பிரீமியம் ஸ்டோரி

வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கே ஷேர்லக் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருந்தார். “காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கியமான மீட்டிங் இருக்கிறது. சரியாக மாலை 4.30-க்கு உங்கள் அலுவலகத்துக்கு வந்துவிடுவேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். நாம் அவர் சொன்ன நேரம் நெருங்கியதும் ஏலக்காய் டீக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, காத்திருந்தோம். அவர் வந்து சேர, டீயும் வந்தது. கப்பில் ஊற்றித் தர, பருகிக் கொண்டே நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

நைகா நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டில் நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் அதிக அளவு விண்ணப்பங்கள் வந்திருக்கிறதே..?

“இன்று வியாழக்கிழமை அன்று நைகா நிறுவனம் ஐ.பி.ஓ வந்தது. இதில் நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் ரூ.2,396 கோடி மதிப்புள்ள பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கு நல்ல டிமாண்ட் இருந்ததால், நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் ரூ.95,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இது ஒதுக்கப்படும் அளவைவிட 40 மடங்கு அதிகமாகும். கனடா பென்ஷன் ஃபண்ட், பிளாக்ராக், கேப்பிடல், ஃபிடலிட்டி ஆகிய குளோபல் ஃபண்ட் நிறுவனங்கள் நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் பங்குகள் வேண்டி விண்ணப்பம் செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் பங்கு விலை ரூ.1,085 - 1,125-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இந்த ஐ.பி.ஓ மூலம் மொத்தம் ரூ.5,300 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இதில் ரூ.630 கோடி புதிய பங்கு வெளியீடும், ஓ.எஃப்.எஸ் முறையில் ரூ.4,720 கோடி பங்கு வெளியீடும் அடங்கும்.”

ஷேர்லக்: ஐ.பி.ஓ கடன்...
முதலீட்டாளர்கள் உஷார்..!

எஸ்.ஜே.எஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுவது பற்றி..?

“இந்த நிறுவனம் வருகிற நவம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை ஐ.பி.ஓ வெளியிடுகிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் எவர்கிராஃப் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ரூ.710 கோடி மதிப்புள்ள பங்குகளையும், கே.ஏ.ஜோசபின் ரூ.90 கோடி மதிப்புள்ள பங்குகளையும் ஓ.எஃப்.எஸ் முறையில் வெளியிட்டு நிதி திரட்டுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் எவர்கிராப் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் 77.86% பங்குகளும், கே.ஏ.ஜோசப் 20.74% பங்குகளும் உள்ளது. இந்தப் பங்கு வெளியீட்டின் விலைப்பட்டை ரூ.531 - 542 ஆகும்.”

புதிய பங்கு வெளியீட்டில் முதலீடு செய்ய கடன் வாங்குவது அதிகரித்திருக்கிறதே?

“கடன் வாங்கி முதலீடு செய்யக் கூடாது என்பார்கள். அதுவும் பங்குச் சந்தையில் அப்படிச் செய்வது மகா தவறாகும். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, கடனுக்கான வட்டி, இரண்டாவது, பங்குச் சந்தை முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் ஆகும். பங்குச் சந்தை உச்சத்தில் இருப்பதால், அதிக புதிய பங்கு வெளியீடுகள் (ஐ.பி.ஓ-க்கள்) வந்து கொண்டிருக் கின்றன. பட்டியலிடப்பட்ட தினத்தன்று கிடைக்கும் அதீத லாபத்துக்காகப் பலரும் கடன் வாங்கி முதலீடு செய்ய ஆரம்பித் திருக்கிறார்கள். இந்தக் கடன்களைப் பலரும் அவர் களின் புரோக்கர்கள் மூலம் வாங்குகிறார்கள். கடனுக்கான தேவை அதிகரித்திருப்பதால், இதற்கான குறுகிய கால வட்டி 6 சதவிகிதத்திலிருந்து இரு மடங்கு உயர்ந்து, 12 சதவிகித மாக உள்ளது. இது தவிர, பலரும் தனிநபர் கடன், தங்க நகைக் கடன் வாங்கியும் ஐ.பி.ஓ-க்களில் முதலீடு செய்கிறார்கள். இப்படி கடன் வாங்கி ஐ.பி.ஓ-க்களில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க்கானது. இதற்குப் பதில், நீண்ட காலத்தில் சிறப்பாகச் செயல் பட்டுவரும் நிறுவனப் பங்குகளை விலை இறக்கத்தில் வாங்கிச் சேர்த்தாலே நல்ல லாபம் பார்க்க முடியும்.’’

ஃபினோ பேமென்ட் பேங்க், பாலிசி பஜார் நிறுவனத்தின் ஐ.பி.ஓ குறித்து...

“ஃபினோ பேமென்ட் பேங்க் அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை ஐ.பி.ஓ வெளியிடுகிறது. இந்த ஐ.பி.ஓ-வில் ரூ.300 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளை வெளியிடுகிறது. ஓ.எஃப்.எஸ் முறையில் புரொமோட்டர் நிறுவனமான ஃபினோ பேடெக் நிறுவனத்தின் 1.56 கோடி பங்கு களையும் வெளியிடுகிறது.

இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.1,200.29 கோடியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்போகிறது. இந்தப் பங்கு வெளியீட்டில் 75% தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக் காகவும், 15% நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்காகவும், 10% சிறு முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முதலீட் டாளர்கள் குறைந்தபட்சம் 25 பங்குகளை வாங்க வேண்டும். அதற்குமேல் தேவைப்பட்டால், அதன் மடங்கில் வாங்கிக்கொள்ள லாம். விலைப்பட்டை ரூ.560-577.

அதே போல, பாலிசிபஜார் நிறுவனமும் நவம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை ஐ.பி.ஓ வெளியிடுகிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.5,625 கோடி நிதியை இந்த நிறுவனம் திரட்டுகிறது. இதன் விலைப்பட்டை ரூ.940 - 980. முதலீட்டாளர்கள் குறைந்த பட்சம் 14 பங்குகளை வாங்க வேண்டும்.”

சி.ஜி பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன் நிறுவனத்தின் பங்கு விலை அப்பர் சர்க்யூட்டில் வர்த்தக மாகிறதே?

“முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் பங்கு விலை, புதன்கிழமை 5% விலை அதிகரித்து ரூ.157.65 என்கிற அப்பர் சர்க்யூட் விலையில் வர்த்தகமானது. கடந்த 11 வாரத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 12.8% விலை ஏற்றத்தை சந்தித்திருக்கும் நிலையில், இந்தப் பங்கு விலை 110% அதிகரித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி ரூ.75.20 விலையில் வர்த்தகமானது. கடந்த நான்கு வர்த்தக நாள்களில் மட்டும் இது 15% விலை ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. 2020-ம் ஆண்டின் மார்ச் மாத விலையான ரூ.4.69-லிருந்து 3,261% ஏற்றத்தைத் தந்துள்ளது. வியாழக்கிழமை ஒட்டுமொத்த சந்தை இறக்கத்தில் சுமார் 5% விலை இறங்கி, ரூ.150 என்கிற நிலையில் வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. முருகப்பா குழுமத்தின் மீது நம்பிக்கைதான் இந்தப் பங்கு இவ்வளவு வேகமாக உயரக் காரணம். இந்தப் பங்கு ரூ.10-க்கு வாங்கி யவர்கள், 15 மடங்கு அடைந்திருப்பார்கள். அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.”

ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் நிறுவனம் ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் சோலார் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருக்கிறதாமே?

‘‘நிலையன்ஸ் குழும நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் நிறுவனம் ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் சோலார் நிறுவனத்தின் 4.91 கோடி பங்குகளைக் கையகப் படுத்தியிருக்கிறது. இது ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் சோலார் நிறுவனத்தின் மொத்தப் பங்குகளில் 25.9% ஆகும். பங்கு ஒன்றுக்கு ரூ.375 கொடுத்து இந்தப் பங்குகளை ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் நிறுவனம் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.1,840 கோடி. கடந்த வாரம் வியாழக்கிழமை வர்த்தக முடிவில் இந்தப் பங்கின் விலை ரூ.415.55-க்கு வர்த்தகமாகி முடிந்தது.’’

ஐ.ஆர்.பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்தது ஏன்?

“இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, ரூ. 5,347 கோடி மதிப்புள்ள 252.45 மில்லியன் முன்னுரிமைப் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது. பங்கு ஒன்றுக்கு ரூ.211.79 என்கிற விலையில் முன்னுரிமை பங்குகளை வெளியிடுகிறது. இதன் காரணமாக ஐ.ஆர்.பி இன்ஃப்ராஸ்ட் ரக்சர் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 10% லோயர் சர்க்யூட்டில் வர்த்தகமாகிறது.”

முதலீட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த பேடிஎம் ஐ.பி.ஓ வெளியீடு குறித்து...

‘‘இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின், தாய் நிறுவனம் ‘ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்’ பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்திருந்தது. இதற்கான அனுமதியைக் கேட்டு செபிக்கு சில மாதங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான அனுமதியை செபி தற்போது வழங்கி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, வருகிற நவம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பேடிஎம் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுகிறது.

இந்த ஐ.பி.ஓ மூலம் மொத்தம் 18,300 கோடி ரூபாய் நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது. ஏற்கெனவே நிர்ணயித்த ரூ.16,600 கோடி இலக்கில் இருந்து ரூ.1,700 கோடியை தற்போது பேடிஎம் அதிகப்படுத்தி இருக்கிறது. பங்கு விலைப்பட்டை ரூ.2,080 - ரூ.2,150. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.8,300 கோடி ரூபாயும், ஓ.எஃப்.எஸ் முறையில் ரூ.10,000 கோடி ரூபாயும் திரட்டப்படுகிறது.

கடந்த 2010-ம் ஆண்டு ‘கோல் இந்தியா’ நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ரூ.15,000 கோடியைத் திரட்டியது. இதுவரை இந்தியாவில் அதிக தொகை திரட்டப்பட்ட ஐ.பி.ஓ இதுதான். தற்போது பேடிஎம் சுமார் ரூ.18,300 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதால் இது மிகப் பெரிய ஐ.பி.ஓ-வாக பார்க்கப்படுகிறது.’’

வியாழன் அன்று சென்செக்ஸ் 1158 புள்ளிகளும், நிஃப்டி 353 புள்ளிகளும் இறங்கியது ஏன்?

‘‘எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி என்பதைத் தவிர, வேறு பெரிய காரணம் எதுவும் இல்லை என்கிறார்கள். இன்று இப்படி நடக்கும் என்று பலரும் எதிர் பார்த்தார்கள். அப்படியே நடந்துள்ளது. ஆனால், இறக்கம் பெரிய அளவில் தொடருமா என்பது சந்தேகமே. நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த இறக்கத் தைப் பொருட்படுத்தத் தேவை யில்லை. இந்த இறக்கத்தை பயன்படுத்தி, நல்ல பங்குகள் விலை குறைவாகக் கிடைத்தால் நிச்சயம் வாங்கலாம். வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். பாதுகாப்பாக இந்த தீபாவளியைக் கொண்டாடுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார்!

ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... ரிஸ்க்குக்கு ஏற்ற வருமானம்..!

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... ரிஸ்க்குக்கு ஏற்ற வருமானம்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த உள்ளன. இந்த நிகழ்ச்சி நவம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெகிறது. இதில் முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயண் (Aknarayanassociates.com), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் சிறப்புரை யாற்றுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

தீபாவளி முகூர்த் டிரேடிங்..!

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி தினத்தன்று இந்திய பங்குச் சந்தைகளான பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ-யில் முகூர்த் டிரேடிங் (Muhurat trading) நடக்கிறது. பி.எஸ்.இ-யில் இந்த முகூர்த் டிரேடிங், இந்த வருடம், தீபாவளி நவம்பர் 4 அன்று நடைபெறவுள்ளது. மாலை 6.15 மணிக்கு தொடங்கவுள்ளது. முகூர்த் டிரேடிங் மாலை 6.15 முதல் மாலை 7.15 மணி வரை நடக்கிறது. இதே 1 மணி நேரத்தில் என்.எஸ்.இ-யிலும் முகூர்த் டிரேடிங் நடைபெறுகிறது.

சிவராமகிருஷ்ணன்
சிவராமகிருஷ்ணன்

சென்செக்ஸ் 60000-லிருந்து 120000 வரையான பயணம்... முதலீட்டுக்கான வாய்ப்புகள்..!

நாணயம் விகடன், ‘சென்செக்ஸ் 60000-லிருந்து 120000 வரையான பயணம்... முதலீட்டுக்கான வாய்ப்புகள்..!’ என்கிற தலைப்பில் கட்டண வகுப்பை நடத்துகிறது. 2021, நவம்பர் 20, சனிக்கிழமை காலை 10.30 - 12.00 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் சிவராமகிருஷ்ணன் (நிறுவனர், www.sinceresyndication.com) இந்த நிகழ்வில் பேசுகிறார். கட்டணம் ரூ.300. பதிவு செய்ய https://bit.ly/NV-Sensex60k-120k

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு