Published:Updated:

ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் ஃபேவரைட் `டைட்டன்' பங்கு; விரைவில் விலை ரூ.1,800-ஐ தொடுமா?

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

கடந்த ஜூன் 3-ம் தேதி, இந்த பங்கின் விலை, எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து 1,681 ரூபாய்க்கு வர்த்தகமானது. இன்னும் ஒரிரு தினங்களில் 1,800 ரூபாய் வரை செல்லும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, இந்திய பங்குச் சந்தைகளில் அதிக பணத்தை முதலீடு செய்திருக்கும், மிகப்பெரிய முதலீட்டாளர்.

இவர் அவ்வப்போது பங்குகளை வாங்குவதும் விற்பதும் சாதாரணமாக நடப்பதுதான் என்றாலும், இவர் எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறார், எந்த நிறுவனத்தின் பங்குகளை விற்கிறார் என கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக்கொண்டிருக்கும் முதலீட்டாளர்கள் கூட்டம் ஒன்று இருக்கிறது.

Titan Company
Titan Company

ராகேஷ் ஜூன் ஜூன்வாலாவின் முதலீட்டுப் போர்ட்ஃபோலியோ கடந்த 30 வருடங்களாகப் பல மடங்கு உயர்ந்து வருவதே அதற்கு காரணமாகும். 1985-ம் ஆண்டு 5,000 ரூபாய் என்கிற அளவில் பங்குச் சந்தை முதலீட்டைத் தொடங்கிய இவருடைய தற்போதைய பங்குச் சந்தை மதிப்பு 16,000 கோடி ரூபாய்க்கு மேல். `டைட்டன்' பங்கு ராகேஷின் போர்ட்ஃபோலியோவில் பல ஆண்டுகளாக இருக்கும் ஒரு பங்கு. தனக்கு மிகவும் பிடித்தமான பங்கு என்பதால், எப்போதும் இந்த நிறுவனத்தின் பங்கை தனது போர்ட்ஃபோலியோவில் ராகேஷ் வைத்திருக்கிறார்.

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் தற்போதைய நிலையிலும், டைட்டன் பங்குகள் அதிகபட்ச ஏற்றத்தைச் சந்தித்து வருகின்றன. கடந்த ஜூன் 3-ம் தேதி, இந்த பங்கின் விலை, எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து 1,681 ரூபாய்க்கு வர்த்தகமானது. இன்னும் ஒரிரு தினங்களில் 1,800 ரூபாய் வரை செல்லும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பங்கை வாங்கலாமா? இந்த நிறுவனத்தின் செயல்பாடு இனி வரும் நாள்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தெரிதுகொள்ள பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் பேசினோம்.

``பலம் பொருந்திய ஒரு சில பங்குகளில், டைட்டன் பங்கு மிக முக்கியமான பங்காகும். டாடா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் நிறுவனம் கைக்கடிகாரம், மூக்குக்கண்ணாடி மற்றும் பல அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனம். முதலீட்டாளர்களிடையே, இந்தப் பங்குக்கு என்றைக்குமே டிமாண்ட் இருக்கிறது.

ரெஜி தாமஸ் 
பங்குச் சந்தை 
நிபுணர்
ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர்

நிறுவனத்தின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதால், தற்போது விலை ஏற்றம் ஆரம்பித்திருக்கிறது. திருவிழாக் காலம் நெருங்குவதால், இந்நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும். இதனால் விலை ஏற்றம் இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், முதலீட்டாளர்கள் தற்போதைய விலையிலும் இந்தப் பங்கை வாங்கி தங்களின் முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா வைத்திருக்கும் பங்கு என்கிற ஒரே காரணத்துக்காக, டைட்டன் பங்கை வாங்கலாம் என்று சிறு முதலீட்டாளர்கள் யோசிக்கிறார்கள். பெரிய முதலீட்டாளர்களின் பங்குகளை அப்படியே பின்பற்றுவது சில நேரங்களில் தவறாக முடியலாம். அதற்குக் காரணம் பெரு முதலீட்டாளர்கள் என்ன விலைக்கு வாங்கினார்கள் என்றோ எப்போது அதை விற்று வெளியேறுவார்கள் என்றோ சிறு முதலீட்டாளர்களால் கணிக்க முடியாது. என்றாலும் அவர்களின் முதலீட்டுக் கலவை சிறு முதலீட்டாளர்களுக்கு பல பாடங்களை உணர்த்தும். அதனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் பல காரணிகளை ஆராய்ந்து முதலீட்டு முடிவுகளை எடுப்பதே சரியாக இருக்கும்" என்றார்.

ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் போர்ட்ஃபோலியோ!

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனப் பங்குகளில் 1%-ற்கு மேல் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், காலாண்டு அடிப்படையில் தங்களின் போர்ட்ஃபோலியோவை வெளியிட வேண்டும் என செபி அமைப்பு சொல்லியிருக்கிறது. இதன் காரணமாக ராகேஷ் மற்றும் அவருடைய மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலா தங்களின் முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவை வெளியிட்டு வருகிறார்கள்.

கடந்த மார்ச் காலாண்டு நிலவரப்படி, தன்வசம் இருந்த டைட்டன் நிறுவனப் பங்குகளில் 22.5 லட்சம் பங்குகளை ராகேஷ் விற்றுள்ளார். இதன் மூலம் டைட்டன் நிறுவனத்தில் அவரது பங்கு மூலதனம் 4.23 சதவிகிதத்தில் இருந்து 3.97% ஆக குறைந்துள்ளது. அவரிடம் இன்னும் 3.52 கோடி டைட்டன் பங்குகள் கையிருப்பில் உள்ளன. அவர் மனைவி ரேகா மார்ச் காலாண்டில் எந்தப் பங்குகளையும் விற்காமல் டைட்டன் நிறுவனத்தின் 96.40 லட்சம் பங்குகளை வைத்து இருக்கிறார். இது டைட்டன் நிறுவனத்தில் 1.09% பங்கு மூலதனம் ஆகும்.

அதே போல, ராகேஷ் மற்றும் ரேகா இருவருமே பன்னோக்கு மருத்துவமனையான ஃபோர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தில் அதிக முதலீடு செய்துள்ளனர். ராகேஷிடம் தற்போது போர்டிஸ் நிறுவனத்தில் 3.25 கோடி பங்குகள் உள்ளன. இது மொத்த பங்கு மூலதனத்தில் 4.31% ஆகும்.

அடுத்த கட்டுரைக்கு