Published:Updated:

ஆட்டம் காட்டும் பங்குச் சந்தை... வாங்கலாமா, விற்கலாமா? முதலீட்டாளர்களுக்கான ஸ்ட்ராட்டஜி

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கவர் ஸ்டோரி

ஆட்டம் காட்டும் பங்குச் சந்தை... வாங்கலாமா, விற்கலாமா? முதலீட்டாளர்களுக்கான ஸ்ட்ராட்டஜி

கவர் ஸ்டோரி

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை கடந்த பிப்ரவரி 24-ம் தேதி அப்படி ஓர் இறக்கத்தை அடையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரே நாளில் சென்செக்ஸ் 2700 புள்ளிகளும், நிஃப்டி 815 புள்ளிகளும் இறக்கம் கண்டன. இது 5% சரிவு இது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு பொருளாதார நெருக்கடி சமயங் களிலும்கூட இப்படி ஓர் இறக்கத்தைப் பங்குச் சந்தைகள் சந்திக்கவில்லை. எனவே, இந்தக் கடும் இறக்கம் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் அனைவரையும் உலுக்கியது.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர்ச்சூழல் கடந்த சில வாரங்களாகவே காணப்பட்டு வந்த நிலையில் சந்தை தொடர் ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வந்தது. ஒரு வாரத்தில் ரூ.9 லட்சம் கோடி மதிப்புள்ள இழப்பை முதலீட்டாளர்கள் சந்தித்தனர்.

ஆட்டம் காட்டும் பங்குச் சந்தை... வாங்கலாமா, விற்கலாமா?
முதலீட்டாளர்களுக்கான ஸ்ட்ராட்டஜி

பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியதுமே சர்வதேச பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்தைச் சந்தித்தன. அன்றைய தினம் மட்டுமே இந்திய முதலீட்டாளர்கள் ரூ.8 லட்சம் கோடி மதிப்புள்ள இழப்பைச் சந்தித்தனர். தொடர்ந்து போர் தொடர்வதால் சந்தையும் ஏற்ற இறக்கத் திலேயே தொடர்கிறது.

போர் பதற்றம் தொடங்கியதிலிருந்து சுமார் ரூ.30 லட்சம் கோடி மதிப்பிலான இழப்பை முதலீட்டாளர்கள் சந்தித்துள்ளனர். மிட்கேப், ஸ்மால்கேப் பிரிவில் பலத்த சரிவு காணப் பட்டது. இத்தகைய திடீர் சரிவால் முதலீட் டாளர்கள், வர்த்தகர்கள் சந்தையின் போக்கு குறித்து பெரும் குழப்பத்துக்கு உள்ளாயினர். தொடர்ந்து சந்தையின் போக்கு இப்படியே தொடருமா, எவ்வளவு நாள்களுக்குத் தொடரும், முதலீட்டாளர்கள் வர்த்தகர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிபுணர்களிடம் பேசினோம்.

ஏற்ற, இறக்கம் ஏப்ரல் வரை தொடருமா..?

பங்குச் சந்தை நிபுணர் ‘ஈக்னாமிக்ஸ்’ஜி.சொக்கலிங்கத்துடன் பேசினோம். அவர் கூறியதாவது... “ரஷ்யா-உக்ரைன் போரைத் தாண்டி, அதிகரிக்கும் பணவீக்கம், அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை, ரிசர்வ் வங்கியின் மானிட்டரி பாலிசி ரிவர்சல், கொரோனா பாதிப்பு எனப் பல காரணங்கள் பங்குச் சந்தை மீது தாக்கம் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. ரஷ்யா-உக்ரைன் போர்ச்சூழல் மேலும் சில வாரங்களுக்குத் தொடரும் என்பதால், பங்குச் சந்தையில் தற்போதுள்ள ஏற்ற இறக்கமான சூழல் மார்ச் முடிந்து ஏப்ரல் வரைகூட தொடர வாய்ப்புள்ளது.

அது மட்டுமல்லாமல், ரஷ்யாவானது உக்ரைனை முழுவதுமாக ஆக்கிரமிக்கும்பட்சத்தில், தைவானை சீனா கைப்பற்ற முயற்சி செய்யலாம் என்ற அச்சமும் உலக அளவில் இருக்கிறது. ஆனால், சீனா அதுபோன்ற நடவடிக் கைகளில் இப்போதைக்கு ஈடுபட வாய்ப்பிருக்காது என்று தோன்றுகிறது. சீனா வலுவான பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் சில நெருக்கடிகளைச் சந்தித்தபோதிலும் வர்த்தக ரீதியாக வலுவாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் அதனுடைய ஒரு மாத ஏற்றுமதி இறக்குமதி கணக்கீட்டில் உபரியாக 94 பில்லியன் டாலர் ஏற்றுமதி வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது.

ஆட்டம் காட்டும் பங்குச் சந்தை... வாங்கலாமா, விற்கலாமா?
முதலீட்டாளர்களுக்கான ஸ்ட்ராட்டஜி

சீனாவின் ஜி.டி.பி-யும் தொடர்ந்து வலுவாகிக் கொண்டிருக்கிறது. எனவே, சீனா தனது வளர்ச்சியில் கவனம் செலுத்திவருவதால், தைவான் மீது போர் நடவடிக்கையை எடுக்க வாய்ப்பில்லை. அதே சமயம், ரஷ்யாவின் இந்தப் போர் நடவடிக்கையால் அதன் மீது உலக நாடுகளின் பார்வை மோசமாகியுள்ளது. ரஷ்யாவின் ஜி.டி.பி இந்தியாவின் ஜி.டி.பி-யில் பாதிதான். எனவே, இந்தப் போர் அதன் பொருளாதாரத்துக்குப் பாதகமாக மாறும். ரஷ்யா இதை உணரும்பட்சத்தில், இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளது.

ஆனால், இப்போதுள்ள நிலையில் போர் தொடர்பாக எந்தவொரு தீர்க்கமான முடிவுக்கும் வர முடியாது. மேலும், கொரோனா பாதிப்பு தொடர்பாக சமீபத்தில் வெளியான அறிக்கை மூலம், ஏப்ரல் மாதத்தில் அடுத்த அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வு மார்ச் வரை இருக்கலாம் என்றும், அதன் பிறகு குறைந்து 90 டாலர் அளவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திலும் அதிக ஏற்ற இறக்கமான நிலையே தொடரும். அதே சமயம், 2008 நெருக்கடியின் போதும், கொரோனா பாதிப்பு தொடக்கத்தின்போதும் இந்தியப் பங்குச் சந்தைகளில் எஃப்.ஐ.ஐ விற்றதைவிடவும் அதிகமாக இந்தப் போர்ச்சூழலில் விற்றுள்ளனர். ஆனால், அந்த இரண்டு நிகழ்வின்போது சந்தை சரிவு கண்ட சதவிகிதத்தைத் தற்போதைய சரிவுடன் ஒப்பிட் டுப் பார்க்கும்போது, எஃப்.ஐ.ஐ அதிகமாக விற்று வரும்போதும் பங்குச் சந்தை குறைவாகவே சரிவைக் கண்டிருக்கிறது.

எனவே, சந்தையின் போக்கு நீண்டகால அடிப்படையில் காளையின் ஆதிக்கத்தில்தான் இருக்கிறது எனலாம். சந்தையை சரிவிலிருந்து காப்பாற்றுவது உள்நாட்டு முதலீட்டாளர்கள் தான். தினசரி ஒரு லட்சம் புதிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடுகளை மேற்கொள்கிறார்கள். அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறினாலும், தொடர்ந்து உள்நாட்டு முதலீடுகள் அதிகரிப் பதால், சந்தையின் சரிவு விகிதம் பெருமளவு குறைவாகவே உள்ளது. இது இந்தியப் பங்குச் சந்தைக்கு மிகவும் பாசிட்டிவான விஷயம்.

எஃப்.ஐ.ஐ-களின் தொடர் விற்பனை மற்றும் தற்போதைய சரிவின் போக்கில் மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் பெரிய அளவில் இறக்கம் கண்டுள்ளது. இதனால் பல தரமான பங்குகளின் விலை குறைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி உள்நாட்டு முதலீட் டாளர்கள் முதலீடுகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பங்குச் சந்தையை பாதிக்கும் காரணிகள் தணிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஏற்றத்துக்கான நகர்வு உண்டாகும். அப்போது தரமான பங்குகளின் நகர்வு ஏற்றத்தின் போக்கில் சிறப்பாக இருக்கும்.

ஆட்டம் காட்டும் பங்குச் சந்தை... வாங்கலாமா, விற்கலாமா?
முதலீட்டாளர்களுக்கான ஸ்ட்ராட்டஜி

இந்தியப் பங்குச் சந்தைகளின் போக்கு நீண்ட கால அடிப்படை யில் காளையின் ஆதிக்கத்தில் தொடரும் என்றே தெரிகிறது. எனவே, மார்ச் வரை சந்தையின் இறக்கங்களைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் நல்ல பங்கு களை போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளலாம்.

முதலீட்டாளர்கள் தொடர்ந்து போர்ட்ஃபோலியோவைக் கண்காணிக்க வேண்டும். வயது, நிதி இலக்கு மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படை யில் அஸெட் அலொகேஷனைத் திட்டமிட்டு நிர்வகிக்க வேண்டும். தங்கம், வெள்ளி போன்றவற்றில் கணிசமான முதலீடு அவசியம்.

குறுகிய கால இலக்குக்காக குறிப்பிட்ட சதவிகித முதலீடுகளை மேற்கொள்ளலாம். போர்ட் ஃபோலியோவின் ஒவ்வொரு பிரிவிலும் கணிசமான பங்குகளின் அளவை சீரான இடைவெளியில் சந்தை சூழலுக்கேற்ப வர்த்தகம் செய்து அதிகரித்துவரலாம். இது மட்டுமல்லாமல், ஏற்ற இறக்கத்தில் கணிசமான லாபத்தை புக் செய்து எடுத்து மீண்டும் நல்ல பங்குகளில் குறைந்த விலையில் முதலீடு செய்யலாம்” என்றார்.

போர் வந்தால், பங்குச் சந்தை இறங்கவே செய்யும்..!

அடுத்து, பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் வெவ்வேறு பிரிவு முதலீட்டாளர்கள் இதுபோன்ற சமயங் களில் கையாளக்கூடிய உத்திகள் குறித்து கேட்டோம். அவர் கூறியதாவது...

“வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், போர் குறித்த அபாயம் தெரிந்தாலே பங்குச் சந்தைகள் பரவலாக சரிவைச் சந்தித்து வந்துள்ளன. போர் மட்டுமல்ல, அனைவருக்கும் நினைவில் இருக்கக்கூடிய அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் நிகழ்வின்போதும் சந்தை இறக்கத்துக்குள்ளானது. இது போர் இல்லை என்றாலும் கூட அந்நிய நாட்டில் இதுபோன்ற எதிர்பாராத தாக்குதல் கள் நடக்கும்போது சர்வதேச அளவில் அச்சத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கும்.

இதனால் அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க சந்தைகள் சரிந்தன. இப்போது ரஷ்யா - உக்ரைன் விவகாரத்திலும் இதைத்தான் பார்க்கிறோம். பங்குச் சந்தை வீழ்வது மட்டுமல்லாமல், கச்சா எண்ணெய் விலை உயர்வது, தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த மெட்டல்கள் விலை உயர்வதும் நடந்துள்ளது.

போர்ச்சூழலில் சந்தையுடைய இயல்பான எதிர்வினை இப்படித்தான் இருக்கும். ரஷ்யா-உக்ரைன் போர் நடக்கக் கூடிய அத்தனை நாள்களிலுமே தொடர்ந்து சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வேண்டிய நிலையே உண்டாகும். இத்தகைய சூழலில் வர்த்தகர்கள், முதலீட் டாளர்கள் தங்களின் இலக்குக்கேற்ப சந்தையை எப்படி அணுகுவது, என்ன மாதிரியான உத்திகளைக் கையாள்வது என்று பார்ப்போம்.

தினசரி வர்த்தகர்கள்: இதுபோன்ற அதிக ஏற்ற இறக்க சந்தையில் முதலில் கைவசமிருக்கும் பங்குகளை முதலில் விற்று லாபத்தை புக் செய்ய வேண்டும். பின்னர் குறைந்த விலையில் பங்குகளை வாங்க வேண்டும். இந்த உத்தியைத்தான் தினசரி வர்த்தகர்கள் கையாள வேண்டும். சந்தையில் பெரிய அளவில் சரிவு நடக்கும்போது தினசரி வர்த்தகம் செய்பவர்கள் பங்குகளை வாங்குவதற்கான முயற்சி மேற்கொள்வது தவறாக அமைய வாய்ப்புள்ளது. ஆப்ஷன்ஸ், ஃப்யூச்சர்ஸ், இன்ட்ராடே என எதுவாக இருந்தாலும் முதலில் விற்றுவிட்டு, பின்னர் வாங்குவதே சரியான உத்தியாக இருக்கும்.

குறுகிய கால வர்த்தகர்கள்: 3 அல்லது 5 அல்லது 10 நாள்கள் என்ற அடிப்படையில் குறுகிய காலத்துக்கு வர்த்தகம் செய்பவர்களாக இருப்பவர்கள் சந்தையின் போக்குக்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும் தற்போது சந்தையில் காணப் படும் இறக்கத்தின் போக்கானது முடிந்துவிட்டதா எனில், இல்லை என்றே சொல்லலாம். மேலும், சில வாரங்களுக்கு அதிகமான ஏற்ற இறக்கம் காணப்படும் என்பதால், நல்ல மதிப்புள்ள பங்குகள் பக்கம் கவனத்தைச் செலுத்துவது சிறந்தது என்று சொல்லலாம். மதிப்பான பங்குகள் என்று சொல்லும்போது சந்தையின் முன்னணி நிறுவனப் பங்கு களைக் குறிப்பிடலாம்.

காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளிவந்திருக்கும் இந்தச் சமயத்தில், அனைத்துப் பங்குகளும் இறக்கத்தைச் சந்தித்துள்ள நிலையில், நல்ல தரமான பங்குகள் குறைந்த விலையில் கிடைக்கும் சூழல் உண்டாகியிருக்கிறது. இந்தச் சமயத்தில் தரமான பங்குகளைத் தாராளமாக வாங்கலாம்.

அதே சமயம், கையிலிருக்கும் மொத்த முதலீட்டையும் போடாமல் பொறுத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வது சிறந்தது. ஏனெனில், இதுதான் சந்தையின் கடைசி இறக்கம் என்று சொல்லிவிட முடியாது. அடுத்தடுத்து இறக்கங் கள் வரலாம். எனவே, பொறுத் திருந்து நல்ல மதிப்பான பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கலாம். குறுகிய கால இலக்கில் ஏற்றத்தில் உள்ள பங்குகளை லாபத்தில் விற்று பயனடையலாம்.

நீண்ட கால முதலீட்டாளர்கள்: சந்தையின் தற்காலிக ஏற்ற இறக்கங்களால் நீண்டகால முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. இதுவரை பங்குச் சந்தை வரலாற்றில் சரிவு என்பது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை. எந்தவிதமான அச்சுறுத்தலாக இருந்தாலும் சந்தை 20% - 30% வரைக்கும் சரிவை சந்தித்திருக்கக்கூடிய சந்தர்ப்பங்களைப் பார்த் திருக்கிறோம். அதே போல, போர் முடிந்த பிறகு தொடர்ச்சியாக வருகிற அடுத்த 3 அல்லது 6 அல்லது 9 மாத காலங்களில் சந்தை 50% - 60% - 70% வரை ரிட்டர்னும் தந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

தற்போதைய காலகட்டத்தில் முதலீடுகளின் மதிப்பானது குறைந்து காணப்படலாம். அதற்காகப் பதற்றப்படத் தேவையில்லை. நீண்டகால அடிப்படையில் முதலீட்டின் மதிப்பான ஏற்றமடை யும். மேலும், ஏற்கெனவே வைத்துள்ள பங்குகள், தரமான பங்குகள் இறக்கத்தில் குறைந்த விலையில் கிடைப்பதால் முதலீடு செய்யலாமே தவிர, பதற்றத்தில் முதலீட்டை விற்க வேண்டியதில்லை. அப்படி விற்ற வர்கள்தான் நஷ்டம் அடைவார்கள்” என்றார்.

ஸ்மால்கேப், மிட்கேப் பிரிவில் பெரும் இறக்கங்கள் சந்தித்துள்ள நிலையில் அதில் முதலீடுகளை மேற்கொள்கிறவர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்று பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். அவர் கூறியதாவது...

ஜி.சொக்கலிங்கம், ரெஜி தாமஸ், ஏ.கே.பிரபாகர்
ஜி.சொக்கலிங்கம், ரெஜி தாமஸ், ஏ.கே.பிரபாகர்

“சமீபத்திய சந்தையின் இறக்கத்தின் போக்கில் மிட் கேப், ஸ்மால்கேப் பங்குகள் பெரும் இறக்கத்தைச் சந்தித்திருக்கின்றன. சொல்லப்போனால், இந்த இறக்கத்தை நெகட்டிவாகப் பார்க்காமல் பாசிட்டிவாகவே பார்க்கலாம். நிறைய தரமான மிட் கேப் பங்குகள் அவற்றின் வரலாற்று உச்சநிலை களிலிருந்து வெகுவாக இறங்கி நல்ல விலையில் கிடைக்கின்றன. பெரும்பாலான பங்குகள் அதிகபட்ச மாக 40% வரை இறங்கியுள்ளன. எனவே, கடன் இல்லாத, நல்ல நிதிநிலை முடிவுகளைக் கொண்டுள்ள பங்குகளை முதலீட்டாளர்கள் கவனிக்கலாம்.

அடுத்த பத்தாண்டுகளுக்கு சிறப்பாக வருமானம் ஈட்டக்கூடிய வளர்ச்சி அடையக்கூடிய, ஃபண்ட மென்டல் சிறப்பாக இருக்கும் நல்ல பங்குகளைத் தொடர்ந்து போர்ட்ஃபோலியோவில் அதிகரித்து வரலாம். இறக்கங்களில் அவசரப்பட்டு வெளியேறத் தேவையில்லை.

அதேசமயம் நைகா, ஸொமேட்டோ போன்ற சமீபத்தில் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாத ‘நியூ ஏஜ் பிசினஸ்’ என்று சொல்லப்படுகிற நிறுவனங்களின் பங்குகளைக் கவனிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், அவற்றின் தொழிலில் நிலையான லாபம் வர சில ஆண்டுகள் ஆகும். எனவே, இவற்றின் பி.இ விகிதத்தைப் பார்ப்பதைவிட அவற்றின் விற்பனை அளவைப் பார்ப்பது அவசியம். மற்றபடி தரமான பங்குகளை இறக்கத் தில் வாங்கிச் சேர்ப்பது நீன்டகாலத்தில் நல்ல லாபத்தை அடைய வழிவகுக்கும்” என்றார்.

சந்தை சரிந்துவரும் இந்த நிலையில் முதலீட்டாளர்களாகிய நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் முக்கியம்!