Published:Updated:

ஷேர்லக்: முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய ஸ்மால்கேப் பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய ஸ்மால்கேப் பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழன் அதிகாலையிலேயே ஷேர்லக் தகவல் அனுப்பியிருந்தார். “எனக்கு முக்கியமான மீட்டிங் மாலை 5 மணிக்கு இருப்பதால், மாலை 4 மணிக்கே வந்துவிடு கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். சொன்ன படியே வந்துசேர்ந்தார். பிசினஸ் ஸ்டார் விருதுகள் நிகழ்ச்சியின் வீடியோவைப் பார்த்தவர், “சூப்பர்” எனப் பாராட்டினார். நாம் நன்றி சொல்லிவிட்டு தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ் நிறுவனப் பங்கு எதிர்வரும் காலங்களில் அதிக லாபத்தைப் பதிவு செய்யும் என ஷேர்கான் சொல்லியிருக்கிறதே..?

“ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ் நிறுவனப் பங்கு விலை 28% வரை வருமானத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதன் முக்கியமான விநியோகஸ்தர் களில் ஒன்றான ஷங்கர் பில்டிங் புராடக்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.180 கோடியை வழங்க இந்த நிறுவனம் எடுத்த முடிவு, வரும் நாள்களில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஏற்றம் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கும் ரூ.180 கோடியில், உடனடியாக ரூ.102 கோடியை முதலீடு செய்யும் என்றும், மீதமுள்ள ரூ.78 கோடியை 18 மாதத்துக்குள்ளாக முதலீடு செய்யும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த முதலீட்டின் மூலம் ஷங்கராவின் ஸ்டோர் நெட்வொர்க்கை மேம்படுத்தி, விநியோகஸ்தர் களுடனான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் விற்பனை மற்றும் வால்யூமை மேம்படுத்துவதை ஏ.பி.எல் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த பங்கு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஷேர்கான் பங்குத் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.1,100 என அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை ரு.906 என்கிற விலையில் வர்த்தகமானது.”

எஸ்.எம்.எஸ் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

“மருத்துவக் காப்புரிமைக் குழுவின் மூலம், கோவிட்-19 தொற்று சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் நிர்மத்ரெல்விர் என்கிற மருந்தைத் தயாரித்து வழங்குவதற்கான உரிமத்தை எஸ்.எம்.எஸ் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் பெற்றது. இதையடுத்து மார்ச் 21-ம் தேதி அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 12 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்து, ரூ.109.20-க்கு வர்த்தகமானது.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

மாருதி சுஸூகி பங்கு விலை திடீரென அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த மார்ச் 21-ம் தேதி வர்த்தகத் தில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் பங்கு விலை 3% வரை அதிகரித்து வர்த்தகமானது. கடந்த வார வியாழக் கிழமை காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை சற்றே சரிந்து ரூ.7,608-க்கு வர்த்தகமானது.

இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸூகி, எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த வகையில், குஜராத்தில் உள்ள ஆலையில் பேட்டரி வாகனத் தயாரிப்பு மேற்கொள்ள உள்ளதாகவும், இதற்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.10,400 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, குஜராத்தில் உள்ள ஆலையில் ரூ.7,300 கோடி முதலீட்டில் பேட்டரி தயாரிப்பு ஆலை 2026-ம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும். மேலும், ரூ.3,100 கோடியை பேட்டரி வாகன உற்பத்தி அதிகரிப்புக்கு முதலீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று சொல்லியிருப்பது பற்றி...

“அண்மையில் மூடீஸ் நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை 9.5 சதவிகிதத்தில் இருந்து 9.1 சதவிகிதமாகக் குறைத்து அறிவித்திருந்த நிலையில், தற்போது, ஃபிட்ச் நிறுவனமும் குறைத்து அறிவித்துள்ளது.

தரக் குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச், நம் நாட்டின் 2022 - 23-ம் நிதிஆண்டுக்கான வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பைக் குறைத்து, 8.5 சதவிகிதமாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம், இதற்குமுன்பாக வளர்ச்சி 10.3 சதவிகித மாக இருக்கும் எனக் கணித்திருந்தது. அதேசமயம், நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி குறித்த கணிப்பை முந்தைய கணிப்பிலிருந்து 0.6% உயர்த்தி, 8.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, உலக அளவிலான கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வால், தொழிற்சாலைகளின் செலவு அதிகரிக்கும். இது விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும், இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என்றும் ஃபிட்ச் தெரிவித்துள்ளது. அதேபோல, மார்கன் ஸ்டான்லி தனது முந்தைய கணிப்பான 8.4 சதவிகி தத்திலிருந்து 7.9 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. சிட்டிகுரூப் 8.3 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.”

ஸ்மால்கேப் பங்குகள் நல்ல லாபத்தைப் பதிவு செய்யும் என பங்குத் தரகு நிறுவனங்கள் சொல்லியிருக்கின்றனவே?

“இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென் செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், மெட்டல், பவர் மற்றும் பார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்ததால், பெரிய அளவிலான சரிவு தடுக்கப்பட்டது. இந்தச் சந்தை சூழ்நிலையில் சில ஸ்மால்கேப் பங்குகள் விலை சுமார் 30% வரை அதிகரிக்கும் என பங்குத் தரகு நிறுவனங்கள் சொல்லியுள்ளன.

ஷேர்கான் பங்குத் தரகு நிறுவனம், பிர்லாசாஃப்ட் நிறுவனப் பங்கு விலை 25% அதிகரிக்கக்கூடும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.580 என்றும் கணித்துள்ளது. இதன் தற்போதைய வர்த்தக விலை ரூ.467. மேலும், இந்தப் பங்குத் தரகு நிறுவனம் மஹிந்திரா லாஜிஸ்டிக் நிறுவனத்தின் பங்கு விலை 32% வரை அதிகரிக்கக்கூடும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.580 எனவும் கணித்துள்ளது. இதன் தற்போதைய விலை ரூ.440. அதேபோல, தாம்பூர் சுகர் மில்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 30% வரை ஏற்றம் பெறக்கூடும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.692 எனவும் ஷேர்கான் கணித்துள்ளது. இதன் தற்போதைய வர்த்தக விலை ரூ.535 ஆகும்.

மோதிலால் ஆஸ்வால் பங்குத் தரகு நிறுவனம், ஏ.பி.எல் டியூப்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 30% வரை அதிகரிக்கும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.1,200 என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன் தற்போதைய விலை ரூ.910. அதேபோல, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 15% வரை அதிகரிக்கக்கூடும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.750 என்றும் கணித்துள்ளது. இதன் தற்போதைய வர்த்தக விலை ரூ.660 ஆகும்.”

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் உள்ளிட்ட சில பங்குகள் எம்.எஸ்.சி.ஐ ஸ்டாண்டர்டு இண்டெக்ஸில் சேர்க்கப்பட உள்ளனவே...

“வரவிருக்கும் அரை ஆண்டு மதிப்பாய்வில், எம்.எஸ்.சி.ஐ ஸ்டாண்டர்டு இண்டெக்ஸில், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், டாடா எலெக்ஸி, வோல்டாஸ், வருண் பெவரேஜஸ் மற்றும் அஸ்ட்ரல் ஆகிய ஐந்து நிறுவனப் பங்குகளைச் சேர்க்கலாம் என்றும், இந்திரபிரஸ்தா கேஸ் மற்றும் எம்.ஆர்.எஃப் ஆகிய இரண்டு பங்குகளை அகற்றலாம் என்றும் எடெல்வைஸ் ஆல்டர் நேட்டிவ்ஸ் மற்றும் குவான்டி டேட்டிவ் ரிசர்ச் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2020-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் எம்.எஸ்.சி.ஐ ஸ்டாண்டர்டு இண்டெக்ஸில் மொத்தம் 87 பங்குகள் இருந்தன. இந்த எண்ணிக்கை அதே ஆண்டின் நவம்பரில் 96-ஆக அதிகரித்தது. மே 2021-ல் 101-ஆகவும், நவம்பர் 2021-ல் 106-ஆகவும் அதிகரித்துள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனத்தின் பங்கு விலை 33% அதிகரித்திருந்தது. டாடா எலெக்ஸி 23.5%, வோல் டாஸ் 7%, வருண் பெவரேஜஸ் 8.5% மற்றும் அஸ்ட்ரல் 13% விலை அதிகரித்துள்ளது.”

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத் தின் பங்கு விலை சரிய என்ன காரணம்?

“இந்த நிறுவனத்தின் 25 வளாகங்களில் வருமானவரித் துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதை அடுத்து, மார்ச் 23 அன்று, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 4% வரை சரிந்தது. டெல்லி, குருகிராம் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் மூத்த அதிகாரிகளின் அலுவலகங் கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய வர்த்தக விலை ரூ.2,405 ஆகும்.”

டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்கு பைபேக் திட்டம் வெற்றியடைந்ததா?

“முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான டி.சி.எஸ் நிறுவனம் ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்கு களை முதலீட்டாளர்களிடமிருந்து திரும்பப் பெறும் திட்டத்தை மார்ச் 9-ம் தேதி அறிவித்தது. அது கடந்த மார்ச் 23-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. டி.சி.எஸ் நிறுவனத்தின் புரொமோட்டர் டாடா சன்ஸ், 72.19% பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இந்தப் பங்கு பைபேக் மூலம் மொத்தம் ரூ.13,000 கோடி டாடா சன்ஸ்க்கு சென்றுள்ளது. திரும்பப் பெறப்பட்ட பங்கு ஒன்றுக்கு ரூ.4,500-ஐ டி.சி.எஸ் நிறுவனம் வழங்கியது.”

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கில் தனது முதலீட்டை அதிகரிக்கிறதாமே?

“ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மற்ற எஸ்.பி.ஐ குழும நிறுவனங்களுடன் சேர்ந்து 9.99% பங்குகளை வைத்திருக்க எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக, எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ மியூச்சுவல் ஃபண்டில் தனது அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை 9.9 சதவிகிதமாக அதிகரிக்கவுள்ளது. கடந்த டிசம்பர் மாத காலாண்டில் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கில் 5.72% பங்குகளை வைத்திருந்தது” என்ற ஷேர்லக், “மீட்டிங்குக்கு நேரமாகிவிட்டது. வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பிசினஸ் ஸ்டார் அவார்டு நிகழ்ச்சி நியூஸ் 18 டிவியில் ஒளிபரப்பாவதை அவசியம் பார்க்கிறேன். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்’’ என்று சொல்லிவிட்டு, மீட்டிங்குக்குக் கிளம்பினார்.

ஐ.பி.ஓ வரும் வெராண்டா லேர்னிங்..!

வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத் தின் பங்கு வெளியீடு மார்ச் 29, 2022. அதாவது, வரும் செய்வாய்க்கிழமை அன்று தொடங்குகிறது. மார்ச் 31, 2022 அதாவது, வியாழக்கிழமை அன்று நிறைவுபெறுகிறது. இந்த ஐ.பி.ஓ மூலம் ரூ.200 கோடி திரட்டுகிறது இந்த நிறுவனம்.

இந்த ஐ.பி.ஓ-வில் பங்குகள் வேண்டி விண்ணப் பிப்பவர்கள் குறைந்தபட்சம் 100 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு 100-ன் மடங்குகளில் ஏலம் கேட்கலாம்.

ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றின் பங்கு விலைப்பட்டை ரூ.130 முதல் ரூ.137 ஆகும்.

ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் தற்போது நன்கு வருமானம் ஈட்டி வருகின்றன. எனவே, இந்த ஐ.பி.ஓ-வுக்கு முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!