Published:Updated:

ஷேர்லக்: ஒமைக்ரான் பரவல் எதிரொலி... ஐ.டி, பார்மா பங்குகளில் முதலீடு அதிகரிப்பு..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை சரியாக 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். அவரே கொண்டு வந்த லெமன் டீயை கப்பில் ஊற்றினார். அவருடைய எச்சரிக்கை உணர்வைப் புரிந்துகொண்ட நாம், தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம். டீயைப் பருகியவாறு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஐ.டி, பார்மா பங்குகளில் அதிக முதலீடு செய்திருக்கிறதே?

“ஒமைக்ரான் வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் நிலையற்றத்தன்மை, இன்னும் முழுமையாய் முடிவுக்கு வராத ஊரடங்குக் கட்டுப்பாடுகள், நவம்பர் மாதத்தில் 6% வரை இறக்கம் கண்ட நிஃப்டி எனப் பல விஷயங்கள் பங்குச் சந்தையில் தாக்கம் கண்டது. இந்தச் சூழலில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளை எதில் குறைத்துள்ளன, எந்தத் துறைகளில் முதலீடுகளை அதிகரித்துள்ளன என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக, பாதுகாப்பான துறைகளாகக் கருதப்படும் ஐ.டி மற்றும் பார்மாவில் முதலீட்டை அதிகரித்துள்ளன. லாரஸ் லேப்ஸ், அலெம்பிக் பார்மா உள்ளிட்ட பார்மா பங்குகளில் முதலீடு அதிகரித்துள்ளன. மிட்கேப் ஐ.டி பங்குகளில் சென்சர் டெக், ஃபர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூஷன்ஸ் ஆகியவை சாதகமான பங்குகளாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளன.

மிரே அஸெட் எம்.எஃப், பேயர் கிராப் சயின்ஸ் பங்கிலும், டி.எஸ்.பி எம்.எஃப், தங்க மயில் ஜுவல்லரி பங்கிலும் முதலீடு மேற்கொண் டுள்ளன. எஸ்.பி.ஐ செக்யூரிட்டீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்குகளை வாங்கியுள்ளது. ஸொமேட்டோ, கிளான்ட் பார்மா, டி.சி.எஸ் ஆகிய நிறுவனப் பங்குகளை விற்கவும் செய்துள்ளன. சி.டி.எஸ்.எல், மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர், லாரஸ்லேப்ஸ் ஆகியவற்றில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் கள் புதிதாக முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆக்சிஸ் பேங்க், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எஸ்பிஐ ஆகிய பங்குகளை வாங்கவும், எல் அண்ட் டி, வேதாந்தா, ஏர்டெல் பங்குகளை விற்கவும் செய்திருக்கிறது. வோல்டாம்ப் டிரான்ஸ்பார்மர்ஸ், ஸொமேட் டோவிலிருந்து முழுவதுமாக வெளியேறியிருக்கிறது. கார் டிரேட் டெக், சிஜி பவர், பி.எஸ்.இ ஆகியவற்றில் புதிதாக முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.

ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட், ரிலையன்ஸ் இண்டஸ் ட்ரீஸ், ஹிந்துஸ்தான் ஏரோனாட் டிக்ஸ், ஜீ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றில் முதலீடு செய் துள்ளது. எஸ்.பி.ஐ, வேதாந்தா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகளை விற்றுள்ளது. இந்தியா எனர்ஜி எக்ஸ்சேஞ்ச், இந்தியா சிமென்ட்ஸ், டிவிஎஸ் மோட்டார் ஆகியவற்றிலிருந்து முழுவது மாக வெளியேறியுள்ளது. சுந்தரம் ஃபைனான்ஸ், அதானி கிரீன், அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றில் புதிதாக முதலீடு செய்துள்ளது.

கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட், ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், டாடா ஸ்டீல் ஆகியவற்றையும் வாங்கவும், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், வேதாந்தா ஆகியவற்றை விற்கவும் செய்துள்ளது. ஐ.ஐ.எஃப்.எல் வெல்த் மேனேஜ்மென்ட், டாரன்ட் பவர் ஆகியவற்றிலிருந்து முழுவதும் வெளியேறியுள்ளது. மேக்ஸ் ஹெல்த்கேர், ஆர்இசி, வேர்ல்பூல் ஆகியவற்றில் புதிதாக முதலீடு செய்துள்ளது.

மிரே அஸெட் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவற்றை வாங்கவும், மாருதி சுஸூகி, டாக்டர் ரெட்டீஸ், ஸொமேட்டோ ஆகியவற்றை விற்கவும் செய்துள்ளது. கார்டிரேட் டெக், இந்தியாமார்ட் இன்டர்மெஷ், மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் ஆகியவற்றிலிருந்து முழுவதும் வெளியேறியுள்ளது. பேயர் கிராப்சயின்ஸில் புதிதாக முதலீடு செய்துள்ளது.’’

ஷேர்லக்: ஒமைக்ரான் பரவல் எதிரொலி... ஐ.டி, பார்மா பங்குகளில் முதலீடு அதிகரிப்பு..!

பேடிஎம் பங்கு விலை திடீரென சரிந்தது ஏன்?

“இந்தப் பங்கில் முதலீடு செய்திருந்த ‘ஆங்கர் (Anchor) முதலீட்டாளர்’களுக்கான லாக்-இன் பீரியட் காலம் கடந்த டிசம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்ததால், அன்றைய வர்த்தக தினத்தில் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 13% வரை சரிந்து ரூ.1,297.70-க்கு வர்த்தக மானது. இந்த பங்கானது கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதியன்று, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அதற்குப் பிறகான 14 - 18 வர்த்தக தினங்களில் பல்வேறு காரணங்களால் இந்தப் பங்கின் விலையானது இறக்கத்தைச் சந்தித்துள்ளது.

வெளிநாட்டுத் தரகு நிறுவனமான மெக்குரி, இந்த பங்குக்குக் குறைவான ரேட்டிங்கை வழங்கியிருக்கிறது. பங்கு இலக்கு விலையையும் தற்போதைய வர்த்தக விலையை விடவும் குறைத்து, ரூ.1,200-ஆக நிர்ணயித்துள்ளது. பங்குகளை விற்கச் சொல்லி ஜே.எம் ஃபைனான்ஷியல் பரிந்துரை செய் திருக்கிறது. இலக்கு விலையை ரூ.1,240-ஆக நிர்ணயித்துள்ளது.”

டிரென்ட் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“டாடா குழுமம், 23 ஆண்டுகளுக்கு முன் அழகு மற்றும் அழகு சாதனப் பொருள்களுக்கான வணிகத்திலிருந்து வெளி யேறியது. தற்போது மீண்டும் அந்தப் பிரிவில் வர்த்தகத்தைத் தொடங்க இருப்பதாக நிறுவனத்தின் தரப்பில் தகவல் வெளி யானது. இதைத் தொடர்ந்து, டாடா குழும நிறுவனங்களில் ஒன்றான டிரென்ட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரம் புதன் அன்று 5% வரை அதிகரித்து ரூ.1,085-க்கு வர்த்தக மானது. அடுத்த 15 ஆண்டுகளில் இந்திய அழகு மற்றும் மேனிப் பராமரிப்பு சந்தை ஆறு மடங்கு வளர்ச்சியடையும் என வெளிநாட்டு தரகு நிறுவனமான ஹெச்.எஸ்.பி.சி எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பொருள் களுக்கான ஆன்லைன் விற்பனையானது அடுத்த பத்து ஆண்டுகளில் 8 - 40% வரை அதிகரிக்கும் என ஹெச்.எஸ்.பி.சி தெரிவித்துள்ளது.”

டி.வி.எஸ் நிறுவனத்தின் பங்கு விலை திடீரென சரிய என்ன காரணம்?

“பி.எம்.டபிள்யூ மோட்டாருடனான கூட்டணியை எதிர்காலத்துக்கும் விரிவு படுத்திக்கொள்வதாக டி.வி.எஸ் மோட்டார் கடந்த வாரம் புதன் கிழமை அன்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதும், கடந்த வாரம் புதன்கிழமை இந்த நிறுவனத்தின் பங்கு விலை 7% வரை அதிகரித்து வர்த்தக மானது. அன்று காலை வர்த்தகத்தில் இருந்து ஏற ஆரம்பித்த பங்கு விலை ரூ.708 வரை அதிகரித்து, மதியத்துக்குப் பிறகு இறங்க ஆரம்பித்து ரூ.650 வரை சென்றது. வியாழக்கிழமை காலை முதல் தொடர்ந்து இறக்கத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. வர்த்தக முடிவில், இந்தப் பங்கு ஒன்றின் விலை 5.52% வரை சரிந்து ரூ.636.60-க்கு வர்த்தகமானது.

இந்த இரண்டு நிறுவனங்களுக் கிடையேயான கூட்டணியை வர்த்தக ரீதியில் பாசிட்டிவ்வாக பார்த்தாலும், டி.வி.எஸ் மோட்டார் பங்கு விலை சரிவை சந்தித்து வருவது இதன் முதலீட் டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.”

ப்ரிசிஷன் வயர்ஸ் இந்தியா பங்கு பிரிப்பு எப்போது?

“இந்த நிறுவனத்தின் இயக்கு நர் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத் தில் பங்கு பிரிப்பு மற்றும் இடைக்கால டிவிடெண்ட் தொடர்பாகக் கலந்தாலோசிக்கப் பட்டது. பங்கு பிரிப்புக்கான ரெக்கார்ட் தேதியாக டிசம்பர் 23 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, கடந்த வாரம் புதன் கிழமை வர்த்தகத்தில் பங்கு விலை 9% வரை அதிகரித்து, 52 வார அதிகபட்ச விலையான ரூ.386-ஐ தொட்டு வர்த்தகமானது. இந்த நிறுவனமானது ரூ.5 முகமதிப்பு கொண்ட பங்குகளை 5 பங்குகளாக பிரிக்கிறது. 2021-2022-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால டிவிடெண்டாக ரூ.5 முகமதிப்பு கொண்ட பங்குகளுக்கு ரூ.1.75 வழங்கவும் இயக்குநர் குழு அனுமதி வழங்கியிருக்கிறது.”

கடந்த வாரம் லிஸ்ட்டான ஸ்டார் ஹெல்த் மற்றும் ஆனந்த ரதி பங்குகளின் விலை ஏன் நன்கு உயரவில்லை?

‘‘ஸ்டார் ஹெல்த் பங்கு விலை பட்டியலான அன்றே பெரிய அளவில் இறக்கம் கண்டிருக்க வேண்டும். ஆனால், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தந்த ஸ்டேட்மென்டால் விலை குறையாமல் இருந்தது. அடுத்த இரண்டு தினமும் இறங்காமல் இருந்த இந்தப் பங்கு விலை புதன், வியாழக்கிழமைகளில் சுமார் 7% வரை இறங்கியது.

ஆனந்த ரதி பங்கு விலை பட்டியலிட்ட தேதியில் சிறிதளவே விலை உயர்ந்தது. அடுத்தடுத்த நாள்களிலும் விலை கொஞ்சம் உயர்ந்தாலும், இன்று இந்தப் பங்கின் விலை இறக்கத்தில்தான் இருக்கிறது. இந்த இரு நிறுவனங் களின் காலாண்டு முடிவு வந்த பின்பே இந்தப் பங்கு விலையின் போக்கு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மெட்பிளஸ் ஹெல்த் புதிய பங்கு வெளியீடு வெற்றியடைந்ததா?

“மருந்து சில்லறை விற்பனை பிரிவில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமான இதுஐ.பி.ஓ மூலம் ரூ.1,398 கோடி நிதி திரட்டும் நோக்கில், கடந்த டிசம்பர் 13-14-ம் தேதிகளில் பங்கு விற்பனையில் இறங்கியது. பங்கு ஒன்றின் விலைப் பட்டை ரூ. 780-796-ஆக இந்நிறுவனம் நிர்ணயித்திருந்தது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு முதலீட்டாளர்கள் அமோக வரவேற்பை வழங்கியிருக்கிறார்கள். மேலும், இந்த ஐ.பி.ஓ-வுக்கு டிமாண்டு அதிகமாக இருந்ததால், கள்ளச் சந்தையில் பங்கு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.300 வரை கைமாறி இருக்கிறது. வருகிற 23-ம் தேதி இந்தப் பங்கு வர்த்தகமாகத் தொடங்கும். அப்போதுதான் இந்தப் பங்குக்கு முதலீட் டாளர்கள் என்ன விதமான மரியாதையைத் தரப்போகிறார்கள் என்பது தெரியும்.”

ஶ்ரீராம் புராபர்ட்டீஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெற்றியடைந்ததா?

‘‘இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டிற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்தது. இந்த நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.250 கோடியும், ஓ.எஃப்.எஸ் முறையில் ரூ.350 கோடியும் முதலீட்டாளர் களிடமிருந்து நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. பங்கு விலை பட்டை ரூ.113-118. வருகிற திங்களன்று இந்தப் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட இருக்கிறது. அன்றைக்கு இந்தப் பங்கின் விலை உயருமா என்பதை முதலீட்டாளர்கள் பார்ப்பது அவசியம்.”

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் ஐ.பி.ஓ பற்றி...

“அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் எஸ்.பி.ஐ மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐ.பி.ஓ வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. இந்த ஐ.பி.ஓ மூலம் ரூ.7,000-7,500 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் எஸ்.பி.ஐ வங்கியானது எஸ்.பி.ஐ ஃபண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வைத்துள்ள 63% பங்குகளில் 6% பங்குகளை விற்கும் எனத் தெரிகிறது.

தற்போதைய நிலையில், எஸ்.பி.ஐ ஃபண்ட் மேனேஜ்மென்ட் டின் 37% பங்குகளை அஸெட் மேனேஜ்மென்ட் வைத்திருக் கிறது” என்றவர், நம் டேபிளில் இருந்த தலையங்கத்தை எடுத்து வேகமாகப் படித்தார். ‘‘சபாஷ், உமது யோசனைகள் இரண்டுமே ஆழ்ந்து பரிசீலிக்கப்பட வேண்டிவை. உயர்நிலைப்பள்ளி முதலே நிதிக் கல்வியைக் கற்றுத் தரலாம்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்!

சென்செக்ஸ் 2022: கலந்தாய்வு கூட்டம்..!

புத்தாண்டு 2022-ஐ வரவேற்க தயாராகிக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் முதலீட் டாளர்கள், வர்த்தகர்கள் மனதில் 2022-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிபுணர்களின் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இதில், நாணயம் விகடன் மீடியா பார்ட்னராகச் செயல்படுகிறது. ‘சென்செக்ஸ் 2022’ என்ற தலைப்பில் நடக்க உள்ள இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் அர்ஜுன் ஜி நாகராஜன், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா நிறுவனத்தின் ஈக்விட்டி பிரிவு சி.ஐ.ஓ ஆனந்த் ராதாகிருஷ்ணன் இருவரும் சிறப்பு உரையாற்ற உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 23-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். அனுமதி இலவசம். தொடர்புக்கு events@hindustanchamber.in. 044-2829 4457.

ஷேர்லக்: ஒமைக்ரான் பரவல் எதிரொலி... ஐ.டி, பார்மா பங்குகளில் முதலீடு அதிகரிப்பு..!