Published:Updated:

ஷேர்லக்: அதிகரிக்கும் பங்கு முதலீட்டுக் கணக்குகள்... சிறு முதலீட்டாளர்கள் உஷார்..!

ஷேர்லக்

பிரீமியம் ஸ்டோரி

அவசர வேலையாக மும்பை சென்று விட்டதாக ஷேர்லக் தகவல் அனுப்பி யிருந்தார். எனவே, நாம் கேள்விகளை அவருக்கு மெயிலில் அனுப்பி வைத்தோம். சரியாக மாலை 4 மணிக்கு பதில் மெயில் போட்டிருந்தார்.

ஆர்.பி.எல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.2 கோடி அபராதம் விதித்திருக்கிறதே... என்ன காரணம்?

“சேமிப்புக் கணக்குகளை ஆரம்பிப்பது மற்றும் வங்கி வாரியத்தின் அமைப்பு ஆகியவற்றில் விதிமுறைகளை மீறியதற்காக ரிசர்வ் வங்கி ஆர்.பி.எல் வங்கிக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்திருக்கிறது. இதன் காரணமாக, கடந்த செப்டம்பர் 28-ம் தேதி இதன் பங்கு விலை 1% வரை குறைந்து, ரூ.189.25-க்கு வர்த்தகமானது. ஆனால், வியாழக்கிழமை மதியம் வாக்கில் பங்கின் விலை 2.3% அதிகரித்து வர்த்தகமானது.”

ஷேர்லக்: அதிகரிக்கும் பங்கு முதலீட்டுக் கணக்குகள்... சிறு முதலீட்டாளர்கள் உஷார்..!

ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி ஐ.பி.ஓ வெளியிடுவது பற்றி...

“ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி நிறுவனம் ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.2,768 கோடி நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது. இதில் ரூ.789 கோடி மதிப்புள்ள பங்குகளை நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டவும், இதர மதிப்புள்ள தொகையை சிறு முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனமல்லாத முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டவும் இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட், எஸ்.பி.ஐ, ஆக்ஸிஸ், இன்வெஸ்கோ இந்தியா, யு.டி.ஐ, கோட்டக் அண்ட் எடெல்வைஸ் ஆகிய உள்நாட்டு ஃபண்ட் நிறுவனங்களுக்கும், அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, ஹெச்.எஸ்.பி.சி, மார்கன் ஸ்டான்லி ஆசியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் 8இந்த நிறுவனம் பங்குகளை ஒதுக்கியிருக்கியிருக்கிறது. செப்டம்பர் 29-ம் தேதி ஆரம்பித்திருக்கும் இந்த ஐ.பி.ஓ-வுக்கு அக்டோபர் 1-ம் தேதி வரை முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். பங்கு விலைப்பட்டை ரூ.695 - 712. குறைந்தபட்சம் 20 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, அதன் மடங்குகளில் விண்ணப்பிக்க வேண்டும். முதல் நாள் வெளியீட்டின்போது 19% பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.”

இந்தியாவில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறதே?

“உண்மைதான். தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை கணிசமான அளவுக்கு இருக்கிறது. மொத்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 46,90,726 முதலீட்டாளர்களுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 2020 பிப்ரவரியில் இந்தியாவில் டீமேட் கணக்கு எண்ணிக்கை 4 கோடியாக இருந்தது. இது 2021 ஜூன் மாதத்தில் 6 கோடியாக அதிகரித்துள்ளது. அண்மைக் காலத்தில் இந்தியப் பங்குச் சந்தை கொடுத்திருக்கும் அதிக வருமானத்தைப் பார்த்து விட்டு பலரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்திருப்பதே இந்த அதிகரிப்புக்கு காரணம். இந்த அதீத வருமானம் அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடருமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

காரணம், பங்குச் சந்தையின் இயற்கை குணம் ஏற்ற இறக்கம் என்பதாகும். எனவே, ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்பதான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். ஒருவரின் மொத்த முதலீட்டுத் தொகை யையும் பங்குச் சந்தையில் போடக் கூடாது. அப்படிச் செய்யும்பட்சத்தில் சந்தை ஏதாவது அதிக வீழ்ச்சியைச் சந்திக்கும்போது, மூலதனத்தைக்கூட இழக்க நேரிடும்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியப் பங்குச் சந்தை 50 - 60% வீழ்ச்சிக் கண்டது. அப்போது பலரும் பதறிப்போய், அதிக இழப்போடு சந்தையிலிருந்து வெளியேறினார்கள். அந்த வகையில், இப்போது பங்கு சார்ந்த முதலீடுகளில் அதிக லாபத்தில் இருப்பவர்கள், லாபத்தின் ஒரு பகுதியை வெளியே எடுப்பது மிக நல்லது. அடுத்து இப்போது மொத்தத் தொகையை ஒரேநேரத்தில் சந்தையில் போடுவதைத் தவிர்த்து இறக்கங்களின்போது அவ்வப்போது முதலீடு செய்துவருவது நீண்ட காலத்தில் மிகவும் லாபகரமாக இருக்கும் என்கிறார்கள் பகுப்பாய்வாளர்கள்.”

பி.ஹெச்.இ.எல் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“இந்திய கடற்படையின் பெரும்பாலான போர்க் கப்பல்களில் உள்ள பிரதான துப்பாக்கியான மேம்படுத்தப் பட்ட ‘சூப்பர் ரேபிட் கன் மவுன்ட் (எஸ்.ஆர்.ஜி.எம்)’ தயாரித்து வழங்குவதற்காக ஆர்டரை கப்பல் கட்டும் நிறுவனமான கோவா ஷிப்யார்டு நிறுவனத்திடமிருந்து பி.ஹெச்.இ.எல் நிறுவனம் பெற்றிருக்கிறது. இதற்கான அறிவிப்பை பி.ஹெச்.இ.எல் நிறுவனம் வெளியிட்ட பிறகு, கடந்த வாரம் புதன்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 7% அதிகரித்தது. தற்போதைய நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 52 வார அதிகபட்ச விலையை விட 24.21% விலை குறைந்தும், 52 வார குறைந்தபட்ச விலையைவிட 125.23% விலை அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது.”

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்திருக்கும் பல மல்ட்டிபேக்கர் பங்குகளின் விலை அதிகரித்திருக்கிறதே?

“கடந்த வாரத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் 60000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. கடந்த 18 மாதங்களில் சந்தையானது 130% ஏற்றத்தைப் பதிவு செய்திருக் கிறது. அதே போல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளும் 350% வளர்ச்சியைப் பதிவு செய்திருக் கின்றன. இதன் காரணமாக, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்யப் பட்டிருக்கும் மல்ட்டிபேக்கர் பங்குகளான பாலாஜி அமின்ஸ், டன்லா பிளாட்ஃபார்ம்ஸ், சி.ஜி.பவர் அண்ட் இண்டஸ்ட் ரியல் சொல்யூஷன்ஸ், மாஸ்டெக், அதானி டோட்டல் கேஸ், சரிகம இந்தியா, நாஹர் ஷிப்பிங் மில்ஸ், இன்டெலெக்ட் டிசைன் அரேனா, தேஜஸ் நெட்வொர்க் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் பங்குகளின் விலை 20 மடங் குக்கும் மேல் அதிகரித்திருக்கிறது.”

ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி பங்கு களின் விலை சரிவுக்கு என்ன காரணம்?

“ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி-யில் வைத்திருக்கும் பங்குகளி லிருந்து 1.06 கோடி பங்குகளை ஸ்டாண்டர்டு லைஃப் இன் வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் குறைக்கப்போவதாக வெளியான தகவலால், ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி பங்குகளின் விலை செப்டம்பர் 29-ம் தேதி 5.79% வரை குறைந்து, ரூ.2,897.65-க்கு வர்த்தகமானது. தற்போதைய நிலையில் ஸ்டாண் டர்டு லைஃப் இன்வெஸ்ட் மென்ட்ஸ் நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி நிறுவனத்தின் 4.52 கோடி பங்குகளை (21.23%) வைத்திருக்கிறது.”

வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு செபி அபராதம் விதித்திருக்கிறதே?

“பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான வேணுகோபால் தூத் மற்றும் அந்த நிறுவனத்தின் மற்ற இருவருக்கு உள்வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக ரூ.75 லட்சம் அபராதம் விதித் திருக்கிறது. எலெக்ட்ரோபார்ட்ஸ் இந்தியா மற்றும் வீடியோகான் ரியாலிட்டி அண்டு இன்ஃப்ராஸ்ட் ரக்சர் நிறுவனத்துக்கு தலா ரூ.25 லட்சம் அபராதம் செபி விதித்துள்ளது. இந்த அபராதத்தை 45 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் செபி உத்தரவு வழங்கியிருக்கிறது.

செபியின் விசாரணையின்போது, வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 41 வங்கிகளிடம் கடன் வாங்கி யிருப்பதும், அதை முறையாகச் செலுத்தாமல் வாராக் கடன்களாக இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. மேலும், இந்த நிறுவனத்தின் நிதி நிலைமை பலவீனமாக இருப்பதும் செபி அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது.”

சில்வர் இ.டி.எஃப் வெளியீடு குறித்து?

“செபி அமைப்பின் தலைவரான அஜய் தியாகியின் தலைமையில், கடந்த செப்டம்பர் 28-ம் தேதி இயக்குநர் குழு கூட்டம் நடந்தது. அதில் சில்வர் இ.டி.எஃப் வெளியிடு வதற்கான ஒப்புதலை இயக்குநர் குழு வழங்கியிருக்கிறது. கோல்டு இ.டி.எஃப் வர்த்தகத்தின் விதிமுறைகளை யொட்டியே சில்வர் இ.டி.எஃப் முதலீடுகளும் பாதுகாப் பான வகையில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் இந்திய குடும்பங்களின் முதலீட்டு அங்கமாக இருந்து வருகின்றன. தற்போதைய நிலையில் தங்கம் சார்ந்த முதலீடான கோல்டு இ.டி.எஃப் நிறுவனங்கள், ஆகஸ்ட் 31, 2021-ம் தேதி நிலவரப்படி ரூ.16,349 கோடியை நிர்வகித்து வருகின்றன. அதுபோக, அரசின் தங்கப் பத்திர முதலீடுகளிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் சில்வர் சார்ந்த முதலீடுகள் இல்லாத சூழல் இருந்து வந்தது. தற்போது வெளிவர இருக்கிற சில்வர் இ.டி.எஃப் அந்த வெற்றிடத்தைப் போக்கும் எனலாம்.”

ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறதே... என்ன காரணம்?

“உள்வர்த்தகத்தில் ஈடுபட்ட காரணத்தால் ஜீ என்டர் டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த பிஜால் ஷா, கோபால் ரிடோலியா, ஜதின் சாவ்லா, கோமதி தேவி ரிடோலியா மற்றும் தல்ஜித் சாவ்லா ஆகியோர் எந்த விதத்திலும் மறு உத்தரவு வரும் வரை நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கு பத்திரங்களை வாங்கவோ, விற்கவோ, கையாளவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக செபி தெரிவித்தது. இதையடுத்து, செப்டமப்ர் 28-ம் தேதி வர்த்தகத்தில் ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகளின் விலை 2.23% சரிந்து, ரூ.315-க்கு வர்த்தகமானது. வியாழக்கிழமை மதியமும் விலை குறைந்து ரூ.305-க்கு வர்த்தகமானது.”

டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் குறித்து கோல்டுமேன் சாக்ஸ் என்ன சொல்லியிருக்கிறது?

“கிளவுட் ஸ்டோரேஜ் பயன்பாட்டுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவ தால், ஐ.டி நிறுவனங்களின் மிக முக்கிய நிறுவனங்களான இன்ஃபோசிஸ் மற்றும் டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்கு விலை தற்போதைய விலையிலிருந்து 20% வரை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது. ‘வேகமான வளர்ச்சியைக் கொண்டுள்ள லார்ஜ்கேப் ஐ.டி நிறுவனமாக இன்ஃபோசிஸ் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி நன்றாக இருகிறது. இந்த நிறுவனத்தின் விற்பனை மேம் பட்டிருக்கிறது. இதன் காரண மாக இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் ஏற்றப் போக்கில் வர்த்தகமாகி வருகிறது என கோல்டுமேன் சாக்ஸ் தெரிவித் துள்ளது. இதன் இலக்கு விலையை ரூ.2,117-ஆக கோல்டு மேன் சாக்ஸ் நிர்ணயித்துள்ளது.

அதேபோல டி.சி.எஸ் நிறுவனத்தின் சிறப்பான பல்வேறு செயல்பாடுகளும் அதன் பங்கு விலை ஏற்றத்துக்கு காரணமாக அமையும் எனச் சொல்லி, இதன் இலக்கு விலையை ரூ.4.578 ஆகவும் கோல்டுமேன் சாக்ஸ் நிர்ணயித் துள்ளது. இது தற்போதைய வர்த்தக விலையான ரூ.3,769-ஐ விட 21.4% அதிகமாகும். டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத் தின் பங்குகளை வாங்கச் சொல்லியிருக்கும் அதே சமயம், மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யவும் கோல்டுமேன் சாக்ஸ் முதலீட் டாளர்களுக்கு பரிந்துரைத்துள்ளது.”

சிறப்பான மற்றும் பொறுப்பான முதலீடு..!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘சிறப்பான மற்றும் பொறுப்பான முதலீடு..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, அக்டோபர் 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 to 12.00 மணி வரை நடைபெறுகிறது. இதில், நிதி ஆலோசகர்கள் பி.வி.சுப்ரமணியம், வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ், பிராந்திய தலைவர் க.சுவாமிநாதன் ஆகியோர் பேசுகிறார்கள். அனுமதி இலவசம் பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

எம்.சதீஷ்குமார்
எம்.சதீஷ்குமார்

பங்கு சார்ந்த முதலீடு... செல்வம் சேர்க்கும் உத்திகள்..!

நாணயம் விகடன் நடத்தும் ‘பங்கு சார்ந்த முதலீடு... செல்வம் சேர்க்கும் உத்திகள்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி அக்டோபர் 16, 2021 (சனிக்கிழமை) காலை 10.30 மணி - 12 மணி வரை நடைபெறும். இன்றைய தேதியில் பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக, வரிக்குப் பிந்தைய வருமானத்தை அதிகம் தருவதில் இதர முதலீடுகளைவிட பங்கு சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்ட்) முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இவற்றின் மூலம் எப்படி செல்வம் சேர்ப்பது என்பது குறித்து எம்.சதீஷ்குமார் (நிறுவனர், Sathishspeaks.com) விளக்கிப் பேசுகிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.300. முன் பதிவுக்கு: https://bit.ly/3krqvij

சில பங்குகளின் போனஸ், ஸ்டாக் ஸ்ப்ளிட் (02.10.2021 முதல் 09.10.2021 வரை)
சில பங்குகளின் போனஸ், ஸ்டாக் ஸ்ப்ளிட் (02.10.2021 முதல் 09.10.2021 வரை)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு