாரும் அறிய முடியவில்லை. அதேபோல, அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையும் யாருக்கும் கிடைக்காது.

போட்டியை நசுக்குதல்...

இந்த நிலையில், பி.எஸ்.இ-யும் காலத்தின் தேவைக்கேற்ப மாறத் தொடங்கியது. அப்போது அமெரிக்கப் பங்குச் சந்தையான நாஸ்டாக், பி.எஸ்.இ-யின் 26% பங்குகளை வாங்கத் திட்டமிட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேல் இந்தப் பேச்சு வார்த்தை நடந்தது. செபி தலைவர் களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முதலீடு இறுதிக் கட்டத்தை அடைய விருந்த நிலையில், இந்திய சந்தையில் 5 சதவிகிதத்துக்கு மேல் பங்குகள் இருக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவு போட்டது.

புரோக்கர்களுக்கான ‘ஒ.டி.ஐ.என்’ என்ற சாஃப்ட்வேரை ஜிக்னேஷ் ஷா விற்றுவந்தார். அவருக்குப் போட்டியாக ‘நவ்’ என்னும் சாஃப்ட்வேரை என்.எஸ்.இ-யின் துணை நிறுவனம் கொண்டுவந்ததுடன், அதை புரோக்கர்களுக்கு இலவச மாகக் கொடுத்தது. ஆனால், அந்த சாஃப்ட்வேர் தோல்வி அடைந்த நிலையில், ஜிக்னேஷ் ஷாவின் ‘ஒ.டி.ஐ.என்’ சாஃப்ட்வேரை புரோக்கர்கள் பயன்படுத்தக் கூடாது என வாய்வழி உத்தரவு பிறப்பித்தது.

ஜிக்னேஷ் ஷா, கமாடிட்டி சந்தைக்கென எம்.சி.எக்ஸ் (multi commodity exchange) என்ற சந்தையைப் பிற்பாடு உருவாக்க, அதற்குப் போட்டியாக என்.சி.டி.இ.எக்ஸ் எக்ஸ்சேஞ்ச் உருவாக்கப்பட்டது. மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த எக்ஸ்சேஞ்ச் செயல்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுத்தபோது, என்.எஸ்.இ மீது அபராதம் விதிக்கப்பட்டது.

மதுகண்ணன் பி.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வாக வந்த பின் கேம்ஸ் நிறுவனத்தின் 51% பங்குகளை வாங்கத் திட்டமிட்டார். ஆனால், பங்குகளை வாங்க அனுமதிக்க முடியாது என செபி சொன்னது. பி.எஸ்.இ இந்தத் திட்டத்தைக் கைவிட்ட அடுத்த சில ஆண்டுகளில் அதே கேம்ஸ் நிறுவனத்தில் என்.எஸ்.இ முதலீடு செய்தது. இதற்கு செபியும் ஒப்புதல் அளித்தது.

ரவி நாராயண் பதவியில் இருந்து விலகிய பிறகு நேரடியாக அடுத்த சி.இ.ஓ-வாக சித்ரா ராமகிருஷ்ணா நியமிக்கப் பட்டார். இதற்கு எந்தவிதமான விதிமுறையும் பின்பற்றப்பட வில்லை. செபியிடம்கூட அனுமதி வாங்கப்படவில்லை. அவர் மட்டுமல்ல, அவரால் என்.எஸ்.இ-யின் பெரும் பதவி களில் மிகப்பெரிய சம்பளத்தில் நியமிக்கப்பட்டவர்கள்கூட செபியின் அனுமதி இல்லாமல் நியமிக்கப்பட்டது ஆச்சர்யம்.

கோலோகேஷன் முறைகேடு...

2010-ம் ஆண்டு கோலோ கேஷன் சேவையை அறிமுகம் செய்தது என்.எஸ்.இ. இதனால் குறிப்பிட்ட சில புரோக்கர்கள் மட்டுமே பயன் அடைந்தார்கள். உதாரணமாக, எந்த சர்வரில் குறைவான நபர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒரு புரோக்கர் தெரிந்து கொண்டால், அந்த சர்வரில் மட்டுமே நுழைந்து மில்லி செகண்ட் வித்தியாசத்தில் பெரும் பணம் சம்பாதிக்க முடியும். இந்தத் தகவலைப் பயன்படுத்தி ஓ.பி.ஜி செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட சில புரோக்கிங் நிறுவனங்கள் பெரும் பணம் சம்பாதித்தன.

இது குறித்த புகார் செபிக்குப் போனது. இது பற்றி விசாரிக்க சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா தலைமையில் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அமைக்கப்பட, அந்தக் குழு கோலோகேஷன் முறைகேடு நடந்ததை உறுதி செய்தது. இந்த நிலையில், டிசம்பர் 2-ம் தேதி என்.எஸ்.இ இயக்குநர் குழு கூட்டம் கூடவிருந்தது. என்.எஸ்.இ நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டைக் கொண்டு வருவதை அறிவிக்கும் கூட்ட மாக அது இருக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்தக் கூட்டத்தில் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார் சித்ரா ராமகிருஷ்ணா.

கோலோகேஷன் முறைகேட்டுக்காக என்.எஸ்.இ மீது 1,000 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வர வில்லை. அதனால் என்.எஸ்.இ ஐ.பி.ஓ.வும் இன்னும் வெளியாகாமலே இருக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ‘என்.எஸ்.இ ஐ.பி.ஓ எப்போது வரும், அதில் நாம் போட்ட பணத்தை எப்போது எடுத்துக்கொண்டு போகலாம்’ என்று காத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு ஐ.பி.ஓ வெளியாகும் என விக்ரம் லிமயே (தற்போதைய சி.இ.ஓ) சொல்லியிருக்கிறார். நடக்குமா என்று தெரியவில்லை.

சினிமா படம்போல விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை பங்குச் சந்தை ஆர்வலர்கள் அனைவரும் ஒருமுறை படிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism