Published:Updated:

ஷேர்லக்: ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்த பொதுத்துறை வங்கிப் பங்குகள்..! காலாண்டு முடிவுகள் எதிரொலி

S H A R E L U C K - ஷேர்லக்

பிரீமியம் ஸ்டோரி

வியாழக்கிழமை பிற்பகல் நிஃப்டி இண்டெக்ஸ் சமீபத்திய உச்சத்தில் முடிந்த குஷியில் நாம் இருக்க, நம் கேள்வி களுக்குப் பதில் சொல்ல நமக்கு வீடியோகால் செய்தார் ஷேர்லக். நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஷேர்லக்: ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்த பொதுத்துறை வங்கிப் பங்குகள்..! காலாண்டு முடிவுகள் எதிரொலி

முன்னணி முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பொதுத்துறை வங்கிப் பங்குகளில் முதலீடு செய்ய என்ன காரணம்?

“நல்லவிதமான காலாண்டு முடிவுகள் காரணமாக எஸ்.பி.ஐ மற்றும் கனரா பேங்க் பங்குகளில் முன்னணி முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்திருக் கிறார். கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு வரும்போது தொழில் கடன் மற்றும் தனிநபர் களுக்கான கடன் தேவை அதிகரிக்கும்; அப்போது வங்கிகள் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் வளர்ச்சி காணத் தொடங்கும். 2020-21–ம் நிதி ஆண்டின் மார்ச் காலாண்டில் எஸ்.பி.ஐ மற்றும் கனரா பேங்கின் நிதிநிலை மேம்பட்டிருக்கிறது. தற்போது நாட்டில் கடன் வளர்ச்சி சுமார் 6 சதவிகிதமாக உள்ளது. இது நடப்பு நிதி ஆண்டில் (2021-22) 15% அளவுக்கு உயரும் என ராகேஷ் மதிப்பிட்டிருக்கிறார்.

நான்காம் காலாண்டில் கனரா பேங்க் ரூ.1,011 கோடி லாபம் ஈட்டி இருக்கிறது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,259 கோடி இழப்பாக இருந்தது. கனரா பேங்க் பங்கை ராகேஷ் வாங்கிய இந்த நேரத்தில், இந்தப் பங்கை வாங்கலாம் என எல்.கே.பி செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்திருக்கிறது.

எஸ்.பி.ஐ-யின் நிகர வட்டி வருமானம், இதர வருமான உயர்வால் அதன் லாபம் 80% அதிகரித்துள்ளது. கோல்டுமேன் சாக்‌ஸ், எஸ்.பி.ஐ பங்கை வாங்கப் பரிந்துரை செய்திருப் பதுடன், அதன் இலக்கு விலையை ரூ.585-லிருந்து ரூ.648-ஆக அதிகரித்து உள்ளது. இந்த இரு பங்குகளையும் இனி வாங்க நினைப்பவர்கள் தங்கள் ரிஸ்க் நிலையை ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம்.”

சன் பார்மா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

‘‘சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் கம்பெனியின் (SPARC) பங்கு விலை, கடந்த வாரம் புதன்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கும்போதே 2.95% வரை அதிகரித்து 235.55 ரூபாய்க்கு வர்த்தகமானது. மேலும், அன்றைய தினத்தில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பதவியிலிருந்து திலீப் ஷங்வி, தனது பதவியை ராஜினாமா செய்தது பங்குகளின் விலையை 5% வரை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இவர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவுடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவானது, அனில் ராகவன் என்பவரை இந்த நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ-வாக நியமித்திருக்கிறது.”

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பங்கு ஒன்றுக்கு ரூ.58 டிவிடெண்டாக வழங்கப்போகிறதாமே?

“பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் நிறுவனத்தின் (BPCL) பங்கு விலை, கடந்த மே 27-ம் தேதி, காலை வர்த்தகத்தில் 3% வரை அதிகரித்து, 488 ரூபாய்க்கு வர்த்தகமானது. மார்ச் காலாண்டு முடிவின்படி, இந்த நிறுவனத்தின் தனித்த லாபம் 11,940.10 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய டிசம்பர் காலாண்டில் இது 2,777.60 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளும் லாபமும் சிறப்பாக இருப்பதால், தனது முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்க இந்த நிறுவனம் முடிவு செய்திருக் கிறது. அந்த வகையில் பங்கு ஒன்றுக்கு 58 ரூபாயை (ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்குகளுக்கு ஒன்-டைம் ஸ்பெஷல் டிவிடெண்ட் ரூ.35 உள்ளடக்கியது) டிவிடெண்ட் தொகையாக இந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதற்காக ரூ.12,581.66 கோடியை ஒதுக்கியுள்ளது. பங்கின் விலையும் 52 வார உச்சத்தை அடைந்திருப்பதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.”

வெளிநாட்டுத் தரகு நிறுவனங்கள் சில இந்திய நிறுவனப் பங்குகளின் இலக்கு விலையை அதிகரித்தது ஏன்..?

“இந்திய நிறுவனங்கள் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் பல மாநிலங் களில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால், மே மாதத்தில் பங்குச் சந்தை சாதகமான சூழ்நிலையுடன் வர்த்தகமாகி வருகிறது.

இருப்பினும் தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் ரேட்டிங் ஏஜென்சிகளால் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி குறையும் எனக் கணிக்கப்பட்டிருப்பது முதலீட் டாளர்களிடையே ஒருவிதமான கலக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது. அதேபோல, தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் எண்ணிக் கையாலும் முதலீட்டாளர்களின் பயத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், பி.எஸ்.இ சென்செக்ஸ் மே மாதத்தில் கிட்டத்தட்ட 4% வரை அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.8,922.02 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றிருக்கிறார்கள். அதே நேரம், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (மியூச்சுவல் ஃபண்ட், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை இதுவரை ரூ.938.44 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி யிருக்கிறார்கள். பரவலாகப் பார்க்கப்படும்போது, லார்ஜ்கேப் குறியீடு 4 சதவிகிதத்துக்கும் மேலாகவும், மிட்கேப் குறியீடு 6 சதவிகிதத்துக்கும் மேலாகவும் உயர்ந்துள்ளது. ஸ்மால்கேப் குறியீடு 7.7 சதவிகித உயர்வைப் பெற்றிருக்கிறது.

இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு முடிவுகள் எனப் பல காரணிகளைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டுத் தரகு நிறுவனங்கள் 10 இந்திய பங்கு களின் இலக்கு விலையை அதிகரித்திருக்கின்றன.

மார்கன் ஸ்டான்லி, எஸ்.பி.ஐ லைஃப் பங்கின் இலக்கு விலையை 1,275 ரூபாயாகவும், டாடா ஸ்டீல் பங்கின் இலக்கு விலையை 1,000 ரூபாயிலிருந்து 1,630 ரூபாயாகவும் ஜே.எஸ்.டபிள்யூ பங்கின் இலக்கு விலையை 590 ரூபாயிலிருந்து 920 ரூபாயாகவும், எல் அண்டு டி பங்கின் இலக்கு விலையை 1,816 ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது.

தரகு நிறுவனமான கிரெடிட் சூஷே, அல்ட்ராடெக் சிமென்ட் பங்கின் இலக்கு விலையை 6,500 ரூபாயிலிருந்து 7,400 ரூபாயாக அதிகரித்துள்ளது. பங்குத் தரகு நிறுவனமான ஜெஃப்ரீஸ், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் பங்கின் இலக்கு விலையை 840 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

பங்குத் தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ, எஸ்.பி.ஐ பங்கின் இலக்கு விலையை 650 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. ஹிண்டால் கோ இண்டஸ்ட்ரீஸ் பங்கின் இலக்கு விலையை 500 ரூபாயா கவும், டாடா மோட்டார்ஸ் பங்கின் இலக்கு விலையை 450 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

பங்குத் தரகு நிறுவனமான ஜே.பி.மார்கன் ஹெச்.பி.சி.எல் பங்கின் இலக்கு விலையை 285 ரூபாயிலிருந்து 330 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.”

பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டியின் ஏற்றத்துக்கு என்ன காரணம்?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று சென்செக்ஸ் குறியீடு 0.63% வரை அதிகரித்து 50,955.85 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டியும் 0.51% வரை அதிகரித்து 15,286 புள்ளிகளில் வர்த்தகமானது. 40 நாள்களுக்குப் பிறகு, இந்தியாவில் இரண்டு லட்சத் துக்குக் குறைவாக கொரோனா நோய்த் தொற்றின் எண்ணிக்கைக் குறைந்திருப்பது மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வெளியாவது போன்ற காரணங் களால் பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்தைச் சந்தித்தன.

ஆனால், வியாழன் அன்று எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வந்ததால், அன்று சந்தை இறங்கவே வாய்ப்புண்டு என்று பலரும் கருதினார்கள். அவர்கள் நினைத்ததுபோல, காலை தொடங்கி வர்த்தகம் ஏற்ற, இறக்கமாகவே அமைந்தது. ஆனால், வர்த்தக முடிவில் 36 புள்ளிகளும் சென்செக்ஸ் 97 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் ஆனது. இனி, வெள்ளிக்கிழமை முதல் சந்தை மேல்நோக்கிச் செல்லுமா அல்லது கொஞ்சம் இறக்கம் கண்டபின் திரும்பவும் மேல்நோக்கிச் செல்லுமா என்பதைப் பார்ப்போம்.”

அமரராஜா பங்கு விலை குறைந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறதே..!

“கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று, அமரராஜா பேட்டரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 6% வரை குறைந்து, 739.80 ரூபாய்க்கு வர்த்தகமானது. கார் பேட்டரி தயாரிக்கும் நிறுவனமான க்ளாரியஸ், தன் வசமுள்ள அமரராஜா பேட்டரீஸ் நிறுவனத்தின் 10% பங்குகளை விற்கப்போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகே, இந்நிறுவனத்தின் பங்கு விலை இறங்கியது.

இந்த நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவின்படி, நிகர லாபம் 189 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 137 கோடி ரூபாயாக இருந்தது. மேலும், நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து பி.எஸ்.இ சென்செக்ஸ் 5.92% வளர்ச்சி அடைந்திருக்கும் அதே நேரம், அமரராஜா பேட்டரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 20.38% சரிவைச் சந்தித்திருக்கிறது. அமரராஜா பங்குக்குப் பதிலாக இதே துறையைச் சேர்ந்த எக்சைட் நிறுவனத்தின் பங்குகளை சிலர் வாங்கத் தொடங்கி யிருப்பதும் கவனத்துக்கு வந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தே இந்தத் துறை பங்குகளின் செயல்பாடுகள் இருக்கும் என்பதை அவசியம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.”

லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்துள்ளதே!

“இந்த நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த வாரம் புதன்கிழமை அன்று 11% வரை அதிகரித்து, 2,517.20 ரூபாய்க்கு வர்த்தகமானது. மார்ச் காலாண்டு முடிவுகளின்படி, இந்த நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்து, 90.64 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 41.49 கோடி ரூபாயாக இருந்தது. இந்த சிறப்பான செயல்பாட்டின் காரணமாகவும், நல்ல காலாண்டு முடிவுகளை வெளியிட்ட தாலும் பங்கு விலை அதிகரித்திருக்கிறது. கடந்த மூன்று வர்த்தக தினங்களில் மட்டும் இதன் பங்கு விலை 26% வரை அதிகரித்துள்ளது.”

டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்ததற்கும் காலாண்டு முடிவுதான் காரணமா?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 20% வரை அதிகரித்து 366.90 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது இந்த நிறுவனத்தின் 52 வார அதிகபட்ச விலையைவிட ரூ.10 குறைவு. மார்ச் காலாண்டு முடிவுகளின்படி, இந்த நிறுவனத்தின் தனித்த வரிக்கு பிந்தைய லாபம் 52.86 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 31.28 கோடி ரூபாயாக இருந்தது. இந்த சிறப்பான காலாண்டு முடிவுகள் வெளியான பிறகுதான், பங்கின் விலை அப்பர் சர்க்யூட் லெவலைத் தொட்டது.”

சில பங்குகளின் விலை ஏறி, சில பங்குகளின் விலை குறைந்திருப்பதால், அதன் நிலை மாறியிருக்கிறதே!

‘‘அதானி டோட்டல் கேஸ், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், சோழ மண்டலம் இன்வெஸ்ட்மென்ட், என்.எம்.டி.சி, ஹனிவெல் ஆட்டோ மேஷன், பேங்க் ஆஃப் பரோடா பங்குகள் மிட்கேப் வகையிலிருந்து லார்ஜ்கேப் என்கிற வகைக்கு உயர வாய்ப்புண்டு. அதேபோல, பெட்ரோ நெட் எல்.என்.ஜி, பி.ஐ இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.பி.சி.எல், ஆல்கெம் லேப், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், அபாட் இந்தியா ஆகிய பங்குகள் லார்ஜ்கேப் வகையிலிருந்து மிட்கேப் வகைக்கு இறங்க வாய்ப்புண்டு.

இதேபோல, டாடா எலெக்ஸி, கஜாரியா செராமிக்ஸ், ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ், அப்போலோ டயர்ஸ், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, டன்லா பிளாட்ஃபார்ம்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஸ்மால்கேப்பில்லிருந்து மிட்கேப் வகைக்கு மாற வாய்ப்புண்டு. சோலார் இண்டஸ்ட்ரீஸ், ஐ.டி.ஐ, மஹாநகர் கேஸ், பி&ஜி ஹெல்த், மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர், கிரெடிட் ஆக்சஸ் ஆகிய பங்குகள மிட்கேப் வகையிலிருந்து ஸ்மால் கேப் வகைக்கு மாற வாய்ப்புண்டு. இந்த மாற்றம் இந்தப் பங்குகளின் விலையில் எதிரொலிக்கும். எனவே, ஜாக்கிரதை.’’

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக தொகையை இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியில் எடுத்திருக்கிறார்களே?

“கடந்த மே 1-21-ம் தேதி வரை யிலான காலகட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய ஈக்விட்டி சந்தையிலிருந்து 6,370 கோடி ரூபாயை வெளியில் எடுத்திருக்கிறார்கள். கடன் சார்ந்த முதலீடுகளில் அவர்கள் 1,926 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் வெளியேறிய நிகர மதிப்பு ரூ.444 கோடி. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருவதால், உள்நாட்டு முதலீட் டாளர்களைப் போல, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் ஒருவித பயத்தில் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தையிலிருந்து பணத்தை வெளியில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது’’ என்றவர், ‘‘நாம் இப்போது படுகிற கஷ்டம் இன்னும் கொஞ்ச காலத்துக் குத்தான் என்ற நம்பிக்கையுடன் பொறுமையாக இருப்போம்’’ என்று முடித்தார் ஷேர்லக்!

எஸ்.ஶ்ரீதரன்
எஸ்.ஶ்ரீதரன்

சரியான மருத்துவக் காப்பீட்டைத் தேர்வு செய்வது எப்படி? பாலிசி பரிந்துரைகளுடன்

நாணயம் விகடன், ‘சரியான மருத்துவக் காப்பீட்டைத் தேர்வு செய்வது எப்படி? - பாலிசி பரிந்துரைகளுடன்’ என்ற கட்டண வகுப்பை ஆன்லைன் மூலம் நடத்துகிறது. ஜூன் 19, 2021 சனிக்கிழமை, காலை 10.30 முதல் 12 மணி வரை நடக்கும் இதற்கான கட்டணம் ரூ.200 ஆகும்.

மருத்துவக் காப்பீடு (ஹெல்த் இன்ஷூரன்ஸ்) பாலிசியை சரியாக எடுக்க வழிகாட்டும் நிகழ்ச்சி இதுவாகும். நிதி ஆலோசகர் எஸ்.ஶ்ரீதரன், (நிறுவனர், Wealthladder.co.in) இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். பதிவு செய்ய: https://bit.ly/3ovGsV4

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு