Published:Updated:

டி.ஹெச்.எஃப்.எல் பெருமுதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு ரூ.102 கோடி இழப்பு!

தெ.சு.கவுதமன்

பங்குச்சந்தையின் பெருமுதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, திவான் ஹவுஸிங் நிறுவனத்தில் முதலீடு செய்து 102 கோடி ரூபாயை இழந்துள்ளார்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ( Screenshot from YouTube )

வீட்டுக் கடன் வழங்கும் வங்கிசாரா நிதி நிறுவனமான திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் 31,000 கோடி ரூபாய் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கடந்த ஜனவரியில் `கோப்ரா போஸ்ட்' இணையதளத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் பங்கு விலை கடும் சரிவைச் சந்தித்தது. அந்தச் சரிவு தற்போதுவரை தொடர்கிறது.

டி.ஹெச்.எஃப்.எல்
டி.ஹெச்.எஃப்.எல்

பங்குச்சந்தையின் பெருமுதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்த திவான் ஹவுஸிங் நிறுவனத்தில் முதலீடு செய்ததில், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மட்டும் ரூ.102 கோடி முதலீட்டை இழந்திருக்கிறார். பங்குச்சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்யும் பெருமுதலீட்டாளர்களில் முக்கியமானவர். இவரது முதலீட்டைப் பார்த்து, அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடியவர்களும் பங்குச்சந்தையில் உண்டு. அப்படிப்பட்டவர், யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல் டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தில் முதலீடு செய்து பெரிய இழப்பைச் சந்தித்திருக்கிறார்.

இவர், டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தில், 13.34 லட்சம் பங்குகளை வாங்கியிருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பங்கு விலை 3.19% அதிகரித்திருந்தது. உடனே கூடுதலாக 86,65,264 பங்குகளை அந்த நிறுவனத்தில் வாங்கி மொத்தம் ஒரு கோடி பங்குகளைத் தன்வசப்படுத்தினார். அதன்பின், தர நிறுவனங்களில் சில, டி.ஹெச்.எஃப்.எல்லின் ரேட்டிங்கைக் குறைத்தன. அது பங்கு விலையிலும் எதிரொலிக்க, அன்றிலிருந்து டி.ஹெச்.எஃப்.எல் பங்குகளின் விலை குறையத்தொடங்கியது.

பங்கு விலை அதிகரிக்கும் என இந்த நிறுவனத்தில் அதிகப்படியாக முதலீடு செய்த ஜுன்ஜுன்வாலா, தற்போது 102 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்தித்துள்ளார்.

பங்குச்சந்தை
பங்குச்சந்தை

டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஓராண்டில் மொத்தம் 92% அளவுக்கு விலை இறங்கி 46.70 ரூபாய்க்கு விற்பனையாகியது. குறிப்பாக, 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 80.55% அளவுக்கு விலை குறைந்துள்ளது. 2018-19 நிதியாண்டில் நான்காவது காலாண்டு முடிவில், மிகப்பெரிய அளவிலான வருமான இழப்பாக ரூ.2,223 கோடியை இழந்தது. இதைச் சரிவர கணிக்காததால் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.