Published:Updated:

ஷேர்லக்: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிதாக முதலீடு செய்திருக்கும் பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிதாக முதலீடு செய்திருக்கும் பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை காலையில் ஷேர்லக், “மாலை 4 மணிக்கு வீடியோகாலில் சந்திப்போம்” எனத் தகவல் அனுப்பியிருந்தார். நாம் கேள்விகளுடன் தயாராக இருக்க, சொன்ன நேரத்துக்கு வீடியோகாலில் தொன்றினார். நாம் கேள்விகளைக் கேட்க, பதில் சொல்ல ஆரம்பித்தார்

கடந்த செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் சந்தை சரிந்தது ஏன்?

“சந்தையின் இந்தச் சரிவுக்கு உள்நாட்டு நிலைமையைவிட சர்வதேச நிலைமையே காரணங்களாகச் சொல்லப்படுகிறது. முதல் காரணம், பிரெண்ட் குரூட் கச்சா எண்ணெய் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு பீப்பாய் பிரெண்ட் குரூட் கச்சா எண்ணெய் விலை 88 டாலருக்குமேல் சர்வதேச சந்தையில் விற்பனையாகிறது. கடந்த 2014 அக்டோபருக்குப் பிறகு, இப்போதிருக்கும் விலை உச்சபட்ச விலையாகும். கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்தாலும், நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசாங்கம் கடந்த சில நாள்களாக உயர்த்தவில்லை. அதனால், இந்தப் பிரச்னை நம் கண்ணில் படாமலே இருக்கிறது.

அடுத்த முக்கியமான காரணம், அமெரிக்காவில் பாண்டு சந்தை அதிக வருமானம் தரத் தொடங்கி யிருப்பதால், அந்நிய நேரடி முதலீட்டாளர்களும், அந்நிய போர்ட்ஃபோலியோ நிறுவனங்களும் இந்தியச் சந்தையிலிருந்து வெளியேறத் தொடங்கி யிருக்கிறார்கள். கடந்த 2020 டிசம்பரில் 1.5 சதவிகிதமாக இருந்த 10 ஆண்டு கருவூல பாண்டின் வருவாய், கடந்த டிசம்பரில் 1.9 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, இந்த வருவாய் உயர்வு மிகப் பெரிய வளர்ச்சி ஆகும்.

இந்த இரு காரணங்களால் அவர்கள் நம் சந்தையிலிருந்து வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த புதன்கிழமை அன்று மட்டும் ரூ.2,705 கோடி அளவுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைத் திரும்ப எடுத்திருக் கிறார்கள். வியாழன் அன்று இந்த அளவைவிடக் கூடுதலாக எடுத்திருந்தாலும் ஆச்சர்யமில்லை. எனவே, சந்தை வீழ்ச்சி கண்டிருக்கிறது.

சந்தையின் இந்த இறக்கம் தற்காலிகமானதே என்று நம்பலாம். இன்னும் சில நாள்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால், சந்தைப் புள்ளிகள் உயர்வதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள். எனவே நல்ல அடிப்படை உள்ள பங்குகள் விலை குறைந்திருந்தால், அவற்றை இன்னும் கொஞ்சம் வாங்கிச் சேர்க்கலாம்.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

பேடிஎம் நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறதே?

“பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் கடந்த நவம்பர் மாதம் ஐ.பி.ஓ வெளியிட்டது. அந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் ரூ.18,600 கோடி மதிப்புள்ள பங்குகளை பேடிஎம் நிறுவனம் வெளியிட்டது. ஆனால், இதற்கு எதிர்பார்த்த வரவேற்பு முதலீட்டாளர் களிடமிருந்து கிடைக்கவில்லை. பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்டதிலிருந்து இதன் பங்கு விலை சரிவைச் சந்தித்து வருகிறது.

கடந்த ஜனவரி 19-ம் தேதி, இதன் பங்கு விலை முந்தைய நாள் வர்த்த முடிவு விலையில் இருந்து 4.33% சரிந்து, ரூ.997.35-க்கு வர்த்தகமானது. ரூ.1,000-க்கும் கீழ் இதன் பங்கு விலை சரிந்திருப்பது இதுவே முதல்முறையாகும். அதே நாளில் எப்போதும் இல்லாத வகையில் வெளியீட்டு விலையை (ரூ.2,150) விட 54% வரை சரிந்து, ரூ.990 வரை வர்த்தகமானது. பட்டியலிடப்பட்ட நாளிலிருந்து சுமார் ரூ.74,000 கோடிக்கு பங்கு மதிப்பு குறைந்திருக்கிறது.

இந்த நிலையில், பங்குத் தரகு நிறுவனமான மேக்குரிஸ் ரிசர்ச், பேடிஎம் நிறுவனத்தின் இலக்கு விலையை ரூ.1,200-லிருந்து ரூ.900-ஆக குறைத்துள்ளது.”

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத் தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆ ண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. டிசம்பர் காலாண்டு முடிவில் இந்த நிறுவனத்தின் லாபம் 84.4% அதிகரித்து, ரூ.1,933.90 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல, இதன் நிகர வட்டி வருமானமும் 40% அதிகரித்து, ரூ.5,553 கோடி யாக உள்ளது. இந்த நிறுவனம் நிர்வகித்துவரும் சொத்து மதிப்பும் 21% அதிகரித்து, ரூ.1.3 லட்சம் கோடியாக உள்ளது. இப்படி ஒரு சிறப்பான காலாண்டு முடிவை வெளியிட்ட காரணத்தால், கடந்த வாரம் புதன்கிழமை அன்று இதன் பங்கு விலை 2.3% வரை அதிகரித்து, ரூ.7,229-க்கு வர்த்தக மானது.”

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஜூபிலான்ட் இங்ரேவியா நிறுவனத் தின் பங்குகளை விற்றிருக்கிறாரே?

“பிரபல முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன் வாலா, டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, ஜூபிலான்ட் இங்ரேவியா (Jubilant Ingrevia) நிறுவனத்தின் 0.81% பங்குகளை அதாவது, 1.3 மில்லியன் பங்குகளை விற்பனை செய்திருக் கிறார். இதன் மதிப்பு ரூ.79.44 கோடி. தற்போதைய நிலையில் இந்த நிறுவனத்தில் 50 லட்சம் பங்குகள் அதாவது, 3.14% பங்குகளை ராகேஷ் ஜுன்ஜுன் வாலா தன் வசம் வைத்திருக்கிறார். வியாழக்கிழமை அன்று காலை வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை, 2.08% சரிந்து, ரூ.585.25-க்கு வர்த்தமானது.”

எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீட்டை முன்னிட்டு டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகச் சொல்லப் படுகிறதே?

“நடப்பு நிதி ஆண்டில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐ.பி.ஓ எனில், அது எல்.ஐ.சி ஐ.பி.ஓ-தான். இன்னும் ஒரு சில மாதங்களில் இதன் ஐ.பி.ஓ வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் புதிதாக டீமேட் கணக்குகளைத் தொடங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பாக, எல்.ஐ.சி நிறுவனமும், பாலிசிதாரர்களுக்கு ஐ.பி.ஓ வெளியீட்டில் 10% ஒதுக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டி, பாலிசிதாரர்களை பான் மற்றும் ஆதார் விவரங்களை அப்டேட் செய்யச் சொன்னது. டீமேட் கணக்கு இல்லாதவர்களை டீமேட் கணக்கைத் தொடங்கவும் அறிவுறுத்தியது. இதன் காரணமாக, கடந்த சில வாரங்களில் எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் புதிதாக டீமேட் கணக்குகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் எதிர்வரும் காலங்களில் எல்.ஐ.சி ஐ.பி.ஓ-க்களில் பங்கு பெறுவதற்காகவே 10 - 30 லட்சம் வரையிலான டீமேட் கணக்குகளை மக்கள் ஆரம்பிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, புதிய முதலீட் டாளர்கள் பலர் பங்குச் சந்தைக்குள் வந்திருக்கிறார்கள். அதனால் டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதன்படி 2020-2021 நிதி ஆண்டில் டீமேட் கணக்குகளில் எண்ணிக்கை 29% வரை அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2021-2022-ம் ஆண்டின் அக்டோபர் மாதம் வரையில் டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 37% அதிகரித்துள்ளது.”

பி.டி.சி இந்தியா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலை குறைய என்ன காரணம்?

“நிறுவனத்தின் நிர்வாகம் வெளிப்படையாக இல்லை என பி.டி.சி இந்தியா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தனிப்பட்ட இயக்குநர்கள் கமலேஷ் விகாம்சே, தாமஸ் மேத்யூ மற்றும் சந்தோஷ் நாயர் ஆகியோர் ராஜினாமா செய்திருக்கிறார்கள். ராஜினாமாவை கடந்த ஜனவரி 19-ம் தேதியன்று பி.டி.சி இந்தியா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்தது. இந்தத் தகவலுக்குப் பிறகு பி.டி.சி இந்தியா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த வாரத்தில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் 16% சரிந்து ரூ.21.55-க்கு வர்த்தகமானது.”

பன்சாலி இன்ஜினீயரிங் நிறுவனத் தின் பங்கு விலை குறைய என்ன காரணம்?

“பன்சாலி இன்ஜினீயரிங் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், எதிர்பார்த்ததைவிட மோசமான காலாண்டு முடிவுகளை இந்த நிறுவனம் வெளியிட்டிருப்பதால், பங்கு விலை சரிந்துள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று இந்நிறுவனத்தின் பங்கு விலை 10% வரை சரிந்து ரூ.162 என்கிற விலையில் வர்த்தகமானது.

இந்த நிறுவனம், தனது டிசம்பர் காலாண்டு முடிவில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 44.4% வரை சரிந்து, ரூ.75.7 கோடி யாகக் குறைந்திருப்பதைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.136.30 கோடியாக இருந்தது.”

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“தொழில்நுட்பம் மற்றும் சோர்ஸிங், சார்ஜிங் உள் கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் ஏதர் எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கான விஷயங் களை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இதற்காக ஏதர் எனர்ஜி நிறுவனத்தில் ரூ.470 கோடியை முதலீடு செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக இந்நிறுவனத் தின் பங்கு விலை ஜனவரி 17-ம் தேதி அன்று 5% வரை அதிகரித்து ரூ.2,700.85-க்கு வர்த்தகமானது. வியாழக்கிழமை மதியம் வர்த்தகத்தின்போது இதன் பங்கு விலை ரூ.2,740-க்கு வர்த்தகமானது.”

பல புதிய நிறுவனப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றனவே?

“டிசம்பர் மாதத்தில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிதாக வாங்கிய பங்குகள் பற்றிய விவரங்கள் வெளியாகி இருக் கின்றன. புதிதாக இப்கா லேப்ஸ், ஐ.டி.எஃப்.சி, வேர்ல்பூல் ஆகிய நிறுவனப் பங்குகளில் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கேட்வே டிஸ்ட்ரி பார்க்ஸ், நவின் ஃப்ளோரின், கஜாரியா செராமிக்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகளிலும், ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் கே.பி.ஆர் மில், யூ.டி.ஐ அஸெட் மேனேஜ் மென்ட் கம்பெனி, சுப்ரஜித் இன்ஜினீயரிங் ஆகிய நிறுவனப் பங்குகளிலும் கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐ.டி.எஃப்.சி, ரெயின் இண்டஸ்ட் ரீஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகளிலும் புதிதாக முதலீடு செய்திருக்கின்றன.

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், மோல்டு டெக் பேகேஜிங், வெல்ஸ்பன் கார்ப், ரெயின் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகளிலும், மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஹெனிவெல் ஆட்டோமேஷன், ஐ.டி.எஃப்.ஜி, ஸ்ட்ரைட்ஸ் பார்மா சையின்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகளிலும், பிஜிம் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், டிவிஸ் லேபரட்டரீஸ், பி&ஜி ஹைஜின், லூபின் ஆகிய நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்திருக்கின்றன.”

ஏ.ஜி.எஸ் டிரான்சாக்ட் டெக்னாலஜிஸ் ஐ.பி.ஓ குறித்து...

“ஏ.ஜி.எஸ் டிரான்சாக்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-தான் நடப்பு 2022-ம் ஆண்டின் முதல் ஐ.பி.ஓ ஆகும். இந்த நிறுவனம் ரூ.680 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஜனவரி 19-21-ம் தேதி வரை ஐ.பி.ஓ வெளியிட்டது. முதல் நாளான ஜனவரி 19-ம் தேதியே வெளியிடப்பட்ட பங்குகளில் 76% பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். அதாவது, ஐ.பி.ஓ வெளியீட்டில் மொத்தம் 2.86 கோடி பங்குகள் வெளியிடப்பட்டன.

முதல் நாளிலேயே 2.18 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இதில் சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட அளவைவிட 1.10 மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. அதே நேரத்தில் தகுதி வாய்ந்த முதலீட் டாளர்கள் பிரிவில் இருந்து விண்ணப்பங்கள் எதுவும் வரவில்லை. நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்டதில் 99% பங்குகளுக்கு விண்ணப் பங்கள் வந்திருக்கின்றன. அதாவது, முதல் நாளில் ஒதுக்கப்பட்ட 61.45 லட்சம் பங்குகளில் 61.02 லட்சம் பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன” என்றவர், ‘‘பங்குச் சந்தை முதலீட்டை நோக்கி பலரும் வந்துகொண்டு இருக்கிறார்கள். இந்த முதலீட்டில் முறைகேடு ஏதும் நடக்காதபடிக்கு சரியான விதிமுறைகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்’’ என்கிற கோரிக்கையை வைத்தபடி நமக்கு விடை கொடுத்தார் ஷேர்லக்!

சரியான முறையில் பிரித்து முதலீடு செய்வதன் முக்கியத்துவம்!

நாணயம் விகடன் மற்றும் குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘சரியான முறையில் பிரித்து முதலீடு செய்வதன் முக்கியத்துவம்!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி. ஜனவரி 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறும். மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண் மற்றும் குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாக இயக்குநர் ஐ.வி.சுப்ரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/3qlNRZy

முதலீட்டாளர்கள் உஷார்..!

திருச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 1,64,000 ரூபாய் கொடுத்தால், மாதத்துக்கு 9% லாபம் கொடுப்பதாகவும், மூன்றாம் மாதத்தில் முதலீட்டைத் திருப்பித் தருவதாகவும், ஆறு மாதங்களுக்கு லாபம் தருவதாகவும் சொல்லி, பணத்தை வசூல் செய்யத் தொடங்கியிருக்கிறது. வாங்கிய பணத்தை மூன்றே மாதங்களில் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதி மூன்று மாதங்களுக்கு எப்படி லாபம் தர முடியும்? தவிர, மாதத்துக்கு 9% லாபம் தருவோம் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறது? உஷார் மக்களே உஷார்..!

ஷேர்லக்: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிதாக முதலீடு செய்திருக்கும் பங்குகள்..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism