Published:Updated:

சந்தை சரிவு... என்ன காரணம்..? இன்னும் இறக்கம் தொடருமா..?

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

சந்தை சரிவு... என்ன காரணம்..? இன்னும் இறக்கம் தொடருமா..?

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

பங்குச் சந்தைகள் சரியும்போதெல்லாம், முதலீட்டாளர்களிடம் கவலை உண்டா கும். சந்தை ஒவ்வொரு நாளும் உயர்ந்தால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், புதிதாக முதலீடு செய்யக் காத்திருப்பவர்களுக்கு அது முட்டுக் கட்டையாக இருக்கும். எனவே, எந்த வகையில் பார்த்தாலும் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு சவால்கள் இருக்கவே செய்கின்றன. இந்த முறையும் அப்படித்தான். தற்போது சந்தையில் என்ன மாற்றம் உண்டாகியிருக்கிறது, எதனால் இறக்கம், இந்த இறக்கம் மேலும் அதிகமாகுமா என்கிற கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்போம்.

ரெஜி தாமஸ் 
பங்குச் சந்தை நிபுணர்
ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர்

1. பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வுகள்...

கச்சா எண்ணெய் விலை 2020-ல் 32.8% சரிந்திருந்த நிலை யில், 2021-ல் 67% உயர்ந்திருக்கிறது. இயற்கை எரிவாயு விலையும் 2021-ல் மூன்று மடங்கு உயர்ந்தது. இதனால் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமும் உயர்ந்தது. பணவீக்க உயர்வு பல நாடுகளின் மத்திய வங்கிகளின் பணக்கொள்கை நிலைப்பாட்டை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கான கட்டாயத்துக்கு உட்படுத்தியது. இதனால் சில மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தும் முயற்சிகளில் ஈடுபட்டன. உதாரணமாக, அமெரிக்க ஃபெடரல் அதன் சமீபத்திய கூட்டத்தில், மார்ச் 2022-க்குள் வட்டி விகிதங்களை உயர்த்தும் சாத்தியக்கூறுகள் இருப்பதைக் குறிக்கும் வகையில், அதன் சொத்து வாங்குதல் நடவடிக்கைகளை விரைவாக முடிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தது.

இங்கிலாந்து, ரஷ்யா, பெரு, போலந்து, அர்ஜென்டினா மற்றும் பல நாடுகள் தங்களின் வட்டி விகிதங்களை உயர்த்தின. இது உலகம் முழுவதும் தொடரும் என்ற போக்கு நிலவுவதால், பணவீக்கம் எந்த நேரத்திலும் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் இப்போதைக்கு இல்லை. மேலும், கொரோனா பரவல் அதிகரிப்போ, முக்கியமான மத்திய வங்கிகளின் பணவியல் கொள்கை நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களோ, நிதிச் சந்தைகளில் எந்த நிலையான போக்கையும் உருவாக்கவில்லை. மொத்தத்தில், உற்சாகமான நுகர்வு மற்றும் வணிகச் சூழல் மீதான நம்பிக்கை ஆகியவற்றால் இந்தியாவில் ஒட்டுமொத்த பொருளாதாரச் செயல்பாடு வலுவாகவே உள்ளது.

இந்தப் பின்னணியில், பிப்ரவரி 7-9 இடையில் நடக்கும் ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தின் மீது அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது. ஒமிக்ரான் பரவல் கவலையால் ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதத்தில் பணப் புழக்கத்தை இயல்பாக்கும் முயற்சியை இடைநிறுத்த முடிவு செய்தது. இப்போது இத்தகைய கவலைகள் நிலையற்றதாக மாறிவிட்டதால், 2020-லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தளர்வான பணக்கொள்கை நிலைப்பாட்டை மத்திய வங்கி மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதிகரித்த பணவீக்கம் குறைவது 2022-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில்தான் நடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. பணவீக்கம் தொடர்ந்து வரலாறு காணாத அளவில் உயர்ந்துவந்தால், ஏற்கெனவே வெளியீட்டு இடைவெளி எதிர் மறையாக இருப்பதால், கொள்கை முடிவுகள் மேற் கொள்வது மிகவும் சிக்கலான தாகி விடும். பொதுவாகவே, வட்டி விகித உயர்வுகள் அறிவிக்கப்படும் நேரத்தில், சந்தை நேர்மறையாக இருக்காது. அத்தகைய நடவடிக்கைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தாலே இறக்கங்கள் சந்தையில் காணப் படும். எனவே, பிப்ரவரியில் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகித நிலைப்பாட்டை அறிவிக்கும் வரை இந்தக் காரணி தவிர்க்க முடியாத நிழல் போல சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும்.

சந்தை சரிவு... என்ன காரணம்..?
இன்னும் இறக்கம் தொடருமா..?

2. நிதிநிலை முடிவுகளும் காலம் கடந்த இறக்கமும்...

இந்தியாவில் நிறுவனங்கள் தங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை அறிவித்து வரு கின்றன. வெளிநாடுகளில் நிறு வனங்கள் தங்களின் நான்காம் காலாண்டு முடிவுகளை அறிவிக்கின்றன. வெளிநாடு களிலிருந்து வரும் நிதிநிலை அறிக்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்தியாவில், குறிப்பிட்ட துறைகளில் நிறுவனங்களின் செயல்திறன் வலுவானதாகவே இருக்கிறது. 430 நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளின் தரவுகள் வந்துள்ளன. இதில் பெரும் பான்மையான ஆரோக்கியமான செயல்திறன் மிக்க நிறுவனங்கள் ஐ.டி துறை, நிதி சேவை மற்றும் மருந்து மற்றும் நுகர்வோர் துறை நிறுவனங்களே உள்ளன.

அதே சமயம், சந்தை இயக்கத்தை பாதிக்கும் மற்றொரு காரணி, இறக்கம் குறித்த எதிர்பார்ப்பு. இந்த இறக்கத்தைக் காலம் கடந்த இறக்கம் எனப் பலரும் நம்புகின்றனர். இப்படியான எந்தவொரு எதிர்மறையான எதிர்பார்ப்பு / தரவுகளும் வழங்கும் முதல் யோசனை முதலீட்டை வெளியே எடுப்பதாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சமீப காலமாக நிகர விற்பனையாளர்களாக இருந்து வருகின்றனர், இதனால் மற்ற முதலீட்டாளர் பிரிவுகளும் சேரும் போது தற்போது கண்டிருக்கும் இறக்கத்தின் வேக மானது மேலும் விரைவாகும். இருப்பினும், சந்தையின் இறக்கத்தின் வேகம் முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஐந்து நாள்களில் நிஃப்டி 1500 புள்ளிக்கும் மேலான இறக்கமும், சென்செக்ஸ் 5000 புள்ளிக்கும் மேலான இறக்கமும் ஏற்பட்டுள்ளது. அப்படியானால், இது இன்னும் எந்தளவுக்குத் தொடரும் என்பதுதான் முக்கியமான கேள்வி.

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

அக்டோபர் 19, 2021 அன்று பதிவான 18,604 என்ற உச்சத்திலிருந்து மூன்று தனித்துவமான நகர்வுகளைப் பார்க்க முடிந்தது. டிசம்பர் 20, 2021 அன்று 16,614 வரை இடைக்கால இறக்கத்தைச் சந்தித்தோம்; பின்னர் அதிலிருந்து மீண்டு, 18 ஜனவரி 2022 அன்று அதிகபட்சமாக 18,350 வரை ஏற்றம் கண்டது. அதன் பிறகு, 25 ஜனவரி 2022 அன்று 16,836-க்கு மீண்டும் இடைக்கால இறக்கத்தை உண்டாக்கியது. டிசம்பர் 20, 2021-ல் கண்ட இறக்கத்திலிருந்து ஜனவரி 18, 2022-ல் கண்ட உச்சம் வரை 28 நாள்களில் 87% மீட்சி கண்டிருக்கிறது. அதே நேரத்தில், ஜனவரி 18, 2022-ல் கண்ட உச்சத்திலிருந்து 25 ஜனவரி, 2022-ல் கண்ட இறக்கம் வரை அதே 87% நகர்வானது ஏழு நாள்களில் நடந்துள்ளது. அப்படியெனில், 16838 என்பது இந்தப் போக்கின் குறைந்தபட்ச நகர்வு என்று அர்த்தமா? இல்லவே இல்லை. டபுள்டாப் பேட்டர்ன் உருவாக்குதலின் காரணமாக நிகழ்ந்துள்ளது. இதன் அர்த்தம் 16614 என்ற நிலையைச் சோதிக்கும் வாய்ப்புள்ளது என்பதே. 16614-ஐ தாண்டி நகரும் எந்த நடவடிக்கையும் 16000 அல்லது அதற்கும் குறைவான நிலைகளுக்கு ஆழமான இறக்கத்தை உண்டாக்கலாம்.

தற்போது நாம் கவனிக்க வேண்டியவை இவைதான்...

1. வட்டி விகித அறிவிப்புகள் 2. மூன்றாம் காலாண்டு முடிவுகள் 3. முக்கியமான நிலைகளின் சவால் திறன் மற்றும் அதை தொடர்ந்த சந்தை செயல்பாடு 4. சந்தைக்குள் வரும் முதலீடுகள். எனவே, இந்த நான்கு காரணிகள் குறித்து தெளிவு பிறக்கும் வரை இப்போதைக்கு உள்ள வரம்பிலேயே சந்தை இருக்க வாய்ப்புள்ளது. நல்ல, தரமான பங்குகளை அவற்றின் நிதி நிலை முடிவுகளின் அடிப்படையில், சரியான இறக்கத்தில் வாங்கும் திட்டத்தைச் செயல்படுத்தலாம். மேலும், பீதி அடைய வேண்டாம். இறக்கங்கள் சாதாரண சந்தை நடவடிக்கைதான். அதேபோல், அதிலிருந்து மீண்டும் ஏற்றம் காண்பதும். எனவே, வீணாக கவலைப்படுவதைவிட இறக்கங்களை வாய்ப்புகளாகக் கருத வேண்டும். சந்தை இறக்கத்துக்காக காத்திருந்தவர்களுக்கு இது சரியான தருணம். இப்போது சிறிய முதலீடுகளை மேற்கொண்டு சந்தையின் நகர்வுகளில் சவாரி செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

தமிழில்: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism