Published:Updated:

3 நாள்கள் ஏற்றம் கண்ட பங்குச்சந்தை தீடீர் சரிவு! - முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

இன்று, வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே இறக்கத்தில் பயணித்த பங்குச் சந்தை, 500 புள்ளிகள் சரிவடைந்து இறுதியாக 38,593 என்ற புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது.

பங்குச்சந்தை
பங்குச்சந்தை ( vikatan )

சமீபத்தில் தொடர்ந்து ஏற்றத்தில் சென்றுகொண்டிருந்த தேசியப் பங்குச்சந்தையில் இன்று (25, செப்டம்பர், 2019, புதன்கிழமை) 500 புள்ளிகள் இறக்கம் ஏற்பட்டது. செப்டம்பர் 20-ல் கார்ப்பரேட் வரிகளைக் குறைத்து அறிவிப்பு வெளியானது. அன்றைய தினம் முதலாக பங்குச்சந்தை அதிரடியாக ஏற்றம் கண்டது. 3 வர்த்தக நாள்களாக ஏற்றத்திலேயே தொடர்ந்து 3,000 புள்ளிகள் அதிகரித்து 39,000 என்ற வரம்பைத் தாண்டியது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இந்த நிலையில், இன்றைய தினம் (25, செப்டம்பர், 2019, புதன்கிழமை) வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே பங்குச்சந்தை இறக்கம் கண்டது. 500 புள்ளிகள் சரிவடைந்து இறுதியாக 38,593 என்ற புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த மூன்று வர்த்தக நாள்களாக ஏற்றம்பெற்று முதலீட்டாளர்களை மகிழ்வித்த மும்பை பங்குச் சந்தை, இன்று இறக்கத்தில் பயணித்தது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஃப்டியிலும் 150 புள்ளிகள் இறக்கம்கண்டு 11,440 புள்ளிகளை எட்டியது.

இன்றைய இறக்கத்துக்குப் பல்வேறு காரணங்களை, பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த மூன்று நாள்களில் சென்செக்ஸ் 3000 புள்ளிகளும், நிஃப்டி 900 புள்ளிகளும் ஏற்றம்கண்டது. இதனால், டிரேடர்கள் லாப நோக்கம் கருதி விற்பனையில் ஈடுபட்டதால் இந்த இறக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப்போர் முடிவுக்குவரும் என்ற நம்பிக்கை பொய்த்துப்போனது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறையான விசாரணை தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அமெரிக்காவில் ஏற்பட்ட அரசியல் பதற்றம் போன்றவையும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மொத்தத்தில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று வருத்தத்துடன் முடிந்திருக்கிறது.