Published:Updated:

Paytm IPO: உணர்ச்சி வசப்பட்ட CEO; சரிவில் தொடங்கிய முதல் நாள் வர்த்தகம்; என்ன நடந்தது?

4.18 கோடி பங்குகளுக்கு எதிராக, 9.14 கோடி பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து, 2.79 மடங்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. சில்லறை முதலீட்டாளர்கள் 1.66 மடங்கும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 24 சதவிகிதமும் விண்ணப்பித்திருந்தனர்.

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் வளர்ச்சியானது ஒவ்வொரு துறையிலும் குறிப்பாக, நிதித் துறையில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அந்த வகையில், கேஷ்லெஸ் பணப் பரிவர்த்தனையில், மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது டிஜிட்டல் பேமென்ட் தளமான பேடிஎம்.

இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் `ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்' பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்திருந்தது. இதற்கான அனுமதி கேட்டு செபி அமைப்புக்கு சில மாதங்களுக்குமுன் விண்ணப்பித்திருந்த நிலையில், அண்மையில் செபி அதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை பேடிஎம் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிட்டது.

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ
Paytm IPO: இந்தியாவின் மிகப்பெரிய IPO-வான இதில் முதலீடு செய்யலாமா?

இந்த பங்கு வெளியீட்டில் 4.18 கோடி பங்குகளுக்கு எதிராக, 9.14 கோடி பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து, 2.79 மடங்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. சில்லறை முதலீட்டாளர்கள் 1.66 மடங்கும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 24 சதவிகிதமும் விண்ணப்பித்திருந்தனர்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது!

முதலீட்டாளர்களுக்கான பங்கு ஒதுக்கீடு நவம்பர் 17-ம் தேதி செய்யப்பட்ட நிலையில், இன்று பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பங்கு வெளியீட்டு விழாவில் பேசிய அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ விஜய் சேகர் ஷர்மா, ``இந்த நாள் எங்களுக்கான நாள். `பாரத் பாக்யா விததா' என்கிற தேசிய கீதத்தில் உள்ள வார்த்தைகள், `இந்த நாட்டின் அதிர்ஷ்டத்தை வரையறுப்பவர்' என்கிற அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது.

Vijay Shekhar Sharma
Vijay Shekhar Sharma
Twitter Image/ @vijayshekhar

அதை பேடிஎம் நிறுவனத்தில் உள்ள அனைவரும், பேடிஎம் நிறுவனத்திற்காகச் செய்திருக்கிறார்கள். அதனால்தான் பேடிஎம் நிறுவனம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்று பங்குச் சந்தையில் இந்தியாவின் மிகப் பெரிய ஐ.பி.ஓ-வாக பட்டியலிடப்பட்டிருக்கிறது" என்று ஆனந்தக் கண்ணீருடன், உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார்.

சரிவில் தொடங்கிய பங்குவிலை!

இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ பங்கு வெளியீட்டில் விலை நிர்ணயமானது, ஒரு பங்கிற்கு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது தொடக்கத்தில் பி.எஸ்.இ-ல் 1,955 ரூபாயாக தொடங்கியது. இது வெளியீட்டு விலையை விட 9.07% சரிவாகும். மேலும் இது காலை 10 மணி நிலவரப்படி, 1,806.65 ரூபாயாக காணப்பட்டது. மதியம் 2:45 மணி அளவில் மேலும் 26.72% சரிந்து ரூ.1,575.85-க்கு வர்த்தகமானது.

Paytm IPO: ₹16,600 கோடி திரட்டப்போகும் பேடிஎம்; பங்குச்சந்தையின் மிகப்பெரிய IPO-வாக மாறுமா?

அண்மையில் வெளியான ஸொமேட்டோ, நைகா நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், பேடிஎம் பங்கு விலை முதல் நாளன்றே 27% வரை குறைந்திருப்பதைப் பார்த்து, பல முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். விலை கொஞ்சம் குறைந்தால் வாங்கலாம் என்று யோசித்தவர்கள்கூட, இப்போது இந்தப் பங்கை வாங்கினால் சரியாக இருக்குமா என்று யோசித்து, ஒதுங்கத் தொடங்கி இருக்கின்றனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு