கட்டுரைகள்
Published:Updated:

சந்தை இறக்கம்... சரியான பங்குகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

சந்தை இறக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தை இறக்கம்

எல். அர்ஜுன், செபி பதிவு பங்குச் சந்தை ஆலோசகர், https://flyingcalls.com

பங்குச் சந்தை முதலீட்டில் நல்ல லாபம் காண வேண்டும் என்பதே அனைத்து முதலீட்டாளர்களின் எண்ணமாக உள்ளது. பங்குச் சந்தை இறக்கத்தின் போது அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி முதலீடு செய்ய வேண்டும். சரியான பங்குகளை எப்படி அடையாளம் காண்பது என்றால், சில காரணிகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக நாம் எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தத் தேவையில்லை.

ஒட்டுமொத்தச் சந்தை இறக்கத்தின்போது நல்ல நிறுவனப் பங்குகளின் விலையும் இறக்கம் காணும். அப்போது காத்திருந்து முதலீடு செய்யலாம். அல்லது, அப்போது கூடுதலாக முதலீடு செய்யலாம். இப்படிச் செய்யும்போது சராசரியாக நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதே நேரத்தில், சந்தை இறக்கத்தின்போது அடிப்படையில் வலுவில்லாத நிறுவனப் பங்கு விலை குறைந்திருக்கும்போது, பெரும்பாலானோர் அதை வாங்குகிறார்கள் என்பதற்காக வாங்கக் கூடாது. அடிப்படையில் வலுவான நிறுவனமாக இருக்கும்பட்சத்தில் நிலவரம் சரியானதும் அதன் விலை கட்டாயம் ஏற்றம் காணும்.

சரியான பங்குகளை எவ்வாறு தேர்வு செய்வது? அதற்காக நாம் சின்னச் சின்ன விஷயங்களை கவனித்தாலே போதும்...

சந்தை இறக்கம்... சரியான பங்குகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

கடன் இல்லாத நிறுவனங்கள்

முதலீட்டுக்குப் பங்குகளைத் தேர்வு செய்யும்போது அந்த நிறுவனங்கள் கடன் இல்லாத நிறுவனங்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும், அல்லது, குறைந்த அளவு கடன் உள்ள நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதிக கடன் உள்ள நிறுவனங்களில் அந்தக் கடனுக்கு நிறுவனத்தின் லாபத்தில் பெருமளவு வட்டியாகப் போய்விடும். இது நிறுவனத்தின் லாபத்தைக் குறைக்கும். மேலும், நிறுவனம் வாங்கிய கடனை வேகமாக அடைக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சந்தை இறக்கம்... சரியான பங்குகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

வணிகம் மற்றும் விரிவாக்கம்

நீங்கள் முதலீடு செய்யப்போகும் நிறுவனத்தின் வணிகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகே அந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்யுங்கள். நிறுவனத்தின் வணிக மாடல் மற்றும் உத்தி சிறப்பானதாக மற்றும் லாபகரமானதாக இருக்க வேண்டும்.

நிறுவனங்களின் அடுத்த கட்டத் திட்டம் என்ன, வளர்ச்சிக்கு எந்த மாதிரியான திட்டங்களை வைத்துள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். அதனுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும். அடுத்து, நாம் முதலீடு செய்யும் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள், அவற்றின் வளர்ச்சி எப்படி உள்ளது, அந்தத் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக, நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் நுகர்வோர்களை எளிதில் சென்றடைய விரிவாக்கம் செய்வார்கள். நன்றாகச் செயல்படும் நிறுவனங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தங்கள் நிறுவனங்களை விரிவாக்கம் செய்யும். அப்படிப்பட்ட நிறுவனத்தைத் தேர்வு செய்யலாம்.

வரவு - செலவு

முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தின் கடந்த 5 ஆண்டுக்கால வளர்ச்சி சீராக வந்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் நிதி நிலை அறிக்கை நல்ல நிலையில் வந்திருக்க வேண்டும்.

குறிப்பாக ஆண்டுக்கு ஆண்டு நிறுவனத்தின் லாபம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்

டிவிடெண்ட் வழங்கும் நிறுவனமா?

நிறுவனங்கள் தங்கள் கையில் இருக்கும் லாபத் தொகையில் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கும். மிகச்சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டாளர்களுக்கு வருடத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது டிவிடெண்ட் வழங்கும். சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் மட்டும்தான் டிவிடெண்ட் கொடுக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சந்தை இறக்கம்... சரியான பங்குகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

பங்கு விலை உயர்வு முக்கியம்

ஒவ்வொரு பங்கும் புதிதாக வெளியிடப்பட்டபோது, வெளியீட்டு விலை நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். வெளியீட்டு விலையிலிருந்து பங்கு விலை தற்போது எவ்வளவு அதிகரித்து வர்த்தகமாகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

அதாவது ஒரு பங்கின் வெளியீட்டு விலை 10 ரூபாய் என வைத்துக்கொண்டால், தற்போது அந்தப் பங்கு 100 ரூபாய்க்கு சந்தையில் வர்த்தகமாகிறது என வைத்துக்கொள்வோம். இப்படி வெளியீட்டு விலையைவிட விலை நன்கு அதிகரித்து வர்த்தகமாகும் பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எளிது. அந்த முதலீட்டை லாபகரமாக மாற்ற சின்னச் சின்ன விஷயங்களை கவனித்தாலே போதும். பங்குச் சந்தையில் நல்ல லாபம் ஈட்டலாம். மேலும், முதலீட்டுக் காலம் குறைந்தது 5 ஆண்டுகளாக இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்க நினைப்பது ரொம்பவே ரிஸ்க் ஆனது.