ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் சேவைகளை வழங்குவதில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் நிறுவனமான ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் குறித்துதான் இந்த வாரம் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
நிறுவனத்தின் சிறப்பு...
150-க்கு மேற்பட்ட நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட அலுவலகங் களைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். சரக்குகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு கொண்டு செல்வதில் ஆரம்பித்து, உலகத்தரம் வாய்ந்த கன்டெய்னர் ப்ரைட் ஸ்டேஷன் வசதிகளை வழங்குதல், உள்நாட்டு கன்டெய்னர் டெப்போ வசதிகளை வழங்குதல், பலதரப்பட்ட சிக்கல்கள் கொண்ட சரக்குகள் கையாளும் புராஜெக்ட்டு களை நிர்வகித்தல், வாடிக்கையாளர் களின் தேவைக்கேற்ப வடிவமைக்கப் பட்ட வேர்ஹவுஸ்களுக்கான அதிக தரம் வாய்ந்த உபகரணங்களை விற்பனை செய்தல் அல்லது லீஸிங்கில் தருதல், நிறுவனங்களுக் கான சப்ளைசெயின் தீர்வுகளை அதிக செயல்திறன் கொண்டவையாக மாற்றியமைத்தல் போன்ற லாஜிஸ்டிக்ஸ் துறையில் உள்ள பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.
நிறுவனத்தின் வளர்ச்சி...
1993-ம் ஆண்டில் மும்பை துறைமுகத்தில் சரக்கு கையாளும் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 1995-ம் ஆண்டு இ.சி.யு-லைன் எனும் நிறுவனத்துக்காக எல்.சி.எல் ஒருங்கிணைப்பு பணியில் கால்பதித்தது. 2002-ம் ஆண்டில் ஏ.சி.எம் லைன்ஸ் (பி.டி.ஒய்) லிமிடெட் எனும் நிறுவனத்தின் 50% பங்குகளைக் கையகப்படுத்தியது இந்த நிறுவனம்.
2003-ம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமான ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட்டில் கன்டெய்னர் ப்ரைட் (Freight) ஸ்டேஷனை நிறுவியது. 2004-ம் ஆண்டில் கார்கோவைக் கையாளும் புராஜெக்டுகளைக் கையாளும் பணிகளில் கால்பதித்த இந்த நிறுவனம் ஆன்ட்வெர்ப் (Antwrep) என்னும் இ.சி.யு-லைன் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. அதே ஆண்டில், சீனாவில் கப்பலைச் சொந்தமாகக்கொண்டிராத கப்பல் போக்குவரத்து நிறுவனமாக [Non Vessel Owning Common Carrier (NVOCC)] இருந்த ஹாங்காங்கைச் சார்ந்த இரண்டு நிறுவனங்களைக் கையகப் படுத்தியது.
2006-ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், அதே ஆண்டில் தாமஸ்குக் நிறுவனத்தின் சரக்கு கையாளும் பிரிவான ஹிந்துஸ்தான் கார்கோ நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.
2007-ம் ஆண்டில் சென்னை மற்றும் முந்த்ரா துறைமுகங்களில் கன்டெய்னர் ப்ரைட் ஸ்டேஷன்களை தொடங்கிய இந்த நிறுவனம், 2008-ம் ஆண்டில் டிரான்ஸ் இந்தியா எனும் தன்னுடைய லாஜிஸ்டிக்ஸ் துறைக்கான உபகரணங்களை வாடகைக்கு விடும் பிரிவைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது. 2009-ம் ஆண்டில் ஒப்பந்த ரீதியிலான லாஜிஸ்டிக்ஸ் சேவைப்பிரிவைத் தொடங்கிய இந்த நிறுவனம், 2010-ம் ஆண்டில் மேலும் இரண்டு ஹாங்காங் சார்ந்த நிறுவனங்களைக் கையகப் படுத்தியது.
2012-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட்டில் இரண்டாவது கன்டெய்னர் ப்ரைட் ஸ்டேஷனை நிறுவியது. 2013-ம் ஆண்டில் அமெரிக்க நிறுவனமான எகனோகரைப் மற்றும் ராட்டர்டேம் சார்ந்த நிறுவனமான எஃப்.சி.எல் மரைன் எனும் இரண்டு நிறுவனங் களைக் கையகப்படுத்தியது. 2016-ல் தன்னுடைய இ.சி.யு-லைன் எனும் நிறுவனத்தை இ.சி.யு வேர்ல்டுவைட் எனும் பிராண்டாகப் பெயர் மாற்றம் செய்தது இந்த நிறுவனம். அதே ஆண்டில் ஆட்டோமொபைல், கெமிக்கல், பார்மா மற்றும் இ-காமர்ஸ் துறைகளுக்கான லாஜிஸ்டிக்ஸ் சேவைகளில் தன்னுடைய பங்களிப்பை (customised services) விரிவாக்கம் செய்தது இந்த நிறுவனம்.
2018-ம் ஆண்டில் உலகத் தரம் வாய்ந்த தொழிற்பூங்கா மற்றும் வேர் ஹவுஸிங் சேவைகளை ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் இண்டஸ்ட்ரீயல் பார்க்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின்கீழ் தொடங்கியது. 2019-ம் ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய லாஜிஸ்டிக்ஸ் பார்க்கை நிறுவியது. அதே ஆண்டில் பி.ஏ.கே டி.ஏ (ஹெச்.கே) லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் (ஹாங்காங்) மற்றும் ஸ்பெகெம் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் (ஏசியா) பி.டி.இ லிமிடெட் (சிங்கப்பூர்) என்ற இரண்டு நிறுவனங்களையும் கையகப்படுத்தியது. 2020-ம் ஆண்டில் ஜி.ஏ.டி.ஐ (Gati) நிறுவனத்தில் ஸ்ட்ராட்டஜிக் முதலீடுகளை (கிட்டத்தட்ட 45 சதவிகிதத்துக்கும் மேலான அளவில்) செய்தது ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம்.

எட்டுத் தொழில் பிரிவுகளில்...
இந்த நிறுவனம் வழங்கிவரும் சேவைகள் அடிப்படையில் பார்த்தால், என்.வி.ஓ.சி.சி, கன்டெய்னர் ப்ரைட் ஸ்டேஷன், கான்ட்ராக்ட் லாஜிஸ்டிக்ஸ், இ-காமர்ஸ் லாஜிஸ்டிக்ஸ், புராஜெக்ட் லாஜிஸ்டிக்ஸ், லாஜிஸ்டிக்ஸ் பார்க்குகள், ஏர் ஃப்ரைட் மற்றும் இன்டெக்ரேட்டட் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்கள், க்ரேன்களை வாடகைக்கு வழங்குதல் என எட்டுத் தொழில் பிரிவுகளில் செயல்படும் இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்படும் ஒரே ஒருங்கிணைந்த மல்ட்டிநேஷனல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமாகும். உலக அளவில் மல்ட்டிமோடல் எல்.சி.எல் ஒருங்கிணைப்பு சேவையை வழங்குவதில் மிகப் பெரியதொரு நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்கிறது.
2020-ம் நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, மொத்த வருமானத்தில் மல்ட்டிமோடல் சரக்கு போக்குவரத்தில் இருந்து வரும் வருமானத்தின் அளவு 88 சதவிகிதமாகவும், கன்டெய்னர் ப்ரைட் ஸ்டேஷன் பிரிவில் இருந்துவரும் வருமானத்தின் அளவு ஆறு சதவிகிதமாகவும், புராஜெக்ட் மற்றும் என்ஜினீயரிங் தீர்வுகளை வழங்கும் பிரிவி லிருந்து வரும் வருமானம் ஐந்து சதவிகித மாகவும், லாஜிஸ்டிக்ஸ் பார்க்கு களில் இருந்துவரும் வருமானம் ஒரு சதவிகிதமாகவும் இருக்கிறது.
இந்த நிறுவனத்துக்கு டி.ஹெச்.எல், ஃபெட்எக்ஸ், டி.பி ஷென்கர், ஏ.பி.எல் லாஜிஸ்டிக்ஸ், ஹெல்மேன் வேர்ல்டுவைட் லாஜிஸ்டிக்ஸ், கே-லைன், ஜியோடிஸ், நிப்பான் எக்ஸ்ப்ரஸ், மிட்ஷிபிஷி லாஜிஸ்டிக்ஸ், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் வாடிக் கையாளர்களாக இருக்கின்றன.
சப்ளை செயின் மேனேஜ் மென்ட் பிரிவில் இந்த நிறுவனத்துக்கு அகில இந்திய ரீதியாக 45 இடங்களில் 40 லட்சம் சதுர அடி அளவிலான வேர்ஹவுஸ்கள் இருக்கின்றன. இவற்றில் 97% அளவிலான வசதிகள் உபயோகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்க விஷய மாகும். கன்டெய்னர்கள் பிரிவில் கிட்டத்தட்ட 500,000 (TEU – Twenty-foot Equivalent Unit) டி.இ.யு அளவுக்கான கன்டெய்னர்களைக் கையாளத் தேவையான நிர்மாணிக்கப்பட்ட வசதியைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். இந்த வசதிகள் இந்தியாவின் முக்கிய துறைமுகங் களான முந்த்ராவில் 56,000 டி.இ.யு-க்கள், மும்பையில் 1,50,000 டி.இ.யு-க்கள், தாத்ரியில் 75,000 டி.இ.யு-க்கள், கொல்கத்தாவில் 80,000 டி.இ.யு-க்கள், சென்னையில் 1,00,000 டி.இ.யு-க்கள் என்ற அளவில் இருக்கிறது.


ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?
ஷிப்பிங், சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உண்டான ரிஸ்க்குகள் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளின் அதிகரிப்பு என்பது உலக பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றாற்போலவே இருக்கும் என்பதால், உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏதாவது ஒரு காரணத்தால் தேக்கநிலையோ, எதிர்பார்த்த அளவுக் கான வளர்ச்சி இல்லாது போனாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டைப் பாதிக்க வாய்ப்புள்ளது. அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், சரக்குக் கட்டணத்தில் ஏற்படக்கூடிய பாதகமான மாறுதல்கள், செயல்பாட்டு செலவின அதிகரிப்புக்கான வாய்ப்பு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போட்டி நிறுவனங்கள் தரும் அழுத்தம் போன்றவையும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை ஓரளவு பாதிக்கவே செய்யும்.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர் களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்தபின்னரே முதலீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்!