Published:Updated:

ஷேர்லக்: மிட்கேப் to லார்ஜ்கேப்... முன்னேறிய பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழன் மாலை சரியாக 4 மணிக்கு நம் அலுவலகம் வந்து சேர்ந்தார் ஷேர்லக். நம் கேபினுக்குள் நுழைந்தவர், ஆறடி தூரத்தில் உட்கார்ந்துகொண்டார். முகக் கவசத்தைக் கழற்றாமல், ‘‘கேள்விகளைக் கேளுங்கள்’’ என்று ஜாடை காட்ட, நாம் கேட்க ஆரம்பித்தோம்.

கடந்த வாரங்களில் சரிந்த பங்குச் சந்தை திடீரென உயர்ந்து ஆச்சர்யம் தந்தது ஏன்?

‘‘ஒமிக்ரான் தொற்றுப் பரவல் மற்றும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பு போன்றவை சந்தையின் செயல்பாட்டுக்குப் பாதகமான அம்சமாக இருந்தாலும், உலக அளவிலான பாசிட்டிவ் செய்திகளால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் நல்ல ஏற்றம் கண்டன. டிசம்பர் 20-ம் தேதி அன்று சந்தையில் ஏற்பட்ட கரெக்‌ஷனுக்குப் பிறகான 13 வர்த்தக தினங்களில் அதாவது, புதன்கிழமை வரைக்கும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 9% ஏற்றத்தைச் சந்தித்தது. டிசம்பர் 5-ம் தேதி புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 60233 புள்ளிகளில் முடிந்தது. அதே போல, நிஃப்டியும் 17925 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இதன் காரணமாகப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்த நிறுவனப் பங்குகளில் 400 பங்குகளுக்கு மேலாக 52 வார அதிகபட்ச விலை ஏற்றத்தைத் தொட்டன. குறிப்பாக, ஏசியன் பெயின்ட், ஆஸ்ட்ரால், பல்ராம்பூர் சினி மில்ஸ், ஈசப் இந்தியா (Esab India), ஜி.எம்.ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், பிடிலைட் இண் டஸ்ட்ரீஸ், பூனவாலா ஃபின்கார்ப், ராடிகோ கிச்சன், டாடா கம்யூனிகேஷன்ஸ், திரிவேணி இன்ஜினீயரிங் அண்டு குஜராத் ஃபுளூரோ கெமிக்கல்ஸ் ஆகிய ‘ஏ குரூப்’ நிறுவனங்களின் பங்கு விலை 52 வார அதிகபட்ச விலையைத் தொட்டு வர்த்தகமானது. ‘பி குரூப்’ நிறுவனப் பங்குகளான ஏ2இசட் இன்ஃப்ரா, சி.ஜி.பவர், எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பல நிறுவனப் பங்குகளின் விலையும் உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாகின."

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

ஆனால், இன்று வியாழக்கிழமை இந்தியப் பங்குச் சந்தை இறங்கத் தொடங்கிவிட்டதே!

‘‘இதற்கு இரண்டு முக்கியக் காரணங்களைக் குறிப்பிடலாம். கோவிட் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பு, அமெரிக்காவில் வட்டி விகித அதிகரிப்பு எதிர்பார்ப்பு ஆகியவை காரணங்களாக உள்ளன. வாகனம், வங்கி, ஐ.டி, எஃப்.எம்.சி.ஜி மற்றும் ரியல் எஸ்டேட் குறியீடுகள் இறங்கி வர்த்தகமானது. ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், டெக் மஹிந்திரா மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் இறக்கம் கண்டன.’’

பங்குத் தரகு நிறுவனம் ஏஞ்சல் ஒன், 2022-ம் ஆண்டில் எந்தெந்தப் பங்குகள் சிறப்பாகச் செயல்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது?

“கடந்த ஆண்டைப் போல, இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட் டாளர்கள் முதலீட்டை வெளியில் எடுப்பது அதிகமாக இருக்காது. இதன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கவே, அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதன் காரணமாக 14 பங்குகளை ஏஞ்சல் ஒன் தரகு நிறுவனம் குறிப்பிட்டு, அந்தப் பங்குகள் விலை 8% - 80% வரை ஏற்றத்தைச் சந்திக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

ஃபெடரல் பேங்க் பங்கு விலை, தற்போதைய வர்த்தக விலையிலிருந்து 80% ஏற்றத்தைச் சந்திக்கும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.135 என்றும் குறிப்பிட்டுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்கு விலை 28% ஏற்றத்தைச் சந்திக்கும் என்றும், இலக்கு விலை ரூ.1,859 என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஏ.யு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் பங்கு விலை 51% அதிகரிக்கும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.1,520 என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அசோக் லேலாண்டு பங்கு விலை 42% ஏற்றம் அடையும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.175 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சோனா பி.எல்.டபிள்யூ பிரெசிசிசன் ஃபோர்ஜிங்ஸ் 36% ஏற்றத்தைப் பெறும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.959 என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் 65% ஏற்றத்தைச் சந்திக்கும் என்றும், இதன் இலக்கு விலை 1,545 என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சுப்ரஜித் இன்ஜினீயரிங் 24% ஏற்றமடையும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.520 என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.’’

பெரும்பாலான நிறுவன ஐ.பி.ஓ-க்களின் லாக்இன் காலம் நடப்பு ஜனவரியில் முடிவதாகத் தெரிகிறதே..?

“கடந்த 2021-ம் ஆண்டின் டிசம்பர் மாதம், புதிய பங்கு வெளியிட்ட (ஐ.பி.ஓ) நிறுவனங்களின் ‘பிளாக்பஸ்டர்’ மாதம் என்றே சொல்லலாம். ஏனெனில், அந்த மாதத்தில் மட்டும் ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்ஷூரன்ஸ், ஆனந்த் ரதி வெல்த், ரேட்கெயின் டிரவால் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் புதிதாக ஐ.பி.ஓ வெளியிட்டன. இந்த நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் திரட்டிய மொத்த நிதி ரூ.16,800 கோடி ஆகும். இதில் பெரும்பாலான நிறுவனங் களின் பங்குகளில் முதலீடு செய்த ஆங்கர் முதலீட்டாளர் களின் (anchor investors) 30 நாள் ‘லாக்இன் பீரியட்’ நடப்பு ஜனவரி மாதத்தில் முடிகிறது.

ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் லாக்இன் காலம் ஜனவரி 10-ம் தேதியுடனும், ரேட் கெயின் டிராவல் டெக் மற்றும் ராம் புராபர்ட்டிஸ் நிறுவனத்தின் லாக்இன் காலம் ஜனவரி 14-ம் தேதியுடனும் முடிவடைகிறது. அதே போல, சி.இ இன்ஃபோ சிஸ்டம்ஸ் மற்றும் மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் ஆங்கர் முதலீட்டாளர்களின் லாக்இன் பீரியட் ஜனவரி 17-ம் தேதியுடன் முடிவடைவதால், அவர்கள் தங்களின் பங்குகளை விற்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள் எனத் தெரிகிறது.”

சில பங்கு தரகு நிறுவனங்கள் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்கை முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்திருப்பது பற்றி?

“ஹெ.டி.எஃப்.சி பேங்க், சொத்து நிர்வகித்தல் மற்றும் சிறந்த வருவாய் விகிதங்களை வழங்கும் திறன் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டு சாதனை படைத்து வருவதை மேற்கோள் காட்டி, பங்குத் தரகு நிறுவனமான எம்.கே குளோபல், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்குகளை ரூ.2,050 இலக்கு விலையுடன் வாங்கப் பரிந்துரை செய்துள்ளது.

அதே போல, மார்கன் ஸ்டான்லி பங்குத் தரகு நிறுவனமும் இதன் பங்கை ‘ஓவர்வெயிட்’ நிலையில் வைத்து, ரூ.2,050 இலக்கு விலையை நிர்ணயம் செய்துள்ளது. பங்குத் தரகு நிறுவனங்களில் அறிவிப்பு காரணமாக, இதன் பங்கு விலை கடந்த ஜனவரி 5-ம் தேதி 2% வரை ஏற்றத்தைச் சந்தித்து ரூ.1,552.50-க்கு வர்த்தகமானது.

உள்நாட்டுப் பங்குத் தரகு நிறுவனமான மோதிலால் ஆஸ்வெல் நிறுவனமும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக் கிறது. இது பங்கின் இலக்கு விலையை ரூ.2,000 ஆக நிர்ணயித் துள்ளது.”

தெர்மேக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“தெர்மேக்ஸ் நிறுவனம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு யூனிட்டு களுக்கு எஃப்.ஜி.டி அமைப்பு களை அமைக்க இந்திய மின் சக்திப் பொதுத்துறை நிறுவனத் திடமிருந்து ரூ.545.6 கோடி ஆர்டரைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டதும், கடந்த வாரம் புதன்கிழமை அன்று இதன் பங்கு விலை 7 சதவிகிதமும், வியாழக்கிழமை அன்று 3 சத விகிதமும் உயர்ந்து வர்த்தக மானது!’’

ஏ.யு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“சொத்துகளின் தரம், டெபா சிட் திரட்டுவதில் வலுவாகச் செயல்படுவது போன்றவை வங்கிக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்கிற காரணத் தால் மோதிலால் ஆஸ்வால் பங்குத் தரகு நிறுவனம், இந்த வங்கியின் பங்குகளை முதலீட் டாளர்கள் வாங்கலாம் எனத் தெரிவித்துள்ளது. இதன் இலக்கு விலையை ரூ.1,400-ஆக நிர்ணயித் துள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 5-ம் தேதி காலை வர்த்தகத்தில் 6.85% வரை அதிகரித்து, ரூ.1,169 ஆக வர்த்தக மானது. கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் மட்டும் இதன் பங்கு விலை 15% வரை அதிகரித்திருக் கிறது. மார்கன் ஸ்டான்லி தற்போதைய வர்த்தக விலையி லிருந்து 28% வரை விலை உயரும் எனக் குறிப்பிட்டுள்ளது. பங்கின் இலக்கு விலை ரூ.1,500 ஆக நிர்ணயித்துள்ளது.”

மிட்கேப்பிலிருந்து லார்ஜ்கேப் பிரிவுக்கு பல நிறுவனப் பங்குகள் முன்னேறி இருக்கின்றனவே?

“பங்குச் சந்தை மதிப்பின் அடிப்படையில் நிறுவனப் பங்குகள் லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் என மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவ்வப்போது பங்குகள் விலை ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாவதால், இந்த வகைப்பாடுகளின் பட்டியல்களில் மாற்றங்கள் நடக்கும்.

அந்த வகையில், தற்போது இவற்றின் பட்டியலில் நடந்துள்ள மாற்றங்களை ஆம்ஃபி அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, மிட்கேப் பிரிவிலிருந்து புதிதாக 13 பங்குகள் லார்ஜ்கேப் பிரிவுக்குள் நுழைந் துள்ளன. அவற்றில் மைண்ட்ட்ரீ, எஸ்.ஆர்.எஃப், ஐ.ஆர்.சி.டி.சி, டாடா பவர், எம்ஃபசிஸ், கோத்ரேஜ் புராபர்ட்டீஸ், மேக்ரோ டெக் டெவலப் பர்ஸ், பாரத் எலெக்ட் ரானிக்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி ஆகியவை குறிப்பிட்டத் தக்கவை.

அதேசமயம், லார்ஜ்கேப்பில் இருந்த பங்குகள் சில மிட்கேப் பிரிவுக்கு நகர்ந்துள்ளன. பந்தன் பேங்க், பாஷ், சோழமண்டலம் இன்வெஸ்ட், பி அண்ட் ஜி, அரபிந்தோ பார்மா, என்.எம்.டி.சி, லூபின், பேங்க் ஆஃப் பரோடா, பயோகான், கோல்கேட், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹனிவெல் ஆட்டோமேஷன், யெஸ் வங்கி உள்ளிட்டவை லார்ஜ்கேப் பிரிவிலிருந்து மிட்கேப் பிரிவுக்கு வந்துள்ளன. புதிதாகப் பட்டியலான ஸ்டார்ஹெல்த், க்ளீன் சயின்ஸ், நுவோகோ விஸ்டாஸ், ஆதித்ய பிர்லா, ஜி.ஆர் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ், ஆப்டஸ் வேல்யூ ஹவுஸிங், தேவயானி இன்டர்நேஷனல் போன்றவை மிட்கேப்பில் சேர்ந்துள்ளன.

ஸ்மால்கேப் பிரிவிலிருந்து குஜராத் ஃபுளூரோகெமிக்கல், ஹாப்பியஸ்ட் மைண்ட், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியா எனர்ஜி, நேஷனல் அலுமினியம், ட்ரை டென்ட், பிரஸ்டீஜ் எஸ்டேட், க்ரிண்ட்வெல் நார்டன், சிஜி பவர் ஆகியவை மிட்கேப் பிரிவுக்கு முன்னேறியுள்ளன. அதேபோல், மிட்கேப் பிரிவிலிருந்து பீனிக்ஸ் மால்ஸ், அலெம்பிக் பார்மா, மணப்புரம் ஃபைனான்ஸ், கிளென்மார்க் பார்மா, எக்ஸைட் இண்டஸ்ட் ரீஸ், புளூடார்ட் எக்ஸ்பிரஸ், வாப்கோ இந்தியா, அப்போலோ டயர்ஸ், சைடஸ் வெல்னஸ், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கேஸ்ட்ரால் இந்தியா, சுவென் பார்மா, அமர ராஜா பேட்டரீஸ், இண்டிகோ பெயின்ட், சிட்டி யூனியன் பேங்க், ஆர்.பி.எல் பேங்க், வைபவ் குளோபல் உள்ளிட்ட பல பங்குகள் ஸ்மால் கேப் பிரிவுக்கு நகர்ந்துள்ளன. கடந்த ஜூலை 2021-ல் இந்த மூன்று பிரிவு களுக்கான தகுதி சந்தை மதிப்பு மாற்றியமைக்கப் பட்டது. லார்ஜ்கேப் தகுதி மதிப்பு ரூ.37,746 கோடியிலிருந்து ரூ.47,600 கோடியாக உயர்த்தப்பட்டது. மிட்கேப் தகுதி மதிப்பு ரூ.11,820 கோடியிலிருந்து ரூ.16,200 கோடியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.”

ஸ்பந்தன ஸ்பூர்த்தி பங்கு விலை கடந்த ஒரு வாரத்தில் 12% குறைந்தது ஏன்?

‘‘இந்த நிறுவனத்தின் புரொமோட்டருக்கும் பிரை வேட் ஈக்விட்டி இன்வெஸ்டார் கேதரா கேப்பிடல் நிறுவனத் துக்கும் இடையே மோசமான சூழல் இருப்பதால், நிறுவனத் தின் நிர்வாகம் பற்றி முதலீட்டாளர்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை. தவிர, செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.60 கோடி நஷ்டம் அடைந்துள்ளதே இதற்குக் காரணம்’’ என்றவர், ‘‘கோவிட் தொற்றால் பாதிக்கப்படுகிற வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’ என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்!

ஷேர்லக்: மிட்கேப் to லார்ஜ்கேப்...
முன்னேறிய பங்குகள்..!

கிரிப்டோகரன்சி... உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்!

நாணயம் விகடன் மற்றும் ஜியோட்டஸ் கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச் இணைந்து நடத்தும் ‘கிரிப்டோ கரன்சி... உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்!’ என்ற நிகழ்ச்சி ஆன்லைனில் நடக்கிறது. இது ஜனவரி 23 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 - 01.30 மணிவரை நடைபெறும். இதில், ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் இணை நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஜி.அர்ஜுன் விஜய் சிறப்புரையாற்றுகிறார். அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/Nv-giottus