Published:Updated:

ஷேர்லக்: சந்தை தொடர் இறக்கம்... முதலீட்டுக்கு சரியான நேரம்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: சந்தை தொடர் இறக்கம்... முதலீட்டுக்கு சரியான நேரம்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை காலை ஷேர்லக் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியிருந்தார். “ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள்தான் இன்றைக்கு சந்தையைத் தீர்மானிக்கும் விஷயமாக இருக்கும்’’ என்று சொல்லியிருந்தார். அதே போலத்தான் அன்று நடந்தது. சந்தை இறக்கம் பற்றி அவர் சொல்லப் போகும் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள அவருக்காக நாம் காத்திருந்தோம். 4 மணிக்கு வந்தவரிடம் நாம் கேட்ட முதல் கேள்வி...

இந்தியப் பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்திருக்கிறவே?

“ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர் ஏற்ற இறக் கத்தில் இருந்து வந்தன. இந்த நிலையில், கடந்த வாரம் வியாழன் அன்று உக்ரைன் மீது தனது தாக்குதலைத் தொடங்கியது ரஷ்யா. இதனால் வியாழக்கிழமை அன்று பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. முந்தைய நாளான புதன் கிழமை அன்றே போர் பதற்றத்தால் பங்குச் சந்தை கடும் இறக்கத்தைச் சந்தித்தாலும் அதன் பிறகு மெள்ள இறக்கத்திலிருந்து மீண்டது.

வியாழன் காலை வர்த்தகம் ஆரம்பித்த போதே இறக்கத்தில் ஆரம்பித்தது. மதிய வேளையில் சந்தையானது இறக்கத்திலிருந்து கொஞ்சம் மீண்டாலும், போர்ச் செய்திகளால் பிற்பகல் இறக்கம் அதிகரிக்கவே செய்தது. அன்று வர்த்தக முடிவில் நிஃப்டி 815 புள்ளி களை இழந்து, 16247 ஆகவும், சென்செக்ஸ் 2702 புள்ளிகளை இழந்து, 54529 புள்ளிகளாகவும் வர்த்தகம் ஆகிவந்தது.

இந்தப் போர் பதற்றம் இன்னும் சில நாள் களுக்குத் தொடரவே செய்யும். பொதுவாக, புவி அரசியல் சார்ந்து சர்வதேச அளவில் பிரச்னைகள் வரும்போது உலகம் முழுக்கவுமே உள்ள முதலீட்டாளர்கள் பதற்றத்துக்கு உள்ளாகி, பங்குகளை விற்பது வழக்கம். இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது.

ஆனால், பங்குச் சந்தையில் நீண்டகால அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்பவர்கள் இது போன்ற நிகழ்வுகளால் மனம் பேதலிக்கக் கூடாது. இந்த போர் பதற்றம் சில வாரங்களுக்கோ, சில மாதங்களுக்கோ நீடிக் கலாம். இன்னும் ஐந்து, பத்து ஆண்டுகளுக்கு எல்லாம் தொடராது. எனவே, குறுகிய கால நோக்கில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல், நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வது அவசியம். நல்ல அடிப்படை உள்ள பங்குகள் இப்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன. அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிச் சேர்க்கலாம். பலவீனமான அடிப்படை கொண்ட பங்குகளை விற்றுவிடலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரை, நல்ல ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தக் கூடாது. அடுத்த ஐந்து, பத்து ஆண்டுகளுக்குத் தேவை இல்லாத பணத்தை நல்ல ஃபண்ட் திட்டத்தில் ஒருமுறை முதலீடாகவும் முதலீடு செய்யலாம்.

இதுபோன்ற நிகழ்வுகளின்போது பதற்றத்தில் முதலீட்டை வெளியே எடுப்பவர்களைவிட பொறுமை காப்பவர்கள் நஷ்டம் அடைவதற்கான வாய்ப்பு குறைவு.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

ஃபெடரல் பேங்க் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“ஃபெடரல் வங்கியின் துணை நிறுவனமான ஃபெட்பேங்க் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் ஐ.பி.ஓ-வுக்கு செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இதை அடுத்து, ஃபெடரல் பேங்க் பங்கு விலை இரண்டு சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்தது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.900 கோடிக்கு புதிய பங்குகளையும், ஓ.எஃப்.எஸ் முறையில் 4,57,14,286 பங்குகளை இந்த நிறுவனம் வெளி யிடுகிறது.”

வோடஃபோன், தன் வசம் இருக்கும் இண்டஸ் டவர்ஸ் பங்குகளை பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு விற்கப்போகிறதாமே?

“பிரிட்டிஷ் தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன், இந்தியாவின் மிகப்பெரிய செல் டவர் நிறுவனமான இண்டஸ் டவர்ஸின் சுமார் 5% பங்குகளை பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு விற்க ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இந்தப் பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.3,300 கோடிக்குமேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் வோடஃபோன் ஐடியா இந்தியா நிறுவனத்துக்கு செலுத்தப்படும். இந்தத் தகவல் வோடஃபோன் நிறுவனத்தின் தரப்பிலிருந்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தற்போதைய நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பார்தி என்டர்பிரைசஸ் இண்டஸ் டவர்ஸில் அதிக அளவிளான பங்குகளைக் கொண்டிருக்கிறது.”

செபியின் தலைவர் அஜய் தியாகியின் பதவிக்காலம் முடிவடைகிறதே... அடுத்து யார் தலைவர்?

“பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் அரசு விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது. ஏனெனில், தற்போது செபியின் தலைவராக உள்ள அஜய் தியாகியின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிகிறது. கடந்த டிசம்பர் 6-ம் தேதிக்கு முன்னதாகவே இந்தப் பதவிக்கு தகுதியானவர் களிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய அரசாங்கம் வாங்கத் தொடங்கியது. அந்த விண்ணப்பங்களை ‘ஷார்ட் லிஸ்ட்’ செய்து, அதன் அடிப்படையில் ஒருவரை செபியின் தலைவராக மத்திய அரசு விரைவில் நியமிக்கும் என்று தெரிகிறது.

இந்தப் பதவிக்கு அரசின் உயர் அதிகாரிகள் பலரும், செபியின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் விண்ணப்பித் திருக்கிறார்கள். அதே நேரத்தில், அஜய் தியாகியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டு அவரே இன்னும் சில மாதங்கள் செபியின் தலைவராக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. என்.எஸ்.இ சர்ச்சை தற்போது உச்சத்தில் உள்ள நிலையில், அஜய் தியாகியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட நிறைய வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.’’

நைகா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“2019-ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், ல’ஓரியல் (L’Oreal) நிறுவனம் நைகா நிறுவனத்தின் மீது காப்புரிமை பிரச்னைக் காக வழங்கு ஒன்றைப் பதிவு செய்திருந்தது. நீண்ட காலமாக நடந்த இந்த வழக்கு தீர்த்து வைக்கப்பட்டதாக நைகா நிறுவனத்தின் தரப்பில் கடந்த 21-ம் தேதி தெரிவிக்கப் பட்டது. இதன் காரணமாக பிப்ரவரி 23-ம் தேதி வர்த்தகத்தில் நைகா நிறுவனத்தின் பங்கு விலை 5% வரை ஏற்றத்தைச் சந்தித்து ரூ.1,386.55-க்கு வர்த்தகமானது. நைகா நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடு காரண மாக வருகிற 2023-ம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குள் தற்போதைய வர்த்தக விலையில் இருந்து 60% வரை பங்கு விலை உயரும் என ஜே.எம் ஃபைனான்ஷியல் பங்குத் தரகு நிறுவனம் தெரிவித் துள்ளது. இலக்கு விலையாக ரூ.2,120-ஐ நிர்ணயித்துள்ளது.”

அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை குறைய என்ன காரணம்?

“ஸ்விஸ் நாட்டைத் தலைமை இடமாகக் கொண்ட சிமென்ட் தயாரிக்கும் முதன்மை நிறுவன மான ஹோல்சிம் நிறுவனத்தின் துணை நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 55.48% குறைந்து, ரூ. 431 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 2.31% அதிகரித்து ரூ.7,625 கோடியாக உள்ளது.

சிமென்ட் தயாரிப்பதற்கான எரிபொருள் செலவு அதிகரித்ததன் காரணமாக நிறுவனத்தின் லாபம் கணிசமாகக் குறைந்து உள்ளது. இந்தக் காலாண்டு முடிவுக்குப் பிறகு, இந்த நிறுவனப் பங்கின் விலை 10% வரை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. பிற முன்னணி சிமென்ட் தயாரிக்கும் நிறுவனங்களான அல்ட்ராடெக் சிமென்ட் போன்ற நிறுவனங்களின் பங்கு களின் விலையும் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.”

கல்பதாரா பவர் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற டிசம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 15.9% குறைந்து, ரூ.259 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானமும் 12% அதிகரித்து, ரூ.3,918 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் மற்றொரு முன்னணி நிறுவனமான ஜே.எம்.சி புராஜெக்ட் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாக உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.”

சிகாஷி (Sigachi) இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே...

“இந்த நிறுவனத்தின் குறுகிய மற்றும் நீண்ட கால வங்கி செயல்பாடுகளுக்காக கேர் ரேட்டிங் நிறுவனம் ஏ3 ரேட்டிங்கில் இருந்து ‘ஏ-’ மற்றும் ‘ஏ2’ என்கிற கிரெடிட் ரேட்டிங்கை அப்கிரேடு செய்திருக்கிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 23-ம் தேதி வர்த்தகத்தில் 8% வரை பங்கு விலை அதிகரித்து வர்த்தகமானது. சந்தை முடிவில் 4.39% அதிகரித்து ரூ.313.60-க்கு வர்த்தகமானது.”

பி.என்.சி இன்ஃப்ராடெக் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

“இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து ரூ.4,384 கோடிக்காக ஆர்டர்களைப் பெற்றிருப்பதை அடுத்து, சாலை கட்டுமான நிறுவனமான பி.என்.சி இன்ஃப்ராடெக் பங்கு விலை பிப்ரவரி 23-ம் தேதி அன்று 13% ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர்-லக்னோ விரைவுச் சாலையின் ஆறு வழிச்சாலையை எட்டு வழிச் சாலையாக மேம்படுத்த இந்நிறுவனம் இரண்டு ஆர்டர் களைப் பெற்றுள்ளது. தொகுப்பு I மற்றும் தொகுப்பு II ஆகிய இந்த இரண்டு ஆர்டர்களின் மொத்த மதிப்பு ரூ.2,926 கோடியாக உள்ளது. மேலும், உத்தரப்பிரதேசத்தில் NH298 இன் சோனாலி-கோரக்பூர் பகுதியை நான்கு வழிப்பாதையாக மாற்றுவதற்கான மூன்றாவது ஆர்டரின் மதிப்பு ரூ.1,458 கோடி ஆகும்.”

இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்கு விலை 12% அதிகரித்துள்ளதே?

“இந்திய அமலாக்கத்துறை, இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து சில வாடிக்கையாளர் களைப் பற்றிய தகவல்களைக் கேட்டிருந்தது. இது குறித்து ஐ.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தின் தரப்பில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ‘அமலாக்கத்துறை தங்களது வாடிக்கையாளர்கள் சிலரின் விவரங்களை மட்டுமே கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது நிறுவனத்தின் வணிகம் மற்றும் செயல்பாடுகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என விளக்கம் தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 23-ம் தேதி இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்கு விலை 12% வரை உயர்ந்து, ரூ.115.65-க்கு வர்த்தகமானது. 24-ம் தேதி வர்த்தகத்தில் 11% வரை சரிந்து ரூ.102-க்கு வர்த்தகமானது.”

கிராம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலெக்ட்ரிக்கல் நிறுவனப் பங்கின் விலை கடந்த புதன்கிழமை அன்று கணிசமாக உயர்ந்து, ஆச்சர்யம் தந்ததே..!

“இந்த நிறுவனம் தமிழகத்தில் இருந்து செயல்படும் பட்டர் ஃபிளை காந்திமதி அப்ளையன்ஸ் நிறுவனத்தை வாங்கியதுதான் இந்த நிறுவனப் பங்கின் விலை உயரக் காரணம். ரூ.2,076 கோடி தந்து இந்த நிறுவனத்தை வாங்கி இருக்கிறது. இந்தக் கையகப்படுத் தலில் கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தை மேலும் பலப் படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் சொல்கிறார்கள். கடந்த சில மாதங்களாகவே இந்த நிறுவனப் பங்கு விலை குறைந்துகொண்டே வந்த நிலையில், இந்தக் கையகப்படுத்தல் இந்த நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது."

ஏ.பி.ஐ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கு செபி அனுமதி வழங்கியிருக்கிறதா?

“பார்ம்ஈஸி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏ.பி.ஐ ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஐ.பி.ஓ மூலம் ரூ.6,250 கோடியை முதலீட் டாளர்களிடம் இருந்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. கடந்த நவம்பரில் ஐ.பி.ஓ வெளியிட அனுமதி கேட்டு செபி அமைப்பிடம் விண்ணப் பித்திருந்தது. தற்போது ஐ.பி.ஓ வெளியிடவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது” என்றவர், ‘‘நமக்கு நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் இருப்போம்’’ என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு, புறப்பட்டார்!

ஷேர்லக்: சந்தை தொடர் இறக்கம்... முதலீட்டுக்கு சரியான நேரம்..!