Published:Updated:

ஷேர்லக்: ரூ.1,788 கோடி அபராதம்... சரிவை சந்தித்த டயர் பங்குகள்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: ரூ.1,788 கோடி அபராதம்... சரிவை சந்தித்த டயர் பங்குகள்!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வீடியோகால் மூலம் ஆஜர் ஆனார் ஷேர்லக். நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

முக்கியமான டயர் நிறுவனப் பங்குகளின் சரிவுக்கு என்ன காரணம்..?

“எம்.ஆர்.எஃப், அப்போலோ, சியட், பிர்லா, ஜே.கே.டயர் ஆகிய டயர் உற்பத்தி நிறுவனங் கள் மீது இந்திய போட்டி ஆணையம் (CCI) ரூ.1,788 கோடி அளவில் அபராதம் விதித்து உள்ளது. காரணம், இந்த டயர் நிறுவனங்கள் அனைத்தும் கூட்டாக இணைந்து 2011-12 காலகட்டத்தில் டயர் சந்தையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து உற்பத்தி மற்றும் விநியோக வரம்புகளில் முறைகேடாகக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சந்தையில் விலையேற்றத்தையும், டிமாண்டையும் அதிகரித்துள்ளன. இப்படி முறைகேடாக நடந்துகொண்டதற்காக இவற்றின் மீது இந்திய போட்டி ஆணையம் அபராதம் விதித்தது.

அப்போலோ டயர் மீது ரூ.425.53 கோடியும், எம்.ஆர்.எஃப் மீது ரூ.622.09 கோடியும், சியட் மீது ரூ.252.16 கோடியும், ஜே.கே டயர் மீது ரூ.309.95 கோடியும், பிர்லா டயர் மீது ரூ.178.33 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று போட்டி ஆணையம் இந்தத் தகவலை வெளியிட்டதை அடுத்து டயர் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்திக்கத் தொடங்கின. வியாழன் அன்று சியட் பங்கு அதிகபட்சமாக 6% வரை சரிந்து அதன் 52 வார இறக்க நிலைக்குச் சென்றது. எம்.ஆர்.எஃப், அப்போலோ டயர் பங்குகள் இறக்கம் கண்டு பின்னர் நேர்க்கோட்டில் நகர்ந்தன. மற்றவை 1% - 2% வரை இறக்கம் கண்டன.”

டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் பங்கு விலை அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமாகி அசத்தியதே...

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்கு விலை 5% வரை அதிகரித்து, ரூ.91.55 என்கிற அப்பர் சர்க்யூட் விலையில் வர்த்தகமானது. கடந்த ஐந்து வாரங்களில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 3% ஏற்றத்தை சந்தித்திருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை மட்டும் 108% ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. கடந்த டிசம்பர் காலாண்டு முடிவின்படி, பிரபல முதலீட் டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா, டி.பி ரியாலிட்டி நிறுவனத்தின் 2.06% பங்குகளை வைத்திருக்கிறார்.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

அனுபம் ரசாயன் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த புதன்கிழமை அன்று இந்த நிறுவனப் பங்கின் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வர்த்தகமானது. அன்றைய வர்த்தகத்தில் 10% வரை விலை அதிகரித்து, ரூ.1,106-க்கு வர்த்தக மானது. இந்நிறுவனத்தின் இயக்குநர் குழு பிர்லா குரூப் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டிலிருந்து டன்ஃபக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 24.96% பங்குகளைக் கையகப் படுத்த ஒப்புதல் தந்ததன் காரணமாக இதன் பங்கு விலை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.”

தற்போது வந்திருக்கும் மத்திய பட்ஜெட்டால் எந்தெந்த துறை சார்ந்த பங்குகள் பலன் பெறும்?

“உள்கட்ட மைப்பு, மூலதனப் பொருள்கள், ரியல் எஸ்டேட், ரயில்வே, மின்சாரம், ஃபின்டெக், விவசாயம், பாதுகாப்பு மற்றும் வங்கிகள் ஆகிய துறைகள் இந்த பட்ஜெட்டால் மிகப்பெரிய பயனாளி களாக இருக்கும். அதனால் இத்துறை சார்ந்த பங்குகளின் விலை இனிவரும் ஏற்றமடைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இதன் காரண மாக, லார்சன் அண்டு டியூப்ரோ, அல்ட்ராடெக் சிமென்ட், டி.எல்.எஃப், பார்தி ஏர்டெல், ஐ.ஆர்.சி.டி.சி, கேன் ஃபின் ஹோம்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏ.பி.பி சிமென்ட், தெர்மேக்ஸ், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், இன்ஃபோ எட்ஜ், ஸொமேட்டோ, குளோபஸ் ஸ்பிரிட்ஸ், ப்ராஜ் இண்டஸ்ட்ரீஸ், டிக்ஸான் டெக் னாலஜீஸ் மற்றும் அம்பெர் என்டர் பிரைசஸ் போன்ற நிறுவனங்களின் பங்கு விலை ஏற்றத்தைச் சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளன.’’

அதே நேரத்தில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்கு வெளீயீடு குறித்த தெளிவான அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறாதது முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.”

வோடாஃபோன் ஐடியாவின் பங்கு விலை அதிகரிக்க காரணம்..?

“வோடஃபோன் ஐடியாவின் போட்டி நிறுவனமான டாடா டெலி சர்வீசஸ் பிப்ரவரி 1-ம் தேதி அன்று, ஒத்தி வைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் மற்றும் ஏஜிஆர் நிலுவைத் தொகைக்கான வட்டியை ரூ.850 கோடி மதிப்புள்ள ஈக்விட்டி பங்குகளாக மாற்றும் முடிவில் இருந்து நிறுவனம் பின்வாங்கி உள்ளது. நிலுவைத் தொகையின் நிகர தற்போதைய மதிப்பு ரூ.195.2 கோடி என்றும், ரூ.850 கோடி அல்ல என்றும் தொலைத்தொடர்புத் துறை இந்த நிறுவனத்திடம் தெரிவித்த தால், ‘வட்டித் தொகை எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாக இருப்பதால், ஈக்விட்டி பங்குகளாக மாற்றும் முடிவை திரும்பப் பெற வாரியம் முடிவு செய்துள்ளது” என்று டாடா டெலிசர்வீசஸ் தெரிவித்துள்ளது. இந்த முடிவால் என்.எஸ்.இ-யில் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் 5% வரை உயர்ந்து, ரூ.1,48.8-ல் முடிவடைந்தது. 3-ம் தேதி காலை வர்த்தகத்தில் மேலும் விலை அதிகரித்து ரூ.156-க்கு வர்த்தகமானது. பிப்.2-ம் தேதி வர்த்தகத்தின்போது வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு விலையும் 6% வரை அதிகரித்து ரூ.11.40-க்கு வர்த்தகமானது. ஆனால், வியாழன் அன்று முடிவில் ரூ.11.35-க்கு வர்த்தகமானது.”

ஐ.டி.சி நிறுவனப் பங்கை வாங்க முதலீட்டாளர்கள் பரிசீலிக்கலாமா?

“சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருள்கள் மீதான வரிவிகிதங்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாத காரணத்தால், ஐ.டி.சி நிறுவனத்தின் பங்கு விலை பிப்ரவரி 2-ம் தேதி 1% வரை அதிகரித்து, ரூ.230-க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனத் தின் மொத்த வருவாயில் 40% வருவாயை சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்களின் மூலம்தான் கிடைக்கின்றன. வரி விகிதங்களை உயர்த்தாமல் விட்டது இந்த நிறுவனத்துக்கு சாதகமானதுதான். அதனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை தற்போதைய விலையிலிருந்து 30% வரை ஏற்றம் பெற வாய்ப் பிருப்பதாக உலக தரகு நிறுவன மான ஜெஃப்ரிஸ் தெரிவித் துள்ளது. இதன் இலக்கு விலையை ரூ.300-ஆக நிர்ணயித் துள்ளது. அதேபோல, இன்வெஸ் டெக் தற்போதைய வர்த்தக விலையில் இருந்து 12% வரையும், மார்கன் ஸ்டேன்லி 9% வரையும் பங்கு விலை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இவ்விரு தரகு நிறுவனங்களும் முறையே ஐ.டி.சி பங்கின் இலக்கு விலையை ரூ.258 மற்றும் ரூ.251-ஆக நிர்ணயம் செய்துள்ளன.”

இனிவரும் நாள்களில் சிமென்ட் நிறுவனப் பங்குகளின் விலை போக்கு எப்படி இருக்கும்?

“பிப்ரவரி 1-ம் தேதி சமர்ப் பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் டில் 2022-23-ம் ஆண்டுக்கான மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகமாக உயர்த்தியதைத் தொடர்ந்து சிமென்ட் மற்றும் உள்கட்டமைப்பு துறை சார்ந்த பங்குகளின் விலை ஏற்றத்தைச் சந்தித்தன. நிதி அமைச்சர் மூலதனச் செலவுக் கான ஒதுக்கீட்டை ரூ.7.5 லட்சம் கோடியாக அறிவித்திருக்கிறார். இது 2021-22 பட்ஜெட்டில் சொல்லியிருந்த ரூ.5.5 லட்சம் கோடியைவிட 35.4% அதிகமாகும். இனி எதிர்வரும் காலங்களில் உள்கட்டமைப்பு நிறுவனங் களுக்கு அரசின் டெண்டர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், அவர்களின் ஆர்டர் புத்தகத்தின் மதிப்பும் அதிகரிக்கும்.

பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியான உடனே இன்ஃப்ரா துறை சார்ந்த சீமென்ஸ், லாட்சன் அண்ட் டியூப்ரோ, அதானி போர்ட்ஸ் அண்டு கன்டெயினர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2-4% வரை ஏற்றத்தைக் கண்டன.”

ஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று, ஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் பங்கு விலை 4% வரை அதிகரித்து ரூ.1,403-க்கு வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 2% வரை மட்டுமே லாபத்தைப் பதிவு செய்திருக்கும் சமயத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 35% வரை ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியான பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரத்தின் முதல் மூன்று வர்த்தக தினங்களில் மட்டும் 10% வரை ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. இந்நிறுவனத்தின் நிகர லாபம் 68% அதிகரித்து, ரூ.302 கோடியாக இருக்கிறது. நிகர வட்டி வருமானம் 30% அதிகரித்துள்ளது.”

அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோன் நிறுவனத்தின் பங்கு விலை குறைய என்ன காரணம்?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று, இந்நிறுவனத்தின் பங்கு விலை பி.எஸ்.இ-யில் 2.41% வரை சரிந்து, ரூ.721.50-க்கு வர்த்தகமானது. இந்நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டும் முடிவில், ஒருங்கிணைந்த லாபம் 6.20% வரை சரிந்து, ரூ.1,478.76 கோடியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,576.53 கோடியாக இருந்தது.”

வேதாந்த் ஃபேஷன் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு குறித்து...

“மான்யவாரின் உரிமையாளரான வேதாந் ஃபேஷன்ஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.3,149 கோடியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட முடிவு செய்திருக் கிறது. இந்த ஐ.பி.ஓ-வில் வெளியிடப்படும் பங்குகளின் விலை ரூ.824 - 866 ஆக நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஐ.பி.ஓ வெளியீடானது பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 8-ம் தேதியுடன் முடிவடைகிறது.’’

பட்ஜெட்டுக்குப் பிறகு ஏற்றத்தில் இருந்த பங்குச் சந்தை இன்று வியாழக்கிழமை திடீரென சரிந்தது ஏன்?

“தொடர்ந்து மூன்று நாள்களுக்கு சந்தை ஏற்றம் கண்டு, வியாழன் அன்று திடீரென்று சந்தை சரிந்தது. நிஃப்டி 219 புள்ளிகளும், சென்செக்ஸ் 770 புள்ளிகளும் அன்று ஒரே நாளில் இறக்கம் கண்டது. கடந்த சில நாள்களில் கிடைத்த லாபத்தை முதலீட்டாளர்கள் வெளியே எடுக்க நினைத்ததும், உலக அளவில் பங்குச் சந்தைகளானது இறக்கத்தின்போக்கில் இருக்கவே, இந்தியப் பங்குச் சந்தைகளும் இறங்கத் தொடங்கின’’ என்ற ஷேர்லக், அடுத்த வாரம் பார்ப்போம் என்று சொல்லி வீடியோகாலில் இருந்து கையசைத்தார்.

உயில் எழுதுவதன் முக்கியத்துவம்..!

நாணயம் விகடன் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் இணைந்து ‘உயில் எழுதுவதன் முக்கியத்துவம்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை, பிப்ரவரி 13 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடத்த உள்ளன. இதில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் மூத்த பிராந்திய தலைவர் ராமதாஸ் பரதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/3GoKyFN

மத்திய பட்ஜெட் 2022: ஒரு முழுமையான அலசல்!

நாணயம் விகடனும் ஹீலியாஸ் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனமும் இணைந்து ‘மத்திய பட்ஜெட் 2022 - ஒரு முழுமையான அலசல்’ என்கிற நிகழ்ச்சியைக் கடந்த 2-ம் தேதி அன்று ஜூம் இணையதளத்தில் நடத்தின. இதில் கொடீசியா அமைப்பின் தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு, ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜு, பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியின் வீடியோ பதிவைக் காண: https://www.facebook.com/NaanayamVikatan/videos/367727194692773

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism