Published:Updated:

டி.சி.எஸ்., டெல்டா கார்ப்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

பிரீமியம் ஸ்டோரி

கடந்த செப்டம்பர் காலாண்டுக்கான முடிவுகளை பல நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளன. இந்த காலாண்டின் தொடக்கத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. மூன்றாவது அலை பற்றிய பயம் அனைவரிடத்திலும் இருந்தது. ஆனாலும், பல நிறுவனங்கள் இந்த இக்கட்டான காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. சென்ற வாரத்தில் காலாண்டு முடிவுகள் வெளியிட்ட பல நிறுவனங்களின் லாப விகிதம் அதிகரித்துள்ளது இதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 14.1% உயர்ந்து ரூ.9,624 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் 16.8% உயர்ந்து, ரூ.46,867 கோடியாக உள்ளது. முதன்மையான தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் அனைத்தும் சென்ற காலாண்டில் 20%-க்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து நல்ல லாபத்தைக் கொடுத்து வருகின்றன. டி.சி.எஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, பல பங்கு தரகு நிறுவனங்கள் இந்த பங்கை வாங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளன.

டாடா மெட்டாலிக்ஸ் (Tata Metaliks)

குடிநீர் பைப்புகள் தயாரிப்பதில் டாடா குழுமத்தைச் சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படை யில் 33.4% குறைந்து, ரூ.54.67 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் 24.1% உயர்ந்து, ரூ.644.84 ஆக உள்ளது. உற்பத்தி சார்ந்த பொருள்களின் விலை உயர்வால் லாப விகிதம் குறைந்துள்ள தாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நிறுவனத்தின் இ.பி.எஸ் 17.3% குறைந்து, ரூ.25.97 ஆக உள்ளது.

டி.சி.எஸ்., டெல்டா கார்ப்... ரிசல்ட் எப்படி..?

ராமகிருஷ்ணா ஃபோர்ஜ் (Ramakrishna Forge)

ஆட்டோமொபைல் துறையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 2317% உயர்ந்து, ரூ.50.11 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானமும் வருடாந்தர அடிப்படையில் 9.3% உயர்ந்து, ரூ.578.93 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் எபிட்டா 205.36% உயர்ந்து, ரூ.139.17 கோடியாக உள்ளது.

டெல்டா கார்ப் (Delta Corp)

காசினோ மற்றும் விருந்தோம்பல் துறையைச் சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருவாய் சென்ற செப்டம்பர் காலாண்டில் இரு மடங்காக உயர்ந்து, ரூ.74 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் 55 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தைச் சந்தித்திருந்த இந்த நிறுவனத்தின் இழப்பு கணிசமாகக் குறைந்து, ரூ.22 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகளை முன்னணி முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தன் மனைவியுடன் சேர்த்து 7.5% அளவுக்கு வைத்துள்ளார். அக்டோபர் 1 முதல் இந்த நிறுவன பங்குகள் ஃப்யூச்சர் பிரிவின் கீழ் வர்த்தகமாகி வருகிறது.

பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ் (Bhansali Engineering polymers)

இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர விற்பனை செப்டம்பர் காலாண்டில் 21.76% அதிகரித்து, ரூ.374.84 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் 249.37% உயர்ந்து, ரூ.123.57 கோடியாக உள்ளது. இது 2020 செப்டம்பர் காலாண்டில் 35.37 கோடியாக இருந்தது. எபிட்டா (EBITDA) ரூ.167.09 கோடியாக இருக்கிறது.நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் ரூ.2.13-லிருந்து ரூ.7.45% ஆக உயர்ந்துள்ளது.

தொகுப்பு: எஸ்.பிரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு