Published:Updated:

ஷேர்லக்: பார்மா சில்லறை விற்பனை நிறுவனங்கள் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யலாமா?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

முதல்நாளில் இருந்தே ஷேர்லக் நம் தொடர்பில் வரவில்லை... வாட்ஸ்அப்பிலும் பதில் கொடுக்கவில்லை என்பதால், நாம் கொஞ்சம் டென்ஷனாக இருந்தோம். கேள்விகளை அவருக்கு மெயில் அனுப்பிவிட்டு, வேறு பணிகளைக் கவனிக்க ஆரம்பித்தோம். நாம் ஆச்சர்யப்படும் விதமாக மதியம் 3.30 மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்தார். “சாரி, திடீர்னு நேற்று மாலை ஒரு ஹெச்.என்.ஐ-யுடன் மீட்டிங். சற்றும் எதிர்பாராத விதமாக இன்று காலையும் தொடர்ந்தது, அந்த மீட்டிங். மீட்டிங்கில் செல்போன் பேச முடியாது என்பதால், உங்களுக்கு பதில் தர முடியவில்லை” என நீண்ட விளக்கம் கொடுத்தார். “நீங்கள் இப்போது வந்ததே எங்களுக்கு சந்தோஷம்தான்” என்று சொல்லிவிட்டு, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

கடந்த செவ்வாய், புதன், வியாழன் என மூன்று நாள்களாக பங்குச் சந்தை சரிவின் போக்கிலேயே இருக்கிறதே... என்ன காரணம்?

“கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 49 புள்ளிகள் மட்டுமே சரிந்த சென்செக்ஸ், புதன்கிழமை அன்று 456 புள்ளிகளை இழந்தது. வியாழக்கிழமை அன்றும் 336 புள்ளிகளை இழந்து 60923 புள்ளிகளை அடைந்தது. சர்வதே அளவில் பங்குச் சந்தைகள் சரிவின் போக்கில் இருப்பது, நம் சந்தையில் சரிய ஒரு காரணம் என்றாலும், பணவீக்கத்தால் நிறுவனங்களின் லாபம் குறைந்து வருவதே முக்கியமான காரணம் என்கிறார்கள். நிஃப்டி50 குறியீட்டில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் இரண்டாம் காலாண்டு முடிவை அறிவித்துள்ளன. இதில் நான்கு நிறுவனங்கள் எதிர்பார்த்த மாதிரி, லாபம் தந்துள்ளன. இரண்டு நிறுவனங்கள் சுமாரான லாபத்தையும், இன்னும் இரண்டு நிறுவனங்கள் மோசமான அளவிலும் செயல்பட்டுள்ளன.

மேலும், நமது பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் மதிப்பு மிக மிக அதிகமாக இருப்பதாக சர்வதேச தரகு நிறுவனங்கள் சொல்ல ஆரம்பித்துள்ளன. இதனால் இந்தப் பங்குகளை வாங்கும் நிலையில் ‘கவர்ச்சிகர’மாக இல்லை என்கின்றன.

மேலும், நிலக்கரி பற்றாக்குறை, மின்வெட்டு, பெட்ரோல், ஸ்டீசல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளால் தொழிற்துறை உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருள் விநியோகத் தில் பாதிப்பு ஏற்படலாம் என முதலீட்டாளர்கள் நினைப்பதும் சந்தை சரிவுக்கு ஒரு காரண மாகப் பார்க்கப்படுகிறது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்திய பங்குச் சந்தையிலிருந்து பங்கு களை விற்று வெளியேறியிருக்கிறார்கள்.

ஆனால், இந்த இறக்கத்தைப் பெரிய இறக்கம் என்று சொல்ல முடியாது. ஆரோக்கியமாகவே பார்க்க வேண்டும் என்கிறார்கள். கடந்த ஒரு வார காலத்தில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் ஒன்றிரண்டு சதவிகிதம் இறங்கி இருந்தாலும், மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள்தான் சுமார் 4% வரை இறக்கம் கண்டிருக்கிறது. நம்மவர்கள், இந்த வகை பங்கு களில்தான் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதால், கொஞ்சம் மிரண்டுபோய் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரே விதமான பங்குகளில் நம் மொத்த முதலீட்டையும் வைத்திருக் காமல், பரவலாக வைத்திருந்தால், இது மாதிரியான பிரச்னைகளில் நாம் சிக்காமல் தவிர்க்கலாம் என்பதே இதிலிருந்து நாம் கற்கும் பாடம்.’’

ஷேர்லக்: பார்மா சில்லறை விற்பனை நிறுவனங்கள் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யலாமா?

மிட் மற்றும் ஸ்மால்கேப் பிரிவில் என்னென்ன பங்குகளின் விலை குறைந்திருக்கிறது?

‘‘டாடா பவர் நிறுவனத்தின் பங்கு விலை உச்ச விலையான ரூ.267-லிருந்து ரூ.228-க்கு சரிந்துள்ளது. தீபக் நைட் ரைட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உச்ச விலையான ரூ.3,020-லிருந்து ரூ.2,475-க்கு சரிந்துள்ளது. சோனா பி.எல்.டபிள்யூ ப்ரெசியன்ஸ் ஃபார்கிங்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உச்ச விலையான ரூ.813- லிருந்து ரூ.611-க்கு சரிந்து உள்ளது. எம்.எஸ்.டி.சி நிறுவனத்தின் பங்கு விலை இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் உச்ச விலையான ரூ.956-லிருந்து ரூ.754-க்கு சரிந்துள்ளது. நவின் ஃப்ளோரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உட்சபட்ச விலையான ரூ.4,212-லிருந்து ரூ.3,358-க்கு சரிந்துள்ளது.

இவை தவிர, ஏஞ்சல் புரோக்கிங், பி.என்.பி ஹவுஸிங், அவென்யூ சூப்பர் மார்க்கெட், டி.சி.எம் ராம், என்.எல்.சி என பல பங்கு களின் விலை 10 சதவிகிதத்துக்குமேல் குறைந்துள்ளன. விலை குறைந்த இந்தப் பங்கு நிறுவனங்களின் ஃபண்டமென்டல்கள் நன்றாக இருந்தால் மட்டுமே வாங்கலாம் என்பது அனலிஸ்ட்டுகளின் பரிந்துரை.”

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, டாடா குழும பங்குகள் மூலம் ஒரே வாரத்தில் கொழுத்த லாபம் பார்த்திருக்கிறாரே!

“டாடா குழுமம், ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18,000 கோடி கொடுத்து வாங்கியதைப் பங்கு முதலீட்டாளர் உலகம் மிகவும் பாசிட்டிவ்வாகப் பார்க்கிறது. இதனால், பலரும் டாடா குழும பங்குகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முன்னணி முதலீட்டாளரான ராகேஷ், டாடா குழுமத்தின் டாடா மோட்டார்ஸ் மற்றும் டைட்டன் பங்குகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே முதலீடு செய்திருந்தார். இந்தப் பங்குளின் விலை உயரவே, டாடா குழும பங்குகள் மூலம் ஒரே வாரத்தில் அவர் ரூ.1,331 கோடி லாபம் பார்த்திருக்கிறார். மனிதர் கில்லாடியான முதலீட்டாளர்தான்!”

ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் பங்கு விலை சரிந்திருக்கிறதே?

“இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் மிக முக்கிய நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள் கடந்த வாரம் புதன்கிழமை அன்று இன்ட்ரா-டே வர்த்தகத்தில் 18% சரிந்து ரூ.4,371-க்கு வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் புராஃபிட் புக் செய்ததால், இரண்டு நாள்களில் பங்கு விலை 32% சரிந்தது. கடந்த ஆறு மாதத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,612-லிருந்து 600% அதிகரித்தது. ஆனால், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை களில் மிட் மற்றும் ஸ்மால்கேப் குறியீடு கணிசமாகக் குறைந்ததால், இந்தப் பங்கின் விலை ரூ.6,393 என்கிற நிலையில் இருந்து 32% வரை சரிவைச் சந்தித்தது. இதன் காரணமாக, இந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்களுக்கு ரூ.32,352 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதாவது, ரூ.1.02 லட்சம் கோடியாக இருந்த இதன் சந்தை மதிப்பு ரூ.69,936 கோடியாக சரிந்தது. ஆனால், வியாழன் அன்று மீண்டும் 3.13% உயர்ந்ததால், சந்தை மதிப்பு ரூ.73,000 கோடியைக் கடந்தது. மீண்டும் இந்தப் பங்கு கிடுகிடுவென விலை உயருமா என்பதே முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள விரும்பும் கேள்வி. காலம்தான் இதற்கு பதில் சொல்லும்.”

சமீபத்தில் பட்டியலிடப்பட்ட பி.டி.எஸ்.டி.எல் நிறுவனத்தின் பங்கு விலை வேகமாக உயர்ந்தது ஏன்?

“பாதுகாப்பு உபகரணங்கள் பராமரிப்பு மற்றும் இந்தியக் கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை கப்பல் களின் மறுசீரமைப்பு துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் க்ராஸ்னி டிஃபென்ஸ் டெக்னாலஜியுடன் இணைந்து அசோசியேட் நிறுவனத்தை அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது. குறிப்பாக, புதன்கிழமை அன்று நடந்த வர்த்தகத்தில் 10% விலை உயர்ந்து, அப்பர் சர்க்யூட்டை அடைந்து ரூ.1,003 என்கிற விலையில் வர்த்தகமானது. வியாழக்கிழமை காலை வர்த்த கத்தின்போது, விலை இன்னும் கொஞ்சம் அதிகரித்து, ரூ.1,080 என்கிற விலையில் வர்த்தக மானது. கடந்த 12 வர்த்தக நாள்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 100 சதவிகிதத்துக்குமேல் விலை அதிகரித்திருக்கிறது.”

புதிதாக ஐ.பி.ஓ வரப்போகும் பார்மா சில்லறை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

“இந்தியாவில் பட்டியலிடப் பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சுமார் 90 உள்ளன. இந்த நிறுவனங்கள், இதர பட்டியலிடப்படாத நிறுவனங் கள், வெளிநாட்டு நிறுவனங்களின் மருந்துகளை லட்சக்கணக்கான கடைகள் மூலம் விற்பனை செய்து வருகின்றன. மருந்து சில்லறை விற்பனையில் ஈடுபடும் ரீடெய்ல் செயின் நிறுவனங்களில் மெட்ப்ளஸ் ஹெல்த் சர்வீசஸ், வெல்னஸ் ஃபார்எவர் மெடிகேர் ஆகிய இரு நிறுவனங்கள் புதிதாகப் பங்கு வெளியிட்டு, பொது மக்களிடமிருந்து நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளன. இதற்கு அனுமதி கேட்டு செபியிடம் இந்த இரு நிறுவனங்களும் விண்ணப் பித்திருக்கின்றன. மெட்ப்ளஸ் ஐ.பி.ஓ வெளியீட் டின்மூலம் ரூ.1,640 கோடி அளவுக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டப்போகிறது.

அடுத்த ஐந்தாண்டுக் காலத்தில் இந்திய பார்மா சில்லறை துறை ஆண்டுக்கு சராசரியாக 10% வளர்ச்சி காணும் என எதிர் பார்க்கப்படுகிறது. மருந்து சில்லறை விற்பனை என்பது ரிஸ்க் குறைவான வணிகம் மற்றும் குறைந்த மூலதனத்தில் அதிக லாபம் ஈட்டும் வணிகமாக இருக்கிறது. இந்த வளர்ச்சியில் பங்கேற்கும் விதமாக இந்த நிறுவனப் பங்குகளின் புதிய பங்கு வெளியீட்டில் பங்கேற்கலாம் என அனலிஸ்ட்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.”

ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு விலை குறைந்திருக்கிறதே...

“ஹெச்.யு.எல் நிறுவனத்தின் லாபம் செப்டம்பர் காலாண்டில் 8.9% அதிகரித்து ரூ.2,187 கோடியாக உள்ளது. செயல்பாட்டு வருமானம் 11.2% அதிகரித்து, ரூ.12,724 கோடியாக உள்ளது. உள்நாட்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 11% அதிகரித்திருக் கிறது. சந்தை எதிர்பார்ப்பை இந்த நிறுவனம் பூர்த்தி செய்யாததால், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று பங்கு விலை 5% வரை குறைந்து வர்த்தகமானது. வியாழக்கிழமை வர்த்தகத்தின் போதும் விலை குறைந்து, ரூ.2,465 என்கிற விலையில் வர்த்தகமானது.”

பென்னா சிமென்ட் நிறுவனத்தின் ஐ.பி.ஓ அமர்களமாக இருக்குமா..?

“ஹைதராபாத்தைச் சேர்ந்த பென்னா சிமென்ட் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1,550 கோடி நிதி திரட்ட திட்டமிட்டிருக்கிறது. புதிய பங்கு வெளியீட்டுக்கு செபி அனுமதி அளித்திருக்கிறது. இந்த ஐ.பி.ஓ மூலம் ரூ.1,300 கோடிக்கு புதிய பங்குகளை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. இந்த ஐ.பி.ஓ மூலம் திரட்டும் நிதியை நிறுவனத்தின் கடனை அடைப்பதற்கும், மூலதனப் பயன்பாட்டுக்கும் இந்த நிறுவனம் பயன்படுத்தப் போகிறதாம்.’’

பி.பி ஃபைன்டெக் என்கிற நிறுவனத்துக்கும் ஐ.பி.ஓ வெளியிட செபி அனுமதி அளித்திருக்கிறதே..!

“பாலிசி பஜார் மற்றும் பைசா பஜார் ஆகிய ஆன்லைன் போர்டரில் தாய் நிறுவனமான பி.பி ஃபைன்டெக் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிட செபி அனுமதி வழங்கி யிருக்கிறது. இந்த ஐ.பி.ஓ மூலம் சுமார் ரூ.6,017 கோடியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதில் ஐ.பி.ஓ மூலம் ரூ.3,750 கோடியும், ஓ.எஃப்.எஸ் மூலம் மூலம் ரூ.2,267.50 கோடியும் திரட்டுகிறது’’ என்று செய்திகளை சொல்லிக்கொண்டே போனவர் கிளம்பத் தயாரானார். கிளம்பும் முன், ‘‘ஓஹோ, இந்த வாரம் பிட்காயின் வர்த்தகம் பற்றித்தான் கவர் ஸ்டோரி போட்டிருக்கிறீரா..? இந்த நேரத்துக்குத் தேவையான நல்ல சப்ஜெக்ட். பலரும் இதில் பணத்தைப் போடத் தொடங்கியிருக்கிறார்கள். உம் கவர் ஸ்டோரியை நானும் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்’’ என்று சொல்லி விட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

வ.நாகப்பன், எஸ்.குருராஜ்
வ.நாகப்பன், எஸ்.குருராஜ்

முதலீடு... வளமான எதிர்காலத்துக்கான வழி..!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘முதலீடு... வளமான எதிர்காலத்துக்கான வழி..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சி 2021 அக்டோபர் 31 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவித் துணை தலைவர் எஸ்.குருராஜ், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் க.சுவாமிநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம் பதிவு செய்ய: அனுமதி இலவசம் பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... ரிஸ்க்குக்கு ஏற்ற வருமானம்..!

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... ரிஸ்க்குக்கு ஏற்ற வருமானம்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சி நவம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண் (Aknarayanassociates.com), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் சிறப்புரை யாற்றுகிறார்கள். அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

சிவராமகிருஷ்ணன்
சிவராமகிருஷ்ணன்

சென்செக்ஸ் 60000-லிருந்து 120000 வரையான பயணம்... முதலீட்டுக்கான வாய்ப்புகள்..!

நாணயம் விகடன், ‘சென்செக்ஸ் 60000-லிருந்து 120000 வரையான பயணம்... முதலீட்டுக்கான வாய்ப்புகள்..!’ என்கிற தலைப்பில் கட்டண வகுப்பை நடத்துகிறது. 2021, நவம்பர் 20, சனிக்கிழமை காலை 10.30 - 12.00 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் சிவராமகிருஷ்ணன் (நிறுவனர், www.sinceresyndication.com) இந்த நிகழ்வில் பேசுகிறார். கட்டணம் ரூ.300. பதிவு செய்ய https://bit.ly/NV-Sensex60k-120k

எல்.ஐ.சி எம்.எஃப் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்..!

எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், எல்.ஐ.சி எம்.எஃப் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் (LIC MF Balanced Advantage Fund) திட்டத்தை வெளியிடுகிறது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் நிதி ஆவணங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும். பல்வேறு சொத்துப் பிரிவுகளில் சந்தைகளின் செயல்பாட்டுக்கேற்ப பிரித்து முதலீடு செய்து ஃபண்டின் ரிஸ்க்கைக் குறைத்து மூலதன அதிகரிப்பை ஏற்படுத்துவதுதான் இந்த ஃபண்டின் நோக்கமாகும். ஹைபிரிட் திட்டத்தில் டைனமிக் அஸெட் அலொகேஷன் அல்லது பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் பிரிவின்கீழ் இந்த ஃபண்ட் வருகிறது. இதில் நவம்பர் 3-ம் தேதி வரைக்கும் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000 என உள்ளது. எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.1,000 முதல் முதலீட்டைத் தொடங்கலாம்!