Published:Updated:

ஷேர்லக்: புதிய உச்சத்தில் முக்கியக் குறியீடுகள்... இந்தியப் பங்குச் சந்தையின் ஏற்றம் தொடருமா?

ஷேர்லக்

பிரீமியம் ஸ்டோரி

புதன்கிழமை மாலை 4 மணிக்கு அலுவலகத்தில் ஆயுத பூஜை என்பதால், முதல்நாள் பேசியபடி, ஷேர்லக் மாலை 3 மணிக்கே வந்துவிட்டார். “அதே 4 மணிக்கு எக்மோரில் நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் பூஜை. எனவே, சீக்கிரம் பேசி முடிப்போம்’’ என்றவரிடம், நாம் தயாராகக் குறித்து வைத்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

இந்தியப் பங்குச் சந்தையில் முக்கியக் குறியீடுகள் புதிய உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இந்த ஏற்றம் தொடருமா?

“பி.எஸ்.இ பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 60500 புள்ளிகளையும் என்.எஸ்.இ பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 18000 புள்ளி களையும் தாண்டி வர்த்தகமாகி வருகின்றன. இதனால், இந்தியப் பங்குச் சந்தையின் மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. நடப்பு 2021-ம் ஆண்டில் இதுவரைக்கும் இந்தியப் பங்குச் சந்தை சுமார் 40% ஏற்றம் கண்டிருக்கிறது. இதை அடுத்து இங்கிலாந்தின் பங்குச் சந்தை மதிப்பைவிட இந்தியப் பங்குச் சந்தையின் மதிப்பு அதிகரித்திருப்ப தால், உலகின் ஐந்தாவது பெரிய பங்குச் சந்தை யாக இந்தியப் பங்குச் சந்தை மாறியிருக்கிறது.

இந்திய மக்கள் தொகையில் அதிகமானோர், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது, மத்திய ரிசர்வ் வங்கியின் கொள்கைகள், நடப்பு ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவிகிதமாக இருக்கும் என்கிற கணிப்பு போன்ற பல காரணிகளால் இந்தியப் பங்குச் சந்தைகளின் தற்போதைய ஏற்றம் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த பங்குச் சந்தையின் செயல்பாட்டைக் குறிக்கும் லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றத்தை வைத்து மட்டும் ஒரு முதலீட்டாளரின் லாபம் இருக்காது. முதலீடு செய்திருப்பவர்கள் தாங்கள் முதலீடு செய் திருக்கும் நிறுவனங்களின் வருவாய் மற்றும் நிகர லாப வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதைக் கவனித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்கிறார்கள், பகுப்பாய்வாளர்கள்.”

ஷேர்லக்: புதிய உச்சத்தில் முக்கியக் குறியீடுகள்... இந்தியப் பங்குச் சந்தையின் ஏற்றம் தொடருமா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்.ஐ.எல்) நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் (ஆர்.என்.இ.எஸ்.எல்) ஆர்.இ.சி சோலார் ஹோல்டிங்ஸ் ஏ.எஸ் நிறுவனத்தின் 100% பங்குகளை வாங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, அக்டோபர் 11-ம் தேதி வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 2% வரை அதிகரித்து, 52 வார அதிகபட்ச விலையைத் தொட்டு, ரூ.2,724.70-க்கு வர்த்தகமானது. இந்த நிலையில், ஜெஃப்ரீஸ் தரகு நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் இலக்கு விலையை ரூ.2,580-லிருந்து ரூ.3,050-ஆக அதிகரித்துள்ளது.’’

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு அதிகரித்திருக்கிறதே..?

“கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று, டி-மார்டை நிர்வகிக்கும் அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.4,837 வரை அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. இந்தப் பங்கு விலையானது தொடர்ந்து மூன்று வர்த்தக தினங்களில் 12% வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் ரூ.3,05,710.79 கோடியைத் தொட்டிருக்கிறது. மார்க்கெட் கேப்பிடலை சேஷனில் ரூ.3 லட்சம் கோடியைக் கடந்த நிறுவனங்களின் பட்டியலில் 15-வது இடத்தில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் இருக்கிறது. கடந்த அக்டோபர் 13-ம் தேதி வர்த்தக முடிவின்போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை 7.98% வரை அதிகரித்து, ரூ.5,117-க்கு வர்த்தகமானது. இந்தப் பங்கு கடந்த ஒரு வார காலத்தில் 21% லாபம் தந்திருக்கிறது.”

ஐ.பி.ஓ வெளியிட பல நிறுவனங்களுக்கு செபி அனுமதி தந்துள்ளதே..!

“மொபிவிக் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுவதன் மூலம் ரூ.1,900 கோடி நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட முடிவு செய்திருந்தது. இதற்காக அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், செபி ஐ.பி.ஓ வெளியிட அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த ஐ.பி.ஓ மூலம் புதிய பங்குகளை வெளியிட்டு, ரூ.1,500 கோடியை இந்த நிறுவனம் திரட்டுகிறது. ஓ.எஃப்.எஸ் முறையில் புரொமோட்டர்களின் பங்குகளை விற்று, ரூ.400 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதே போல, எஸ்.ஐ.எஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடவும் செபி அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடவில்லை. ஓ.எஃப்.எஸ் முறையில் எவர்கிராப் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.688 கோடியும், இந்த நிறுவனத்தின் புரொமோட்டர்களின் ஒருவரான கே.ஏ.ஜோசப்பின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.112 கோடியும் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டுகிறது.

ஸ்கேன்ரே டெக்னாலஜிஸ் நிறுவனமும் ஐ.பி.ஓ வெளியிட செபி அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.400 கோடியும், புரொமோட்டர்களின் பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்வதன் மூலமும் நிதி திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.”

அடுத்த ஆறு மாதங்களில் இந்திய டிஜிட்டல் நிறுவனங்கள் ஐ.பி.ஓ மூலம் பெரும் தொகையைத் திரட்டப்போகிறதாமே?

“இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள டிஜிட்டல் நிறுவனங்களின் செயல்பாடு கடந்த ஓரிரு வருடங்களாக நல்ல முறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அந்த நிறுவனங்களின் பங்கு வளர்ச்சி சிறப்பாக இருக் கிறது. அதனால் முதலீட்டாளர்கள் இந்த வகை பங்கு களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள். இனிவரும் ஆறு மாதங்களில் இந்தியா விலுள்ள டிஜிட்டல் நிறுவனங் கள் சுமார் ரூ.75,000 கோடியை ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் திரட்டுவார்கள் என எதிர்பார்க் கப்படுவதாக கே.பி.எம்.ஜி இந்தியா தெரிவித்துள்ளது.”

ஷேஃப்லர் இந்தியா நிறுவனத்தின் பங்கு பிரிப்பு எப்போது?

“ஷேஃப்லர் இந்தியா நிறுவனத் தின் இயக்குநர் குழு கூட்டம் வருகிற அக்டோபர் 28-ம் தேதி நடக்க இருப்பதாகத் தெரிகிறது. அந்தக் கூட்டத்தில், பங்கு பிரிப்பு குறித்த ஆலோசனையைப் பரிசீலிப்பதாக நிறுவனத் தரப் பிலிருந்து தகவல் வெளியாகி யிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதும், அக்டோபர் 12-ம் தேதி வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 16% வரை அதிகரித்து, 52 வார உச்ச விலையைத் தொட்டு, ரூ.8,377.20-க்கு வர்த்தக மானது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 112% அதிகரித்திருக்கிறது.”

டி.பி.ஜி ரைஸ் கிளைமேட் நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து...

“டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (டி.எம்.எல்) மற்றும் டிபிஜி ரைஸ் கிளைமேட் ஆகிய நிறுவனங்கள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று பிணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் டிபிஜி ரைஸ் கிளைமேட் மற்றும் அதன் இணை முதலீட்டாளர் அபுதாபி டெவலப்மென்ட் ஹோல்டிங் இணைந்து, புதிதாக இணைக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் ரூ.7,500 கோடியை முதலீடு செய்யும். இந்த முதலீட்டின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து முதலீடுகளையும் திறன்களையும் மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் மிகச் சிறந்த வாய்ப்புகளை மின்சார வாகனங்கள், பிரத்யேக பி.இ.வி தளங்கள், மேம்பட்ட வாகனத் தொழில்நுட்பங்கள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க முடியும்.

இந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்று புதன்கிழமை மட்டும் 20.45% உயர்ந்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் 50 சதவிகிதமும், கடந்த ஒரு மாதத்தில் 68 சதவிகிதமும், இந்த ஆண்டில் 175 சதவிகிதமும், கடந்த ஓராண்டு காலத்தில் 278 சதவிகிதமும் இந்தப் பங்கு விலை உயர்ந்து, இதன் முதலீட்டாளர்களை அசத்தோ அசத்து என்று அசத்தி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.”

கே.எம்.இ.டபிள்யூ நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்திருக்கிறதே?

“எஸ்.எம்.இ துறையைச் சேர்ந்த கே.எம்.இ.டபிள்யூ நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின்போது 20% வரை அதிகரித்து, ரூ.70.55 என்கிற அப்பர் சர்க்யூட் டெலவலில் வர்த்தகமானது.

அன்றைய தினத்தில் பங்கு வால்யூமும் அதிகரித்துக் காணப்பட்டது. அக்டோபர் 7-ம் தேதி ரூ.41.90-க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த இந்தப் பங்கின் விலை, கடந்த மூன்று வர்த்தகத் தினங்களில் மட்டும் 68% வரை அதிகரித்திருக்கிறது.”

இந்தியப் பங்குச் சந்தை புதன்கிழமை நன்றாக ஏற்றம் கண்டிருக்கிறதே, என்ன காரணம்?

“நாட்டில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ‘கதி சக்தி’ (GatiShakti) என்கிற தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு மாஸ்டர் திட்டத்தைப் புதன் கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்ததே இதற்குக் காரணமாகும்.

தவிர, தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கி இருக் கிறது. பொருளாதார வளர்ச்சி குறித்த செய்திகளும் பாசிட்டிவ் வாக உள்ளன. எனவே, லார்ஜ் கேப், மிட்கேப், ஸ்மால் என அனைத்து வகைப் பங்குகளும் ஏகத்துக்கு உயர்ந்துள்ளன’’ என்றவர், நண்பரின் அலுவல கத்தில் நடக்கும் பூஜைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இரவு 7 மணிக்கு வாட்ஸ்அப்பில் ஷேர்லக் அனுப்பிய கடைசி செய்தி...

‘‘இன்றைக்கு இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவு கள் வெளியாகியுள்ளன. இன்ஃபோசிஸின் நிகர லாபம் 11.9% உயர்ந்துள்ளது. மிகச் சிறப் பான லாபத்தைத் தந்த நிலையில், ரூ.15 இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது. ஆனால், விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் 9.6% குறைந்துள்ளது. ஒரே துறையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் எத்தனை வித்தியாசமாகச் செயல்படுகிறது என்று பார்த்தீர்களா? எல்லா நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகளையும் கவனமாகப் பார்க்கத் தவறாதீர்கள்!”

சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி?

நாணயம் விகடன் மற்றும் குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, அக்டோபர் 24 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-Quantum

ஷேர்லக்: புதிய உச்சத்தில் முக்கியக் குறியீடுகள்... இந்தியப் பங்குச் சந்தையின் ஏற்றம் தொடருமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு