Published:Updated:

ஷேர்லக்: எல்.ஐ.சி புதிய பங்கு வெளியீடு... வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படுமா?

ஷேர்லக்

பிரீமியம் ஸ்டோரி

காலையில் 7 மணிக்கே நமக்கு ஷேர்லக் தகவல் அனுப்பியிருந்தார். “இன்றைய கேள்விகளை வாட்ஸ்அப்பில் அனுப்பவும்’’ என்று. நாம் கேள்விகளை அனுப்ப, மாலை 5 மணிக்கு பதில்கள் வந்தன.

எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்த மத்திய அரசு யோசித்து வருவது பற்றி..?

‘‘எல்.ஐ.சி-யில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் 20% அளவுக்கு அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அனுமதிப்பது குறித்து அரசுத் தரப்பில் பலமாக யோசித்து வருகின்றன.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் அளவு தற்போது 74 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால், எல்.ஐ.சி-க்கு இந்த விதிமுறை பொருந்தாது எனச் சொல்லப் பட்டிருக்கும் நிலையில்தான் 20% அனுமதி வழங்கலாமா என மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியானது எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் 10% எஃப்.டி.ஐ-க்கு அனுமதி தந்திருக்கிறது.

தற்போதைய நிலையில், எல்.ஐ.சி-யின் மதிப்பு ரூ.8 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக இருக்கலாம். இதில் பங்கு விற்பனைக்கு 5 - 10% அனுமதி வழங்கினாலே ரூ.40,000 - ரூ.8,00,000 கோடி கிடைக்கும். முதலீட்டைத் திரும்பப் பெறுவதில் சுணக்கம் இருக்கும் இந்த நிலையில், மத்திய அரசுக்கு நிறையவே நிதி தேவைப்படுகிறது. எல்.ஐ.சி ஐ.பி.ஓ மூலம் கணிசமான நிதியைப் பெற்று விடலாமா என மத்திய அரசு யோசித்து வருகிறது.’’

ஷேர்லக்: எல்.ஐ.சி புதிய பங்கு வெளியீடு... வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படுமா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை அதிகரித்திருக்கிறதே..?

“கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 23% வரை அதிகரித்திருக்கிறது. கடந்த வாரம் புதன் அன்று, இந்த நிறுவனப் பங்கு விலை ரூ.2,623 வரை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. இதன் காரணமாக, அன்றைய தினத்தில் இதன் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் புதிய உச்சத்தைத் தொட்டது. அதாவது, ரூ.83,160 கோடி உயர்ந்து ரூ.17.46 லட்சம் கோடியாக அதிகரித்தது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வருவதே விலை உயர்வுக்கு காரணம்.”

ஏ.யு ஸ்மால் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்கு விலை ஏன் அதிகரித்தது?

“கடந்த அக்டோபர் 6-ம் தேதி, இந்த வங்கிப் பங்கு விலை வர்த்தகம் ஆரம்பிக்கும்போதே 5.35% வரை அதிகரித்து, ரூ.1,217-க்கு வர்த்தக மானது. அதே தினத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,271.75 என்கிற உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாகியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் டெபாசிட் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 45% வரை அதிகரித்து ரூ.39,034 கோடியாக உயர்ந்திருப் பதுதான் பங்கு விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம். அதேபோல, இந்த வங்கி வழங்கி உள்ள கடன் 24% அதிகரித்து ரூ.38,011 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.30,590 கோடியாக இருந்தது. உலகத் தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி இந்த நிறுவனத்தின் பங்கு இலக்கு விலையை ரூ.1,500-ஆக நிர்ணயித்துள்ளது.”

தற்போதைய நிலையில், ஸ்மால்கேப் பங்குகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாமா?

“கடந்த அக்டோபர் 5-ம் தேதி வர்த்தகத்தில் சென்செக்ஸ் 445.56 புள்ளிகள் அதிகரித்து 59744.88 புள்ளிகளில் வர்த்தக மானது. அதே போல, நிஃப்டியும் 131 புள்ளிகள் வரை அதிகரித்து, 17822.30-க்கு வர்த்தகமானது. இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் நிலையிலும், ஷேர்கான் பங்குத் தரகு நிறுவனம் ஐந்து ஸ்மால்கேப் பங்குகளின் விலை 30% வரை உயரும் எனத் தெரிவித்துள்ளது.

அதில் பி.என்.சி இன்ஃப்ரா டெக் நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலையில் இருந்து சுமார் 15% அதிகரிக்கும் எனத் தெரிவித் துள்ளது. இதன் இலக்கு விலையை ரூ.420-ஆக நிர்ணயித் துள்ளது. லாரஸ் லேப்ஸ் நிறுவனப் பங்கு தற்போதைய விலையிலிருந்து சுமார் 30% அதிகரிக்கும் என்றும், இதன் இலக்கு விலையை ரூ.800-ஆகவும் நிர்ணயித்துள்ளது. பெர்சிஸ் டன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலையி லிருந்து 12% அதிகரிக்கும் என்றும், இதன் இலக்கு விலையை ரூ.4,160-ஆகவும் நிர்ணயித்துள்ளது.

ஐநாக்ஸ் லெய்சர் நிறுவனப் பங்கு தற்போதைய பங்கு விலையில் இருந்து 15% வரை அதிகரிக்கும் என்றும், இதன் இலக்கு விலையை ரூ.470-ஆகவும் நிர்ணயித்துள்ளது. அப்போலோ டயர்ஸ் நிறுவனப் பங்கு தற்போதைய விலையிலிருந்து 30% வரை அதிகரிக்கும் என்றும், இதன் இலக்கு விலையை ரூ.290-ஆகவும் ஷேர்கான் தரகு நிறுவனம் நிர்ணயித்துள்ளது.”

ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனப் பங்கு பிரிப்பு எப்போது?

‘‘இந்த நிறுவனம் 1:5 என்கிற விகிதத்தில் பங்கு ஸ்பிலிட் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஒரு பங்கு வைத்திருக்கும் முதலீட் டாளர்களுக்கு 5 பங்கு என்கிற அடிப்படையில் அதன் எண்ணிக்கை அதிகரிக்கும். ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்குகளை ரூ.2 முகமதிப்பு கொண்ட பங்கு களாகப் பிரிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் கடந்த வாரம் புதன்கிழமை அன்று, இதன் பங்கு விலை 8% வரை அதிகரித்து, ரூ.4,512 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தப் பங்கின் விலை 20 சதவிகிதமும், கடந்த ஒரு மாதத்தில் 50% வரையும் விலை அதிகரித்திருக்கிறது. கடந்த ஆறு மாதத்தில் சென்செக்ஸ் 13% வரை அதிகரித் திருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 106% வரை அதிகரித்திருக்கிறது. பலரும் இந்தப் பங்கை வாங்காமல் விட்டுவிட்டோமே என்கிற கவலையில் இருக்கிறார்கள்.’’

மாருதி சுஸூகி நிறுவனப் பங்கைப் பரிந்துரை ஜெஃப்ரீஸ் பரிந்துரை செய்திருக்கிறதே..!

“உலகப் பங்குத் தரகு நிறுவனமான ஜெஃப்ரீஸ், மாருதி சுஸூகி நிறுவனத்தின் பங்கை வாங்கச் சொல்லிப் பரிந்துரை செய்திருக்கிறது. மேலும், இதன் இலக்கு விலையை ரூ.8,600-ஆக நிர்ணயித்துள்ளது. தற்போதைய விலையிருந்து 18% வரை இதன் பங்கு விலை உயரும் எனவும் குறிப்பிட்டு உள்ளது. இதன் காரணமாகக் கடந்த வியாழன் அன்று 4.07% உயர்ந்து, வர்த்தக முடிவில், ரூ.7,492 என்கிற அளவைத் தொட்டது.’’

மின்துறை நிறுவனப் பங்குகளுக்கு மவுசு கூடியிருக்கிறதே?

“கடந்த சில வாரங்களாக நிலக்கரிக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக மின் துறை சார்ந்த பங்குகளின் விலை அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 1% அதிகரித்திருக்கும் நிலையில், பவர் இண்டெக்ஸ் 6% வரை அதிகரித்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் டாடா பவர், என்.டி.பி.சி, இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை 10% முதல் 20% வரை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று, பவர் இண்டெக்ஸ் 3,345.64 என்ற நிலைக்கு உயர்ந்தது. இது அக்டோபர் 2010-க்கு பிறகான உட்சபட்ச நிலையாகும்.

பார்தி ஏர்டெல்லின் உரிமைப் பங்கு வெளியீடு குறித்து...

“இந்த நிறுவனம் அக்டோபர் 21-ம் தேதி வரை உரிமைப் பங்குகளை வெளியிடுகிறது. இதில் மொத்தம் 39.22 கோடி உரிமைப் பங்குகளை வெளியிட்டு, ரூ.21,000 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இப்படி வெளியிடப்படும் ஒரு பங்கின் விலை ரூ.535. இந்த நிறுவனத்தின் 14 பங்குகள் வைத்திருப்பவருக்கு ஒரு உரிமைப் பங்கு என்கிற அடிப் படையில் வழங்க இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.’’

ஹெச்.சி.எல் பங்கு விலை அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமாகி இருக்கிறதே?

“கடந்த அக்டோபர் 5-ம் தேதி இந்த நிறுவனப் பங்கின் விலை 5% வரை அதிகரித்து, அப்பர் சர்க்யூட் நிலையில் ரூ.79-க்கு வர்த்தகமானது. தொலைத் தொடர்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான, ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிடமிருந்து ரூ.287.96 கோடி மதிப்புள்ள பாது காப்புப் படைகளுக்கான தகவல் தொடர்பு நெட் வொர்க்கை அமைக்கும் ஆர்டரை இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது’’ என்றவர், நாணயம் விகடன் வாசகர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துகள் சொல்லி முடித்திருந்தார்.

எம்.சதீஷ்குமார்
எம்.சதீஷ்குமார்

பங்கு சார்ந்த முதலீடு... செல்வம் சேர்க்கும் உத்திகள்..!

நாணயம் விகடன் நடத்தும் ‘பங்கு சார்ந்த முதலீடு... செல்வம் சேர்க்கும் உத்திகள்..!’ என்ற நிகழ்ச்சி அக்டோபர் 16, காலை 10.30 - 12 மணி வரை நடைபெறும். இன்றைய தேதியில் பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக, வரிக்குப் பிந்தைய வருமானத்தை அதிகம் தருவதில் இதர முதலீடுகளைவிட பங்கு சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்ட்) முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இவற்றின் மூலம் எப்படி செல்வம் சேர்ப்பது என்பது குறித்து எம்.சதீஷ்குமார் (நிறுவனர், Sathishspeaks.com) விளக்கிப் பேசுகிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.300. முன் பதிவுக்கு: https://bit.ly/3krqvij

டாக்டர் அனந்த நாகேஸ்வரன்
டாக்டர் அனந்த நாகேஸ்வரன்

சீனப் பொருளாதாரம் சரிகிறதா?

நாணயம் விகடன் கிளப் ஹவுஸில் பங்குச் சந்தை நிபுணர் சோம.வள்ளியப்பன் கடந்த வாரம் பேசினார். 11.10.2021 திங்கள் மாலை இந்திய நேரம் 7 மணிக்கு நாணயம் கிளப் ஹவுஸ் நிகழ்ச்சியில், “சீனப் பொருளாதாரம் சரிகிறதா?’’ என்ற தலைப்பின்கீழ் பேசுகிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணரான டாக்டர் அனந்த நாகேஸ்வரன். இந்த நிகழ்ச்சியில் பங்குச் சந்தை ஆர்வலர்கள், எம்.பி.ஏ/ எம்.காம் படிக்கும் மாணவர்கள், பொருளாதார ஆர்வலர்கள் என அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள: https://bit.ly/2Yp3FiW

ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஐ.வி.சுப்ரமணியம்
ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஐ.வி.சுப்ரமணியம்

சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி?

நாணயம் விகடன் மற்றும் குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, அக்டோபர் 24 (ஞாயிற்றுக் கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறும்.

இதில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனர் ஶ்ரீகாந்த் மீனாட்சி, குவான்டம் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஐ.வி.சுப்ரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் லாபத்தை ஈட்டும் முக்கிய விஷயமாக ஃபண்ட் தேர்வு இருக்கிறது. அதன் முக்கிய அம்சங்களை விளக்கிச் சொல்லும் நிகழ்ச்சி இது.

அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-Quantum

ஷேர்லக்: எல்.ஐ.சி புதிய பங்கு வெளியீடு... வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படுமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு