1000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்... பங்குச்சந்தை இன்று இறங்கியதற்கு என்ன காரணம்? #ShareMarket

சென்செக்ஸில் உள்ள 30 பங்குகளில் ஹெச்.டி.எஃப்.சி பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஓ.என்.ஜி.சி ஆகிய மூன்று பங்குகள் தவிர, மற்ற அனைத்துப் பங்குகளின் விலையும் குறைந்துள்ளன.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸும் நிஃப்டியும் குறிப்பிடத்தகுந்த அளவில் இறக்கம் கண்டுள்ளன. சென்செக்ஸ் குறியீடானது இன்று 1,145 புள்ளிகளும் நிஃப்டி குறியீடானது இன்று 306 புள்ளிகளும் இழந்திருக்கின்றன.
விலை இறங்கிய பங்குகள்?
சென்செக்ஸில் உள்ள 30 பங்குகளில் ஹெச்.டி.எஃப்.சி பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஓ.என்.ஜி.சி ஆகிய மூன்று பங்குகள் தவிர, மற்ற அனைத்துப் பங்குகளின் விலையும் குறைந்துள்ளன.
அதிகளவில் விலை இறங்கிய பங்குகளில் முதலிடத்தில் இருக்கிறது டாக்டர் ரெட்டீஸ் நிறுவனப் பங்கு. இந்தப் பங்கு 4.77% அளவுக்கு விலை இறக்கம் கண்டது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனப் பங்கு விலை 4.51 சதவிகிதமும், டெக் மஹிந்திரா பங்கு விலை 4.42 சதவிகிதமும் இன்டஸ்பேங்க் பங்கு விலை 4.25 சதவிகிதமும் இறக்கம் கண்டுள்ளன.
சந்தை சரியக் காரணம்?
இன்று பங்குச் சந்தை இறங்கியதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. உலகத்தின் சில நாடுகளிலும் இந்தியாவில் மகாராஷ்ட்ரா உட்பட நான்கு மாநிலங்களிலும் கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது. இதனால் நிறுவனங்களின் வருமானம் குறையக்கூடும் என்கிற அச்சத்தில் சந்தை இறக்கம் கண்டிருக்கிறது.
தவிர, கடந்த சில வாரங்களாக சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்ததால், வேல்யூவேஷன் அதிகமாக இருக்கிறது. சந்தை கொஞ்சம் இறங்கினால்தான் இந்த வேல்யூவேஷன் குறையும் என்பதே இன்றைய நிலையாக இருக்கிறது. தவிர, கொரோனா காலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் இப்போது நல்ல லாபத்தில் இருப்பதால், பங்கினை விற்று லாபம் பார்த்து வருகிறார்கள். இதனாலும் சந்தைப் புள்ளிகள் குறைந்துள்ளன.

நிபுணர் என்ன சொல்கிறார்?
பங்குச் சந்தை இறங்கியதற்கு என்ன காரணம் என ஐ.டி.பி.ஐ வங்கியின் ஹெட் ஆஃப் ரிசர்ச் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம்.
``பங்குச் சந்தை உச்சத்திலிருந்து கொஞ்சம் இறங்கியிருக்கிறது. புதிதாக சில நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கும் நிலை உருவாகியிருப்பது, வேல்யூவேஷன் அதிகமாக இருப்பது, புராஃபிட் புக்கிங் போன்றவை இதற்கொரு காரணமாக இருக்கலாம். வருகிற வியாழக்கிழமை அன்று எஃப் அண்ட் ஒ எக்ஸ்பைரி வருகிறது. அதன் காரணமாகவும் சந்தை இறக்கம் கண்டிருக்கலாம்.
சந்தை இன்னும் எவ்வளவு இறங்கும் என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாது. நிஃப்டி 14700 புள்ளிகள் இறங்கும் வரை ஃபண்டமென்ட்டலாக எந்தப் பிரச்னையும் இல்லை என்று கருதலாம். அதற்குமேல் இறங்கும்போது நாம் கவனமாகச் செயல்பட வேண்டும்.
சந்தை இறங்கியிருந்தாலும் மெட்டல் ஸ்டாக்குகள் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு கொண்டவையாகவே இருக்கின்றன. சி.டி.எஸ்.எல் மற்றும் பி.எஸ்.இ நிறுவனப் பங்குகளும் கவனிக்கத் தக்கவையாக உள்ளன. சந்தையின் இந்த இறக்கத்திலும் இறக்கம் காணாத பங்குகளை முதலீட்டுக்கு நாம் பரிசீலிக்கலாம். சந்தையின் இந்த இறக்கத்தை முதலீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பாகவே நாம் கருத வேண்டும்’’ என்றார் அவர்.

மீண்டும் முதலீடு?
இதுவரை பங்குச் சந்தையில் முதலீடு செய்யாதவர்களும் சந்தை இறங்கியவுடன் முதலீடு செய்யலாம் என்று காத்திருந்தவர் களுக்கு இப்போது மீண்டும் முதலீடு செய்ய ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பைத் தேவைப்படுகிறவர்கள் பயன்படுத்திப் பயன்பெறலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது!