Published:Updated:

ஷேர்லக்: பார்மா பங்குகள், ஃபண்டுகள்... சிறுமுதலீட்டாளர்கள் உஷார்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: பார்மா பங்குகள், ஃபண்டுகள்... சிறுமுதலீட்டாளர்கள் உஷார்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

இன்று வியாழக்கிழமை மொகரம் பண்டிகை காரணமாக பங்குச் சந்தை விடுமுறை என்பதால், ஷேர்லக் தன்னுடைய பண்ணைக்குச் செல்வதாக அதிகாலையிலேயே வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருந்தார். நாம் முன்கூட்டியே கேள்விகளை அனுப்பிவிட்டுக் காத்திருக்க, மதியம் 2 மணிக்கெல்லாம் அவர் பதில்களை மெயில் அனுப்பி வைத்தார்.

சில பங்குகள் கடந்த ஓராண்டில் இரண்டு மடங்குக்கு மேல் விலை அதிகரித்திருக்கிறதே?

“இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மெள்ளக் குறைந்து வருவதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு ஏற்றத்தில் காணப் படுகின்றன. கடந்த வாரம் இவ்விரு இண்டெக்ஸ்களும் புதிய உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாகின. இதன் காரணமாகப் பல்வேறு துறை சார்ந்த பங்குகள் அதிக விலை ஏற்றம் கண்டிருக்கின்றன. அந்த வகையில், பாலாஜி அமினெஸ் தீபக் நைட்ரைட், சார்தா எனர்ஜி அண்டு மினரல்ஸ், சாக்சாஃப்ட், எல் அண்டு டி டெக்னாலெஜி சர்வீசஸ், கே.எம்.சி ஸ்பெஷா லிட்டி ஹாஸ்பிடல்ஸ் (இந்தியா) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இரண்டு மடங்குக்கு மேல் விலை உயர்ந்தன. அது மட்டுமல்லாமல், இந்த நிறுவனங்களின் லாபம் ஒவ்வொரு காலாண்டிலும் 10 சதவிகிதத்துக்குமேல் நிலையான வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

பாலாஜி அமினெஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு ஆண்டில் 375% அதிகரித்து, ரூ.3,400-க்கு வர்த்தகமாகிறது. தீபக் நைட்ரைட் நிறுவனத்தின் பங்கு விலை 265% அதிகரித்து, ரூ.2,135-க்கும், சார்தா எனர்ஜி அண்டு மினரல்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 235% அதிகரித்து, ரூ.740-க்கும், சாக்சாஃப்ட் நிறுவனத்தின் பங்கு விலை 150 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து, ரூ.785-க்கும், எல் அண்டு டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலை 135 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்து, ரூ.3,825-க்கும் மற்றும் கே.எம்.சி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் (இந்தியா) நிறுவனத்தின் பங்கு விலை 105 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்து, ரூ.48-க்கும் வர்த்தகமாகி வருகின்றன.”

ஷேர்லக்: பார்மா பங்குகள், ஃபண்டுகள்... சிறுமுதலீட்டாளர்கள் உஷார்..!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே..!

“இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.9,200 கோடி மதிப்புள்ள பங்குகளை முதலீட்டாளர்களிடம் இருந்து திரும்பப் பெறும் திட்டத்தைக் கடந்த ஜூன் 25-ம் தேதி தொடங்கியது. இந்தத் தேதியிலிருந்து அடுத்த ஆறு மாதங்கள் வரை இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தனது முதலீட்டாளர்களிடமிருந்து திரும்பப் பெறும் பங்கு ஒன்றுக்கு ரூ.1,750-ஐ விலையாக நிர்ணயம் செய்திருந்தது. இந்த நிலையில், கடந்த வாரம் புதன்கிழமை அன்று, திரும்ப பெற நிர்ணயம் செய்த விலையைவிட, இந்தப் பங்கின் விலை அதிகரித்து வர்த்தகமானது. அதாவது, அன்றைய தினத்தில் ரு.1,755-க்கு வர்த்தகமாகி புதிய உச்சத்தை இந்த நிறுவனத்தின் பங்கு பதிவு செய்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த நிறுவனத் தின் பங்கு விலை 13% வரை அதிகரித்திருக்கிறது.”

பார்மா பங்குகள், ஃபண்டுகளின் வருமானம் குறையத் தொடங்கி இருக்கிறதே, என்ன காரணம்?

“உலக அளவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. இதனால், மருந்துப் பொருள்களின் தேவை குறையத் தொடங்கியிருக்கிறது. இதனால், பார்மா நிறுவனங்களின் விற்பனை குறைந்து, அதன் லாபம் குறையத் தொடங்கியிருக்கிறது. இது அவற்றின் பங்குகளின் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. பார்மா பங்குகளில் பிராஃபிட் புக்கிங் செய்ய இது சரியான நேரம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். இதேபோல, செக்டார் ஃபண்டான பார்மா ஃபண்டுகளிலிருந்தும் வெளியேறும் நேரம் இது. நிஃப்டி பார்மா இண்டெக்ஸ் கடந்த ஒரு மாதக் காலத்தில் சுமார் 4% இறக்கம் கண்டிருக்கிறது. உலகின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட் அவரின் பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனம் மூலம் மேற் கொண்டிருந்த பார்மா கம்பெனி களிலிருந்து முதலீட்டை விலக்கிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சூப்பர் மார்க் கெட் நிறுவனப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கிறார். அதாவது, நுகர்வு சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீட்டை உயர்த்தி இருக்கிறார். எனவே, பார்மா பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கும் சிறு முதலீட்டாளர்கள் உஷாராக செயல்படுவது நல்லது. ஆனால், நீண்ட கால முதலீட்டாளர்கள் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை.”

வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை குறைய என்ன காரணம்?

“தூத்துக்குடி தொழிற் சாலையில் உள்ள அசுத்தமான இடங்களைச் சரிசெய்வது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு, கடந்த இரண்டு வர்த்தக தினத்தில், இந்த நிறுவனத்தின் பங்கு 12% வரை விலை குறைந்து வர்த்தகமானது. கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகம் முடியும்போது, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 2.29% குறைந்து, ரூ.295.90-க்கு வர்த்தகமானது.”

நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் உயர்ந்திருக்கிறதே?

“கொரோனாவால் பல துறைகள் பாதிக்கப்பட்டன. ஆனால், ஐ.டி துறை அவ்வளவாகப் பாதிப்படைய வில்லை. இதன் காரணமாக ஐ.டி துறை சார்ந்த நிறுவனங் களின் பங்குகள் கடந்த காலங்களில் நிலையான வருமானத்தைத் தந்திருக்கின்றன. இந்த நிலையில், நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் 33,840.45 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டிருக் கிறது. டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் மற்றும் விப்ரோ ஆகிய முக்கிய ஐ.டி நிறுவனங்களின் பங்குகள் 52-வார அதிகபட்ச விலையைத் தொட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். டி.சி.எஸ் பங்கு ரூ.3,595 என்கிற உச்சபட்ச விலையைத் தொட்டிருக்கிறது. இதனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு அடுத்ததாக ரூ.13 லட்சம் கோடி மார்க்கெட் கேப்பிடலைசேஷன் கொண்ட இரண்டாவது நிறுவன மாக டி.சி.எஸ் உயர்ந்திருக்கிறது.’’

காவேரி சீட் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருப்பது ஏன்?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 6% வரை அதிகரித்து, ரூ.610-க்கு வர்த்தகமானது. வருகிற ஆகஸ்ட் 25-ம் நடக்க இருக்கும் இயக்குநர் குழுவின் கூட்டத்தில், பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என நிறுவனத்தின் தரப்பிலிருந்து தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரண மாகவே பங்கின் விலை அதிகரித் திருக்கிறது.”

இ-கிளெர்க்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறதே?

“கடந்த ஒரு வருடத்தில் இ-கிளெர்க்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 235% வரை அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், நிஃப்டி இண்டெக்ஸ் 48% வளர்ச்சியையும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 46% வளர்ச்சியையும் பதிவு செய்திருக்கின்றன. 12 மாதங்களுக்கு முன்பு ரூ.715.70-க்கு வர்த்தகமான இந்தப் பங்கு விலை, தற்போது ரூ.2,318-க்கு வர்த்தகமாகிறது. நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 225% வரை அதிகரித்திருக்கிறது.”

விஸ்வராஜ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பங்கு முகமதிப்பைப் பிரிப்பது பற்றி...

“இந்த நிறுவனம் ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கை ரூ.2 முகமதிப்புள்ள ஐந்து பங்குகளாகப் பிரிக்கத் திட்டமிட்டிருக் கிறது. இதற்கான அனுமதியை அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு வழங்கியிருக்கிறது. இதன் காரணமாக ரூ.154-க்கு வர்த்தகமாகிவரும் ஒரு பங்கின் விலை ரூ.30 - 32 என்ற விலையில் இனி வர்த்தகமாகும். பங்கு பிரிப்பு எப்போது என்கிற விவரங்களை இன்னும் இந்த நிறுவனம் வெளியிடவில்லை. இந்தத் திட்டத்தை இந்த நிறுவனம் செயல்படுத்தினால், சிறு முதலீட்டாளர்கள் இந்தப் பங்கு களில் அதிகம் முதலீடு செய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.”

பர்தீப் பாஸ்பேட்ஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடத் திட்ட மிட்டிருக்கிறதாமே?

“பரதீப் பாஸ்பேட்ஸ் நிறுவனம் முதன்மையாக டி-அம்மோனியம் பாஸ்பேட் (DAP) மற்றும் என்.பி.கே உரங்களை உற்பத்தி, வர்த்தகம், விநியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. அதன் உரங்கள் ‘ஜெய் கிசான் நவரத்னா’ மற்றும் ‘நவரத்னா’ என்கிற பிராண்டு பெயர்களில் சந்தைப்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனம் பங்குச் சந்தையில் புதிய பங்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. ஓ.எஃப்.எஸ் முறையில் இந்திய அரசாங்கத்தின் வசம் இருக்கும் இந்த நிறுவனத்தின் பங்குகளில் 11,24,89,000 பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போதைய நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குகள் இசட்.எம்.பி.பி.எல் நிறுவனத்தின் வசம் 80.45 சதவிகிதமும், இந்திய அரசின் வசம் 19.55 சதவிகிதமும் இருக்கின்றன. புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.”

சந்தையில் லார்ஜ்கேப் பங்குகளின் விலை மட்டுமே உயர்ந்து வருகின்றன. மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளை விலை குறைந்து வருகிறதே!

‘‘கடந்த 15 மாதங்களில் மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் விலை ஏகத்துக்கும் உயர்ந்திருக் கிறது. இதில் முதலீடு செய்திருந் தவர்கள் நல்ல லாபம் பார்த்த தால், புராஃபிட் புக்கிங் செய் திருக்கிறார்கள். இதனால்தான் மிட் அண்ட் ஸ்மால்கேப் விலை குறைகிறதே தவிர, அந்த நிறுவனங்களின் செயல்பாடு களில் பெரிய பிரச்னை எதுவும் இல்லை. எனவே, நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த இறக்கம் பற்றிக் கவலைப்படாமல், நல்ல அடிப்படை உள்ள மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளைக் கூடுதலாகச் சேர்க்கலாம். இதே தான், மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகளுக்கும்’’ என்கிற விளக்கத்தைச் சொல்லி இருந்தவர், ‘‘கடந்த வாரம் கிளப்ஹவுஸ் வலைதளத்தில் நீங்கள் நடத்திய தமிழ்நாடு பட்ஜெட் விளக்கக் கூட்டம் அருமை. இதில் தொடர்ந்து கூட்டம் நடத்துங்கள். கிளப் ஹவுஸ் என்பது இளைஞர்களின் கூடாரம். நாணயம் விகடனைப் படிக்கும் அனைத்துப் பெரியவர் களும் தங்கள் குழந்தைகளை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொன்னார்கள் எனில், எதிர்காலத்தில் உறுதியான நிதிநிலை கொண்ட சமுதாயம் உருவாகும்’’ என்று முடித்திருந்தார்.

எஸ்.ராமச்சந்திரன்,  மெய்ய நாகப்பன், ஜி.அர்ஜுன் விஜய்
எஸ்.ராமச்சந்திரன், மெய்ய நாகப்பன், ஜி.அர்ஜுன் விஜய்

பிட்காயின் வர்த்தகம் - நம்பி பணத்தைப் போடலாமா?

நாணயம் விகடன் மற்றும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் இணைந்து நடத்தும் ‘பிட்காயின் வர்த்தகம் - நம்பி பணத்தைப் போடலாமா என்கிற தலைப்பில் கிரிப்டோகரன்சி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, இந்த மாதம் ஆகஸ்ட் 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 முதல் 12 மணி வரை நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இன்ஃபோசிஸ் நாலேஜ் சென்டர் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் எஸ்.ராமச்சந்திரன், நிதிஷ் தேசாய் அசோசியேஷன் நிறுவனத்தின் லீடர் மெய்ய நாகப்பன், ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜி.அர்ஜுன் விஜய் ஆகியோர் பேசுகின்றனர். இந்தக் கட்டணமில்லா வெபினார் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://bit.ly/3svse8D

கந்து வட்டி சிக்கல்: மீள்வது எப்படி?

நாணயம் விகடன் மற்றும் ஜூனியர் விகடன் இணைந்து வழங்கும் ‘கந்து வட்டி சிக்கல்: மீள்வது எப்படி?’ என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி செப்டம்பர் 5, 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 - 7.00 மணி வரை நடைபெறுகிறது.
இதில், கந்துவட்டி சட்டத் திட்டங்கள் குறித்து ஆடிட்டர் வி.தியாகராஜன் (www.bizlane.in), சிக்கலிருந்து மீள்வது எப்படி? என்பது குறித்து வழக்கறிஞர் ஆர்.சரவணன் (Lawyerchennai.com) ஆகியோர் பேசுகிறார்கள்.
இது கட்டணமில்லா கருத்தரங்கு ஆகும். முன் பதிவு செய்ய https://bit.ly/3fMNn9n

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

பர்சனல் ஃபைனான்ஸ்... ஈஸியா, ஜாலியா புரிஞ்சுக்கலாம் வாங்க..!

ஒருவர் தன் வாழ்க்கையில் பெரும் பணம் சேர்ப்பதற்கு அடிப்படை விஷயமாக இருப்பது பர்சனல் ஃபைனான்ஸ் எனப்படும் தனிநபர் நிதி நிர்வாகம்தான். இதன் அடிப்படைகளை எளிதாகப் புரிந்துகொள்வது எப்படி என்பதைச் சொல்கிறார் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன். இந்தக் கூட்டம் வருகிற திங்கள்கிழமை23-ம் தேதி அன்று இரவு 7.30 முதல் 8.15 வரை கிளப்ஹவுஸில் நடக்கிறது. https://bit.ly/3CWeZmt என்ற லிங்கை க்ளிக் செய்து, கிளப்ஹவுஸ் வலைதளத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிளப்ஹவுஸ் வலைதளத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள், கூகுள் ஃப்ளேஸ்டோரில் உள்ள கிளப்ஹவுஸ் ஆப்பை செல்போனில் டவுன்லோடு செய்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்! 23 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism