என்.எஸ்.இ-யில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணாவை சி.பி.ஐ சில நாள்களுக்குமுன் கைது செய்தது. இந்த முறைகேட்டில் நெருங்கிய தொடர்புடைய ஆனந்த் சுப்பிரமணியனையும் சி.பி.ஐ ஏற்கெனவே கைது செய்து, விசாரித்து வருகிறது.
ஆனால், இந்த நடவடிக்கைகள் எல்லாம் போதாது என்பதே பங்குச் சந்தையின் செயல்பாடுகள் பற்றி நன்கு அறிந்தவர்களின் கருத்தாக இருக்கிறது. காரணம், இந்த முறைகேடு நடந்தபோது தலைமைப் பொறுப்பின் பின்னணியில் இருந்த ரவி நாராயண் இன்னும் விசாரணை வளையத்துக்குள் வராமலே இருக்கிறார். சித்ராவையும் ஆனந்தையும் விசாரிப்பதுபோல, ரவியையும் விசாரித்தால்தான் முறைகேடு பற்றிய முழுமையான தகவல்கள் உலகுக்குத் தெரியும்.
அது மட்டுமல்ல, என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சில் ஒரு சில நிறுவனம் எளிதில் நுழைய அனுமதி வழங்குவது, பங்குப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை ஒரு சில நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தருவது எனப் பலவிதமான தகிடு தத்தங்களை சித்ராவும் ஆனந்தும் கூட்டாகச் சேர்ந்து செய்ததில் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம். எனவே, அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் எனப் பங்குச் சந்தை நலன் விரும்பிகள் கோரிக்கை வைப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்தவர்கள், இந்த முறைகேடு நடப்பதைக் கவனிக்காமல் இருந்தார்களா அல்லது சித்ரா மூலமாகக் கிடைத்த ‘ஆதாயங்கள்’ காரணமாக, கேள்வி எதையும் கேட்காமல் இருந்தார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. எனவே, அவர்களையும் விசாரிக்க வேண்டும்.
இப்படி எல்லோரையும் விசாரிப்பதுடன் நின்றுவிடாமல், இந்த முறைகேட்டின் விளைவாகப் பலன் கண்ட அனைவரின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். தவிர, அவர்கள் இனி எந்த நிறுவனத்திலும் அங்கம் வகிக்கக் கூடாது எனத் தடையும் விதிக்க வேண்டும். காரணம், 2019-ல் செபியானது என்.எஸ்.இ மீது ரூ.1,000 கோடி அபராதம் விதித்தது. அபராதமே ரூ.1,000 கோடி எனில், அதுபோல பல ஆயிரம் கோடிகள் இந்த முறைகேட்டில் கைமாறியிருக்கும் எனக் கணக்கிடுகிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். அது உண்மையெனில், குற்றம் செய்தவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதுதானே நியாயம்? ஆனால், நடப்பதையெல்லாம் பார்த்தால் நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது!
இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலரும் இன்னமும் விசாரிக்கப்படாமலே இருக்கிறார்கள். ‘‘ஆனந்த் சுப்பிரமணியனை யார் என்றே எனக்குத் தெரியாது’’ என சி.பி.ஐ-யிடம் சித்ரா சொல்லியிருக்கிறார். ஆகக்கூடி, இந்த முறைகேட்டை நீர்த்துப் போகச் செய்வதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கிவிட்டதோ என்கிற சந்தேகம் வருகிறது. ஒருவேளை, இந்த இமாலய ஊழலை, நம்பிக்கை மோசடியை மூடிமறைத்தால், பங்குச் சந்தை மீதான நம்பிக்கையை மக்கள் முழுவதுமாக இழப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்!
- ஆசிரியர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism