பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: விலை உயர்ந்த பைசா பங்குகள்... சிறு முதலீட்டாளர்கள் உஷார்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை காலையில் ஷேர்லக்கிடம் இருந்து வாட்ஸ்அப்பில் தகவல் வந்தது. “மாலை 4 மணிக்கு ரைட்டர் கஃபேவுக்கு வரவும்’’ என்று தகவல் அனுப்பி இருந்தார். அவர் சொன்ன நேரத்துக்கு அங்கு சென்றோம். நமக்காக அங்கு காத்திருந்தார் ஷேர்லக். சூடான டீயைக் குடித்தபடி, நமக்கு காபியை ஆர்டர் செய்தார். காபி வந்ததும் நாம் பருகிய படி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் பணத்தை வெளியில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்களே, இதனால் நமக்கு என்ன பாதிப்பு?

“இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்வது வழக்கம். ஆனால், கடந்த அக்டோபர் முதல் பிப்ரவரி வரை யிலான காலகட்டத்தில் அவர்கள் ரூ.1.5 லட்சம் கோடி பணத்தை இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியில் எடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில், உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 77,634 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன. சிறு முதலீட்டாளர்கள் நேரடியாகச் சந்தையில் 97,500 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.

இந்திய பங்குச் சந்தையின் வேல்யூவேஷன் மிக அதிகமாக இருப்பதாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து பெருமளவு பணத்தை வெளியில் எடுத்திருக்கிறார்கள். மேலும், சர்வதேச அளவில் கடன் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருமானமும் அதிகரித்திருப்பது இன்னொரு காரணம். வெளிநாட்டு போர்ட் ஃபோலியோ முதலீட்டாளர்கள் அதிக அளவில் வெளியேறினாலும் நீண்ட காலத்தில் நமக்குப் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

பார்தி ஏர்டெல் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த மார்ச் 29-ம் தேதி அன்று, பார்தி ஏர்டெல் நிறுவனம், யூனிட் நெட்டில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இண்டஸ் டவர் ஸின் 12.71 கோடி பங்குகளை இங்கிலாந்தின் வோடஃபோன் குரூப் பி.எல்.சி-யின் இணை நிறுவனத்திடமிருந்து ரூ.2,388.05 கோடிக்கு வாங்கியது. இந்தத் தகவல் வெளியானதும் பார்தி ஏர்டெல் பங்கு விலை 3% வரை உயர்ந்தது.

சர்வதேச பங்குத் தரகு நிறுவனங்களுள் ஒன்றான கிரெடிட் சூயிஸ் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலை 19% வரை ஏற்றத் தைச் சந்திக்கும் என்றும், இதன் இலக்கு விலை ரூ.900 எனவும் நிர்ணயித்துள்ளது.”

பல நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் 15 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம் அடைந்தது ஏன்?

‘‘கடந்த வாரம் புதன்கிழமை அன்று இந்திய பங்குச் சந்தை முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை ஏற்றத்தைச் சந்தித்தன. அன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 740 புள்ளிகள் வரை உயர்ந்து, 58684 புள்ளிகளில் நிறைவடைந் தது. அதே போல, நிஃப்டி 173 புள்ளிகள் வரை உயர்ந்து, 17498 புள்ளிகளில் நிறைவடைந் தது. இதன் காரணமாக பல்வேறு பங்குகளின் விலை 15 சதவிகிதத்துக்கும் மேலாக ஏற்றம் கண்டன.

அதில் குறிப்பாக, எஸ்.கே இன்டர்நேஷனல் எக்ஸ் போர்ட் 20% வரை ஏற்றம் அடைந்தது. ஒமேகா இன்ட் ரேக்டிவ் டெக்னாலஜிஸ் 19.95% வரையும், இன்டென்ஸ் டெக் 19.95% வரையும், புளூபிளட் வென்ச்சர்ஸ் 19.90% வரையும், சென்ட்ரம் கேப்பிட்டல் 19.85% வரையும், காயத்ரி புராஜெக்ட்ஸ் 19.70% வரையும், ஐ.சி.எல் ஆர்கானிக் டைரி 19.30% வரையும், டீப் இண்டஸ்ட்ரீஸ் 19% வரையும், நைக் டெக் னாலஜி 16.50% வரையும் மற்றும் ஸ்டைலம் இண்டஸ்ட்ரீஸ் 15.46% வரையும் ஏற்றம் அடைந்தன. இந்த விலையேற்றத்தை வைத்து மட்டும் இந்தப் பங்கில் முதலீடு செய்ய வேண்டும். இந்தப் பங்கு நிறுவனங்களின் அடிப்படையை நன்கு அலசி ஆராய்ந்து முதலீடு செய்வது அவசியம்.’’

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு எஸ்.பி.ஐ கடன் வழங்குகிறதாமே... எதற்காக?

“அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான நவி மும்பை சர்வதேச விமான நிலையத் திட்டத்துக்கான (என்.எம்.ஐ.ஏ.எல்) ரூ.12,770 கோடியை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடனாக வழங்குவதாக உறுதியளித்தது. இதை அடுத்து, இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த வார புதன்கிழமை அன்று ஏற்றத்தைச் சந்தித்தது.”

பல பைசா பங்குகள் விலை உயர்ந்திருக்கின்றனவே?

“கடந்த 2021 அக்டோபர் மாதத்திலிருந்து கடந்த ஆறு மாதக் காலத்தில் பல பைசா பங்குகளின் விலை கணிசமாக அதிகரித்து வந்திருக்கிறது. பொதுவாக, ரூ.10-க்கு கீழ் விலை உள்ள பங்குகளை பைசா பங்குகள் என்பார்கள். இந்த நிறுவனங்களின் அடிப்படை அதாவது, ஃபண்டமென்டல் விஷயங்கள் பலமாக இருக்காது. தவிர, இந்த நிறுவனங்களின் விற்பனை மற்றும் நிகர லாபம் என்பது சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.

இந்தியப் பங்குச் சந்தைகளில் 100-க்கும் மேற்பட்ட பைசா பங்குகள் ஆக்டிவ்வாக டிரேட் ஆகி வருகின்றன. இவற்றில் சுமார் 70 பங்குகளின் விலை கடந்த ஆறு மாத காலத்தில் ஏற்றம் கண்டிருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனில், விகாஸ் எக்கோ டெக்கின் பங்கு விலை கடந்த ஆறு மாதத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதே போல், அங்கிட் மெட்டல் & பவர், எஃப்.சி.எஸ் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ் ஆகிய பங்குகளின் விலை சுமார் 150 சத விகிதத்துக்குமேல் உயர்ந்துள்ளன. பைசா பங்குகளின் விலை கடந்த ஆறு மாத காலத்தில் சராசரியாக 15% அதிகரித்துள்ளது.

மேலும், பைசா பங்குகளில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு கிட்டத்தட்ட 30 சதவிகிதத்துக்குமேல் இருக்கிறது. கடந்த ஆறு மாத காலத்தில் ரூ.1 லட்சம் கோடிக்குமேல் பைசா பங்குகளில் சிறு முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்.

இது ஆரோக்கியமான போக்கு இல்லை என்கிறார்கள் முன்னணி பங்குச் சந்தை நிபுணர்கள். இந்தப் பங்குகளை சார்ந்த நிறுவனங்களின் அடிப் படை வலுவில்லை என்பதால், ஏதாவது சிக்கல் எனில், பங்கின் விலை மிகவும் வீழ்ச்சி காண வாய்ப்பிருக்கிறது. அது சிறு முதலீட்டாளர்கள் தாங்கக் கூடியதாக இருக்காது என்கிறார்கள் அவர்கள்.”

நீண்ட காலத்தில் பங்கு முதலீடு நல்ல லாபம் கொடுக்கும் என்பதற்கு ஏற்ப பல பங்குகள் கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவில் விலை ஏற்றத்தைச் சந்தித்திருக் கின்றனவே?

‘‘கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து 2022 மார்ச் 30-ம் தேதி வரை யிலான வர்த்தக முடிவு விலை ஒப்பீட்டின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை ரூ.2,280 அதிகரித்து, ரூ.2,672 என்கிற விலையில் வர்த்தகமாகிறது. இந்தப் பங்கானது 2012-ம் ஆண்டில் ரூ.392-க்கு வர்த்தக மானது.

டி.சி.எஸ் நிறுவனப் பங்கு விலை ரூ.3,193 அதிகரித்து, ரூ.3,732 என்கிற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இது 2012-ம் ஆண்டில் ரூ.539-க்கு வர்த்தகமானது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க் நிறுவனப் பங்கு விலையானது ரூ.1,232 அதிகரித்து, ரூ.1,477-க்கு வர்த்தகமாகிறது. இது 2012-ல் ரூ.245-க்கு வர்த்தகமானது. அதே போல, இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கு ரூ.1,583 அதிகரித்து, ரூ.1,906-க்கு வர்த்தகமாகிறது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு விலை ரூ.1,624 அதிகரித்து, ரூ.2,016-க்கு வர்த்தக மாகிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் நிறுவனப் பங்கு விலை ரூ.579 அதிகரித்து, ரூ.740-க்கு வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 2012-ல் ரூ.66-க்கு வர்த்தக மானது. கடந்த 30-ம் தேதி வர்த்தக முடிவில் ரூ.7,252-க்கு வர்த்தக மானது. கடந்த 10 வருடத்தில் இந்த பங்கு விலை ரூ.7,186 அதிகரித்துள்ளது.’’

கெயில் நிறுவனம் பைபேக் திட்டத்தை அறிவித்திருக்கிறதே?

‘‘இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு, ரூ.1,083 கோடி மதிப்புள்ள 5.7 கோடி பங்குகளைத் திரும்பப் பெறும் பைபேக் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பைபேக் திட்டத்தில் முதலீட்டாளர்களிடமிருந்துபங்குகளை ரூ.190 என்கிற விலையில் வாங்குகிறது. இது கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தக விலையைவிட 24% பிரீமியம் விலையாகும். கடந்த புதன்கிழமை வர்த்தகம் முடியும்போது இதன் பங்கு விலை ரூ.153.45-க்கு வர்த்தகமானது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் சற்றே விலை அதிகரித்து, ரூ.155.65-க்கு வர்த்தகமானது.’’

உமா எக்ஸ்போர்ட்ஸ் ஐ.பி.ஓ வெற்றியடைந்ததா?

“விவசாயப் பொருள்கள் உற்பத்தி மற்றும் கமாடிட்டி டிரேடிங் நிறுவனமான உமா எக்ஸ்போர்ட்ஸ், சமீபத்தில் புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ) களமிறங்கியது. இந்த ஐ.பி.ஓ-வுக்கு முதலீட்டாளர்கள் நல்ல வரவேற்பு வழங்கினார்கள். இந்தப் பங்கு வெளியீட்டில் மொத்தம் 92.30 லட்சம் பங்குகள் வெளியிடப்பட்டன. ஆனால், 7.08 கோடி பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இது வெளியீட்டு அளவைவிட 7.08 மடங்கு அதிகம். பங்கு விலைபட்டை ரூ.65-68 ஆகும். திரட்டும் நிதியில் ரூ.60 கோடியை நிறுவனத்தின் செயல்பாட்டு மூலதனத்துக்குப் பயன்படுத்தப்போகிறது. இந்தப் பங்கு வருகிற 7-ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட இருக்கிறது.’’

ஹிமாமி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுகிறதாமே?

“அக்ரோகெமிக்கல் தயாரிப்பு நிறுவனமான ஹிமாமி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.2,000 கோடியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட முடிவு செய்திருந்தது. இதற்காக அனுமதி கேட்டு செபி அமைப்புக்கு ஆவணங்களை இந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. இந்த ஐ.பி.ஓ-வில் ரூ.500 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளை இந்நிறுவனம் வெளியிடுகிறது. மீதமுள்ள ரூ.1,500 கோடி பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையில் வெளியிடுகிறது.”

நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த ஷேர்லக், ‘‘உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு நாணயம் விகடனைப் பரிசாக அளியுங்கள்’’ என்று நீங்கள் என் வாட்ஸ் அப்க்கு அனுப்பிய அறிவிப்பு சூப்பர். நமக்குத் தெரிந்தவர்கள் நிதி ரீதியாக நன்றாக இருக்க வேண்டுமெனில், நாணயம் விகடனை நிச்சயம் பரிசாக அளிக்கலாம்’’ என்று சொல்லி விட்டு, நமக்கு விடை தந்தார்!

ஷேர்லக்: விலை உயர்ந்த பைசா பங்குகள்... சிறு முதலீட்டாளர்கள் உஷார்..!