Published:Updated:

ஷேர்லக்: வரிசைகட்டும் புதிய பங்கு வெளியீடுகள்..! சிறு முதலீட்டாளர்கள் உஷார்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

S H A R E L U C K

ஷேர்லக்: வரிசைகட்டும் புதிய பங்கு வெளியீடுகள்..! சிறு முதலீட்டாளர்கள் உஷார்!

S H A R E L U C K

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

மும்பையிலிருந்து ஷேர்லக் வாட்ஸ்அப் மூலம் கேள்வி களை அனுப்பச் சொல்ல, நாம் அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். மாலை 4 மணிக்கு நம் மெயிலுக்கு பதில்களை அனுப்பி வைத்தார் அவர்.

நிதி ஆண்டு இறுதிக்குள் சென்செக்ஸ் 58300 புள்ளிகளுக்கு அதிகரிக்கும் என பங்குத் தரகு நிறுவனம் கணித்திருக்கிறதே?

“ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் செக்யூரிட்டீஸ், 2021-22-ம் நிதி ஆண்டு இறுதிக்குள் சென்செக்ஸ் 58300 புள்ளி களுக்கும் நிஃப்டி 17500 புள்ளிகளுக்கும் உயரும் என மதிப்பிட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கொரோனா பாதிப்பு குறைந்து பொருளாதார வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி மாத வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கிறது. வெளிநாட்டு நிறுவன முதலீட் டாளர்கள் (எஃப்.ஐ.ஐ) 2021 மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிக அளவில் பங்குகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள். ஆனால், ஜூன் மாதத்தில் நிகரமாக சுமார் 210 கோடி டாலரை (ரூ.15,540 கோடி) முதலீடு செய்திருக்கிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் வாகனத் துறை, கேப்பிடல் கூட்ஸ், தகவல் தொழில்நுட்பம், பார்மா துறை ஆகியவை நல்ல வளர்ச்சி பெறும் என ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் தெரிவித்து உள்ளது. நிஃப்டி நிறுவனப் பங்கு களின் சராசரி இ.பி.எஸ் 2021 மற்றும் 2023–ம் ஆண்டுகளில் 24 ஆக இருக்கும். சராசரி பி.இ விகிதம் 22ஆக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.”

ஷேர்லக்: வரிசைகட்டும் புதிய பங்கு வெளியீடுகள்..! சிறு முதலீட்டாளர்கள் உஷார்!

2021-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வரிசைகட்டும் ஐ.பி.ஓ-க்கள்... வெயிட்டிங்கில் இருக்கும் நிறுவனங்கள் என்னென்ன?

“நடப்பு 2021-ம் ஆண்டின் முதல் பாதியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டின் செயல்பாடுகளும் வலுவான நிலையில் இருக்கின்றன. இனி வரவிருக்கும் இரண்டாம் அரையாண்டிலும் இந்த நிலை தொடரும் என்கிற எதிர்பார்ப்பு வலுவாக இருக்கிறது.

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில், ஸொமேட்டோ (ரூ.8,000 கோடி), ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி (ரூ.2,000 கோடி) மற்றும் ரோலக்ஸ் ரிங்க்ஸ் (ரூ.600 கோடி) ஆகிய நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிடுவதற்கான ஆவணங்களை செபியிடம் ஏற்கெனவே தந்துள்ளன.

இவை தவிர, ஜி.ஆர். இன்ஃப்ரா (ரூ.963 கோடி), கிளீன் சயின்ஸ் அண்டு டெக்னா லஜீஸ் (ரூ.1,400 கோடி), கிளென்மார்க் லைஃப் சயின்சஸ் (ரூ.2,000 கோடி), உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (ரூ.1,350 கோடி), விஜயா டயக்னாஸ்டிக் சென்டர் (ரூ.2,000 கோடி), நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன் (ரூ.5,000 கோடி), ஆதார் ஹவுஸிங் ஃபைனான்ஸ் (ரூ.7,300 கோடி), ராம் பிராபர்ட்டீஸ் (ரூ.800 கோடி), செவன் ஐலேண்ட்ஸ் ஷிப்பிங் (ரூ.600 கோடி) மற்றும் எமி ஆர்கானிக்ஸ் (ரூ.650 கோடி) ஆகிய 10 நிறுவனங்கள், வரவிருக்கும் ஜூலை மாதத்தில் ரூ.22,063 கோடி திரட்டும் வகையில் ஐ.பி.ஓ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எல்.ஐ.சி, என்.எஸ்.இ மற்றும் பாலிசிபஜார் ஆகிய நிறுவனங்களும் தங்களின் ஐ.பி.ஓ வெளியீட்டுக்கான காத்திருகின்றன.

சிறு முதலீட்டாளர்கள் இடையே ஐ.பி.ஓ மோகம் அதிகம் இருக்கிறது. அவர்கள் புதிய பங்கு வெளியீடு மூலம் திரட்டும் நிதியை நிறுவனங்கள் எதற்கு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்து அதன் பிறகு முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.’’

கோஃபர்ஸ்ட் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு தள்ளிப்போவது குறித்து...

“பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, கோஃபர்ஸ்ட் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டுக்கான அனுமதியை இன்னும் வழங்கவில்லை. இவ்விரு நிறுவனங்களின் ஐ.பி.ஓ வெளி யீட்டுக்கான அனுமதியை எந்தக் காரணத்தையும் குறிப்பிடாமல் செபி நிறுத்தி வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலை, கோஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது கடனை திருப்பிச் செலுத்துவதற்கு ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட நினைக்கிறது இந்த நிறுவனம்.’’

ஷேர்லக்: வரிசைகட்டும் புதிய பங்கு வெளியீடுகள்..! சிறு முதலீட்டாளர்கள் உஷார்!

ஐ.ஓ.பி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

“இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படும் என ஊர்ஜிதம் செய்யப்படாத செய்திகள் வலம் வருவதால், இந்த இரு பங்குகளின் விலை அதிகரித்து வர்த்தகமாகின்றன. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிப் பங்கு விலை கடந்த புதன்கிழமை வர்த்தகத்தில் 8% விலை அதிகரித்து, 28.05 ரூபாய்க்கு வர்த்தகமானது. அன்றைய தினத்தில் 52 வார அதிகபட்ச விலையான 29.65 ரூபாயைத் தொட்டது. அதேபோல, ஐ.ஓ.பி பங்கு விலை 8.72% விலை அதிகரித்து, 28 ரூபாய்க்கு வர்த்தக மானது. அன்றைய தினத்தில் இந்த வங்கிப் பங்கானது, 52 வார உட்சபட்ச விலையான 29 ரூபாயைத் தொட்டது. இந்த இரு பங்குகளை வாங்குவதும் ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்கே ஏற்றதாக இருக்கும்.”

குமின்ஸ் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

“கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ், குமின்ஸ் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. மேலும், இதன் இலக்கு விலையை, தற்போதைய விலையிலிருந்து 16% அதிகரித்து, 1,030 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது. இதன் காரணமாக, கடந்த வாரம் புதன்கிழமை அன்று இந்த நிறுவனப் பங்கு விலை 3.22% வரை அதிகரித்து, 878.95 ரூபாய்க்கு வர்த்தகமானது. மேலும், இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு, 2 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்குகளுக்கு இறுதி டிவிடெண்ட் ரூ.8 வழங்க பரிந்துரை செய்திருக்கிறது.”

ஒயர் மற்றும் கேபிள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை குறித்து...

“ஒயர் மற்றும் கேபிள் நிறுவனங் களில், டாப் 5 நிறுவனங்களின் பங்கு விலை, கடந்த மூன்று மாதத்துக்கும் குறைவான காலகட்டத்தில் 30 சதவிகிதத் துக்கும் மேலாக அதிகரித் திருக்கின்றன. கேபிள் மற்றும் ஒயர் பொருள்களுக்கான தேவை அதிகரிப்பு, இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் துறை முதலீடுகள் அதிகரிப்பு, நிலையான சப்ளை போன்ற பல்வேறு காரணங்கள் இந்தத் துறை சார்ந்த நடவடிக்கை களுக்கு ஊக்கமளிக்கின்றன. இதன் காரணமாக, இனிவரும் காலங்களில் இந்த துறையின் செயல்பாடு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிகேப் இந்தியா நிறுவனத் தின் பங்கு விலை, கடந்த மூன்று மாதத்தில் 40% அதிகரித் திருக்கிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி 1,380.ரூபாயாக இருந்த இதன் பங்கு விலை கடந்த ஜூன் 28-ம் தேதி வர்த்தகத்தில் 1,950 ரூபாயாக வர்த்தகமானது. தற்போது (ஜூன் 1 - 11:58) 2,020 ரூபாயாக வர்த்தக மாகி வருகிறது.

ஸ்டெர்லைன் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 35% அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி 195 ரூபாய்க்கு வர்த்தகமான இந்த பங்கு விலை, கடந்த ஜூன் 28-ம் தேதி 265 ரூபாய்க்கு வர்த்தகமானது. தற்போது (ஜூன் 1 - 11:58) 270 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 40% வரை அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி 380 ரூபாய்க்கு வர்த்தமான இந்த பங்கு விலை, கடந்த ஜூன் 28-ம் தேதி 525 ரூபாய்க்கு வர்த்தகமானது.

கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 35% வரை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி, 520 ரூபாய்க்கு வர்த்தகமான இந்த நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த ஜூன் 28-ம் தேதி ரூ.695 ரூபாய்க்கு வர்த்தகமானது. தற்போது 710 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

யுனிவர்சல் கேபிள்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 45% வரை அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி 135 ரூபாய்க்கு வர்த்தகமான இதன் பங்கு விலை கடந்த ஜூன் 28-ம் தேதி சுமார் 200 ரூபாய்க்கு வர்த்தகமானது.

கடந்த மூன்று மாதங்களில் இந்தப் பங்குகளின் விலை உயர்ந்ததைப் பார்த்து மட்டும் முதலீட்டு முடிவை எடுக்க வேண்டாம். சமீபத்தில் கமாடிட்டி பங்குகளின் விலை குறைந்ததுபோல குறைந்துவிடலாம். எனவே, நிறுவனத்தின் அடிப்படைகள் பலமாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு முதலீடு செய்யவும்.”

மெக்லாய்ட் ரஸ்ஸல் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“தேயிலை உற்பத்தி நிறுவனமான மெக்லாய்ன்ட் ரஸ்ஸல் நிறுவனத்தின் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்குகளை விற்றுள்ள தாகவும், இந்த நிறுவனத்தின் எந்தப் பங்கு களையும் வைத்துக்கொள்ளவில்லை என்றும், இண்டஸ்இண்ட் பேங்க், கடந்த ஜூன் 29-ம் தேதி தெரிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான பின், ஜூன் 30-ம் தேதி 4.35% வரை விலை அதிகரித்து 38.45 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 15% வரை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.”

ஸ்டாண்டர்டு லைஃப் நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் நிறுவனத்தின் பங்குகளை விற்கிறதாமே?

“கடந்த மார்ச் காலாண்டில், ஸ்டாண்டர்டு லைஃப் (மொரீசியஸ் ஹோல்டிங்ஸ்) நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் நிறுவனத்தின் 17,95,39,209 பங்குகளை தன்வசம் வைத்திருந்தது. அதாவது, ஹெச்.டி.எஃப்.சி லைஃப் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் இது 8.8%. இதில் 3.46% பங்குகளை அதாவது, 7 கோடி பங்குகளை விற்றுள்ளது.

இந்த விற்பனை ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ.4,606 கோடி. இந்த அறிவிப்பு வெளியானதும், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் நிறுவனத்தின் பங்கு விலை 5.4% குறைந்து, 690.60 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்த நிலையில், தரகு நிறுவனமான பிரபு தாஸ் லீலாதர், இந்த நிறுவனத்தின் பங்கு இலக்கு விலையை 660 ரூபாயி லிருந்து 725 ரூபாயாக அதிகரித்துள்ளது. பங்குகளைத் தொடர்ந்து வைத்துக் கொள்ள பரிந்துரை செய்துள்ளது.”

சர்க்கரை பங்குகளின் விலை தொடர்ந்து அதிகரிப்பது இனிப்பான விஷயம்தானே!

“பெட்ரோலுடன் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை அதாவது, 2023-ம் ஆண்டு வரை மத்திய அரசாங்கம் நீட்டித்திருக்கிறது. இதன் காரணமாக, சர்க்கரை தயாரிப்பின் போது உபபொருளாகக் கிடைக்கும் எத்தனாலுக்கான தேவை அதிகரித் துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஜூன் 28-ம் தேதி விலை அதிகரித்து வர்த்தகமாகின. ரேணுகா சுகர்ஸ் நிறுவனம் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.450 கோடியை முதலீடு செய்யப்போவதாக அறிவித்த பிறகு, இதன் பங்கு விலை 5% வரை அதிகரித்தது. பஜாஜ் ஹிந்துஸ்தான், ரானா சுகர், கே.எம்.சுகர் மில்ஸ், மவானா சுகர், உத்தம் சுகர், கே.சி.பி சுகர், சக்தி சுகர், பொன்னி சுகர்ஸ் மற்றும் ராஜ் சுகர்ஸ் ஆகிய அனைத்து நிறுவனங் களின் பங்குகளும் விலை அதிகரித்தன” என்றவர்,

‘‘டெல்டா ப்ளஸ் இப்போது பரவத் தொடங்கி இருக்கிறது. வாசகர்கள் அனைவரையும் ஜாக்கி ரதையாக இருக்கச் சொல்லவும்’’ என்று முடித்திருந்தார்.

ஆன்லைன் பிசினஸ் தொடங்க பெண்களுக்கு அரிய வாய்ப்பு!

பெருந்தொற்றுக் காலத்தின் நிச்சயமற்றதன்மை பலரை சுயதொழில் தொடங்கும் எண்ணத்தை நோக்கி உந்தித் தள்ளியிருக்கிறது. அந்த வகையில் ஆன்லைனில் நல்ல வருமானம் ஈட்டும் தொழில்களைத் தொடங்க பெண்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. அவள் விகடன் மற்றும் நாணயம் விகடன் இணைந்து வழங்கும் ‘மாத்தி யோசி!’ என்ற பெண்களுக்கான ஆன்லைன் பிசினஸ் வழிகாட்டல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. பிசினஸ் பயிற்சியாளர் மற்றும் மார்க்கெட்டிங் நிபுணர் சக்திவேல் பன்னீர்செல்வம் பயிற்சி வழங்கவுள்ளனர்.

ஆன்லைன் பிசினஸில் பெண்களுக்கான சவால்கள், தீர்வுகள், உங்களின் பிசினஸ் மாடல் எப்படி இருக்க வேண்டும், எந்த பிசினஸில் குறைந்த முதலீட்டில் லாபம் ஈட்டலாம், செலவில்லாத மார்க்கெட்டிங் வழிமுறைகள், லாபத்தைக் கணக்கிடுவது, அதிகரிப்பது பற்றிய வழிகாட்டல் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.299. நாள்: ஜூலை 11 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: மாலை 4 முதல் 5.30 மணி வரை. பதிவு செய்ய: https://bit.ly/3xePR72

ஷேர்லக்: வரிசைகட்டும் புதிய பங்கு வெளியீடுகள்..! சிறு முதலீட்டாளர்கள் உஷார்!