Published:Updated:

டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் லிமிடெட்! (NSE : TATASTLLP · BSE : 513010)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ்
டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ்

அறிவோம் பங்கு நிறுவனம்... K N O W Y O U R C O M P A N Y

பிரீமியம் ஸ்டோரி

இபி டாடா ஸ்பாஞ்ச் அயர்ன் லிமிடெட் என்ற பெயரில் டாடா ஸ்டீல் லிமிடெட் மற்றும் இண்டஸ்ட்ரியல் புரொமோஷன் அண்ட் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் ஒடிசா லிமிடெட் (IPICOL) என்ற இரண்டு நிறுவனங்கள் இணைந்து 1982-ம் ஆண்டில் ஆரம்பித்து நிறுவனத்தையே இந்த வாரம் பார்க்கப்போகிறோம். 1991-ம் ஆண்டு இபி டாடா ஸ்பாஞ்ச் அயர்ன் நிறுவனம், 1996-ம் ஆண்டில் டாடா ஸ்பாஞ்ச் அயர்ன் லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், 2019-ம் ஆண்டில் டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் லிமிடெட் என்று மாற்றம் செய்யப்பட்டது.

நிறுவனத்தின் வளர்ச்சி...

1982-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் 1984-ம் ஆண்டில் பொதுப் பங்குகளை வெளியிட்டு மும்பை பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்டது. 1986-ம் ஆண்டில் டைரக்ட் ரெட்யூஸ்ட் அயர்ன் (DRI) சூளையை (kilns) நிறுவிய இந்த நிறுவனம், ஸ்பாஞ்ச் அயர்ன் உற்பத்தியைத் தொடங்கியது. 1991-ம் ஆண்டில் ஐ.பி.ஐ.சி.ஓ.எல் (IPICOL) நிறுவனத்திடம் இருந்து பங்குகளைக் கையகப்படுத்திய இந்த நிறுவனம், 1997-ம் ஆண்டில் இரண்டாவது சூளையை நிறுவி 2006-ம் ஆண்டில் மூன்றாவது சூளையை நிறுவியது. 2019-ம் ஆண்டில் உஷா மார்ட்டின் ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியன் டன் அளவிலான லாங் ஸ்டீல் உற்பத்தி வசதியைக் கையகப்படுத்தியதன் மூலம் லாங் ஸ்டீல் உற்பத் தியில் கால்பதித்தது இந்த நிறுவனம்.

ஜாம்ஷெட்பூரில் ஆரம்பிக்கப் பட்ட இந்த நிறுவனத்தின் உற்பத்தி வசதி இந்தியாவிலேயே முதன் முதலாக ஹாட் மெட்டல் மற்றும் எலெக்ட்ரிக் ஆர்க் பர்னஸை உபயோகித்து உற்பத்தி செய்யும் உற்பத்தி வசதியாக இருந்தது. இன்றைக்கு இந்த வகை உற்பத்தி வசதியே அனைத்து உற்பத்தியாளர் களும் பின்பற்றும் வகையானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜாம்ஷெட்பூர் மற்றும் ஜோடா எனும் இடங்களில் உள்ள இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்களில் 0.90 மில்லியன் டன் அளவில் ஸ்டீலை உற்பத்தி செய்ய முடியும். இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் இரும்புத் தாது தேவைக்கென தனியாக சுரங்கங்களைக் கொண்டிருப்பது மிக முக்கியமானது.

டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் லிமிடெட்! (NSE : TATASTLLP · BSE : 513010)

உற்பத்தி வசதிகள்...

ஜார்க்கண்டில் உள்ள கம்ஹாரியா எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் ஸ்டீல் பெல்லட் உற்பத்திக்கான வசதி, சின்டர் பிளான்ட், ஆக்சிஜன் உற்பத்தி வசதி, லைம்-க்ளின் உற்பத்தி வசதி, கேக் ஓவன் எனும் வசதி, ஐந்து சூளைகளைக் கொண்ட ஸ்பாஞ்ச் அயர்ன் உற்பத்தி வசதி, இரண்டு ப்ளாஸ்ட் பர்னஸ்கள் மற்றும் இரும்பு உருக்காலை போன்றவை இருக்கின்றன.

பெல்லட்டுகள் (சிறு குண்டுகள்) உற்பத்தி வசதியில் இரும்புத்தாது பல்வேறு படிநிலைகளில் முறைப் படுத்தப்பட்டு சிறு இரும்பு குண்டு களாக மாற்றப்படுகிறது. இதில் இருக்கும் சின்டர் வசதி தாதுக்களில் இருந்து இரும்பைத் திரட்டுவதற்கு உதவுகிறது. இரண்டு ப்ளாஸ்ட் பர்னஸ்கள் மற்றும் மூன்று ஆர்க் பர்னஸ்களைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் இவை திரவநிலை ஸ்டீலை உற்பத்தி செய்ய பயன் படுத்தப்படுகின்றன. இந்தத் திரவ நிலை ஸ்டீலில் இருந்து (தாதுவில் இருந்து இரும்பைப் பிரித்து தேவையான அளவு கார்பன் சேர்த்து பல்வேறு படிநிலைகளில் பிராசஸ் செய்து) வயர் ராடு மில்கள், ப்ளூம் மில்கள், பார் மில்கள் போன்றவற்றுக்கு அனுப்பப்பட்டு பார்கள், பில்லட்கள், ப்ளூம்கள் போன்றவை தயாரிக்கப் படுகின்றன. இரும்பு உற்பத்திக்குத் தேவையான அதிக எடையைக் கொண்ட இரும்புத் தாதுப் பொருள் களை உற்பத்தி வசதிக்குள் கொண்டு வருவதற்கும், அதிக எடை கொண்டிருக்கும் உற்பத்தி செய்யப் பட்ட பொருள்களை வாடிக்கை யாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு தொழிற்சாலையைவிட்டு வெளியே அனுப்புவதற்கும் தேவையான தனிப்பட்ட ரயில்வே சைடிங்குகளையும் இந்த நிறுவனம், தன்னுடைய உற்பத்தி மையத்திலேயே தனியாகக் கொண்டிருக்கிறது.

ஸ்டீல் உற்பத்தி என்பது மின்சாரம் அதிக அளவில் செலவிடப்படும் உற்பத்தி படிநிலைகளைக் கொண்டதாகும். தன்னுடைய உற்பத்திக்குத் தேவையான மின்சாரத்தைக் குறைந்த செலவில் உற்பத்தி செய்துகொள்ளும்படி தனக்கென தனிப்பட்ட மின்சார உற்பத்தி செய்யும் வசதிகளைக் கொண்டிருக்கிறது.

25 மெகாவாட் மற்றும் 30 மெகாவாட் மின் உற்பத்தி வசதியைக் கொண்டிருக்கும் நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி மையத்தையும் 30 மெகாவாட் அளவிலான இரண்டு வேஸ்ட் ஹீட் ரெக்கவரியிலிருந்து உற்பத்தி செய்யும் வகையிலான மின் உற்பத்தி நிலையங் களையும் (இரும்பை உற்பத்தி செய்யும் படிநிலைகளில் பயன்படுவதற்காக உருவாக்கப்படும் அதிகப்படியான வெப்பம் உருவாக்கப்பட்ட இரும்பு குளிர்விக்கப்படும்போது வீணாகி விடாமல் அதை மின் உற்பத்திக்கு பயன்படுத்துதல் எனும் முறை), 15 மெகாவாட் அளவிலான நிலக்கரி - எரிவாயு என்ற இரண்டையும் உபயோகித்து மின்சார உற்பத்தி செய்யும் ஹைபிரிட் வகையிலான மின்சார உற்பத்தி மையத்தையும் முழுக்க முழுக்க தன்னுடைய சொந்த உபயோகத்துக்கென நிறுவியுள்ளது இந்த நிறுவனம்.

2019-20-ம் நிதியாண்டின் இறுதி நிலவரப்படி பார்த்தால், இந்த நிறுவனம் தன் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதிகளின் அடிப்படை யில் அக்லோமெரேட்ஸ்கள் பிரிவில் ஆண்டொன்றுக்கு 1.2 மில்லியன் டன்கள் அளவிலான பெல்லட்கள், இரும்பு உற்பத்தி பிரிவில் ஆண்டொன்றுக்கு 0.65 மில்லியன் டன் அளவிலான உற்பத்திக்கான ப்ளாஸ்ட் பர்னஸ், ஆண்டு ஒன்றுக்கு ஒரு மில்லியன் டன் அளவிலான DRI பிளான்ட், ஸ்டீல் பிரிவில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மில்லியன் டன் அளவிலான ஸ்டீல், ரோலிங் மில் பிரிவில் ஆண்டொன்றுக்கு 0.1 மில்லியன் டன் அளவிலான பார் மில், 0.36 மில்லியன் டன் அளவிலான வயர் ராடு மில், 0.24 மில்லியன் டன் அளவிலான ப்ளூம் மில்லையும் கொண்டிருக்கிறது.

டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் லிமிடெட்! (NSE : TATASTLLP · BSE : 513010)

மின்சார உற்பத்தியில் 160 மெகாவாட் அளவிலான சொந்த உற்பத்தியையும், 150 ரேக்குகளை கையாளும் வசதிகொண்ட தனிப்பட்ட மூன்று ரயில்வே சைடிங்குகளையும், நாளொன் றுக்கு 345 டன்கள் அளவிலான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தையும், நாளொன்றுக்கு 200 டன்கள் உற்பத்தி செய்யும் அளவிலான சுண்ணாம்பு சூளை களையும் (lime kiln) கொண்டிருக் கிறது இந்த நிறுவனம். தன்னுடைய தயாரிப்புகளை வாடிக்கையாளர் களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பரிதாபாத், பூனே, நாக்பூர், சென்னை மற்றும் இந்தூரில் வேர்ஹவுஸ்களை நிறுவியுள்ளது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் அலாய் ஸ்டீல் வாகன உற்பத்தியாளர்கள் தங்களுடைய உதிரிபாகங்கள் உற்பத்தியில் பயன்படுத்துவதற்காகவும், பேரிங்குகள், எர்த்-மூவிங் இயந்திரங்கள், சுரங்கங்களில் பயன் படுத்தப்படும் இயந்திரங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் உபயோகப்படுத்தப்படும் இயந்திரங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் பயன்படுத்துவதற் காகவும் வாடிக்கையாளர்களால் வாங்கப்படுகிறது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் ஸ்பாஞ்ச் அயர்ன் கிழக்கு மற்றும் வட இந்தியாவில் உள்ள ஸ்டீல் உற்பத்தியாளர்களாலும் பூட்டான் மற்றும் நேபாளில் உள்ள ஸ்டீல் உற்பத்தியாளர்களாலும் வாங்கி உபயோகிக்கப்படுகிறது.

டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் லிமிடெட்! (NSE : TATASTLLP · BSE : 513010)

ரிஸ்க்குகள் என்னென்ன?

இரும்பு மற்றும் ஸ்டீல் துறையில் இயங்கிவரும் அனைத்து நிறுவனங் களுக்கும் உரித்தான ரிஸ்க்குகள் இந்த நிறுவனத்துக்கும் முழுமையாக உண்டு. இரும்பு மற்றும் ஸ்டீல் துறை முழுக்க முழுக்க பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே வளமாக இயங்கக்கூடிய ஒரு துறையாகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையாவிட்டாலோ தேக்கநிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தை நன்றாகவே பாதிக்கும் வாய்ப்புள்ளது. மேலும், இந்நிறுவனம் செயல்பட்டுவரும் துறை சைக்ளிக்கல் எனும் ஏற்ற இறக்கம் மாறிமாறி வரும் பண்பைக் கொண்ட துறையாகும். மூலப் பொருள்களை எடுப்பதற்கான அதிக செலவினங்கள், உற்பத்தி செய்யும் படிநிலைகளில் ஆகும் செலவினங்கள், தொழில்நுட்ப மாறுதல்கள், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்ற வையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகள் என்றே சொல்ல வேண்டும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு