Published:Updated:

ஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து வாங்கும் 40 பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து வாங்கும் 40 பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

மாலை 5 மணிக்கு வருவதாக ஷேர்லக் தகவல் அனுப்பியிருந்ததால் நாம் வேறு வேலைகளில் பிசியாகி இருந்தோம். ஆனால், மாலை 4 மணிக்கே வந்த அவரை நேராக கேன்டீனுக்கு அழைத்துச் சென்று டேபிளில் அமர வைத்தோம். வழக்கம்போல அவர் கொண்டு வந்த லெதர்பேக்கிலிருந்து பிளாஸ்க்கை எடுத்து, அதிலிருந்த கிரீன் டீயை கப்பில் ஊற்றிக் குடிக்க ஆரம்பிக்க... “வெள்ளை அறிக்கை எப்படி..?” என்று கேட்டோம். “அதான் நீங்களே விரிவாக எழுதிவிட்டீர்களே... மார்க்கெட் குறித்து பேசுவோமே...” என நாம் போட்ட பந்தை நம்மிடமே திருப்பி விட்டார். நாம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.

வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை திடீரென அதிகரிக்க என்ன காரணம்?

“வேதாந்தா நிறுவனம், ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. அதில், ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.4,224 கோடியைப் பதிவு செய்திருந்தது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 309% அதிகமாகும். இதன் காரணமாக, கடந்த வாரம் புதன்கிழமை அன்று, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 6% வரை அதிகரித்து, ரூ.324.80 என்கிற விலையில் வர்த்தமானது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் இந்தப் பங்கு விலை 27% வரை அதிகரித்திருக்கிறது.”

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்து வருகின்றனவே, என்ன காரணம்?

“கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுவருவது போன்றவற்றால் இந்தியாவின் வளர்ச்சியில் இந்திய முதலீட்டு நிறுவனங்கள் (மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை) மற்றும் அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்.ஐ.ஐக்கள்) ஆகியவை முழு நம்பிக்கை கொண்டுள்ளது. அதனால், இவை இந்தியப் பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. குறிப்பாக, தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனப் பங்குகளில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவந்துள்ளன.

மேட்ரிமோனி.காம், பிர்லா சாஃப்ட், கிரீன்பிளே இண்டஸ்ட்ரீஸ், கிராம்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், சிட்டி யூனியன் பேங்க், ஈ.ஐ.டி பாரி, சன்பார்மா உள்ளிட்ட நிறுவனங்களைக் குறிப்பிடலாம். இந்தப் பங்குகளில் சிறு முதலீட்டாளர்கள் இப்போது வாங்கலாமா எனில், இந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி, முதலீட் டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து முதலீட்டு முடிவை எடுப்பது சரியாக இருக்கும்.”

ஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள்
தொடர்ந்து வாங்கும் 40 பங்குகள்..!

டைனமேட்டிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு விலை இரண்டே நாள்களில் வேகமாக அதிகரித்தது ஏன்?

“கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று, ஹெச்.என்.ஐ-கள் மற்றும் புகழ்பெற்ற ஃபண்ட் மேனேஜர்கள் மதுசூதன் கெலா மற்றும் சுனில் சிங்கானியா ஆகியோர் ஓப்பன் மார்க்கெட் வழியாக இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பிறகு, கடந்த இரண்டு வர்த்தக நாள்களில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 31% அதிகரித்துள்ளது.

பங்கு ஒன்றின் விலை ரூ.1,618.90 என்கிற கணக்கில் மதுசூதன் கெலா மொத்தம் 44,700 பங்குகளை வாங்கியிருக்கிறார். சுனில் சிங்கானியா பங்கு ஒன்றுக்கு ரூ.1,617 கொடுத்து, மொத்தம் 1,25,000 பங்குகளை வாங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் புரொமோட் டர்களான உதயந்த் மல்ஹோத்ரா மற்றும் வாவெல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் சேர்ந்து மொத்தம் 2,50,000 ஈக்விட்டி பங்குகளை விற்றுள்ளன. இது இந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 3.94% ஆகும்.”

லூபின் பங்கு விலை சரிந்திருக்கிறதே?

“பார்மா துறையைச் சேர்ந்த மிக முக்கிய நிறுவனமான லூபின் நிறுவனம், தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய வருமானம் 18.1% அதிகரித்து, ரூ.548 கோடியாக உள்ளது. ஆனால், முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த நிறுவனத்தின் முடிவுகள் திருப்திகரமாக இல்லை. இதன் காரணமாகக் கடந்த வாரம் புதன்கிழமை அன்று 7% விலை குறைந்து, ரூ.1,035.65-க்கு வர்த்தகமானது. வியாழக்கிழமையும் 5% அளவுக்கு இறங்கியது.”

கோல் இந்தியா நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் எப்படி வந்திருக்கின்றன?

“பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கோல் இந்தியா நிறுவனம், சமீபத்தில் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 52.4% அதிகரித்து, ரூ.3,169.85 கோடியாக இருக்கிறது. லாப அதிகரிப்பை அடுத்து நிறுவனப் பங்கின் விலை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,079.60 கோடியாக இருந்தது. ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருமானம் ரூ.25,282.15 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.18,486.77 கோடியாக இருந்தது. அதே நேரத்தில், இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செலவுகள் ரூ.21,626.48 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.16,470.64 கோடியாக இருந்தது.”

கே.ஆர்.சோக்‌ஷி நிறுவனம் இன்னும் ஆறு மாதத்தில் ஆறு நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிக்கும் எனச் சொல்லியிருக்கிறதே?

“தற்போதைய நிலையில், உலக அளவிலான பொருளாதார விஷயங்கள், இந்திய பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக இருப்பதால், அதன் செயல்பாடுகள் சிறப்பான முறையில் இருக்கின்றன. இதன் காரணமாக, ஃபைனான்ஷியல் கன்சல்டிங் நிறுவனங்களில் ஒன்றான கே.ஆர்.சோக்‌ஷி, ஆறு மாதங்களுக்குள் 18% வரை வருமானம் தரக்கூடிய ஆறு நிறுவனங்களின் பங்குகளைக் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த ஆறு மாதத்தில் இண்டஸ்இண்ட் பேங்க் இலக்கு விலை ரூ.1,160; ‌ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் நிறுவனப் பங்கின் இலக்கு விலை ரூ.787; சுப்ரீம் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலை ரூ.806; சிப்லா நிறுவனத்தின் இலக்கு விலை ரூ.997; மஹாங்கர் கேஸ் நிறுவனத்தின் இலக்கு விலை ரூ.1,293; கிளென்மார்க் பார்மா நிறுவனத்தின் இலக்கு விலை ரூ.696 என அந்த நிறுவனம் சொல்லி இருக்கிறது. பார்ப்போம், இது எந்த அளவுக்கு நடக்கும் என்று.’’

கே.எஃப்.சி மற்றும் பீஸா ஹட் விற்பனை நிலையங்களை இயக்கும் சாப்பியர் ஃபுட்ஸ் இந்தியா நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுகிறதாமே?

“கே.எஃப்.சி மற்றும் பீஸா ஹட் விற்பனை நிலையங்களை இயக்கும் சாப்பியர் ஃபுட்ஸ் இந்தியா நிறுவனம், ஐ.பி.ஓ வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு செபி அமைப்பிடம் விண்ணப்பித்திருக்கிறது. இந்த ஐ.பி.ஓ மூலம் பங்குச் சந்தையில் ஓ.எஃப்.எஸ் முறையில் 1,75,69,941 பங்குகளை வெளியிட இந்த நிறுவனம் முடிவு செய்திருப்ப தாகத் தெரிகிறது.

இதில் க்யூ.எஸ்.ஆர் மேனேஜ்மென்ட் டிரஸ்ட் 8.50 லட்சம் பங்குகளையும், சாப்பியர் ஃபுட்ஸ் மொரிஷியஸ் 55.69 லட்சம் பங்குகளையும், டபிள்யூ.டபிள்யூ.டி ரூபி 48.46 லட்சம் பங்குகளையும் மற்றும் அமேதிஸ்ட் நிறுவனம் 39.62 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.’’

நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளீயீடு வெற்றியடைந்ததா?

“நிர்மா குழுமத்தின் ஒரு அங்கமான நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன் ரூ.5,000 கோடி நிதி திரட்டும் நோக்கில் புதிய பங்குகளை விற்பனை (ஐ.பி.ஓ) செய்தது. இந்த வெளியீட்டின் மூலம் மொத்தம் 6.25 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனால், ஐ.பி.ஓ இறுதி நாளான ஆகஸ்ட் 11-ம் தேதியில் 1.71 மடங்கு பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். மொத்தம் 10.70 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 4.23 மடங்கும், நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 66% பங்குகள் வேண்டியும் விண்ணப்பங்கள் வந்திருக் கின்றன. சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளில் 73% பங்குகளுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.”

இந்த ஐ.பி.ஓ தவிர வேறு மூன்று பங்கு நிறுவனங்கள் ஐ.பி.ஓ வந்ததே, அவற்றுக்கான வரவேற்பு எப்படி இருந்தது?

‘‘கார்டிரேட் டெக் நிறுவனப் பங்கின் ஐ.பி.ஓ-வுக்கு ஓரளவு நல்ல வரவேற்பு இருந்தது. மூன்றாம் நாள் மதிய நிலவரப்படி, ஏறக்குறைய 20 மடங்கு கூடுதலான விண்ணப்பங்களை அந்த ஐ.பி.ஓ பெற்றிருந்தது. வருகிற 23-ம் தேதி அன்று பங்குச் சந்தையில் இந்த நிறுவனப் பங்கு லிஸ்ட் ஆகி வர்த்தகமாகத் தொடங்கும் என்கிறார்கள். முதல் நாளன்றே மிகப் பெரிய அளவில் விலை உயருமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆப்டஸ் வேல்யூ ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்கு மூன்றாம் நாள் மதிய நிலவரப்படி 17.16 மடங்கு கூடுதலாக விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. இந்தப் பங்கு வருகிற 24-ம் தேதி அன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆகிறது. இதன் விலைப் போக்கையும் பொறுத்திருந்து பார்த்துத் தெரிந்து கொள்வோம்.

கெம்ப்ளாஸ்ட் சன்மார் ஐ.பி.ஓ-தான் எதிர்பார்த்த அளவு போகவில்லை. மூன்றாம் நாள் மதிய நிலவரப் படி, வெறும் 2.16 மடங்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளன. சந்தை முதலீட்டாளர்கள் மிக உற்சாக மான சூழ்நிலையில் இது மிகவும் குறைவுதான். என்றாலும் அந்த நிறுவனம் என்ன முடிவை எடுக்கப்போகிறது என்று பார்ப்போம்’’ என்றவர், ஒரு முக்கிய மான விஷயத்தைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்..!

நாணயம் விகடன் வழங்கும் ‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்..!’ என்ற கட்டண வகுப்பு நடக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 21, 2021, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மற்றும் ஆகஸ்ட் 22, 2021, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. கட்டணம் ரூ.6,000 ஆகும். Ectra.in நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார். பதிவுசெய்ய https://bit.ly/3xSQ405