Published:Updated:

சரியும் பங்குச் சந்தை; குறையும் பங்குகளின் விலை; இப்போது முதலீடு செய்யலாமா?

Bombay Stock Exchange (BSE) building in Mumbai, India
Bombay Stock Exchange (BSE) building in Mumbai, India ( AP Photo )

தொடர்ந்து ஏற்றத்தைச் சந்தித்துவந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும், திடீரென மிகப்பெரிய சரிவை சந்திக்க என்ன காரணம்?

நடப்பு வாரத்தின் முதல் நாளான நேற்றும் (19.07.2021), இரண்டாவது நாளான இன்றும் (20.07.2021) இந்திய பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டுமே பலத்த சரிவைச் சந்தித்திருக்கின்றன.

இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவிதமான பதற்றச் சூழ்நிலை காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் அதிகளவிலான இழப்பை எதிர்கொண்டுள்ளனர். திங்கள்கிழமை அன்று நடந்த சந்தை சரிவினால் மட்டுமே, முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 1.31 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை திங்கள் கிழமை காலை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர் சரிவில் இருந்த காரணத்தால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.

Bombay Stock Exchange (BSE)
Bombay Stock Exchange (BSE)
AP Photo

திங்கள்கிழமை அன்று வர்த்தகம் முடியும்போது, சென்செக்ஸ் குறியீடு 586.66 புள்ளிகள் சரிந்து. 52,553.40 புள்ளிகளில் முடிவடைந்தது. அதே போல, நிஃப்டி குறியீடு 171 புள்ளிகள் சரிந்து 15,752.40 புள்ளிகளை அடைந்து வர்த்தகம் முடிந்தது.

இந்த நிலையில், இன்றைய வர்த்தக தொடக்கமும் சரிவில் ஆரம்பித்து, முடியும் போது சென்செக்ஸ் குறியீடு 354 புள்ளிகள் சரிந்து 52,198 என்கிற நிலையில் வர்த்தகமானது. அதே போல, நிஃப்டியும் 120 புள்ளிகள் சரிந்து 15,632 என்கிற நிலையில் முடிவடைந்தது.

தொடர்ந்து ஏற்றத்தைச் சந்தித்துவந்த பங்குச் சந்தை குறியீடுகள் திடீரென மிகப் பெரிய சரிவை சந்திக்க என்ன காரணம், இந்த நிலை தொடருமா, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இது சரியான தருணமா என்கிற கேள்விகளை பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். அவர் விளக்கமான பதிலைத் தந்தார்.

சென்செக்ஸ்
சென்செக்ஸ்

சந்தை சரிய என்ன காரணம்?

``கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டுவரும் வேளையில், பணவீக்கம் பாதிப்பு மற்றும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று ஆகியவற்றின் காரணமாக அமெரிக்கா மற்றும் ஆசியச் சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகளில் புதிதாக கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீடு
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்! லாபம் தரும் முதலீட்டு உத்திகள்

இந்தியாவில் மூன்றாவது அலை கொரோனா பரவல் ஆரம்பிக்காத நிலையில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. இது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது.

மேலும், தற்போதைய சரிவுக்கு மிக முக்கியமான காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாப நோக்கிற்காகவும், தன் நாட்டு வர்த்தகச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவும் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர். குறிப்பாக, ஜூலை 15-ம் தேதிக்குப்பிறகு அதாவது, நிஃப்டி 15,962 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டபிறகு, அதிக அளவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணம், இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியுள்ளது.

புதிதாக முதலீடு செய்யலாம்!

பங்குச் சந்தை இறக்கம் இன்னும் சில நாள்களுக்கு தொடரலாம் எனப் பரவலாக எதிர்பாக்கப்பட்டாலும், அப்படி நடக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. கடந்த சில மாதங்களில் சந்தை கண்ட ஏற்றத்தை வைத்துப் பார்க்கும்போது, இப்போது வந்திருக்கும் இறக்கம் ஆரோக்கியமானதாகவே பார்க்க வேண்டும். எனவே, முதலீட்டாளர்கள் இந்த இறக்கத்தைப் பார்த்து பதற்றம் அடைய வேண்டாம். மாறாக, இந்த சரிவைப் பயன்படுத்தி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். நல்ல அடிப்படை உள்ள பங்குகளை வாங்கலாம்" என்றார்.

பேங்க் நிஃப்டி
பேங்க் நிஃப்டி
பொருளாதார மந்தநிலை... பங்குச் சந்தை ஏன் தொடர்ந்து உயர்கிறது? முதலீட்டாளர்களின் கேள்விக்கு பதில்...

பேங்க்   நிஃப்டி   குறைந்தது   ஏன்?

மேலும் அவரிடம், `பேங்க் நிஃப்டி குறியீடு மிகப் பெரிய அளவில் சரிவைச் சந்தித்திருக்கிறதே' என்று கேட்டோம்.

``தனியார் வங்கித் துறையில் முன்னணி வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் முதலீட்டாளர்களிடையே அதிருப்தியான சூழல் உருவாகியிருக்கிறது.

எதிர்காலத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய கடன் அளவு குறையும் எனவும், கொரோனா மூன்றாவது அலையால் பொருளாதாரம் மோசமாகும்பட்சத்தில் ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடன்களை வசூலிப்பதில் சிக்கல் உருவாகலாம் என்றும் ஒரு எச்சரிக்கை செய்தியைக் காலாண்டு முடிவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். தனியார் துறை வங்கியின் முன்னணி வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கே இந்த நிலை என்கிறபோது, மற்ற வங்கிகளின் நிலை இன்னும் மோசமாகக் கூட இருக்கலாம். இது வங்கிகள் வெளியிடும் காலாண்டு முடிவுகளில் பிரதிபலிக்கலாம்" என்றார்.

உலக சந்தைகள் சரிவு!

ரெஜி தாமஸ்
பங்குச் சந்தை 
நிபுணர்
ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர்

மேலும், அமெரிக்காவில் உதவித் தொகை பெறும் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருப்பதும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்க சந்தையைப் போலவே, கடந்த இரண்டு தினங்களாக ஜப்பான், சீனா, ஹாங்காங், தென் கொரியா, நியூசிலாந்து, தைவான் ஆகிய முக்கியமான வர்த்தகச் சந்தைகளும் பெரிய அளவிலான சரிவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு