Published:Updated:

புதிய வகை கொரோனா வைரஸ்... சரிந்த பங்குச்சந்தை... முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

Share Market (Representational Image)
Share Market (Representational Image) ( Photo by Lorenzo from Pexels )

பங்குச் சந்தையின் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்ன, ஏன் இந்தத் திடீர் சரிவு, இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சென்செக்ஸ் 47,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தில் வர்த்தகமானது. இதற்கு முந்தைய வாரமும் 46,000 புள்ளிகளைக் கடந்து வரலாற்றுச் சாதனையை சென்செக்ஸ் பதிவு செய்திருந்தது.

இப்படி கடந்த ஒரு சில வாரங்களாகத் தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமான சென்செக்ஸ், நிஃப்டி சந்தைகள், கடந்த திங்கள் அன்று (21.12.2020) மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தன. அன்றைய தினம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,516 புள்ளிகள் சரிந்து 45,444 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 490 புள்ளிகள் சரிந்து 13,270-ல் வர்த்தகமானது. இதனால் நேற்று ஒரு நாளில் மட்டும், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 6.59 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo by energepic.com from Pexels

நேற்று நடந்ததைப் போலவே, இன்றும் இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தைச் சந்திக்கும் என்கிற அச்சத்தால், முற்பகல் வரை முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வந்தனர். மதியம் 1.20 மணி அளவில் சென்செக்ஸ் 170 புள்ளிகள் குறைந்து 45,373 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 13,274 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஆனால், பிற்பகலில் சந்தை திடீரென மேலே செல்லத் தொடங்கியது. இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 452 புள்ளிகள் உயர்ந்து, 45,006 புள்ளிகள் என்கிற அளவிலும், நிஃப்டி 137 புள்ளிகள் உயர்ந்து 13,466 புள்ளிகள் என்கிற அளவிலும் வர்த்தகமாகி முடிந்தன.

சந்தையின் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்ன, பங்குச் சந்தை தற்போது ஏன் ஏற்ற இறக்கமாக இருக்கிறது, இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது பற்றி பல்வேறு கேள்விகளுடன் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் பேசினோம்.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

``இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், ஐரோப்பிய சந்தைகள் நேற்று பலமான சரிவைக் கண்டன. இதன் காரணமாக இந்தியச் சந்தையும் நேற்று பலமான சரிவைக் கண்டது. கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு ஒருபுறம் இருந்தாலும், புதிய கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தைக்கு ஆதரவாக அந்நிய முதலீடுகளின் வரத்து இருந்தாலும், அதிகரித்துவரும் புதிய கொரோனா தாக்கம், மீண்டும் ஒரு லாக்டௌனுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாகச் சந்தைகள் சரிவைக் கண்டு வருகின்றன.

பங்குச் சந்தையில் ஏற்றமும் இறக்கமும் மாறிமாறி வந்து கொண்டுதான் இருக்கும். இந்தச் சமயத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம். இப்போது அவர்கள் முதலில் செய்ய வேண்டியது, `புராஃபிட் புக்கிங்'. அதாவது, முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பங்குகளில், லாபத்தைக் கொடுத்திருக்கும் பங்குகளை விற்று வெளியேறுவது. நீண்டகால அடிப்படையில் லாபம் தரக்கூடிய பங்கு என முதலீட்டாளர்கள் நினைத்தால், அதில் குறைந்த அளவு பங்குகளை மட்டும் விற்றுவிடுவது நல்லது. நீண்டகால நோக்கில் லாபம் தராது; ஆனால், இன்றை நிலையில் லாபம் தந்திருக்கும் பங்குகளை உடனே விற்று லாபத்தை சம்பாதித்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

அதே போல, அச்சம் அதிகரித்து, எதிர்பார்ப்பு குறைந்திருக்கும் இந்த நேரத்தில் பங்குச் சந்தையில் குறைந்த அளவில் முதலீடு செய்வது நல்லது. இந்நிலை மாறும்போது முதலீட்டை அதிகரித்துக் கொள்ளலாம்.

இந்த நேரத்தில் பங்குகளைத் தேர்ந்தெடுக்கும்போது, எதிர்காலத்தில் லாபம் தரக்கூடிய துறை சாந்த பங்குகளைத் தேர்வு செய்யுங்கள். ஒருவேளை, புதிய கொரோனா வைரஸ் தொற்று அதிகமானால், அதனால் லாக்டௌன் அமல்படுத்தப்பட்டால் கச்சா எண்ணெய் நுகர்வு குறையும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். வங்கித்துறை சார்ந்த நடவடிக்கைகளும் பாதிப்படையும். இது இத்துறை சார்ந்த பங்கு விலையில் எதிரொலிக்கும். அதனால் துறை சார்ந்த பங்குகளைத் தேர்வு செய்து, அதில் முதலீட்டை செய்வது நல்லது.

அசாதாரணமான சூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில், மொத்த முதலீட்டையும் பங்குச் சந்தையில் போடாமல், மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொள்ளலாம். தங்கத்தின் மீதும் முதலீட்டாளர்களுக்குக் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்" என்றார் தெளிவாக.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo: Pixabay

பங்குச் சந்தை என்பது ஏறி, இறங்கக்கூடியதுதான். இப்போதைய இறக்கத்தை புதிய முதலீட்டுக்கான வாய்ப்பாகப் பார்க்கலாமா அல்லது லாபத்தை எடுத்துவிட்டு, வெளியேறலாமா என்பதை முதலீட்டாளர்கள்தாம் முடிவு செய்ய வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு