Published:Updated:

வேளாண் சட்டம் வாபஸ் எதிரொலி? ஒரே நாளில் 1,000 புள்ளிகள் வீழ்ந்த சென்செக்ஸ்!

கடந்த 1.5 ஆண்டுகளில் அவ்வப்போது இறக்கம் கண்டாலும், தற்போது இறங்கியது போல் கடந்த 18 மாதங்களில் நடக்கவில்லை. பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் முடிந்து, கரடியின் ஆதிக்கம் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையா, இல்லையா என்பது இன்னும் சில நாள்கள் கழித்துத்தான் தெரியும்.

வாரத்தில் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி கண்டிருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று மதியம் 03.00 நிலவரப்படி, சென்செக்ஸ் 1,337 புள்ளிகளுக்குமேலும், நிஃப்டி 375 புள்ளிகளுக்குமேலும் இறங்கி, வர்த்தகமானது. பங்குச் சந்தையின் இந்த இறக்கத்திற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.

1. உலகப் பொருளாதாரப் பிரச்னைகள்

அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி இருக்கிறது. சீனாவில் சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. ஆஸ்திரியாவில் இப்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து, ஜெர்மனியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது.

இந்தியப் பங்குச்சந்தை
இந்தியப் பங்குச்சந்தை
vikatan
இன்னும் இன்ஷூரன்ஸை ஒரு முதலீடாகவே நினைக்கிறீர்களா?தவறு செய்கிறீர்கள்! - பணம் பண்ணலாம் வாங்க - 47

தவிர, இங்கிலாந்தில் நாளொன்றுக்கு 41,000 பேர் தொற்று நோயினால் பாதிக்கப்படுவதும், குழந்தைகள் அதிகளவில் தொற்று நோய்க்கு உள்ளாகிற நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்று ஹாங்செங், தைவான் பங்குச் சந்தைகள் மட்டுமே இறக்கத்தில் முடிந்துள்ளன. மற்ற நாடுகளின் பங்குகளின் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் இருப்பதால், உலகக் காரணங்களைவிட உள்நாட்டுப் பிரச்னைகளின் காரணமாகத்தான் சந்தை இறக்கம் கண்டிருப்பதாக சொல்கிறார்கள் நிபுணர்கள்.

2. வேளாண் சட்டம் வாபஸ்

வேளாண் சட்டங்கள் திடீரென வாபஸ் பெறப்பட்டது பங்குச் சந்தை முதலீட்டாளர்களைக் கவலைகொள்ள வைத்திருக்கிறது. எல்லாத் துறைகளிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் வரும். அந்த சீர்திருத்தங்களினால் சந்தைப் பொருளாதாரம் இன்னும் வளர்ச்சி காணும் என்கிற எதிர்ப்பார்ப்பை சீர்குலைப்பதாக மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் இருப்பதாக பங்குச் சந்தை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள்.

போராட்டங்களுக்குப் பயந்து, தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக இப்படி அரசாங்கம் செயல்பட ஆரம்பித்தால், பொருளாதாரம் வளர்ச்சி காணாது என்றே அவர்கள் நினைக்கின்றனர். எனவே, அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் இருந்து முக்கியமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைத் திரும்ப எடுக்கத் தொடங்கி இருப்பதும் இந்த இறக்கத்திற்கு முக்கியமான காரணமாகும்.

Stock (Representational Image)
Stock (Representational Image)
Image by Sergei Tokmakov Terms.Law from Pixabay

3. எதிர்வரும் எஃப் அண்ட் ஒ எக்ஸ்பைரி

வருகிற வியாழக்கிழமை அன்று இந்த மாதத்திற்கான எஃப் அண்ட் ஒ எக்ஸ்பைரி வருகிறது. இதனை ஒட்டி, பலரும் ஷார்ட் போனதால், பங்குச் சந்தைப் புள்ளிகள் கணிசமாக குறைந்துள்ளன.

4. பேடிஎம் பங்கு விலை சரிவு

கடந்த வியாழன் அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பேடிஎம் நிறுவனப் பங்கு விலை முதல் நாளன்றே 27% வரை குறைந்தது. இரண்டாவது நாளான இன்றும் 10% விலை இறக்கம் கண்டது. இந்த நிலையில், ஐ.பி.ஒ கொண்டாட்டம் இந்தியப் பங்குச் சந்தையில் முடிவுக்கு வந்திருப்பதாக சிலர் சொல்கிறார்கள். இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே ஐ.பி.ஒ சந்தை அமர்க்களமாகத்தான் இருந்தது. எந்த ஐ.பி.ஒ-ஆக இருந்தாலும், முதலீட்டாளர்கள் ஓடிவந்து பணம் போட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்கள் எதிர்பார்த்தைப் போல, பல ஐ.பி.ஒ.கள் மிகப் பெரிய லாபத்தைத் தந்தன. ஸொமேட்டோ, நைகா நிறுவனப் பங்குகளின் விலை பங்குச் சந்தையில் பட்டியலான முதல் நாளன்றே கணிசமான லாபத்தைத் தந்தன. ஆனால், பேடிஎம் பங்கு விலை அப்படியொரு லாபம் தராததால், இனி பலரும் ஐ.பி.ஒ சந்தையில் முதலீடு செய்யத் தயங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.

5. கரடிகளின் ஆதிக்கம் தொடங்கியதா?

கோவிட்-19 தொற்று நோய் இந்தியாவில் பரவத் தொடங்கியபின், கடந்த ஆண்டு மே மாதம் பங்குச் சந்தைகள் ஏற்றம் காணத் தொடங்கின.

Stock Market (Representational Image)
Stock Market (Representational Image)
Photo by Joshua Mayo on Unsplash
சினேகாவுக்கு நடந்தது உங்களுக்கும் நடக்காமல் இருக்க..? முதலீட்டில் இந்த 5 விஷயங்களைக் கவனியுங்க!

அந்த ஏற்றம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவ்வப்போது கொஞ்சம் இறக்கம் கண்டாலும், தற்போது இறங்கிய அளவுக்குக் கடந்த 18 மாதங்களில் நடக்கவில்லை. இந்த நிலையில், இந்தியப் பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் முடிந்து, கரடியின் ஆதிக்கம் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையா, இல்லையா என்பது இன்னும் சில நாள்கள் கழித்துத்தான் தெரியும்.

தற்போது சந்தை இறங்கிவருவது இன்னும் சில நாள்கள் தொடர வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். என்றாலும், நீண்ட கால முதலீட்டாளர்கள் நல்ல பங்குகளில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு