Published:Updated:

ஷேர்லக்: ரிசர்வ் வங்கி சலுகைகள்... கவனிக்க வேண்டிய பங்குகள்..! வழிகாட்டும் முதலீட்டு ஆலோசனை...

ஷேர்லக் - S H A R E L U C K

பிரீமியம் ஸ்டோரி

அதிகாலையிலேயே ஷேர்லக் தகவல் அனுப்பியிருந்தார். “முக்கியமான நண்பர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதால், சிகிச்சைக்கான ஏற்பாடுகளுக்காக மருத்துவமனையில் இருக்கிறேன். வீடியோகாலில்கூட பேச இயலாது. கேள்விகளை மெயில் அனுப்புங்கள்” எனக் குறிப்பிட்டிருந் தார். நாம் முன்கூட்டியே கேள்விகளை அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். மாலை 4 மணிக்கு பதில்களை நம் மெயிலுக்கு அனுப்பி வைத்தார்.

ஷேர்லக்
ஷேர்லக்

ஆரக்கிள் ஃபைனான்ஷியல் நிறுவனம், பங்கு ஒன்றுக்கு ரூ.200 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்திருக்கிறதே?

“ஆரக்கிள் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் அண்மையில் நடை பெற்றது. அதில் கடந்த 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால டிவிடெண்ட் வழங்குவதற்கான ஒப்புதலை இயக்குநர்கள் குழு வழங்கியது. ரூ.5 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.200 டிவிடெண்ட் வழங்குவதாக நிறுவனம் சொல்லி யிருப்பது, முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மே 18 இடைக்கால டிவிடெண்டுக் கான ரெக்கார்டு தேதியாகும். ஜூன் 3-ம் தேதி அல்லது அதற்கு முன் இந்த இடைக்கால டிவிடெண்ட் முதலீட் டாளர்களுக்கு வழங்கப்படலாம். ஒரு பங்கின் விலை சுமார் 3,525-ஆக உள்ளது. மேலும், வர்த்தகம் நடக்கும் பங்குகளின் எண்ணிக்கை சில ஆயிரங்களாக இருப்பதால், சிறு முதலீட்டாளர்கள் டிவிடெண்டுக் காக அவசரப்பட்டு இந்தப் பங்கை வாங்க வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.”

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகையால் சில பங்குகளுக்கு திடீர் டிமாண்ட் ஏற்பட் டிருக்கிறதே?

“குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ-க்கள்), நிதிச் சேவை மற்றும் ஹெல்த்கேர் நிறுவனங்கள் பயன்படும் விதமாக சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இதையடுத்து இந்தியப் பங்குச் சந்தை புதன்கிழமை நல்ல ஏற்றத்தில் முடிந்தது. வியாழக்கிழமையும் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமானது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ், ‘சிறு, குறு தொழில் செய்பவர் களுக்கு கடன் கொடுப்பதற்காக ரூ.10,000 கோடியை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளுக்கு ரெப்போ ரேட் விகிதத்தில் ஆர்.பி.ஐ வழங்கும்’ என்றார்.

கொரோனாவின் 2-வது அலைக்கு எதிராகப் போராட மருத்துவமனைகள், ஆக்சிஜன் சப்ளையர்கள், தடுப்பூசி இறக்குமதியாளர்கள், கொரோனா மருந்து தயாரிப்பாளர்கள் போன்றோர் களின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சிறப்புக் கடன் வசதி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 2022 மார்ச் 31-ம் தேதி வரை ரெப்போ வட்டி விகிதத்தில் கடனைப் பெறலாம் என்ற அறிவிப்பையும் சக்திகந்த தாஸ் வெளியிட்டார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஈக்விட்டாஸ், உஜ்ஜீவன் மற்றும் ஏ.யு. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளின் பங்குகள் விலை ஏற்றமடைந்தன.

அதன் அடிப்படையில், உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் பங்கு விலை 6% வரை அதிகரித்து, 30.40 ரூபாய்க்கும், ஏ.யு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் பங்கு விலை 5% வரை அதிகரித்து 58.80 ரூபாய்க்கும், ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் பங்கு விலை 4% வரை அதிகரித்து 58.80 ரூபாய்க்கும் மற்றும் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 1% வரை அதிகரித்து, 248.80 ரூபாய்க்கும் வர்த்தகமானது.

ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் சலுகையால், வங்கிகள், வங்கி்சாரா நிதி நிறுவனங்கள், ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்குகள், வீட்டுவசதி நிறுவனங்கள், மருத்துவ உபகரண உற்பத்தியாளர்கள், ஹெல்த்கேர் மற்றும் மருத்துவமனைத் துறை நிறுவனங்கள் அதிக லாபமடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இவை சார்ந்த நிறுவனப் பங்குகள் விலை ஏற்றம் காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம், ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்குகளான உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு அதிகமாகக் கடன் அளிக்கும் சிட்டி யூனியன் பேங்க், டி.சி.பி பேங்க் ஆகியவற்றை முதலீட்டுக்குக் கவனிக் கலாம் என்று சொல்லியுள்ளது.

ஹெம் செக்யூரிட்டீஸ் நிறுவனம், ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்குகளான உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஏ.யு.ஸ்மால் ஃபைனான்ஸ், ஹெல்த்கேர் நிறுவனங்களான அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், பாலிசி மெடிக்யூர், நிரேகா, மெட்ரோபாலிஸ் ஹெல்த்கேர், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு கடன் அளிக்கும் சிட்டி யூனியன் பேங்க், டி.சி.பி பேங்க் ஆகியவற்றை முதலீட்டுக்குக் கவனிக்கலாம் எனச் சொல்லியிருக்கிறது.”

ஹிகல் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“குளோபல் பார்மா நிறுவனத்துடன் ஹிகல் நிறுவனம் 10 ஆண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறது. இதன் காரணமாகக் கடந்த புதன்கிழமை அன்று, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 10% வரை அதிகரித்து 313.65 ரூபாய்க்கு வர்த்தகமானது. பி.எஸ்.இ சென்செக்ஸ் 3% சரிவு கண்டிருக்கும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், இந்தப் பங்கு விலை 97% அதிகரித்துள்ளது.”

ஷிப்பிங் நிறுவனப் பங்குகளின் விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று ஜி.இ ஷிப்பிங் நிறுவனத்தின் பங்கு விலை 14% வரை அதிகரித்து 391.80 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது இந்த நிறுவனப் பங்கின் மூன்று வருட உயர்வு விலையாகும். மார்ச் 31, 2021-ம் காலாண்டுக்கான இறுதி டிவிடெண்ட் வழங்குவது குறித்து இயக்குநர் குழு பரிசீலிக்கும் என்று இந்த நிறுவனம் சொன்னதை அடுத்து, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 30% வரை அதிகரித்திருக்கிறது.

அதேபோல, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஜி.இ ஷிப்பிங் நிறுவனத்தின் 2.10% பங்குகளை வாங்கிய பிறகு, இரண்டு வாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 36% வரை அதிகரித்திருக்கிறது. இதனால், தற்போது ஜி.இ ஷிப்பிங்கில் ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் ஹோல்டிங் முந்தைய 5.13 சதவிகிதத்திலிருந்து 7.23 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

அதேபோல, ஸ்ரேயாஸ் ஷிப்பிங் அண்ட் லாஜிஸ்ட்டிக்ஸ் 20% வரை விலை உயர்ந்து 98 ரூபாய்க்கு வர்த்தகமானது. எஸ்ஸார் ஷிப்பிங் நிறுவனத்தின் பங்கு விலை 17% வரை அதிகரித்து, 9.26 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 7% வரை அதிகரித்து 114.70 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஷீகோஸ்ட் ஷிப்பிங் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலை 3% வரை அதிகரித்து 161 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் போனஸ் பங்குகள் வழங்குகிறதாமே?

“கடந்த மே 11-ம் தேதி, இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகள் வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன்பாக 2019-ம் ஆண்டில் இதேபோன்று முதலீட்டாளர் களுக்கு 1:1 என்கிற விகிதத்தில் அதாவது, ஒரு பங்குக்கு ஒரு போனஸ் பங்கை இந்த நிறுவனம் வழங்கியது.

மேலும், மார்ச் 31, 2021-ம் ஆண்டுக்கான இறுதி டிவிடெண்ட் தொகையை முதலீட்டாளர்களுக்கு வழங்கு வதையும் இந்த நிறுவனம் பரிசீலிக்கும் எனத் தெரிகிறது. போனஸ் பங்குகள் குறித்த அறிவிப்பு வெளியானதும், இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று 7% வரை அதிகரித்தது.”

கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனம் ஐ.பி.ஓ வருகிறதாமே?

“புதிய பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.3,500 கோடியைத் திரட்ட கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனம் செபி அமைப்பிடம் அனுமதி கேட்டு முதல்கட்ட ஆவணங் களைத் தாக்கல் செய்துள்ளது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில், புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.1,500 கோடியும், சந்தையில் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.2,000 கோடியும் திரட்ட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் சன்மார் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் ரூ.1,850 கோடி மதிப்புள்ள பங்குகளை ஐ.பி.ஓ மூலமும், சன்மார் இன்ஜினீயரிங் சர்வீசஸ் நிறுவனத்தின் ரூ.150 கோடி மதிப்புள்ள பங்குகளை பங்குச் சந்தை மூலமும் இந்த நிறுவனம் விற்கிறது.’’

ரோலெக்ஸ் ரிங்க்ஸ் ஐ.பி.ஓ வருவது பற்றி...

“ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான ரோலெக்ஸ் நிறுவனம், ஐ.பி.ஓ வெளியிடத் தயாராகியிருக்கிறது. இந்தப் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.70 கோடி நிதி திரட்ட நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியைக் கேட்டு, செபியிடம் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் ரிவென்டெல் பி.இ.எல்.எல்.சி நிறுவனத்தின் 65 லட்சம் பங்குகளைப் பங்குச் சந்தை யில் விற்பனை செய்ய இருப்பதாக செபியிடம் தாக்கல் செய்த ஆவணத் தில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில், ரோலெக்ஸ் ரிங்க்ஸ் நிறுவனத்தில், ரிவென்டெல் பி.இ.எல்.எல்.சி நிறுவனம் 45.51% பங்குகளைக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ ஆகிய வற்றில் பட்டியலிடப்படும்.”

பவர்கிரிட் இன்விட்ஸ் ஐ.பி.ஓ வெற்றிபெற்றதா?

“பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், கடந்த ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை `பவர்கிரிட் இன்விட்ஸ்’ ஐ.பி.ஓ-வை வெளியிட்டது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் முதலீட்டாளர் களிடமிருந்து ரூ.7,735 கோடி நிதி திரட்டுவதுதான் இந்த நிறுவனத்தின் திட்டம். ரூ.4,993.48 கோடியைப் புதிய பங்கு வெளியீட்டின் மூலமும், ரூ.2,741.51 கோடியை ஆஃபர் ஃபார் சேல் மூலமும் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட இந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது.

இந்த வெளியீட்டில் பங்கு ஒன்றின் விலை ரூ.99-100. குறைந்தபட்சம் 1,100 பங்குகளை வாங்க வேண்டும் என்றும் பவர்கிரிட் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த ஐ.பி.ஓ-வுக்கு முதலீட்டாளர் களிடம் நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. ஐ.பி.ஓ வெளியீட்டின் இறுதி நாளில் வெளியீட்டு அளவை விட 4.83 மடங்கு பங்குகள் வேண்டி, முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனம் அல்லாத முதலீட் டாளர்களின் பிரிவில் முறையே 4.6 மடங்கு மற்றும் 5.1 மடங்குக்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.”

ஐ.டி.பி.ஐ வங்கியில் தனக்கு இருக்கும் பங்குகளை எல்.ஐ.சி நிறுவனம் விற்கப் போகிறதே!

‘‘ஐ.டி.பி.ஐ வங்கியில் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு 49.24% பங்கு இருக்கிறது. ஐ.டி.பி.ஐ வங்கியின் வாராக்கடன் அதிகமாகி ஏறக்குறைய திவால் நிலைக்குச் சென்றபோது, எல்.ஐ.சி நிறுவனம் அந்த வங்கியின் பங்குகளை வாங்கி, அதைக் காப்பாற்றியது. என்றாலும், இந்த வங்கியை எல்.ஐ.சி நிறுவனமே நீண்டகாலத்துக்கு வைத்திருக்க விரும்பவில்லை.

ஒரு தவணைக்கு 5% என்கிற கணக்கில் இந்த வங்கியின் பங்குகளை விற்க முடிவு செய்திருக்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தப் பங்கின் விலை 6 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை மோசமாக உள்ளது. வாசகர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்’’ என்று முடித்திருந்தார் ஷேர்லக்.

பங்குச் சந்தையில் தனிநபர்களின் பங்களிப்பு அதிகரிப்பு..!

தேசிய பங்குச் சந்தையில் (என்.எஸ்.இ) தனிநபர்களின் முதலீட்டுப் பங்களிப்பு 2019-20–ம் நிதி ஆண்டில் 35 சதவிகிதமாக இருந்தது, 2020-21-ம் நிதி ஆண்டில் 45 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 15 சதவிகிதத்திலிருந்து 11 சதவிகிதமாகக் குறைந்துள்ளது!

ஷேர்லக்: ரிசர்வ் வங்கி சலுகைகள்... கவனிக்க வேண்டிய 
பங்குகள்..! வழிகாட்டும் முதலீட்டு ஆலோசனை...
கா.ராமலிங்கம்

முதலீட்டில் ரிஸ்க் மேனேஜ்மென்ட்!

நாணயம் விகடன் நடத்தும் ‘முதலீட்டில் ரிஸ்க் மேனேஜ்மென்ட்!’ என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி 2021, மே 15, சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது. சிறுசேமிப்பு தொடங்கி பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் வரை அனைத்து முதலீடுகளிலும் ரிஸ்க் இருக்கிறது. இதை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து இந்த நிகழ்ச்சியில் எடுத்துச் சொல்லப்படும். இந்த நிகழ்வில் இளைஞர்கள், நடுத்தர வயதினர், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று பலன் பெற முடியும். நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம் (இணை நிறுவனர், Holisticinvestment.in) இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகிறார். கட்டணம் ரூ.350. முன்பதிவு செய்ய https://bit.ly/3mO05XC

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு