Published:Updated:

ஷேர்லக்: ஆண்டு இறுதிக்குள் சென்செக்ஸ் 55000 புள்ளிகள்! மார்கன் ஸ்டான்லி கணிப்பு...

S H A R E L U C K - ஷேர்லக்

பிரீமியம் ஸ்டோரி

சரியாக மாலை 4 மணிக்கு வீடியோகாலில் வந்தார் ஷேர்லக். தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

முன்னணி பங்குத் தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி சென்செக்ஸ் 55000 புள்ளிகளைத் தாண்டும் எனச் சொல்லி யிருக்கிறதே?

“இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் ஏற்றத்துடன் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பங்குத் தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி வருகிற 2021 டிசம்பர் மாதத்துக்குள் சென்செக்ஸ் 55000 புள்ளிகள் வரை ஏற்றமடையும் எனத் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்று முழுவதுமாகக் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது சென்செக்ஸ் புள்ளிகள் 2021-22-ம் நிதி ஆண்டில் சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் 50 நிறுவனங் களின் சராசரி 37 சதவிகிதமாக இருக்கும். இதனால் இந்தக் கால கட்டத்தில் சென்செக்ஸ் வருமானம் 22% அதிகரிக்கும் எனவும் சென்செக்ஸ் புள்ளிகள் 61000 வரை அதிகரித்து செல்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், கொரோனா வைரஸ் பரவல் அதிகமானால், சென்செக்ஸ் 41000 புள்ளிகளுக்கு இறங்கவும் வாய்ப்பிருப்பதாக மார்கன் ஸ்டான்லி அறிக்கை சொல்கிறது.”

ஷேர்லக்
ஷேர்லக்

முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது பற்றி...

“கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று சென்செக்ஸ் 1575 புள்ளிகள் அதிகரித்து, 50193 என்கிற நிலைக்கு உயர்ந்தது. அதே நாளில் வர்த்தகத்தின் இடையே 1695 புள்ளிகள் அதிகரித்து, 50313 புள்ளிகளில் வர்த்தகமானது. அதே போல, நிஃப்டியும் 430 புள்ளிகள் அதிகரித்து, 15080 என்கிற நிலையில் வர்த்தகமானது. இதன் காரணமாக கடந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 5.78 டிரில்லியன் ரூபாய் அதிகரித்து, 216.39 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு விலை அதிக பட்சமாக 5.91% ஏற்றம் கண்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ 5.17%, டைட்டன் 4.89%, பஜாஜ் ஃபைனான்ஸ் 4.84% மற்றும் ஹெச்.டி.எஃப்.சி 2.57% அதிகரித்துள்ளது. அதே சமயம், பார்தி ஏர்டெல், ஐ.டி.சி, டாக்டர் ரெட்டீஸ், எஸ்.பி.ஐ மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகளின் விலை இறக்கத்தில் இருந்தன. அதே நேரம், வியாழக்கிழமை அன்று இறக்கத்தில் முடிந்தது.’’

ஷியாம் மெட்டாலிக்ஸ் அண்டு எனர்ஜி நிறுவனம் ஐ.பி.ஓ வருவது குறித்து...

“இந்த நிறுவனம் புதிய பங்கு வெளியிடுவதற்காக (ஐ.பி.ஓ) செபி அமைப்பிடம் கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பித்திருந்தது. அதற்கான அனுமதியைக் கடந்த வாரம் திங்கள் அன்று செபி வழங்கியிருக்கிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் 1,107 கோடி ரூபாய் நிதியை முதலீட்டாளர் களிடமிருந்து திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. புதிய பங்கு களை வெளியிடுவதன் மூலம் 657 கோடி ரூபாயும், சுபம் கேப்பிடல், சுபம் பில்ட்வெல், கல்பதரு ஹவுஸிங் ஃபைனான்ஸ் அண்டு டிரேடிங், டொரைட் ட்ரகான், நரன்டக் டெல்காம் மற்றும் டாப்லைட் மெர்கன்டைஸ் ஆகிய நிறுவனங்களின் வசம் உள்ள மூன்று லட்சம் பங்குகளை பங்குச் சந்தையில் விற்பதன் மூலம் 450 கோடி ரூபாயையும் திரட்ட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தப் புதிய பங்கு வெளியீட்டில் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர் களுக்கு 50% ஒதுக்கப்பட்டுள்ளது. நிறுவனமல்லாத முதலீட்டாளர் களுக்கு 15% மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு 35% ஒதுக்கப்பட்டுள்ளது.’’

கிளாண்ட் பார்மா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“இந்த நிறுவனம் கடந்த மே 18-ம் தேதி மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்த காரணத்தால், நிகர லாபம் 34% அதிகரித்து, 260.4 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மே 19-ம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு விலை 3% வரை அதிகரித்து, எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகபட்ச விலையான 3,145.80 ரூபாய்க்கு வர்த்தகமானது.

பங்குத் தரகு நிறுவனமான மோதிலால் ஆஸ்வால், கிளாண்ட் பார்மா பங்கின் இலக்கு விலையை 3,280 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. முதலீட்டாளர்களை வாங்கச் சொல்லியும் பரிந்துரை செய்துள்ளது.”

பிரிகேட் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

“இந்த நிறுவனம் தனது மார்ச் காலாண்டு முடிவுகளை அறிவித்த பின்னர், மே 19 அன்று இதன் பங்கு விலை 5 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்தது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 19.58 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 11.02 கோடி ரூபாயாக இது இருந்தது. அதேபோல இந்த நிறுவனத்தின் வருமானமும் 27.39% அதிகரித்து, 820.86 கோடி ரூபாயாக உள்ளது.

மே 19-ம் தேதி காலை வர்த்தகத்திலேயே இதன் பங்கு விலை 5.62% அதிகரித்து, 263.30 ரூபாய்க்கு வர்த்தகமானது. மேலும், முதலீட்டாளர்களுக்கு இறுதி டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு 1.20 ரூபாய் வழங்குவது குறித்து இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளது.”

பிர்லா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருப்பது குறித்து...

“சிமென்ட் மற்றும் சிமென்ட் பொருள்கள் சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம் தனது மார்ச் காலாண்டு முடிவு களை அறிவித்த பின்னர், மே 19 அன்று இதன் பங்கு விலை 7 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்து 1,289.65 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஜனவரி 8, 2018-ம் தேதி வர்த்தக மான அதிகபட்ச விலையான 1,290 ரூபாயைத் தற்போது தொட்டிருக்கிறது. கடந்த இரண்டு வாரத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 4% அதிகரித்திருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 31% வரை அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 28% அதிகரித்து, 249.33 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 194.73 கோடி ரூபாயாக இருந்தது. விற்பனை 24.5% அதிகரித்து 4.17 மில்லியன் டன்னாக இருக்கிறது. அதே போல, வருமானமும் 24.9% அதிகரித்து, 2,146 கோடி ரூபாயாக உள்ளது.”

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை குறைய என்ன காரணம்?

“கடந்த இரண்டு வாரமாக பங்குச் சந்தையின் போக்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்தது. பி.எஸ்.இ சென்செக்ஸ் 4% அதிகரித்திருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 15% வரை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக முதலீட் டாளர்கள் இந்த நிறுவனத்தின் பங்குகளை பிராஃபிட் புக்கிங் செய்ததில், கடந்த வாரம் புதன் கிழமை அன்று 6% வரை குறைந்து 312.95 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இந்த நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. அதில், இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு 7,605 கோடி ரூபாயாகக் குறைந்து உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 9,894 கோடி ரூபாயாக இருந்தது.”

கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு செபி அமைப்பு அபராதம் விதித்திருக்கிறதே?

“2014-ம் ஆண்டில் பங்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து தவறான அறிவிப்பை வெளி யிட்டதற்காக கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு செபி அமைப்பு கடந்த புதன்கிழமை ரூ.5.25 கோடி அபராதம் விதித்தது. 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி, ரூ.10 முகமதிப்பு கொண்ட 17,08,95,522 பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 335 ரூபாய் கொடுத்து வாங்குவதாக இந்த நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. மொத்த பங்குகளின் மதிப்பு ரூ.5,725 கோடி. இந்த நடவடிக்கை ஜனவரி 23-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு, ஜூலை 22-ம் தேதி முடிக்கப்பட்டது. இந்த பங்குகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையில் முறைகேடுகளைக் கண்டுபிடித்த செபி, தற்போது அபராதம் விதித்திருக்கிறது.’’

உரத் தயாரிப்பு நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்திருக்கிறதே!

‘‘சில உரங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியம் கணிசமாக உயர்த்தப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து உரத் தயாரிப்பு நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, டை அம்மோனியம் பாஸ்பேட்டுக்கான மானியம் உயர்த்தப் பட்டதால், பசந்த் ஆக்ரோ, என்.எஃப்.எல், ராஷ்ட்ரிய கெமிக்கல், ட்ராவன்கூர் ஃபெர்ட்டிலைசர் உட்படப் பல உரத் தயாரிப்பு நிறுவனப் பங்குகளின் விலை 3% - 6% வரை உயர்ந்துள்ளன’’ என்றவர், ‘‘முடிந்தவரை, வெளியே செல்லாமல், வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்’’ என்று ஆலோசனை சொல்லிவிட்டு, வீடியோ காலை கட் செய்தார் ஷேர்லக்!

எஸ்.ஶ்ரீதரன்
எஸ்.ஶ்ரீதரன்

சரியான மருத்துவக் காப்பீட்டைத் தேர்வு செய்வது எப்படி? பாலிசி பரிந்துரைகளுடன்

நாணயம் விகடன், ‘சரியான மருத்துவக் காப்பீட்டைத் தேர்வு செய்வது எப்படி? - பாலிசி பரிந்துரைகளுடன்’ என்ற கட்டண வகுப்பை ஆன்லைன் மூலம் நடத்துகிறது. ஜூன் 19, 2021 சனிக்கிழமை, காலை 10.30 முதல் 12 மணி வரை நடக்கும் இதற்கான கட்டணம் ரூ.200 ஆகும்.

மருத்துவக் காப்பீடு (ஹெல்த் இன்ஷூரன்ஸ்) பாலிசியை சரியாக எடுக்க வழிகாட்டும் நிகழ்ச்சி இதுவாகும். நிதி ஆலோசகர் எஸ்.ஶ்ரீதரன், (நிறுவனர், Wealthladder.co.in) இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். பதிவு செய்ய: https://bit.ly/3ovGsV4

கு.சிவராமன்
கு.சிவராமன்
ராம்தாஸ் பரதன்
ராம்தாஸ் பரதன்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஆயுர்வேதத்தின் ரகசியங்கள்..!

நாணயம் விகடன், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் இணைந்து ‘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஆயுர்வேதத்தின் ரகசியங்கள்’ என்கிற தலைப்பில் ஆன்லைனில் கட்டணமில்லா கருத்தரங்கை நடத்துகின்றன. 2021 மே 29, மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை நடக்கும் இந்தக் கருத்தரங்கில், சித்த மருத்துவர் கு.சிவராமன், மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்கின் மூத்த துணைத் தலைவர் ராம்தாஸ் பரதன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம். முன் பதிவு செய்ய: https://bit.ly/3v5E75E

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு