நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிக் குவித்த பங்குகள்! மிட்கேப், ஸ்மால்கேப் பிரிவில்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

S H A R E L U C K

வழக்கம்போல மாலை 4.30 மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். “இந்தியப் பங்குச் சந்தை கரடியின் பிடிக்குத் திரும்புகிறதா? என்று கடந்த வாரம் சந்தேகம் கிளப்பி இருந்தோம். அது இப்போது நடக்கத் தொடங்கி இருக்கிறது” என்றவரிடம், ‘‘உம் ஆரூடம் மிகச் சரியாக இருக்கும் என்பதால்தானே, வாசகர்கள் நீர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தை யையும் உற்றுக் கவனிக்கிறார்கள்’’ என்று சொன்னபடி, நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஷேர்லக்
ஷேர்லக்

இன்று நிஃப்டி 224 புள்ளிகளும் சென்செக்ஸ் 740 புள்ளிகளும் இறங்கி எல்லோரையும் கதிகலங்க வைத்திருக்கிறதே! எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரிதான் இந்த இறக்கத்துக்குக் காரணமா?

‘‘உச்சத்தில் இருந்த சந்தையில் எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்கள் வெளியேறியது, கொரோனா இரண்டாம் அலை தொடர்பான பயங்கள் என்பதுடன் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரியும் சேர்ந்துகொள்ள, கரடிகள் புகுந்து பங்குச் சந்தையைத் துவம்சம் செய்துவிட்டன. மாருதி சுஸூகி, ஐ.ஓ.சி, ஹெச்.யூ.எல், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், எய்ச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் என நிஃப்டி 50-யில் உள்ள பங்குகளின் விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்தன. ரிலையன்ஸ் 2,000 ரூபாய்க்குக் கீழே இறங்கியிருக்கிறது.

இந்த வேகமான இறக்கம் வெள்ளியன்றும் தொடர்ந்தால், நிஃப்டி 14000 புள்ளிகளை நோக்கி இறங்க வாய்ப்புண்டு. நீண்டகால முதலீட்டாளர்கள் இந்த இறக்கத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நல்ல பங்குகள் குறைவான விலையில் கிடைப்பதைப் பயன்படுத்தி, வாங்கிப் போடலாம்.’’

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ஸ்மால் அண்டு மிட்கேப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கின்றனவே, என்ன காரணம்?

“கடந்த மூன்று மாதங்களில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கின்றன. அதாவது, 2020-ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மிட்கேப் பங்குகளில் 18 சதவிகிதமாக இருந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு 2021-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 19 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல, ஸ்மால்கேப் பங்குகளில் 9 சதவிகிதமாக இருந்த முதலீட்டுப் பங்களிப்பு, 10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. லார்ஜ்கேப் பங்கு களில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களின் முதலீடு 73 சதவிகிதத்திலிருந்து 71 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

துறைவாரியாகப் பார்க்கும்போது, மிட்கேப் பங்குகள் பிரிவில், சேவைத் துறை, டெக்ஸ்டைல் (சிந்தடிக்), இரும்பு அல்லாத உலோகங்கள், டெலிகாம் சேவைகள் ஆகிய துறை சார்ந்த பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளன. ஸ்மால்கேப் பிரிவில் டெக்ஸ்டைல், இரும்பு அல்லாத உலோகங்கள், தாதுக்கள், சுரங்கம், டெலிகாம் கருவிகள், கட்டுமானம் ஆகிய துறை சார்ந்த பங்கு களில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளன.

மிட்கேப் நிறுவனங்களைப் பொறுத்தவரை, வாப்கோ இந்தியா, ஐ.ஆர்.சி.டி, எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ், ஜி.எம்.ஆர் இன்ஃப்ரா, கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, செயில், பாலிகேப் இந்தியா ஆகியவை முக்கியமானவை. ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் தீபக் ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் பார்ம சூட்டிகல்ஸ், இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ், பாலி மெடிகியூர், ஆக்‌ஷன் கன்ஸ்ட்ரக்‌ஷன் எக்யூப்மென்ட், ஜிந்தான் ஸ்டெயின்லஸ். காவிரி சீட் கம்பெனி, அஸ்டெக் லைஃப் சயின்ஸ் ஆகியவற்றில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடு செய்துள்ளதைப் பார்த்து, இவற்றில் சிறு முதலீட்டாளர்களும் முதலீடு செய்யக் கூடாது. ஏனெனில், ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிய விலை என்ன என்பது நமக்குத் தெரியாது. மேலும், ஃபண்ட் நிறுவனங்கள் இந்த முதலீட்டிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறக் கூடும். அப்படி வெளியேறினால், அதுவும் நமக்குக் காலதாமதமாகத் தான் தெரியும். எனவே, எந்தப் பங்காக இருந்தாலும், அதை நன்கு அலசி ஆராய்ந்து அதன்பிறகே முதலீட்டை மேற்கொள்வது நல்லது. நாணயம் விகடன் நடத்தும் ஃபண்டமென்டல், டெக்னிக்கல் வகுப்புகளில் கலந்து கொண்டாலே போதும், எந்தெந்த விஷயங்களைப் பார்த்து ஒரு பங்கை வாங்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டு விடலாமே!”

ரயில் விகாஸ் நிகாம் பங்கு விலை இறக்கத்துக்கு என்ன காரணம்?

“முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் 15% பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 9% வரை குறைந்து வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் 208.5 மில்லியன் பங்குகளை அதாவது, 10% பங்குகளை பங்குச் சந்தையில் விற்க இந்த நிறுவனம் ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. தற்போது கூடுதலாக 5% அதாவது, 104.25 மில்லியன் பங்குகளை விற்பனை செய்ய அரசு ஒப்புதல் வழங்கி யிருக்கிறது. இதனால் 9% வரை விலை குறைந்து, 27.7 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்தப் பங்கு விற்பனையின் மூலம் 750 கோடி ரூபாய் நிதி திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போதைய நிலையில், ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தில் அரசுக்கு 87.84% பங்கு மூலதனம் இருக்கிறது. அரசின் முடிவுப்படி இந்த நிறுவனம் தனது 15% பங்குகளை விற்கும்பட்சத்தில், அரசின் மூலதனம் 74.67 சதவிகிதமாக குறையும்.”

இன்று பங்குச் சந்தையில் வர்த்தக மாகத் தொடங்கிய லக்‌ஷ்மி ஆர்கானிக்ஸ் பங்கு விலை நல்ல ஏற்றம் கண்டிருக்கிறதே..!

‘‘யெஸ், 143 ரூபாயில் வர்த்தகம் ஆகத் தொடங்கிய இந்தப் பங்கு விலை ரூ.173 வரை உயர்ந்து, பிறகு இறங்கத் தொடங்கி, 164 ரூபாயில் முடிந்தது. இன்றைக்கு மட்டும் இந்தப் பங்கு 34% லாபம் தந்திருக்கிறது. சந்தை இறங்கும் இந்த சமயத்தில் இந்தப் பங்கு தொடர்ந்து லாபம் தருமா என்பதைக் கவனிப்பது அவசியம்.’’

ஈஸி டிரிப் பிளானர்ஸ் பங்கு விலை ஏன் குறைந்தது?

“இந்த நிறுவனம், கடந்த மார்ச் 8-ம் தேதி ஐ.பி.ஓ வெளியிட்டது. இந்த ஐ.பி.ஓ-வுக்கு முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் வெளியிட்ட பங்கு அளவைவிட 160 மடங்கு பங்குகள் வேண்டி முதலீட்டாளர் கள் விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால், கொரோனா தாக்கம் அதிகரிக்க ஆரம்பித் திருப்பதால், கடந்த செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தனது வெளியீட்டு விலை யான 187 ரூபாயிலிருந்து 8.2% குறைந்து, 181.45 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்தப் பங்கின் தற்போதைய விலையானது, இதன் உச்சபட்ச விலையான 233.15 ரூபாயைவிட 22% குறைவாகும்.”

அனுபம் ரசாயன் பங்கு விலை எப்படி இருக்கிறது?

‘‘கடந்த புதன்கிழமை அன்று இந்தப் பங்கானது பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டது. சுமார் ரூ.550 என்ற அளவுக்கு உயர்ந்த இந்தப் பங்கின் விலை, பிற்பாடு இறங்கத் தொடங்கியது. இன்றைய தினம் இந்தப் பங்கு விலை 6.08% வரை இறங்கி, ரூ.494.75-க்கு வர்த்தகம் ஆனது. சமீபத்தில் ஐ.பி.ஓ வந்து நல்ல லாபம் தந்த பங்குகளின் விலை இப்போது குறைய ஆரம்பித்துள்ளது. சென்டிமென்ட் நெகட்டிவ்வாக இருப்பதால், கிடைத்த வரை லாபம் போதும் என்று நினைத்து, பலரும் விற்றுவருகிறார்கள்.

ஐ.பி.ஓ-வில் இந்தப் பங்கு வாங்க நினைத்து, கிடைக்காமல் போனவர்கள், பிற்பாடு அதிக விலைக்கு வாங்கி யிருந்தாலோ, வாங்காமல் போயிருந் தாலோ, விலை குறைந்திருப்பதைப் பயன்படுத்தி, கொஞ்சம் வாங்கி, இந்த நிறுவனங்களின் வளர்ச்சி பற்றித் தொடர்ந்து கண்காணித்து வரலாம்.’’

அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அதிகரித்தது ஏன்?

“கடந்த புதன்கிழமை அன்று அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலை 11.41% வரை அதிகரித்து, ரூ.915-க்கு வர்த்தகமானது. இது இதுவரை இல்லாத அளவுக்கு உச்சபட்ச விலையாகும். இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைத் தொட்டது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 900% அதிகரித்திருக்கிறது.

இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில், ரூ.496.11 கோடிக்கு நிகர விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 1.42% அதிகமாகும். இந்த நிறுவனத்தின் நிகர லாபமும் 26.78% அதிகரித்து, ரூ.145.13 கோடி யாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.114.47 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சோலார் எனர்ஜி கார்ப் ஆஃப் இந்தியா நிறுவனத்திடமிருந்து 300 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்துக்கான ஒப்புதல் கடிதம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,313.60 ரூபாய் வரை அதிகரித்ததால், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பும் ரூ. 2 லட்சம் கோடிக்கு உயர்ந்தது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 870% வரை அதிகரித்து உள்ளது’’ என்றவர், ‘‘கொரோனா தடுப்பூசியை நாளைக்குப் போட்டுக்கொள்ளப் போகிறேன். உங்கள் வசதிகேற்ப நீங்களும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது நல்லது’’ என்றபடி வீட்டுக்குப் புறப்பட்டார்!

வி.விஜய்குமார்
வி.விஜய்குமார்

புதிய பங்கு வெளியீட்டில் லாபம் பார்ப்பது எப்படி?

நாணயம் விகடன், ‘IPO முதலீட்டில் லாபம் பார்ப்பது எப்படி?’ என்கிற ஆன்லைன் கட்டண நிகழ்ச்சியை ஏப்ரல் 3 காலை 10.30 முதல் 12.00 மணி வரை நடத்துகிறது. கட்டணம் ரூ.300. செபு ஷேர் அண்ட் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் (Zebuetrade.com) நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி வி.விஜய்குமார் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இவர் கமாடிட்டி மற்றும் பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். பதிவு செய்ய: https://bit.ly/2QjDTbJ

பி.ராமகிருஷ்ணன்
பி.ராமகிருஷ்ணன்

சிறு நிறுவனங்கள்: நிதி திரட்டும் நுட்பங்கள்..!

நாணயம் விகடன், ‘சிறு நிறுவனங்கள்: நிதி திரட்டும் நுட்பங்கள்..!’ என்கிற ஆன்லைன் கட்டண பயிற்சி வகுப்பை ஏப்ரல் 10-ம் தேதி மாலை 4.30 - 6 மணி வரை நடத்துகிறது. பயிற்சியாளர் பி.ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர், Corporate Clinic. பயிற்சிக் கட்டணம் ரூ.300. முன்பதிவுக்கு: https://bit.ly/3vppbA0