Published:Updated:

ஷேர்லக்: இறக்கத்தில் வாங்க வேண்டிய பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

ஏற்கெனவே சொன்னபடி ஷேர்லக் வியாழன் மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார். நம் அலுவலக கேன்டீனுக்கு அழைத்துச் சென்று ஏலக்காய் டீ வாங்கித் தந்தோம். டீயைப் பருகியபடி நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஆர்.பி.ஐ வட்டி விகிதங்கள் அதிகரிக்காததால், வங்கிப் பங்குகளின் செயல்பாடு எப்படி இருந்தது?

“ரிசர்வ் வங்கி, கொரோனா தாக்கத்தின் காரணமாகக் கடந்த எட்டு நிதிக் கொள்கை கூட்டங்களாக ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தது. இந்த நிலையில், அடுத்து நடக்கும் கூட்டத்தில் வட்டி விகிதங்களில் மாற்றம் வரலாம் எனப் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், அண்மையில் நடந்து முடிந்த ஒன்பதாவது நிதிக் கொள்கைக் கூட்டத்தில் வட்டி விகிதங் களில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், ஏற்கெனவே இருந்த வட்டி விகிதத்தையே தொடர முடிவெடுத்துள்ளது ஆர்.பி.ஐ. ரெப்போ விகிதம் 4% மற்றும் ரிவர்ஸ் ரெப்போ 3.35 சதவிகிதத்தில் மாற்றம் இல்லை.

வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவுமில்லை என்கிற செய்தி வந்தவுடன், வங்கி மற்றும் வங்கித்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அனுகூலமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக் கிறது. இதன் காரணமாக, கடந்த புதன்கிழமை அன்று வங்கிப் பங்குகள், ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோமொபைல் துறைசார்ந்த பல பங்குகளின் விலை 4% வரை அதிகரித்து வர்த்தகமானது.

குறிப்பாக, பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஷோபா, சன்டெக் ரியாலிட்டி, ஒபராய் ரியாலிட்டி மற்றும் கோத்ரெஜ் புராபர்ட்டீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2% - 4% வரை விலை அதிகரித்து வர்த்தகமாகின.”

ஷேர்லக்: இறக்கத்தில் வாங்க வேண்டிய பங்குகள்..!

முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு இரு நாள்களில் ரூ.7.5 லட்சம் கோடிக்குமேல் அதிகரிக்க என்ன காரணம்?

“வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கியின் ஒன்பதாவது நிதிக் கொள்கைக் கூட்டம் நடந்தது. அதில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் ஆகியவை உயர்த்தப்படவில்லை. இது இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாக ஒரு காரணமாக அமைந்தது. அதேபோல, ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் இருந்தாலும், நமது பொருளாதார வளர்ச்சி 9.5 சதவிகிதமாக இருக்கும் என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. இவ்விரு காரணங்களால் அன்று வர்த்தகம் முடியும்போது, சென்செக்ஸ் 1,016 புள்ளிகள் அதிகரித்தும், நிஃப்டி 293 புள்ளிகள் அதிகரித்தும் நிறைவு பெற்றன. இதன் காரணமாகப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்து உள்ளது. செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.7.5 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

புதன்கிழமை வர்த்தகத்தின்போது பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 3.6% ஏற்றத்தையும், பஜாஜ் ஃபின்சர்வ் 3% ஏற்றத்தையும் சந்தித்திருக் கின்றன. மாருதி நிறுவனத்தின் பங்கு விலையும் 3% ஏற்றத்தைச் சந்தித்திருக் கிறது. அதேபோல, எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், சன் பார்மா, ஆசியன் பெயின்ட்ஸ், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் மற்றும் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் நல்ல ஏற்றத்தை சந்தித்திருக்கின்றன.

உலகச் சந்தைகள் இறக்கத் தில் வர்த்தகம் ஆனதைத் தொடர்ந்து, வியாழன் அன்று நம் சந்தையும் சிறிது இறங்கி வர்த்தகம் ஆகின. ஆனால், பிற்பாடு சுதாரித்துக்கொண்டு, ஏற்றத்தின் போக்கில் செல்லத் தொடங்கியது. வியாழன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 157 புள்ளிகளும், நிஃப்டி 47 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின. இந்த இறக்கம் இனியும் தொடர வேண்டும் என்பது முதலீட்டாளர்களின் விருப்பம். ஆனால், என்ன நடக்கிறது என்று நாளை (வெள்ளிக்கிழமை) பார்ப்போம்.”

அடுத்த ஓராண்டில் சென்செக்ஸ் 21% உயரும் என்று மார்கன் ஸ்டான்லி கூறியிருக்கிறதே?

‘‘ஒன்றரை மாதத்துக்கு முன்பு இந்தியப் பங்குச் சந்தை குறித்த கணிப்பின் மதிப்புகளைக் குறைத்திருந்த மார்கன் ஸ்டான்லி தற்போது தன்னுடைய மறு கணிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் ஏற்றத்தின் போக்கில் நகர்வதற்கான சாத்தியங்களுடன் இருப்பதாகக் கூறியிருக்கிறது. ஓராண்டுக் காலத்தில் சென்செக்ஸ் 21% வரை உயரும் என்று கூறியுள்ளது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள இறக்கம் குறிப்பிட்ட அளவில்தான் இருக்கும் என்றும், குறிப்பிட்ட சில பங்குகள் மட்டுமே அதிக அளவில்தான் இறக்கம் காணும் என்றும் கூறியுள்ளது. இதனால் பங்குச் சந்தையின் மதிப்பை உயர்த்தி கணித்திருப்பதோடு, அக்டோபர் தொடக்கத்தில் ‘விற்பனை’ நிலைப்பாட்டில் மதிப்பிட்டிருந்த பங்குகளை ‘வாங்கும்’ நிலைப்பாட்டுக்கு மாற்றியுள்ளது.’’

பங்குச் சந்தை இறக்கத்தில் முதலீடு செய்யக்கூடிய ஏதாவது பங்குகள்?

“இந்த இறக்கத்தில் வாங்கக்கூடிய பங்குகளாகத் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி) சார்ந்த நிறுவனப் பங்குகள் இருக்கின்றன. கொரானா பாதிப்பு குறைந்து நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டாலும் அல்லது கொரோனாவால் தொழில் துறை பாதிக்கப்பட் டாலும், ஐ.டி நிறுவனங்களின் சேவை அவசியம் தேவைப்படும். எனவே, அவற்றின் வருமானம் குறைய வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. அவற்றின் வளர்ச்சி ஆண்டுக்கு தோராயமாக 20% இருக்கும் என மதிப்பிடப் பட்டிருக்கிறது.

கடந்த 18 மாதங்களாக ஐ.டி நிறுவனங்கள் தொடர்ந்து பணிக்கு ஆள்களை எடுத்து வரு கின்றன. கிட்டத்தட்ட 2.6 லட்சம் பேரை புதிதாகப் பணிக்கு எடுத் திருக்கின்றன. இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா முழுக்க சுமார் 11.67 லட்சம் சதுர அடி பரப்புக்கு தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஜனவரி முதல் ஐ.டி பணியாளர்கள் வாரத்துக்கு 2 - 3 தினங்கள் அலுவலகம் சென்று பணிபுரிவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் சுமார் 60% ஐ.டி நிறுவனங்கள் ஜனவரி இறுதிக்குள் மீண்டும் அலுவலகங்களைத் திறக்க இருக்கின்றன. ஆனால், ஒமைக்ரான் தொற்று இனி எப்படி பரவும் என்பதைப் பொறுத்து இந்த முடிவில் மாற்றம் வரலாம்.

இறக்கத்தில் வாங்கக்கூடிய ஐ.டி பங்குகளாக ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், சென்சார் (Zansar) உள்ளிட்ட பங்குகள் இருப்பதாக அனலிஸ்ட்டுகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

முக்கிய ஐ.டி நிறுவனப் பங்குகளின் விலை இன்னும் சுமார் 60% அளவுக்கு ஏற்றம் காணும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இதில் பாதி 30% பங்கு விலை உயர்ந்தாலே முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.’’

கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு இடைக் கால டிவிடென்டை எப்போது வழங்கும்?

‘‘இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் வருகிற டிசம்பர் 14-ம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், நடப்பு 2021-22-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால டிவிடெண்ட் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை வர்த்தகத்தில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 5% வரை அதிகரித்து ரூ.613.90 என்கிற விலையில் வர்த்தகமானது.’’

ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் பங்கு வெளியீடு பற்றி...

‘‘இந்தப் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்கள் நல்ல ஆதரவு வழங்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்டிருந்த பங்குகளைவிட 7.76 மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. நிறுவனம் அல்லாத முதலீட் டாளர்கள் பிரிவில் 25.4 மடங்கு பங்குகள் வேண்டியும், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட் டாளர்கள் பிரிவில் 2.5 மடங்கு பங்குகள் வேண்டியும் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. நிறுவனப் பணியாளர் களுக்காக 2.5 லட்சம் பங்குகளை இந்த நிறுவனம் ஒதுக்கி இருந்தது. அதில் 75% பங்குகளுக்கு ஊழியர்கள் விண்ணப்பித் திருக்கிறார்கள். இந்தப் பங்கு வரும் செவ்வாய்க்கிழமை அன்று பங்குச் சந்தையில் பட்டியலாகி, வர்த்தகம் ஆகப்போகிறது. அன்றைய தினம் நல்ல விலையேற்றத்தில் இந்தப் பங்கு வர்த்தகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

இன்று ஐ.பி.ஓ வந்த மேப்மை இந்தியாவுக்கான வரவேற்பு எப்படி?

‘‘சி.இ இன்போ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான பிராண்ட், மேப் மை இந்தியா. இந்தியாவில் வரைபட சேவைகளில் முன்னணியில் இருக்கும் நிறுவனங் களில் இதுவும் ஒன்று. இந்த நிறுவனம் பங்குகளை வெளி யிடுவதன் மூலம் மட்டும் ரூ.1039.6 கோடியைத் திரட்டவிருக் கிறது. ஒரு பங்கின் விலை ரூ.1,000 முதல் 1,033 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு லாட் (lot) அளவு 14 பங்குகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குமார் வர்மா மற்றும் ரேஷ்மி வர்மாவால் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் லாபம் 2020-21 நிதி ஆண்டில் ரூ.59.43 கோடியாக இருக்கிறது. இது சென்ற நிதி ஆண்டின் லாபமான ரூ.23.19 கோடியைவிட அதிகமாகும்.

இந்த ஐ.பி.ஓ வந்த முதல் நாளான இன்று இரண்டு மடங்கு அளவுக்கு பங்கு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள் முதலீட்டாளர்கள். வருகிற திங்கள்கிழமையுடன் இந்த ஐ.பி.ஓ முடிவதால், இன்னும் அதிகமானோர் இந்தப் பங்கு வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.’’

மெட்ப்ளஸ் ஹெல்த் சர்வீசஸ் ஐ.பி.ஓ வெளியீடு எப்போது?

“மருந்து சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான மெட்ப்ளஸ் ஹெல்த் சர்வீசஸ் ஐ.பி.ஓ வெளியிடுவதற்கு முடிவு செய்திருக்கிறது. இதற்கான அனுமதியை செபி வழங்கி யிருப்பதைத் தொடர்ந்து, டிசம்பர் 13 - 15-ம் தேதி வரை இந்த நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடவிருக்கிறது. இந்த வெளீயீட்டின் மூலம் ரூ.1,398 கோடியை முதலீட்டாளர்களிட மிருந்து திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. பங்கு விலைப்பட்டை ரூ.780 - ரூ.796.

ரூ.600 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளையும், ஓ.எஃப்.எஸ் முறையில் ரூ.798 கோடி பங்குகளையும் வெளியிடுகிறது. ஓ.எஃப்.எஸ் முறையில் ரூ.1,038 கோடி ரூபாயைத் திரட்ட இந்த நிறுவனம் ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. ஆனால், அதை ரூ.798 கோடியாகக் குறைந்துக் கொண்டிருக்கிறது.

பேடிஎம் பங்கு பட்டியலான முதல் நாளிலேயே கணிசமாக விலை குறைந்தபின், நிறுவனங்கள் அதிக தொகையைத் திரட்டத் தயங்குகின்றன’’ என்றவர், ‘‘இந்த வாரம் நீர் வெளியிட்ட சி.கே.நாராயணனின் வீடியோ (https://www.youtube.com/watch?v=p_KkiXHn0SI&t=57s) பேட்டி சூப்பர். இந்த மாதிரி மும்பை நிபுணர் களின் பேட்டியை அடிக்கடி போடுங்கள்’’ என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்!

எஸ்.ராமச்சந்திரன் ,  ஜி.அர்ஜுன் விஜய்
எஸ்.ராமச்சந்திரன் , ஜி.அர்ஜுன் விஜய்

கிரிப்டோகரன்சி... பாசிட்டிவ் & நெகட்டிவ் அம்சங்கள்!

நாணயம் விகடன் மற்றும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் இணைந்து நடத்தும் ‘கிரிப்டோகரன்சி... பாசிட்டிவ் & நெகட்டிவ் அம்சங்கள்!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி டிசம்பர் 19 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 - 01.30 மணிவரை நடைபெறும்.

இதில், இன்ஃபோசிஸ் நாலேஜ் சென்டரின் முதன்மை ஆலோசகர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சின் இணை நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ஜி.அர்ஜுன் விஜய் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/Nv-Giottus

ஷேர்லக்: இறக்கத்தில் வாங்க வேண்டிய பங்குகள்..!