Published:Updated:

பங்குத் தரகு... சிறந்த நிறுவனங்களைக் கண்டறிவது எப்படி? பங்கு முதலீட்டாளர்கள் கவனிக்க!

பங்கு முதலீடு...
பிரீமியம் ஸ்டோரி
பங்கு முதலீடு...

S H A R E B R O K I N G

பங்குத் தரகு... சிறந்த நிறுவனங்களைக் கண்டறிவது எப்படி? பங்கு முதலீட்டாளர்கள் கவனிக்க!

S H A R E B R O K I N G

Published:Updated:
பங்கு முதலீடு...
பிரீமியம் ஸ்டோரி
பங்கு முதலீடு...

பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஓர் ஆண்டில் பங்குச் சந்தை யில் சுமார் 1.42 கோடி புதிய டீமேட் (Demat Account) கணக்குகள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. புதிய முதலீட்டாளர்கள் தரகுக் கட்டண வேறுபாடுகளுக்காகத் தரகு நிறுவனங்களை அடிக்கடி மாற்றி வருகிறார்கள். இப்படிச் செய்வது நல்லதல்ல. பங்குச் சந்தை முதலீட்டைத் தொடங்கும் முன், சரியான தரகு நிறுவனங்களைக் கண்டறிவது எப்படி?

நா.சரவணகுமார் 
ஆலோசகர், 
www.richinvestin
gideas.com
நா.சரவணகுமார் ஆலோசகர், www.richinvestin gideas.com

நோக்கம் என்ன?

நீங்கள் தினசரி வர்த்தகம் (Intraday Trading) செய்பவரா, குறுகிய காலத்தில் (Short term or Swing Trade) பணம் ஈட்ட விரும்புபவரா, இல்லை யெனில், முதலீடு செய்துவிட்டு நீண்டகாலம் காத்திருந்து செல்வம் சேர்க்க நினைப்பவரா? இந்தக் கேள்விக்கு முதலில் தெளிவான பதிலை நீங்கள் கண்டறிந்தால்தான் உங்களால் சரியான தரகு நிறுவனத் தைக் கண்டுபிடிக்க முடியும்.

அருகில் உள்ள தரகு நிறுவனங்கள்...

பொதுவாக, இணையம் வழியாக பல தரகு நிறுவனங்கள் காணப் பட்டாலும், உங்களுக்கு அருகில் உள்ள பங்குத் தரகு நிறுவனங்களைத் தேடிச் சென்று, அவர்கள் தரும் சேவை எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். சில தரகு நிறுவனங்கள் மென்பொருள் (Software Platform) சார்ந்த சேவைகளில் வலுவாக இருக்கும். இன்னும் சில நிறுவனங்கள், நேரடியாக அணுகும் வாடிக்கையாளர்களுக்கு சரியான சேவைகளை அளிக்கலாம். உங்களுக்கு எந்த மாதிரியான சேவை தேவை என்பதை அவர்களிடம் கேள்விகளாக எழுப்பி அறிந்து கொள்ளவும்.

தரகுக் கட்டணங்கள் எவ்வளவு?

பங்கு முதலீடு மற்றும் வர்த்தகம் செய்வதற்கான தரகுக் கட்டணங்கள் (Brokerage) நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். எனினும், தரகு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் களுக்கு 2.5 சதவிகிதத்துக்கு மேல் தரகுக் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது எனப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி (SEBI) அறிவுறுத்தி யுள்ளது. இதை தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை போன்ற அமைப்புகளும் கவனத்தில் எடுக்கும்.

பொதுவாக, தரகு நிறுவனங்கள், தரகுக் கட்டணங்களை இரு வகையான முறையில் கையாளும். அதாவது, ஒரு நாளின் மொத்த வர்த்தக மதிப்பின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை (Percentage on Total Trade Value) தரகுக் கட்டணமாக வசூலிக்கும். மற்றொரு முறை, வர்த்தக மதிப்பைக் கணக்கில் கொள்ளாமல், நிலையான ஒரு தொகையை (Flat or Fixed Brokerage) ஒவ்வொரு வர்த்தகத்துக்கு அல்லது நாளொன்றுக்கு வசூலிக்கும்.

சில நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மொத்தமாக ஒரு தரகுத் தொகையை வாங்கிவிட்டு, எண்ணில் அடங்கா வர்த்தகத்தை (Unlimited Trade) செய்ய அனுமதிக்கும். அடிக்கடி வர்த்தகம் புரிபவர்களுக்கு தரகுக் கட்டணங்கள் குறைவாகவோ, மாதத்தின் அடிப்படையில் சராசரி தொகையாகவோ இருந்தால் நல்லது.

அதே வேளையில், நீண்டகாலத்தில் முதலீடு செய்பவர்களுக்கு தரகுக் கட்டணங்களால் பெரிய பாதிப்பு இருப்பதில்லை. ஏனெனில், அவர்கள் நாள்தோறும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. எனவே, முதலீட்டாளர்களுக்கு, அவசரக் காலத்துக்குத் தேவையான சேவையை ஒரு தரகு நிறுவனம் அளிக்கிறதா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மிகக் குறைந்த தரகுக் கட்டணம் (Zero Brokerage) என்கிற ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், கணக்கு ஆரம்பித்த நாள் முதல் நீண்டகாலத்தில் உங்களுக்குத் தேவையான சேவையை உறுதி செய்ய வேண்டும்.

பங்குத் தரகு... சிறந்த நிறுவனங்களைக் கண்டறிவது எப்படி? பங்கு முதலீட்டாளர்கள் கவனிக்க!

இதர கட்டணங்களும் முக்கியம்...

தரகுக் கட்டணங்கள் மிகக் குறைவாக உள்ளது என ஒரு தரகு நிறுவனத்தை நாம் தேர்வு செய்தாலும், தரகுக் கட்டணங்கள் போக மற்ற கட்டணங்களையும் கவனிக்க வேண்டும்.

பங்குப் பரிவர்த்தனைக் கட்டணம் (STT/CTT), பரிமாற்ற கட்டணம் (Exchange Transaction), மார்ஜின் கட்டணம், முத்திரை கட்டணம் மற்றும் 18% ஜி.எஸ்.டி வரி ஆகியவை நீங்கள் வாங்கிய/ விற்ற பங்குகளுக்கு செலுத்த வேண்டிய அவசியமான கட்டணங்கள் ஆகும்.

இது போக, உங்கள் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த பங்குகளை விற்கும்போது, டி.பி (Depository Participant Charges) கட்டணமும் உண்டு. பொதுவாக, இந்தக் கட்டணம் பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூ.20 முதல் 50 ரூபாய் வரை விதிக்கப்படும். இந்தக் கட்டணம் உங்களது கான்ட்ராக்ட் நோட்டில் (Contract Note) பதிவு செய்யப்படுவதில்லை.

நிஃப்டி பங்குகள் எனில், என்.எஸ்.டி.எல் (NSDL) நிறுவனமும், மும்பை பங்குச் சந்தை பங்குகள் எனில், சி.டி.எஸ்.எல் (CDSL) நிறுவனமும் இந்தத் தொகையைப் பெறும். சொல்லப்பட்ட டி.பி தொகையை உங்களிடமிருந்து தரகு நிறுவனமோ, வங்கிகளோ (டீமேட் கணக்கு தொடங்கப்பட்ட நிறுவனம்) வசூலித்து அதற்குரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்.

மேலும், உங்கள் டீமேட் கணக்கைப் பராமரிக்க வருடத்துக்கு ஒருமுறை அஸெட் மேனேஜ்மென்ட் சார்ஜ் (AMC) கட்டணமும் விதிக்கப்படலாம். இது உங்களின் டீமேட் கணக்கில் உள்ள மதிப்பைப் பொறுத்து மாறுபடும்.

சில நிறுவனங்கள் மேலே சொல்லப்பட்ட அனைத்துக் கட்டணங்களையும் ஒருசேரப் பெறுவதும் வழக்கம். எனவே, இது போன்ற கட்டணங்களை நாம் கணக்கு தொடங்கும் முன்னரே அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.

பங்கு ஆராய்ச்சிக் குழு உள்ளதா?

பெரும்பான்மையான பங்குத் தரகு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பங்கு களை வாங்குவதற்கான வழிமுறைகளை அளித்து வருகிறது. குறிப்பாக, பங்கு சார்ந்த அறிவுரைகள், பகுப்பாய்வு கள் மற்றும் டிப்ஸ் போன்ற சேவைகள் இலவசமாகவோ, கட்டணமாகவோ வழங்கி வருகிறது.

தரகர் அளிக்கும் அத்தனை பங்கு அறிவுரைகளும் லாபம் தரும் என எந்த உத்தரவாதமும் இல்லை. இதை மட்டுமே கருத்தில் கொண்டு நாம் பங்கு களை வாங்கக் கூடாது. அவற்றில் உள்ள ரிஸ்க் தன்மையை அவர்கள் பெரும்பாலும் குறிப்பிடுவதுண்டு.

இருப்பினும், புரோக்கிங் நிறுவனங்கள் தரும் பங்கு அறிவுரைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பங்கு வாங்கு வதற்கான காரணங்களாக புரோக்கிங் நிறுவனம் சொல்வதை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது நல்லது. முடிந்தால், கட்டணச் சேவை அளிக்கும் பதிவு பெற்ற ஆலோசகர்களின் (Research Analyst) அல்லது உங்களது நிதி ஆலோசகரின் முன்னிலையில் பங்கு முதலீட்டு முடிவை எடுப்பது சிறந்தது.

தரகு நிறுவனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்...

உங்களுக்குத் தேவைப்படும் சேவைகளை அளிக்கும் நிறுவனத்தைக் கண்டறிந்தவுடன், ஒன்றுக்கு மேற்பட்ட தரகு நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். தேவையான காலத்தில் வாடிக்கையாளர் சேவை கிடைக்கிறதா, அவர்களிடம் உள்ள மற்ற வாடிக்கை யாளர்கள் என்ன சொல்கிறார்கள், மார்ஜின் அளவு, தரகு நிறுவனம் ஏதும் சிக்கலில் அல்லது மோசடியில் மாட்டிக் கொண்டதா, குறிப்பிட்ட நேரத்தில் கான்ட்ராக்ட் நோட்டு மின்னஞ்சல் வருகிறதா என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

சில வங்கிகள் அல்லது தரகு நிறுவனங்கள், ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்ற முறையில் வங்கிக் கணக்கு, டீமேட் மற்றும் வர்த்தகக் கணக்கு ஆகிய மூன்றையும் ஒருசேர அளிக்கும். கமாடிட்டி(Commodity) மற்றும் ஃபாரெக்ஸ் (Forex) வர்த்தகத்துக்கான சேவையை ஒரே கணக்கின்கீழ் வழங்கும். ஆனால், உங்களுக்கு அதெல்லாம் தேவைதானா என்று பார்த்து வாங்குவதே சரி.

தரகு நிறுவனங்களை அடிக்கடி மாற்றுவது குறுகியகால முதலீட்டாளர் களுக்கு சாதகமானதாக இருக்காது. தனிநபர் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட டீமேட் கணக்குகளைத் தொடங்கலாம். எனினும், இதன் காரணமாக ஏற்படும் செலவுகளும் அதிகமாக இருக்கும். வீட்டுமனை மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும்போது உள்ள கவனம், பங்கு முதலீட்டிலும் இருக்க வேண்டும். எனவே, தரகு நிறுவனங்களை சரியாகக் கண்டறிந்து, நீண்டகாலத்தில் தொழில் முறை உறவுகளைப் பேணுவது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism