பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

எரிசக்தியில் இந்தியா சேமித்த 100 பில்லியன் டாலர்... முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை?

எரிசக்தியில் இந்தியா...
பிரீமியம் ஸ்டோரி
News
எரிசக்தியில் இந்தியா...

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 16

எண்ணெய் விலை தாறுமாறாகச் சந்தையில் ஏறும்போதெல்லாம் இந்தியா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் தயவில் வாழ்வதாக நினைத்துக் கொண்டே இந்திய ஊடகங்கள் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்கின்றன. இதனா லேயே ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை தாறுமாறான ஏற்றத்தைச் சந்திக்கும் போதும் பங்குச் சந்தையில் ஏற்படுகிற பாதிப்பு பெருமளவுக்கு இருக்கிறது. உதாரணமாக, இந்த ஆண்டின் முதல் பாதியில் கச்சா எண்ணெயின் விலை 47% அதிகரித்தபோது, (உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரின் காரணமாக) நிஃப்டி கிட்டத்தட்ட 100% அளவிலான இறக்கத்தைச் சந்தித்தது.

செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்
செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

இதன் உண்மையான பின்னணியை ஆராய்ந்து பார்ப்போம். இந்தியாவின் எரிசக்தி (கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற எரிபொருள்களை எரிசக்தி (energy) என்கிறோம். இதிலிருந்துதான் பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது) குறித்த விஷயத்தில் நம் அனைவருக்கும் இருக்கும் பொதுவான எண்ணம் ஒரே மாதிரியாக இல்லை.

சீனா மற்றும் ஜப்பானைவிட அதிகம்...

இந்தியாவின் ‘ஆற்றல் செறிவு (Energy Intensity)’ என்பது (மொத்த எரிசக்தி உபயோகத்தை ஜி.டி.பியால் வகுத்தால் கிடைக்கும் எண்)அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளைவிட அதிகமாகவே இருக்கிறது. இந்த அளவீடு பற்றிப் புரிந்துகொள்ள பின்வரும் விளக்கம் உதவும்.

ஒரு டாலர் அளவிலான ஜி.டி.பி உருவாக எத்தனை டெரா வாட் ஹவர் (Twh) மின்சாரம் உபயோகிக்கப்படுகிறது என்பதுதான் ‘ஆற்றல் செரிவு’ என்ற அளவீடாகும். கடந்த 10 ஆண்டுக் காலத்தில் இந்த அளவீட்டில் இந்தியாவின் நிலை ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும்போது கணிசமான அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த அளவீடானது சராசரியாக ஆண்டொன்றுக்கு 1.3% அளவு குறைந்துள்ளது (பார்க்க அட்டவணை).

இந்த அட்டவணைபடி பார்த்தால், இந்தியா இந்த அளவீட்டில் தன்னை இன்னமும் முன்னேற்றமடையச் செய்துகொள்வதற்கான வாய்ப்புகள் கணிசமான அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பது உங்களுக்குப் புரியும். உதாரணமாக, ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகள் இந்தியா தன்னுடைய ஒரு டாலர் ஜி.டி.பி-யை உற்பத்தி செய்ய உபயோகிக்கும் எரிசக்தியில், மூன்றில் ஒரு பகுதியையே தங்களுடைய ஜி.டி.பி-யில் ஒரு டாலரை உருவாக்கப் பயன்படுத்துகின்றன.

சீனாவோ கடந்த 10 ஆண்டுக் காலத்தில் ‘ஆற்றல் செறிவு’ அளவீட்டில் இந்தியாவைவிட மிக அதிக அளவிலான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. உலகத்தின் மிகப் பெரிய நான்கு பொருளாதாரங்களில் ஜப்பான்தான் எரிசக்தியை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நாடாகத் திகழ்ந்து வருகிறது.

எரிசக்தியில் இந்தியா சேமித்த 100 பில்லியன் டாலர்... முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை?

உற்பத்திப் பங்களிப்பு குறைந்து சேவைப் பங்களிப்பு அதிகரிப்பு...

அதிக அளவிலான எரிசக்தி சிக்கனமும் பொருளா தாரத்தில் அதனால் உருவாகிற தாக்கமும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஜி.டி.பி-யில் உற்பத்தி நடவடிக்கைகளின் பங்களிப்பு குறைந்துகொண்டேயும் சேவைகளின் பங்களிப்பு அதிகரித்துக்கொண்டேயும் இருந்துவந்துள்ளது.

குறிப்பாக, மேனுஃபாக்சரிங் நடவடிக் கைகளின் பங்களிப்பானது கடந்த 10 ஆண்டுக் காலத்தில் கிட்டத்தட்ட 30% என்ற நிலையில் இருந்து, 25 சதவிகிதமாகக் குறைந்திருந்தது. இதன் காரணமாக இந்தியா ஒரு டாலர் ஜி.டி.பி-க்கு உபயோகிக்கும் எரிசக்தியின் அளவானது குறைந்துள்ளது. ஆற்றல் செரிவில் இந்தியா காணும் முன்னேற்றமானது அதன் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அனுகூலங்களை உருவாக்கவே செய்யும்.

கடந்த 10 ஆண்டுக் காலத்தில் இந்தியா உபயோகித்த எரிசக்தியானது ஜி.டி.பி-யின் ஒரு சதவிகிதமாகக் கணக்கீடு செய்தால், அது 16% என்ற அளவீட்டில் இருந்து 13% (2022 நிதியாண்டில்) என்ற அளவுக்குக் குறைந்துள்ளது).

நம்முடைய ஜி.டி.பி-க்காக உபயோகிக்கப்பட்ட எரிசக்தியில் இருந்து கிட்டத்தட்ட 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான எரிசக்தி பயன்பாடு குறைக்கப் பட்டு உள்ளது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது. இது எவ்வளவு பெரிய தொகை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமில்லையா?

இந்திய அரசாங்கம் 2022 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு தன்னுடைய மொத்த ஜி.டி.பி-யில் 3% அளவான தொகையை (100 பில்லியன் டாலர் அளவிலான) ஒதுக்கீடு செய்தது. இது உலக அளவில் இருக்கும் நாடுகளின் மத்தியில் மூன்றாவது பெரிய அளவிலான ராணுவத் துக்கான நிதி ஒதுக்கீடாகும். இதிலிருந்து மேலே சொன்ன தொகையின் அளவின் முக்கியத் துவம் உங்களுக்கு நன்கு புரிந் திருக்கும்!

குறையும் இந்தியாவின் இறக்குமதி எரிசக்தி...

இந்தியாவின் எரிசக்தித் தேவையில் 80 சதவிகிதத்துக்கும் மேலான எரிசக்தியானது இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியா எரிசக்தி உபயோகத்தில் கண்டுவரும் சேமிப்பானது அதனுடைய கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி இறக்குமதியை கணிசமான அளவுக்கு குறைய வைக்கிறது.

கடந்த பத்து ஆண்டு களில் இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியானது ஜி.டி.பி-யில் 9%-10% என்கிற அளவில் இருந்து 4%-5% என்கிற அளவுக்குக் குறைந்துள்ளது. (பார்க்க வரைபடம்).

எரிசக்தியில் இந்தியா சேமித்த 100 பில்லியன் டாலர்... முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை?

முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது கிட்டத்தட்ட 3% என்ற அளவில் இருப்பது பல முதலீட்டாளர்களுடைய ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வதற்கான காரணியாக இருக்கிறது. இது போன்ற சூழலில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா வின் எரிசக்தி திறன் என்பது அதிகரிக்காமல் இருந்திருந்தால் என்னவாயிருக்கும் என்றும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதுபோன்ற எரிசக்தி சேமிப்பு நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும் அதே சமயத்தில், அயல்நாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய அந்நிய செலாவணியையும், அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீட்டா ளர்கள் நம் நாட்டினுள் கொண்டு வரும் அந்நியச் செலாவணியையும் சேர்த்துக் கணக்கிட்டால், அது கிட்டத்தட்ட நம்முடைய ஜி.டி.பி-யில் 1.5% - 2% என்ற அளவில் இருக்கிறது.

இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 3 சதவிகிதமாக இருக்கும் வேளையில், நாட்டை நோக்கிவரும் அந்நிய முதலீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பி வைக்கிற அந்நிய செலாவணியின் மூலம் கிடைக்கிற செலாவணியின் அளவானது, ஜி.டி.பி-யில் 1% - 1.5% இருக்கிறது. நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் இருந்து இந்த அந்நிய முதலீடு மற்றும் அயல்நாடு வாழ் இந்தியர் அனுப்பும் டாலர்கள் மூலம் கிடைக்கும் அந்நிய செலா வணியைக் கழித்தது போக மீதமிருக்கும் பற்றாக்குறை தொகை யான ஜி.டி.பி-யில் 1.5% அளவிலான அந்நிய செலாவணியை இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்பைக் கொண்டு ஓரளவுக்கு சுலபமாக சமாளிக்க முடியும்.

2013-ல் இந்தியா இருந்த நிலையைக் காட்டிலும் இப்போது இருக்கும் நிலைமை மிக மிக ஸ்திரமான ஒன்று.

எரிசக்தியில் இந்தியா சேமித்த 100 பில்லியன் டாலர்... முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை?

ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுத்த எரிசக்தி திறன்...

2013-ம் ஆண்டில் இந்தியாவில் நிலவிய சூழலில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது ரூபாய் 54-ல் இருந்து ரூபாய் 62-க்கு ஆறே மாதத்தில் வீழ்ச்சி அடைந்தது. இன்றைக்கு இந்திய ரூபாய் அது போன்ற வீழ்ச்சியைச் சந்திப்பதற்கான சூழ்நிலை இல்லை. இதற்குக் காரணமாக அமைந்தது, இந்தியாவில் கடந்த பத்து ஆண்டு களில் அதிகரித்த எரிசக்தி திறன் என்றும் கூறலாம்.

எதிர்வரும் காலத்தில் இந்தியா இன்னமுமே தன்னுடைய எரிசக்தித் திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். உதாரணமாக, இன்றைக்கு இந்தியாவைவிட சீனா இரண்டு மடங்கு எரிசக்தித் திறனைக் கொண்டுள்ளது. எனவே, இந்தியா இன்னமும் தன்னுடைய எரிசக்தித் திறனை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் சேமிப்புகள் அதிகரிக்கவே செய்யும்.

ஒவ்வொரு டாலர் ஜி.டி.பி-க்கும் ஆகும் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் செலவை (எரிசக்தி) நாம் கணிசமாக குறைக்கும்பட்சத்தில் அதன் மூலம் உருவாக்கும் சேமிப்பை மீண்டும் சிறப்பான வழிகளில் அரசாங்கம் முதலீடு செய்வதற்கான வாய்ப்புள்ளது. அது போன்ற முதலீடுகள் மேலும் அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்யும்.

(இன்னும் சொல்கிறேன்)