Published:Updated:

ஷேர்லக்: டிசம்பர் 2022-க்குள் சென்செக்ஸ் 80000... பங்கு தரகு நிறுவனம் கணிப்பு..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை காலையிலேயே “மழை விட்டுவிட்டு பெய்துவருவதால், என் வசதி பார்த்து மாலை 4 மணிக்குள் உங்களைச் சந்திக்கிறேன்’’ என ஷேர்லக் தகவல் அனுப்பியிருந்தார். நாம் கேள்விகளுடன் தயாராக இருக்க, 3.30 மணிக்கு வந்து சேர்ந்தார். “20 நிமிடங்களில் முடிக்க வேண்டும்; 4.30-க்கு கிரிப்டோகரன்சி குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று உள்ளது” என அவசரப்படுத்த, நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

டிசம்பர் 2022-க்குள் சென்செக்ஸ் 80000 புள்ளிகளைத் தொடும் எனத் தரகு நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி சொல்லியிருக்கிறதே?

“மற்ற உலக நாடுகளின் சந்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்திய பங்குச் சந்தை கடந்த 18 மாதங்களாக வலுவாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஏற்றப் போக்கு இன்னும் தொடரும் என மார்கன் ஸ்டேன்லி தெரிவித்து உள்ளது. தற்போது சென்செக்ஸ் சுமார் 58750 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதமாற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, முக்கியமான மாநிலங்களில் தேர்தல்கள், கொரோனாவின் மூன்றாவது அலைக்கான சாத்தியம், உள்நாட்டு வட்டி விகிதங்களில் மாற்றம் போன்ற பல காரணங்கள் இந்திய சந்தையின் போக்குக்கு சவாலாக இருக்கலாம்.

அவ்வப்போது கரடியின் பிடியில் சிக்கி மீண்டு வந்தாலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் சென்செக்ஸ் குறைந்தபட்சம் 70000 புள்ளிகளைத் தொடும் என மார்கன் ஸ்டேன்லி தெரிவித்துள்ளது. இது தற்போதைய நிலையிலிருந்து சுமார் 15% ஏற்றமாகும். அதே நேரத்தில், சந்தை காளையின் பிடியில் செல்லும்போது இந்தக் காலகட்டத்தில் சென்செக்ஸ் 80000-க்கு மேல் அதிகரிக்கும் எனக் கணித்திருக்கிறது. இது தற்போதைய நிலையிலிருந்து சுமார் 25% அதிகரிப்பாக இருக்கும். நுகர்வு, ரியல் எஸ்டேட், டிஜிட்டல், காப்பீடு மற்றும் நிதிச் சேவை சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

ஷேர்லக்: டிசம்பர் 2022-க்குள் சென்செக்ஸ் 80000... பங்கு தரகு நிறுவனம் கணிப்பு..!

லேட்டன்ட் வியூ அனலிட்டிக்ஸ் (Latent View Analytics) நிறுவனப் பங்கு அமர்க்களமான லாபம் தந்துள்ளதே..!

“டேட்டா அனலிட்டிக்ஸ் சேவை நிறுவன மான இந்த நிறுவனப் பங்கு நவம்பர் 22-ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலானது. இந்த ஐ.பி.ஓ-வுக்கு முதலீட்டாளர்கள் மிகுந்த வரவேற்பை வழங்கினார்கள். இதன் மூலம் 2007-க்குப் பிறகு வெளியான ஐ.பி.ஓ-களில் பங்கு வெளியிடப்பட்ட முதல் நாளில் அதிக லாபத்தை வழங்கிய பங்குகள் வரிசையில் இந்த ஐ.பி.ஓ-வுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இந்த நிறுவனப் பங்கு வெளியீட்டு விலை ரூ.197. பங்கு பட்டியலிடப் பட்ட தினத்தில், வர்த்தக முடிவில் 148% வரை உயர்ந்து, 488.60-க்கு வர்த்தகமானது. பேடிஎம் பங்கு விலை முதல் நாளன்று கணிசமான இறக்கம் கண்டபின், இந்தப் பங்கு லிஸ்ட் ஆனதால், என்னவாகுமோ, ஏதாகுமோ என்கிற கலக்கத்தில் இதில் பணம் போட்டவர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பங்கும் ஒவ்வொரு மாதிரி செயல்படும் என்பதற்கேற்ப, இந்தப் பங்கு மிக அருமையான லாபம் தந்திருக்கிறது.”

ஐ.ஓ.பி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகளை மத்திய அரசாங்கம் விற்பனை செய்கிறதாமே... உண்மையா?

“நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.72 லட்சம் கோடி நிதியைத் திரட்ட மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி, முதல்கட்டமாக ஐ.ஓ.பி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு வங்கிகளின் 51% பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யப்போவதாகவும், இதற்கான சட்டத் திருத்தங்களை வருகிற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்போவதாகவும் தகவல் வெளியானது. இதை அடுத்து, இவ்விரு நிறுவனங்களில் பங்கு விலை 15-20% வரை அதிகரித்து வர்த்தகமானது. ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய நினைப்பவர்கள் மட்டும் இந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்களாகிய என் நண்பர்கள்.”

வேதாந்தா நிறுவனப் பங்கு விலை உயர என்ன காரணம்?

“இந்த நிறுவனத்தின் புரொமோட்டர்களான வேதாந்தா நெதர்லேண்ட்ஸ் இன்வெஸ்ட்மென்ட் பி.வி மற்றும் ட்வின் ஸ்டார் ஹோல்டிங்ஸ் ஆகியவை, வேதாந்தா நிறுவனத்தின் 170 மில்லியன் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.350 கொடுத்து வாங்கியிருக்கிறது. இதன் மொத்த பரிவர்த்தனை மதிப்பு ரூ.5,950 கோடியாகும். இதன் காரணமாக, இந்த நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று 7% வரை விலை அதிகரித்து, ரூ.354-க்கு வர்த்தக மானது. வியாழக்கிழமை காலை நேர வர்த்தகத்தில் விலை குறைந்து, ரூ.344 என்ற விலையில் வர்த்தகமானது.”

வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்கு விலை அதிகரித்தது ஏன்..?

“வோடஃபோன் ஐடியா நிறுவனம் கடந்த நவம்பர் 25-ம் தேதியிலிருந்து, தனது சந்தாதாரர் களுக்கான ப்ரீபெய்டு பிளான் கட்டணங்களை 20-25% வரை அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு விலை 24-ம் தேதி காலை வர்த்தகத்தின்போது 3.40% வரை விலை அதிகரித்து, ரூ.10.94-க்கு வர்த்தகமானது. புதிய கட்டண உயர்வால், இந்த நிறுவனம் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்னைகள் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்தி ஏர்டெல் நிறுவனம், தன் பிசினஸ் விரிவாக்கத்துக்காக வருகிற நவம்பர் 26-ம் தேதியிலிருந்து ப்ரீபெய்டு பிளான்களின் விலையை 25% வரை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், மூடீஸ் பங்குத் தரகு நிறுவனம், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் கடன் அளவுகள் சிறப்பாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, அடுத்த 12-18 மாதங்களில் இந்த நிறுவனத்தின் முதலீட்டுத் தரம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லியிருக் கிறது. இதன் காரணமாக, இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த நவம்பர் 24-ம் தேதி 52 வார உட்ச விலையைத் தொட்டு ரூ.765-க்கு வர்த்தகமானது.’’

கோல் இந்தியா பங்கை முதலீட்டுக்குக் கவனிக்கலாமா?

“கோல் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் நவம்பர் 29-ம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு நடப்பு 2021-22-ம் நிதி ஆண்டுக்கான டிவிடெண்ட் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்த நிறுவனத்தின் பங்கு விலை நவம்பர் 24-ம் தேதி வர்த்தகத்தில் 2% வரை விலை அதிகரித்து ரூ.159.45-க்கு வர்த்தக மானது.

சி.எல்.எஸ்.ஏ தரகு நிறுவனம் கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. இலக்கு விலை தற்போதைய பங்கு விலையைவிட 32% அதிகரித்து, ரூ.210-ஆக நிர்ணயம் செய்துள்ளது.”

சென்செக்ஸ் பட்டியலில் விப்ரோ இடம்பெறுவது குறித்து..?

“முன்னணித் தகவல் தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோ, 2021 டிசம்பர் 20 முதல் சென்செக்ஸ் குறியீட்டில் அங்கம் பெற இருக் கிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சென்செக்ஸ் குறியீட்டிலிருந்து வெளியேறுவதால் இந்த மாற்றம். கடந்த ஒரு வருடமாகத் தகவல் தொழில்நுட்பத்துறை தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. அதனால் விப்ரோ நிறுவனத்தின் சொத்து மதிப்பும் உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெறும் தகுதியைப் பெற்றுள்ளது.

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ பற்றி...

“பங்குச் சந்தை பிரபல முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உட்பட பல முக்கிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ரூ.7,249 கோடி நிதி திரட்டும் நோக்கில் வருகிற நவம்பர் 30 முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை ஐ.பி.ஓ வரவிருக்கிறது. பங்கு விலைப்பட்டை ரூ.870 - 900 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஐ.பி.ஓ-வில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள ஈக்விட்டி பங்குகள் புதிய பங்கு வெளியீடுகளாகவும் மற்றும் நிறுவனத் தின் தற்போதைய பங்குதாரர்கள் ரூ.5,249 கோடி மதிப் பிலான பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையில் விற்கவும் முடிவாகி இருக்கிறது. ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைட் இன்ஷூரன்ஸ் ஐ.பி.ஓ-வில் அந்த நிறுவனத்தின் ஊழியர் களுக்கு ரூ.100 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வெளியீட்டில் 75% தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர் களுக்கும், 15% நிறுவனம் அல்லாத முதலீட் டாளர்களுக்கும், மீதமுள்ள 10% சிறு முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 16 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம். புதிய பங்கு வெளியீட்டின்மூலம் திரட்டப்பட்ட நிதியை நிறுவனம் அதன் மூலதனத் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது’’ என்றவர், 17-ம் ஆண்டு இதழுக்கான பக்கங்களை நமது லேப்டாப் ஸ்கீரினில் காட்டினோம். ‘‘அமர்க்களம்...’’ என்று பாராட்டியவர், நம் தலையங்கத்தை வேகமாகப் படித்தார். ‘‘சத்தியமான வார்த்தைகள்’’ என்று சொல்லிவிட்டு, கூட்டத்துக்குப் புறப்பட்டார்!

`கிரிப்டோகரன்சி வர்த்தகம்... பணத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?’

நாணயம் விகடன் மற்றும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் இணைந்து நடத்தும் ‘கிரிப்டோகரன்சி வர்த்தகம்... பணத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது. நவம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 முதல் மதியம் 12.00 மணிவரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-Giottus

முதலீட்டுக் கலவை: கடன் ஃபண்ட் ஏன் முக்கியமானது?

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து, ‘முதலீட்டுக் கலவை: கடன் ஃபண்ட் ஏன் முக்கியமானது?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சி டிசம்பர் 5 (ஞாயிற்றுக் கிழமை) காலை 10.30 முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. இதில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண் (Aknarayanassociates.com) மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேனல் ஹெட் செந்தில்பாபு சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru