Published:Updated:

அல்கோ டிரேடிங்... செபி எடுக்கும் அதிரடி நடவடிக்கை..!

அல்கோ டிரேடிங்
பிரீமியம் ஸ்டோரி
News
அல்கோ டிரேடிங்

அல்கோ டிரேடிங்

இந்தியப் பங்குச் சந்தையை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் செபி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது அல்கோ டிரேடிங்கை சிறு முதலீட்டாளர்களுக்காக ஒழுங்குபடுத்துவதற்கான திட்டத்தையும் அதற்கான ஆலோசனைகளையும் செபி கேட்டிருக்கிறது. மேலும், அல்கோ டிரேடிங் குறித்து செய்ய வேண்டிய நடைமுறை மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பினர் கருத்து தெரிவிக்கலாம் என செபி கூறியிருக்கிறது. வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் பரிந்துரையை அனுப்ப வேண்டும் என செபி கூறியிருக்கிறது. முதலில் அல்கோ டிரேடிங் குறித்தும் அதன் பயன் குறித்தும் தெரிந்துகொள்வோம்.

வி.விஜயகுமார்
நிறுவனர், Zebuetrade.com
வி.விஜயகுமார் நிறுவனர், Zebuetrade.com

பல ஆண்டுகளுக்கு முன்பு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகளை வாங்க போன் மூலமாக ஆர்டர் செய்தோம். அதன் பிறகு, சிஸ்டம் மூலமாகப் பங்குகளை வாங்கி விற்றுவந்தோம். அதன் தொடர்ச்சியாக மொபைல் ஆப்கள் வந்தன. தற்போது இதன் அடுத்தகட்டமாக எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பதை கம்ப்யூட்டர் முன்கூட்டியே கணித்து திட்டமிடுவதன் மூலம் அந்தச் செயல் திட்டம் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதுதான் அல்டோ டிரேடிங்கின் அடிப்படை.

உதாரணமாக, ஒரு பங்கை ரூ.100-க்கு வாங்க நினைக்கிறோம் எனில், நாம் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறோம். மிக குறைந்த நேரமே அந்த விலையில் இருக்கிறது எனில், நம்மால் வாங்க முடியாது. அதேபோல, விற்பனையும். நாம் ஒரு பங்கை 110 ரூபாய்க்கு விற்க நினைத்திருப்போம். ரூ.110 தொட்ட பிறகு உடனடியாகச் சரிந்து, 109 ரூபாய்க்கு வந்திருக்கும். அதன் பிறகு, விற்க நினைக்கும் போது விலை இன்னும் இறங்கலாம்.

இது போன்ற நடைமுறைச் சிக்கல்களை நீக்குவதுதான் அல்கோ. அதாவது, மனிதர்களின் தலையீடு இல்லாமல் கம்ப்யூட்டர் நேரடியாக உத்திகளை வகுத்து அந்த உத்தியைத் தானாக நடத்துகிறது.

அல்கோ டிரேடிங்... செபி எடுக்கும் அதிரடி நடவடிக்கை..!

அல்கோ டிரேடிங்கில் பல வகையான உத்திகள் இருக்கின்றன அல்லது நாம் உருவாக்க முடியும். இதில் எந்த உத்தியைத் தேர்ந்தெடுப்பது என்பது மட்டுமே பங்கு வர்த்தகர்கள் வேலை யாக இருக்கும்.

அல்கோ டிரேடிங்கின் மூலம் இரு நன்மை கள் நடக்கின்றன. முதலாவதாக, ஒரு முதலீட்டாளர் / வர்த்தகரின் செயல் திட்டத்தைத் துல்லியமாகச் செயல்படுத்துகிறது. இரண்டாவதாக, எமோஷனல் முடிவுகளை நீக்குகிறது.

பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்க உத்தி அளவுக்கு எமோஷனும் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, ஒரு பங்கு ரூ.110-ல் விற்க நினைத்து ஆர்டர் போடுவோம். அந்த விலை சீக்கிரம் வரும்பட்சத்தில், விலையை இன்னும் கொஞ்சம் உயர்த்தி, விற்கலாமா என்று யோசிப்போம். இது போன்ற எமோஷனல் முடிவுகள் பலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி யிருக்கின்றன. ஆனால், அல்கோ டிரேடிங்கில் எமோஷனுக்கு எந்த வேலையும் இல்லை. நாம் நிர்ணயம் செய்யும் விலையை அல்கோ டிரேடிங் முறை மிகச் சரியாகச் செயல்படுத்திவிடும்.

தற்போது சந்தையில் நடக்கும் வர்த்தகத்தில் குறைந்த அளவுக்கே அல்கோ மூலமாக நடக்கிறது. இந்த வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த செபி திட்டமிடுகிறது. அல்கோ டிரேடிங் செயலிகள் மூலமாகச் சிறிய முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என செபி கருதுகிறது.

பங்குச் சந்தையை மேம்படுத்துவும், இந்த வழி முறைகள்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதைத் தடுப்பதும் தற்போதைக்கு மிகவும் தேவையான ஒன்றே. அதில் எந்த மாற்றமும் இல்லை. காரணம், அல்கோ முறையை டிரேடிங்குக்குப் பயன்படுத்துபவர்கள் முதலீட் டாளர்கள் அல்லர், வர்த்தகர்கள். வர்த்தகர்கள் ஓரளவுக்கு உத்திகளைத் தெரிந்துகொண்ட பிறகுதான் அதைப் பயன்படுத்துகிறார்கள். தவிர, அல்கோ என்பது இ.சி.எஸ் பேமென்ட் போல அவசியமான ஒன்று. தற்போதைக்கு மட்டுமல்லாமல், வருங்காலத்துக்கேற்ற மாற்றங்கள் அதில் கொண்டு வர செபியின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்கோ முறையில் உருவாக்கப்படும் ஒவ்வொரு உத்திக்கும் அனுமதி வாங்குவது என்பது நடைமுறையில் சாத்தியம் கிடையாது. தவிர யுத்தி என்பது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். ஒரு சீஸனில் நன்கு செயல்பட்ட ஒரு யுத்தி, சில மாதங்களுக்குப் பிறகு, அடுத்த சீஸனில் எந்தப் பயனையும் தராமல் போய்விட வாய்ப்புண்டு. அதனால் அல்கோவை வடிவமைக்கும் நிறுவனத்துக்கு அனுமதி என்று இருந்தால் போதுமானது.

இதை முறைப்படுத்துவது காலத்தின் தேவை. ஆனால், வரும் காலத்துக்கேற்ப விதிமுறைகள் இருக்க வேண்டும்!