Published:Updated:

ஷேர்லக்: ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை... அடுத்து என்ன ஆகும்?

ஷேர்லக்

பிரீமியம் ஸ்டோரி

காலையிலேயே ஷேர்லக்கிடமிருந்து வாட்ஸ்அப் தகவல் வந்தது. “மாலை 6 மணிக்குத் தீபாவளிக்கு ஊருக்குக் கிளம்புவதால், மதியம் 2 மணிக்கு வந்துவிடு வேன்” என்று சொல்லியிருந்தார். நாம் மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டு, கேள்விகளுடன் காத்திருக்க, சொன்ன நேரத்தில் நம்முன் வந்து நின்றார் ஷேர்லக். நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

இந்தியப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கிறதே, சந்தையின் நிலை அடுத்து என்னவாக இருக்கும்?

“இந்தக் கேள்வியைத்தான் கடந்த வாரம் பலரும் என்னிடம் கேட்டார்கள். காரணம், சென்செக்ஸ் 62000 புள்ளிகளில் இருந்து 60000 புள்ளிகளுக்குக் கீழே இறங்கியதுதான் இதற்குக் காரணம். ஆனால், அதன் பிறகு சந்தை ஏறத் தொடங்கியதும், இதுபோன்ற கேள்விகள் குறைந்துவிட்டன.

சென்செக்ஸ் இப்படி 2000 புள்ளிகளுக்குமேல் இறங்கக் காரணம், முதலீட்டாளர்கள் சந்தையின் ஏற்றத்தைப் பயன்படுத்தி லாபத்தை வெளியே எடுத்ததுதான். கடந்த அக்டோபரில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து சுமார் ரூ.13,550 கோடியை வெளியே எடுத்திருக்கிறார்கள்.

மாதத்தின் கடைசி ஒரு வாரக் காலத்தில்தான் அதிக தொகை சந்தையிலிருந்து வெளியேறி இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், பிராஃபிட் புக்கிங்தான். இந்த நிலை நடப்பு நவம்பர் மாதத்திலும் தொடர்ந்து வருகிறது. மாதத்தின் முதல் ஓரிரு தினங்களிலேயே சுமார் ரூ.5,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றிருக்கிறார்கள். உள்நாட்டு முதலீட்டாளர் களும் பிராஃபிட் புக்கிங் செய்திருப்பதைக் காண முடிகிறது.

மெரில் லிஞ்ச், யூ.எஸ்.பி மற்றும் நோமுரா போன்ற வெளிநாட்டுத் தரகு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் உள்ள பங்குகளின் அதிகப்படியான மதிப்பீடுகளைச் சுட்டிக் காட்டியிருக்கின்றன. இதன் காரணமாகக்கூட அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறியிருக்கலாம்.

ஏறுமுக சந்தையில் இது போன்று நடப்பது சகஜம்தான். இது குறித்து பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. நீண்ட கால முதலீட்டாளர்கள் சந்தையின் இறக்கத்தைப் பயன்படுத்தி தங்கள் போர்ட்ஃபோலியோவில் நல்ல நிறுவனப் பங்குகளைச் சேர்க்க தயங்கக் கூடாது. அதே நேரத்தில், அதிக லாபம் தந்திருக்கும் பங்குகளில் லாபத்தை அதிக ரிஸ்க் இல்லாத கடன் சார்ந்த திட்டங்களுக்கு மாற்றி வைத்துக் கொள்வது நல்லது. காரணம், கொரோனா பாதிப்பு உலக அளவில் குறைந்துள்ளதால், பல நாடுகள் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளைக் குறைக்கத் தொடங்கியிருக்கின்றன.

மேலும், வட்டி விகிதம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. தங்கம் விலை ஏறும் என்கிற சூழ்நிலையும் உருவாகி யிருக்கிறது. இந்த நிலையில், பங்கு முதலீட்டு மீதான கவர்ச்சி குறைய ஆரம்பித்திருக்கிறது. இதனால், குறுகிய காலத்தில் வெளிநாட்டினர் முதலீடு இந்தியப் பங்குச் சந்தையில் குறைய வாய்ப்பு இருக்கிறது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளின் பி/இ விகிதம் முறையே 27 மற்றும் 30-ஆக இருப்பது, பிப்ரவரி மாதத்தில் ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தை உயர்த்தும் என்கிற நிலை போன்றவை சந்தைக்குப் பாதகமான நிலையாக இருக்கிறது.

அதே நேரத்தில், இந்தியப் பங்குச் சந்தையை நோக்கி உள்நாட்டு முதலீடுகள் மற்றும் வளரும் நாடுகளின் முதலீடு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படு வதால், இந்தியச் சந்தையில் அதிக இறக்கத்துக்கு வாய்ப்பில்லை எனலாம்.”

ஷேர்லக்: ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை... அடுத்து என்ன ஆகும்?

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு முதலீடுகள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறதே... என்ன காரணம்?

“எல்.ஐ.சி நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது. அந்த முதலீட்டின் அளவு 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக் கின்றன. 2009-ம் ஆண்டு ஜூன் காலாண்டில், இந்தியப் பங்குச் சந்தையில் எல்.ஐ.சி-யின் முதலீட்டு மதிப்பு 4.44 சத விகிதமாக இருந்தது. இது, கடந்த செப்டம்பர் காலாண்டில் 3.69 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. கடந்த ஜூன் மாத காலாண்டில் இது 3.74 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

பொதுவாக, ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுகிறது எனில், தனது நிதி சார்ந்த, முதலீடு சார்ந்த அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் பகிர வேண்டும். பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு அந்தத் தரவுகளுடன் கூடிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஐ.பி.ஓ வெளியிடத் தயாராக இருக்கும் எல்.ஐ.சி நிறுவனமும் இந்த ஆவணங்களை செபியிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அதன் காரணமாகக்கூட, தான் முதலீடு செய்திருக்கும் சின்னதும் பெரியதுமான நிறுவனங்களிலிருந்து எல்.ஐ.சி நிறுவனம் தனது முதலீட்டை விற்று வெளியேற நினைக்கலாம். அதுமட்டுமல்லாமல், இன்றைய சந்தையின் போக்கில், பிராஃபிட் புக் செய்வது சாதாரணமான விஷயம் தான். அந்த வகையில்கூட, எல்.ஐ.சி நிறுவனம், தான் முதலீடு செய்திருக்கும் பங்குகளை விற்கலாம்.”

எஸ்.ஐ.பி மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே?

“கடந்த அக்டோபரில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்துவரும் சொத்து மதிப்பு ரூ.37 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 33% வளர்ச்சி ஆகும் என இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப் பான ஆம்ஃபி தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்து வந்த சொத்து மதிப்பு சுமார் ரூ.36.74 லட்சம் கோடி. இது இதற்கு முந்தைய 2020-ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் ரூ.27.60 லட்சம் கோடியாக இருந்தது. முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.’’

3ஐ இன்ஃபோடெக் கடந்த ஒன்பது நாள்களாக அப்பர் சர்க்கியூட்டை அடைந்து வருகிறதே!

‘‘ஏற்கெனவே டீலிஸ்ட் ஆகியிருந்த இந்தப் பங்கு, கடந்த அக்டோபர் 22-ம் தேதி முதல் மீண்டும் லிஸ்ட் ஆனது. இந்த நிறுவனத்தின் கடன் மறுசீரமைப்பு செய்திருப்பதால், கடன் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த புதன்கிழமை வரை தொடர்ந்து ஒன்பது நாள் களுக்குத் தினமும் 5% உயர்ந்து, அப்பர் சர்க்கியூட்டைத் தொட்டது. இந்தப் பங்கு, சந்தை யில் லிஸ்ட் ஆனபின் சுமார் 40 சதவிகிதத்துக்குமேல் உயர்ந் துள்ளது.’’

கிராமப்புறங்களைச் சேர்ந்தவர் களின் முதலீடு மியூச்சுவல் ஃபண்டு களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறதே, என்ன காரணம்?

“எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் என்கிற புதிய ஃபண்டை அறிமுகம் செய்தது. இதன்மூலம் ரூ.14,676 கோடி பணத்தை முதலீட்டாளர் களிடம் இருந்து திரட்டவும் செய்தது. ஃபண்ட் வெளியிட்டு மூன்று மாதங்களே ஆன நிலை யில், இந்த ஃபண்ட் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு ரூ.20,000 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் 65% முதலீடு டயர் 2 மற்றும் டயர் 3 என்று சொல்லப் படுகிற இரண்டாம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களிலுள்ள சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. 35% முதலீடு முக்கியமான எட்டு நகரங்களில் உள்ள முதலீட்டாளர்களிட மிருந்து பெறப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மற்றொரு ஃபண்டான எஸ்.பி.ஐ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு ரூ.50,000 கோடி. ஹைபிரிட் மற்றும் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளின் போர்ட் ஃபோலியோவில் நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் சந்தை சார்ந்த திட்ட முதலீடு கலந்திருக்கும். இதனால் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டைவிட இதில் ரிஸ்க் குறைவு என்பதால், கிராமப் புறத்தினர் இந்த வகை ஃபண்டு களை அதிகம் விரும்ப ஆரம்பித்த ருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிர்வகித்து வரும் மொத்த சொத்து மதிப்பு ரூ.5.78 லட்சம் கோடியாக இருக்கிறது.”

டெலிவரி (Delhivery) நிறுவனம் பங்கு முதலீடு திரட்டுகிறதே?

“லாஜிஸ்டிக் நிறுவனங்களுள் ஒன்றான டெலிவரி நிறுவனம், ஐ.பி.ஓ மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.7,460 கோடி நிதியைத் திரட்ட முடிவு செய்திருக்கிறது. இதற்காக செபியிடம் அனுமதி கேட்டிருக்கிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் ரூ.5,000 கோடிக்குப் புதிய பங்கு களையும், ஓ.எஃப்.எஸ் முறையில் ரூ.2,460 கோடி பங்கு களையும் வெளியிட இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் முக்கியமான பங்குதாரர்களான சீனா மொமன்டம் ஃபண்ட் (டெலி சி.எம்.எஃப்), டெலிவரி நிறுவனத்தில் தான் வைத்திருக்கும் பங்குகளில் ரூ.400 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்கிறது. கார்லைல் ரூ.920 கோடி மதிப்பிலான பங்குகளையும், சாஃப்ட்பேங்க் ரூ.750 கோடி பங்குகளையும் மற்றும் டைம்ஸ் இன்டர்நெட் ரூ.330 கோடி பங்குகளையும் விற்கிறது.’’

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐ.பி.ஓ நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதா?

“நைகா நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் (ஐ.பி.ஓ) மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.5,300 கோடி நிதியைத் திரட்டும் நோக்கில் களம் இறங்கியது. இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தப் பங்கு வெளியீட்டில், வெளியீட்டு அளவைவிட 82 மடங்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அதேபோல, பாலிசிபஜார் மற்றும் பைசாபஜார் நிறுவனத்தை நிர்வகிக்கும் பி.பி ஃபின்டெக் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கும் முதலீட்டாளர்கள் நல்ல வரவேற்பு வழங்கி யிருக்கிறார்கள். முதல் நாள் வெளியீட்டில் 58% பங்குகள் வேண்டி முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்தன. அதில் 62% நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்தும், 7% சொத்து அதிகமுள்ள ஹெச்.என்.ஐ முதலீட்டாளர் களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வந்தன. சிறு முதலீட்டாளர் களுக்காக ஒதுக்கப்பட்ட பங்குகள் அனைத்தும் முதல் நாளிலேயே விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் எஸ்.ஜே.எஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியிட்ட ஐ.பி.ஓ-வுக்கு முதலீட்டாளர்கள் அவ்வளவாக வரவேற்பு வழங்கவில்லை. ஐ.பி.ஓ-வின் கடைசி நாளில் 66% பங்குகள் வேண்டி மட்டுமே முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்தன.

ஃபினோ பேமென்ட்ஸ் நிறுவனத் தின் ஐ.பி.ஓ வெளியீடு வெற்றி யடைந்ததா?

ஃபினோ பேமென்ட்ஸ் நிறுவனம், முதலீட்டாளர்களிட மிருந்து ரூ.1,200 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளி யிட்டது. கடைசித் தினமான நவம்பர் 2-ம் தேதி வாக்கில், பங்கு வெளியீட்டு அளவைவிட 1.04 மடங்கு பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் மொத்தம் 1.14 கோடி பங்குகள் வெளியிடப் பட்டன. ஆனால், 1.19 கோடி பங்குகள் கேட்டு முதலீட் டாளர்கள் விண்ணப்பித்திருந் தார்கள்.

சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 5.11 மடங்கு பங்குகள் வேண்டி, விண்ணப்பங்கள் வந்திருந்தன. நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 12%, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர் கள் 15% விண்ணப்பித்திருந்தனர்” என்றவரின் செல்போன் ஒலிக்க, ‘‘வீட்டிலிருந்துதான் போன்... நான் கிளம்புகிறேன்’’ என்று சொல்லிக் கிளம்ப, வாசகர்கள் சார்பில் நாம் அவருக்கு தீபாவளி வாழ்த்துகளைச் சொன்னோம். ‘‘இந்த சம்வாத் ஆண்டு 2078-ம் ஆண்டு அனைவருக்கும் நல்ல வளத்தையும் நலத்தையும் தரட்டும்’’ என்று வாழ்த்து சொல்லிவிட்டுக் கிளம்பினார்!

ஷேர்லக்: ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை... அடுத்து என்ன ஆகும்?

சென்செக்ஸ் 60000-லிருந்து 120000 வரையான பயணம்... முதலீட்டுக்கான வாய்ப்புகள்..!

நாணயம் விகடன், ‘சென்செக்ஸ் 60000-லிருந்து 120000 வரையான பயணம்... முதலீட்டுக்கான வாய்ப்புகள்..!’ என்கிற தலைப்பில் கட்டண வகுப்பை நடத்துகிறது. 2021, நவம்பர் 20, சனிக்கிழமை காலை 10.30 - 12.00 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் சிவராமகிருஷ்ணன் (நிறுவனர், www.sinceresyndication.com) இந்த நிகழ்வில் பேசுகிறார். கட்டணம் ரூ.300. பதிவு செய்ய https://bit.ly/NV-Sensex60k-120k

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு