Published:Updated:

ஷேர்லக்: விலை ஏற்றம்... முதலீட்டுக்கு ஏற்ற ஸ்டீல் பங்குகள்..! காத்திருந்தால் காசு பார்க்கலாம்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

S H A R E L U C K

அரசாங்கம் வலியுறுத்தும் பாதுகாப்பு முறைகளைக் கொஞ்சம்கூட மீறாமல் இரட்டை முகக்கவசம் அணிந்துகொண்டு நம் அலுவலகத் துக்கு வந்த ஷேர்லக் தகுந்த சமூக இடைவெளியுடன் அமர்ந்தார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 44-வது ஆண்டு முதலீட்டாளர்கள் கூட்டம் முடிந்த சற்று நேரத்தில் ஷேர்லக் வந்ததால், அது பற்றி முதலில் பேச ஆரம்பித்தோம்.

ஷேர்லக்: விலை ஏற்றம்... முதலீட்டுக்கு ஏற்ற ஸ்டீல் பங்குகள்..! காத்திருந்தால் காசு பார்க்கலாம்..!

இன்று நடந்த ரிலையன்ஸ் ஏ.ஜி.எம்மில் என்ன விசேஷம்?

“இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய நீட்டா அம்பானி, நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டது புதுமையாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு ரூ.75,000 கோடி முதலீடு செய்யப்படும்; சில்லறை வர்த்தகத் துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி காணப்படும்; கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவை; குறைந்த விலை ஸ்மார்ட் போன் எனப் பல அதிரடி அறிவிப்புகளை முகேஷ் அம்பானி வெளியிட்டார்.

ஆனால், அவர் வெளியிட்ட அறிவிப்புகள் ரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்கு உவப்பான செய்தியாக இல்லை. இன்று காலையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு அதிகபட்சமாக ரூ.2,214 வரை உயர்ந்து வர்த்தகமானது. ஆனால், முகேஷ் அம்பானி பேச ஆரம்பித்த பின், பங்கு விலை சரிய ஆரம்பித்தது. வர்த்தக முடிவில் அந்தப் பங்கு விலை 2.35% குறைந்து, ரூ.2,153-ஆக முடிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஆறு முறை ஏ.ஜி.எம் கூட்டம் நடந்த பின் பங்கு விலை இறங்கியது, பிற்பாடு ஏறிவிட்டது என்கிறார்கள். இந்த முறை பங்கு விலை எவ்வளவு உயரும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.’’

பி.இ.எம்.எல் பங்கு விலை ஓராண்டில் இரு மடங்காக உயர்ந்தது எப்படி?

‘‘ரயில் கம்பார்ட்மென்ட்ஸ் மற்றும் உதிரிபாகங்கள் மற்றும் சுரங்க உபகரணங்களைத் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான பி.இ.எம்.எல் நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த ஒரு வருடத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து வர்த்தக மாகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி 658.65 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்த இதன் பங்கு விலை, தற்போது ரூ.1,341 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இந்தக் காலகட்டத்தில் நிஃப்டி 55% அதிகரித்திருக்கும் நிலையில், இந்தப் பங்கின் விலை 100% வரை அதிகரித்து வர்த்தக மாகிறது. இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் இந்தப் பங்கானது தனது 52 வார உச்சபட்ச விலையான 1,544 ரூபாயைக் கடந்து, புதிய உச்சத்தைத் தொடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இலக்கு விலை 1,600 ரூபாயாகக் கணிக்கப் பட்டுள்ளது.”

கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த ஜூன் 23-ம் தேதி, கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் பங்கு விலை 12% வரை அதிகரித்து, 647.60 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது அதன் 52 வார உச்ச விலையாகும். இந்த நிறுவனத்தின் புரொமோட்டரான கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ், பங்கு ஒன்றுக்கு 570 ரூபாய் கொடுத்து, கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தி லிருந்து 9,76,047 பங்குகளை வாங்கியிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.55.63 கோடி. இதன் காரணமாகவே பங்கின் விலை அதிகரித்திருக்கிறது.”

ஐ.டி.பி.ஐ பேங்க் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்வதாக அறிவித்ததன் பின்னணி என்ன?

“ஐ.டி.பி.ஐ வங்கியின் 45.5% பங்குகள் ஆர்.பி.ஐ வசமும், எல்.ஐ.சி நிறுவனத்தின் வசம் 49.24 சதவிகிதமும் மற்றும் 5.29% புரொமோட்டர்கள் அல்லாதவர் களிடமும் இருக்கிறது. இதில் அரசின் வசமுள்ள 45.5% பங்கு களிலிருந்து 26% பங்குகளை விற்பனை செய்யப்போவதாக அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக பங்கின் விலை கடந்த ஜூன் 23-ம் தேதி 6% வரை அதிகரித்து, 40.10 ரூபாய்க்கு வர்த்த கமானது. 52 வார அதிகபட்ச விலையிலிருந்து 28.07% குறைந்தும், 52 வார குறைந்தபட்ச விலை யிலிருந்து 52.18% அதிகரித்தும் இந்தப் பங்கின் விலை வர்த்தக மாகிக் கொண்டிருக்கிறது.”

இந்தியப் பங்குச் சந்தையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்திருக்கிறதாமே?

“2020-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் 60% அதிகரித்து, 4.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடுகள் பிரிவில், மொரீஷியஸ் 24%, சிங்கப்பூர் 21%, ஜப்பான் 11% பங்கு வகிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் ஈர்த்ததில், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறை முதலிடத்தில் இருக்கிறது. இந்தத் துறை 24% அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதைத் தொடர்ந்து சேவைத் துறை 23% அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. கல்வித்துறை 8% முதலீடுகளை ஈர்த்துள்ளது.”

ஷேர்லக்: விலை ஏற்றம்... முதலீட்டுக்கு ஏற்ற ஸ்டீல் பங்குகள்..! காத்திருந்தால் காசு பார்க்கலாம்..!

ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலையின் போக்கு எப்படி இருக்கிறது?

“பொதுத்துறை ரயில்வே நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு மாதத்தில் 11% அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இந்தக் காலகட்டத்தில் இந்த நிறுவனம் தனது அதிகபட்ச விலையாக 2,184 ரூபாயைப் பதிவு செய்திருக்கிறது. ஜூன் 23-ம் தேதி வர்த்தகத்தில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 2,081 வரை அதிகரித்து வர்த்தகமானது. இந்தப் பங்கின் விலையில் பாசிட்டிவ் ஷார்ட் பேட்டர்ன் காணப்படுவதால், தற்போதைய நிலையிலிருந்து அதிகரித்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்த மூன்று மாதத்தில் இதன் விலை 2,270 முதல் 2,400 வரை செல்வதற்கு வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.”

இன்ஃபோசிஸ் பங்குகளை திரும்பப் பெறுகிறதாமே?

“ஜூன் 25-ம் தேதி முதல் பங்குகளைத் திரும்பப் பெறுவதற் கான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, ரூ. 9,200 கோடி மதிப்புள்ள பங்குகளைத் திரும்பப் பெற இன்ஃபோசிஸ் தீர்மானித்துள்ளது. திரும்பப் பெறும் பங்கு ஒன்றுக்கு அதிக பட்சமாக 1,750 ரூபாயை வழங்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, மொத்தம் 5,25,71,428 பங்குகள் திரும்பப் பெறப்பட இருக் கின்றன. இது மொத்த பங்கு மூலதனத்தில் 1.23% ஆகும்.

இன்ஃபோசிஸ் மட்டுமல்ல, இன்று டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 52 வாரங் களில் இல்லாத அளவுக்கு உச்சபட்ச விலையைத் தொட்டு இருக்கிறது. இன்று காலை ரூ.3,288-ஆக வர்த்தகம் ஆகத் தொடங்கிய இந்தப் பங்கு விலை, வர்த்தகத்தின் முடிவின்போது 3.44% உயர்ந்து, ரூ.3,373-ஆக உயர்ந்தது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்னும் உயர வாய்ப்பிருப்பதாகப் பல தரகு நிறுவனங்கள் சொன்னதுதான் இந்த விலையேற்றத்துக்குக் காரணம்.”

டோட்லா டெய்ரி நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெற்றியடைந்ததா?

“இந்த நிறுவனம், அண்மையில் புதிய பங்குகளை வெளியிட்டது. இந்த வெளியீட்டில் பங்கு ஒன்றின் விலை 421-428 ரூபாயாக நிர்ணயம் செய்யப் பட்டிருந்தது. இந்தப் பங்கு வெளியீட்டில் ரூ.520.17 கோடி ரூபாய் திரட்டும் நோக்கில் மொத்தம் 1,09,85,44 பங்குகள் வெளியிடப் பட்டன.

இந்த ஐ.பி.ஓ-வின் மூன்றாம் நாள் இறுதியில், 45 மடங்கு பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவுக்கு 85 மடங்கும், சில்லறை முதலீட் டாளர்கள் பிரிவுக்கு 11.3 மடங்கும், பெரும் முதலீட்டா ளர்கள் பிரிவுக்கு 73 மடங்கும் பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருந்தன.”

ஸ்டீல் பங்குகள் குறித்து முன்னணி முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கருத்து தெரிவித்திருக்கிறாரே..!

“நடப்பு 2021-22-ம் ஆண்டில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங் களின் லாபம் நாட்டின் ஜி.டி.பி-யில் சுமார் 5 சதவிகிதமாக இருக்கும். மேலும், கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இந்தியப் பங்குச் சந்தையில் பணவரத்து இருக்கும் என இந்தியாவின் வாரன் பஃபெட் எனச் சொல்லக் கூடிய முன்னணி முதலீட் டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், உலக அளவில் ஸ்டீல் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பால் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் தேவை அதிகரித்திருக்கிறது. இதன் காரண மாக விலை ஏற்றம் நடந்திருக்கிறது. பல ஸ்டீல் நிறுவனப் பங்குகளின் பி.இ விகிதம் 5 என கவர்ச்சிகரமாக இருக்கிறது. கமாடிட்டி சைக்கிள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. இது இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளுக்கு தொடரும் என ராகேஷ் ஜூன்ஜுன் வாலா சொல்லியிருக்கிறார். அடிப் படையில் வலுவான ஸ்டீல் பங்கு களில் முதலீடு செய்து, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் காத்திருந்தால் மட்டுமே இதில் காசு பார்க்கலாம். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கிட்டத் தட்ட 35-க்கும் மேற்பட்ட நிறுவனங் களில் முதலீடு செய்துள்ளார். இதன் மதிப்பு தற்போதைய நிலையில் ரூ.19,700 கோடிக்கு மேல் உள்ளது.”

இந்தியா பெஸ்டிசைட்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு பற்றி..!

“லக்னோவைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியா பெஸ்டிசைட்ஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.800 கோடி நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட முடிவு செய்திருந்தது. புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 100 கோடி ரூபாயும், ஓ.எஃப்.எஸ் முறையில் பங்கு சந்தை மூலம் 700 கோடி ரூபாயும் திரட்ட முடிவு செய்திருந்தது. இதில் வெளி யிடப்படும் பங்கு ஒன்றுக்கு 290-296 ரூபாய் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டிருந் தது’’ என்றவர், ‘‘இரண்டாம் அலை முடிந்துவிட்டது என அஜாக்கிரதை வேண் டாம். கவனமாக இருங்கள். தொடர்ந்து முதலீடு செய் யுங்கள்’’ என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.

இந்திய ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தைக் குறைத்த மூடிஸ்..!

நடப்பு 2021-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சி, 9.6 சதவிகிதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீசஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்குமுன் இந்த நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 13.9 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்திருந்தது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில், கொரோனா இரண்டாவது அலை, பொருளாதார செயல்பாட்டில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் காலாண்டில், பொருளாதார சரிவைத் தடுப்பதில், வேகமாகத் தடுப்பூசிகளைப் போடுவது முக்கிய பங்காற்றும் என்றும், தற்போது, மாநிலங்கள் ஊரடங்கு தடை உத்தரவுகளைத் தளர்த்தி வருவதால், பொருளாதாரம் மீட்சி அடைய ஆரம்பமாகியுள்ளது எனவும் மூடிஸ் தெரிவித்துள்ளது. ஆனால், அடுத்த, 2022-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி, 7 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது!

குளோபல் ஃபண்டுகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘குளோபல் ஃபண்டுகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த உள்ளன. 2021 ஜூலை 4-ம் தேதி காலை 10.30 முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.

இதில் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் பேசுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

கொரோனா சிக்கல்- 2.0

மாத்தி யோசிப்போம்... நிச்சயம் ஜெயிப்போம்...

கோவிட் பெருந்தொற்று காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் இனி என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவந்தால், ஏற்கெனவே செய்துவந்த தொழிலை மீண்டும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும், இதற்குத் தேவையான புதுமையான சிந்தனைகள் என்னென்ன என்பதைப் பற்றி ‘கொரோனா சிக்கல்- 2.o; மாத்தி யோசிப்போம்... நிச்சயம் ஜெயிப்போம்...’ என்ற தலைப்பில் நாணயம் விகடன் 27.06.21 அன்று மாலை 5.00 - 6.00 மணிக்கு ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: http://bit.ly/msme_day